home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 86 guests online
பத்திகள்


தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:24

Platform பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத நிலையங்களில் ஓன்றான நாகொல்லகமவுக்குச் சென்றிருந்தோம்.

அப்பாவுக்கு அன்று பகல் வேலை. மாலை நான்கு மணியளவில் அம்மா கடலைப் பருப்பு வடை சுட்டு, சுடுதண்ணீர் போத்தலில் தேநீரும் விட்டு அப்பாவிடம் கொடுக்கும் படி தந்து விட்டா.

"கவனமாகப் போ. பிளாற்ஃபோம் (Platform) கரைக்குப் போயிடாதை. விழுந்திடுவாய். ரெயின் வந்திடும்." என்ற அம்மாவின் அன்பு நிறைந்த கட்டளை என் மூளையின் ஆழத்தில் பதிந்திருந்து என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நான் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் ஒரு பக்கம் கையிடையில் சுடுதண்ணீர் போத்தலை அணைத்த படியும், மறு கையில் வடைப் பார்சலை இறுகப் பிடித்த படியும், எனக்கேயுரிய துள்ளலில் நடந்து கொண்டிருந்தேன். அம்மா எங்கே பார்க்கப் போகிறா என்ற தைரியம்.

நாகொல்லகம போலவே புகையிரத நிலையமும் அழகாக இருந்தது. தண்டவாளம் தாண்டிய புல்வெளியில் சிலர் Volley Ball விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் தாண்டிய பச்சை மரங்களிடையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை... என்று பற்பல வர்ணங்களில் பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மாங்காய்கள் போல ஏதோ காய்கள் சில மரங்களில் காய்த்துத் தொங்கின.

நீலமாய் அழகாய் வானம் இருக்க, வானவெளியில் கூட்டங் கூட்டமாய் சிறுபறவைகள் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. நகரும் முகில் கூட்டங்களுக்குள் விதவிதமான உருவங்கள் தெரிந்தன. ம்.... என்ன நடந்தது?

இயற்கையோடு சேர்ந்து நடக்கையில் ஒரு கணம் என்னை மறந்து போனேன். கீழே வீழ்ந்து விட்டேன். தண்டவாளத்தில் "டொங்" என்று இடிபட்ட சத்தத்தோடு பிளாஸ்க் உருண்டது. வடைப்பார்சல் அருகில்தான் இருந்தது. உதட்டில் வலித்தது. தடவினேன். சிவப்பாக இரத்தம். உதடு வெடித்து விட்டது.

யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தேன். ஒருவரும் பார்க்கவில்லை. வலியை விட யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பார்த்து விட்டால் வீழ்ந்ததிலான அவமானத்தோடு தகவல் அப்பாவுக்கும் போய் விடும்.

அவசரமாக பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு பிளாற்ஃபோமில்(Platform ) ஏற முயற்சித்தேன். எனது அந்தரமும், அவசரமும் உடலில் திடீரென்று ஏற்பட்டு விட்ட வலியும் சேர்ந்து என்னால் பிளாற்ஃபோமின் (Platform) உயரத்துக்குத் தொங்கி ஏற முடியாமல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு கணம் நெஞ்சு சில்லிட்டது. சிக்னல் வீழ்ந்து விட்டது. ஏதோ ஒரு லைனில் ரெயின் வரப் போகிறது. Platform கரையோடு நான் நின்றேன். தண்டவாளங்களைக் கடந்து மற்றப் பக்கம் ஓடலாம் என்ற யோசனை ஏனோ உடனே வரவில்லை. ஓடினாலும் ரெயின் வருமுன் தாண்டுவேனா என்பது அடுத்த விடயம்.

அப்போதுதான் புகையிரதநிலைய உதவிஅதிபரான டிக்சன் அங்கிள் Tablet உடன் வந்தார். அவர் அப்பாவின் உதவியாளர். என்னைக் கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடி வந்து கையை நீட்டினார். நான் அவரது கையைப் பிடித்ததும் இழுத்து.... எறியாத குறையாய் பிளாற்ஃபோமில்(Platform) என்னைப் போட்டார்.

ரெயின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து, Platform இன் தொடக்கத்தில் நின்ற போர்ட்டர் மார்ட்டினிடம் Tablet ஐக் கொடுத்து, டிக்சன் அங்கிளின் கையிலிருந்த Tablet ஐ வாங்கிக் கொண்டு நில்லாமலே போய் விட்டது. அதன் பின்தான் டிக்சன் அங்கிள் என்னை மிகுந்த கோபத்தோடு பார்த்தார். சிங்களத்தில் திட்டினார்.

