அந்தத் தொலைபேசி அழைப்பு

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர்… என்று எதுவுமே இருக்கவில்லை. கைத்தோலைபேசி கூட இல்லை. வீட்டுத் தொலைபேசியில் விரல் விட்டு ஒவ்வொரு எண்ணாகச் சுற்றித்தான் யாருடனாவது தொலைபேச முடியும்.

யேர்மனியிலிருந்து ஊரில், ஆத்தியடியில் இருக்கும் அம்மாவுடன் தொலைபேச விரும்பினால் அப்படி நம்பரைச் சுழற்றி எங்களூர் உபதபாற்கந்தோருக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும். அங்கிருந்து ஒருவர் ஓடிப்போய் அம்மாவை அழைத்து வருவார். அம்மா வரும்வரை அத்தனை கஷ்டப்பட்டு பலமுறை சுழற்றி கிடைத்த தொடர்பைத் துண்டிக்க மனம் வராது. அம்மா வந்து இரண்டு கதை கதைக்க முன்னம் தொடர்பு தானாகவே துண்டிக்கப்பட்டு விடும். 

அம்மாவோடு கதைக்காமலே இருந்த பொழுதை விட பன்மடங்கு அதிகமான துயரம் தொற்றிக் கொள்ள எதுவும் செய்யத் தோன்றாது கண்கள் கலங்க அப்படியே கொஞ்ச நேரம் இருப்பேன். 

கதைத்ததற்கான ரெலிபோன் பில் பற்றிய பயம் பின்னர்தான் வரும். அது 200, 300… டொச்சமார்க் ஆக இருக்கும். அப்போது யூரோ வரவில்லை.

இந்திய இராணுவகாலத்தில் அதற்குக் கூட தடை வந்தது. ஊருக்குப் போன் பண்ணுவது என்பது சாத்தியமே இல்லாமல் போனது. ஊர் நிலைமை பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்வதற்கு அப்போது எங்களுக்குக் கைகொடுத்தது ‘தகவல் நடுவச் செய்தி‘.

தகவல் நடுவச் செய்தியை, உள்ளூருக்கு போன் பண்ணுவதற்கான செலவில் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்கலாம். இங்கிருந்த தமிழர்களில் ஒரு சிலர் சேர்ந்துதான் அந்த வசதியை உருவாக்கியிருந்தார்கள்.

எனது கணவர் தினமும் அதைக் கேட்டு, எங்களுக்கும் ஊர்ச் செய்திகளைச் சொல்வார். அப்படித்தான் 02.05.1989 அன்று, முதல்நாள்(01.05.1989) தம்பி மொறிஸ், இந்திய இராணுவத்துடனான நேரடிமோதலில் வீரமரணமடைந்த செய்தியை வேலையிடத்தில் இருந்தே கேட்டு விட்டு, மாலையில் வீடு வந்து சொன்னார். இன்னொரு தடவை எனக்காக அழைப்பை மேற்கொண்டு என்னையும் கேட்க விட்டார்.

எனது தவிப்பைப் பார்த்து விட்டு “அது பொய்ச் செய்தியாக இருக்கும்” என்றார். தாங்க முடியாத சோகம். தவிப்பும் அழுகையுமாய் என் நாட்கள் நகர்ந்தன. ‘அப்படி எதுவுமே நடந்திருக்காது, ஊரிலிருந்து நல்ல செய்தி வரும்‘ என்ற நப்பாசை வேறு எனக்கு.

ஒருமாசம் கழித்துத்தான் அம்மாவினதும் தங்கையினதும் கடிதங்கள் வந்து சேர்ந்தன. அது சுமை தாளாத சோகம் நிறைந்த ஒரு நாள்.

1993இலும் நிலைமைகளில் பெருமாற்றங்கள் ஏற்படவில்லை. அம்மாவுடன் தொலைபேச முடியாமலே இருந்தது. நான் ஒரு கடிதம் எழுதினால் அது அம்மாவைச் சென்றடைய கிட்டத்தட்ட ஒரு மாசம் செல்லும். அதற்கான பதில் வர இன்னொரு மாசம்.

அதே நிலைதான் களத்தில் நிற்கும் தம்பி சபாவுக்கு(கப்டன் மயூரன்) எழுதும் கடிதங்களுக்கும். இருந்தாலும் எழுதிக் கொண்டே இருப்பேன். அவனும் அவ்வப்போது எனக்கு எழுதுவான். அன்றும் தம்பிக்கு எழுதினேன்.

19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில் “அன்புச் சபா, எப்படி இருக்கிறாய்? பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்… இவ்வளவு சாவுகள்..! மனசை நெருடுகின்றன… என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம்” என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். 

இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம். கடிதத்துடன் எனது பிள்ளைகளின் சில புகைப்படங்களையும் வைத்து ஒட்டி அஞ