நான் அப்பாவின் அலுவலக அறைக்குள் போய் விட்டேன். அப்பா தொலைபேசியில் அலுவலக விடயமாக யாருடனோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மெல்லிய முறுவலுடன் நோக்கியவர் உடனேயே முகத்தில் கேள்விக்குறி தொக்க.. என்னைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார். உடைந்திருந்த சொண்டும் அதன் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தமும் அவரைக் குழப்பியிருக்க வேண்டும்.

நின்றால் பிழை என்று வடையையும், தேநீரையும் உள் அறை மேசையில் கொண்டு போய் வைத்து விட்டு உடனேயே ரெயில்வே குவார்ட்டர்ஸ்சுக்குத் திரும்பி விட்டேன். சொண்டை உடைத்துக் கொண்டு வந்திருந்த என்னைக் கண்ட அம்மா பதறிப் போய் "என்ன நடந்தது..?" என்று கேட்டா. அம்மாவுக்குப் பொய் சொல்ல அப்போது, அந்த எட்டு வயதில் எனக்குத் தெரியாது. பிறகென்ன அம்மாவிடம் மாட்டினேன்.

அது மட்டுமா..? அப்பாவிடமும்தான். வேலை முடிந்து அப்பா வந்த விதத்திலேயே டிக்சன் அங்கிள் எல்லாம் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது. கோபம் தெறிக்க வந்தவர் என்னைக் கண்டதும் சற்று ஆறி விட்டார்.
"என்ன பிள்ளை இப்பிடியே பொறுப்பில்லாமல் நடக்கிறது..?" என்று கண்டித்து விட்டு, அம்மாவிடம் "உம்மடை மகள் இண்டைக்கு என்ன செய்தவள் தெரியுமே..? டிக்சன் மட்டும் இல்லையெண்டால் ஒரு செத்த வீடெல்லோ இப்ப கொண்டாடியிருப்பம்." என்றார்.

உண்மைதான். அன்று டிக்சன் அங்கிள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று நான் இதை எழுதக் கூட இங்கில்லாது போயிருப்பேன்.

சந்திரவதனா
யேர்மனி
23.8.2004

Post a Comment
முதற்பதிவு - மரத்தடி
Last Updated on Thursday, 19 December 2013 08:26
 
இரயில் பயணங்களில்... PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 04 August 2010 04:58
அப்போது எனக்கு 21வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசௌகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை உடுத்தியிருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.
Last Updated on Thursday, 19 December 2013 08:23
Read more...
 
சுட்டிப்பெண் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 27 July 2009 06:08

முழுவதுமாகக் கணினிக்குள் கவிழ்ந்திருந்த என் கவனத்தைக் கலைக்கும் படியாக வெளியே மாடிப் படிகளில் எதுவோ தொப்.. தொப்.. என்று உருண்டு வீழும் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கக மனசு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதுக்குள் ஒரு வீரிட்ட அலறல்.

மனசு பதைக்க.. கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து ஓடினேன். அது வேறு யாரினதுமல்ல. மேல்வீட்டுப் பெண்குழந்தை டிலாராவினது அலறல். `வீழ்ந்து விட்டாளா..? படியில் உருண்டிருப்பாளா..?` கணத்துக்குள் மனசு பற்பல கேள்விகளை அடுக்கியது. அவளின் வீரிடல் ஓயவில்லை. படபடப்போடு கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தேன்.

டிலாராவேதான். என் வீட்டு வாயிலிலிருந்து இறங்கும் மாடிப்படிகளின் கடைசிப் படியில் வீழ்ந்திருந்தாள். வாயைக் கூட்டி விரித்து அடித்தொண்டையால் கீச்சிட்டுக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் சடாரென வீரிடலை நிறுத்தி என்னைப் பார்த்து ஒரு மென்சிரிப்பை உதிர்த்து.. ஒரு கண்ணையும் சிமிட்டினாள்.

`என்னடா இது..? வீழ்ந்து கிடப்பவளின் சமிக்ஞை இப்படியா இருக்கும்.` அதிசயித்தவாறு அவளருகில் விரைந்து.. அமர்ந்து.. "வீழ்ந்து விட்டாயா..? எங்கேயாவது அடி பட்டதா..?" என்ற படி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன்.

"இல்லை" என்றாள். மெதுவாக, குசுகுசுப்பாக..

"அப்படியானால்...?"

மீண்டும் ஒரு கண் சிமிட்டலோடு, படிகளின் பக்கச் சட்டங்களைப் பிடித்து எட்டிக் குனிந்து மேலும் கீழுமாகத் தொடரும் படிவரிசைகளின் நடுவே கீழே நிலத்தில் வீழ்ந்திருக்கும் ஒற்றைச் சப்பாத்தைக் காட்டினாள் அவள்.

"என்ன..?" புரியாமல் வினாவினேன்.

"அண்ணா என்ரை சப்பாத்தை எறிஞ்சு போட்டான்."

ஓ... அதுவா..! சப்பாத்து வீழ்ந்த சத்தமா அது..! "அதுக்கேன் நீ அழுகிறாய்..?"

மீண்டும் ஒரு முறை செயற்கையாய் வீரிட்ட அவள்.. "எறிஞ்சது அவன்தானே..! அவன்தான் அதை கீழை இறங்கிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தரோணும். நான் அழுதால்தான் அம்மா அவனை கீழே அனுப்பி எடுக்க வைப்பா."

எனக்குச் சிரிப்பாய் வந்தது.  "சுட்டிப்பெண்" -என்று சொல்லி அவள் கன்னத்தைத் தட்டி விட்டு நான் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திய கையோடு அவள் மீண்டும் வீரிடத் தொடங்கினாள். அவளது அம்மா தனது பெரிய உடம்போடு இழைத்து இழைத்து இறங்கி வந்து அவள் பிரச்சனை பற்றி ஆராயும் வரை அவள் ஓய மாட்டாள் என்பது எனக்குத் தெரியும்.

(இந்தப் பெண் வேறு யாருமல்ல. அழகு என்று காரணம் சொல்லி என்னைப் பொட்டு வைக்கச் சொன்ன அதே சுட்டிதான் இவள்.

சந்திரவதனா
2003

Last Updated on Wednesday, 13 February 2013 08:49
 
பொட்டு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 27 July 2009 05:46

பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும்? அதனால் என்ன பயன்?
என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.

சின்ன வயசில் சின்னச்சீரகம் உட்பட மூலிகைகள் கொண்டு காச்சி வடித்து, சிரட்டையில் ஊற்றிக் காயவைத்த கறுத்தப் பொட்டை தண்ணீர் தொட்டு உரைத்து நெற்றியில் அம்மா வைத்து விடுவா. சின்னதாக கன்னத்திலும் ஒரு பொட்டுப் போட்டு விடுவா. அதனால் நெற்றிப் பொட்டின் நரம்புகள் குளிர்மையும், நன்மையும் பெறுமாம். அம்மாதான் சொல்லுவா.

வளர்ந்த பின் சிவந்த சாந்துப் பொட்டு. அது கூட மூலிகைகள் கலந்து செய்ததுதானாம். பயன் இருந்திருக்கும். அப்பா சொல்லுவார் ´பொட்டு வைத்திருக்கும் ஒரு பெண்ணை ஹிப்னோட்டிசவாதியால் ஒன்றுமே செய்ய முடியாதாம். சில ஆண்கள் தமது பார்வையின் வசீகரத்தால் தனியாகச் செல்லும் பெண்களை தமக்கு அடிமையாக்கி விடுவார்களாம். அப்படியான ஏமாற்று வேலை எல்லாம் பொட்டு வைத்த பெண்களிடம் கை கூடாதாம்.`

திருமணத்தின் பின் குங்குமப் பொட்டு. அதுவும் மூலிகைகள் கொண்டு செய்த நல்ல பயன் தரு அரும் பொருளாம்.

ஆனால் வெளிநாட்டில் ஸ்ரிக்கர் பொட்டு. இதனால் என்ன பயன்? பல தடவைகள் யோசித்துப் பார்த்து ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் பயன் எதுவும் இல்லையென்பதால் பொட்டு வைப்பதை விட்டு விட்டேன்.

இன்று மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது 7 வயதுகள் நிரம்பிய மேல் மாடித் துருக்கியப் பெண்குழந்தை கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் பல நாட்கள் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை இப்போ கேட்பது போன்ற பாவனையில் "ஏன் நீ இப்போ பொட்டு வைப்பதில்லை" என்று கேட்டது. சிரித்து விட்டு "இப்போ எனக்கு அதில் ஆர்வம் இல்லை" என்றேன்.

"ம்... நீ பொட்டோடு எவ்வளவு வடிவாக இருப்பாய். நெற்றியில் சிவப்பாக ஒரு பொட்டு. அது அழகு..." உதடுகளை நெளித்து, நட்போடு சிரித்து அழகாகச் சொல்லிக் கொண்டு என்னைத் தாண்டி இறங்கிக் கொண்டு போனது.

ம்... ஸ்ரிக்கர் பொட்டினால் என்ன பயன்..? இதுவோ...!

சந்திரவதனா
23.9.03

Last Updated on Wednesday, 13 February 2013 08:49
 
அவன் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:22
அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள்.

பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.
Last Updated on Thursday, 19 December 2013 08:27
Read more...
 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 Next > End >>

Page 27 of 29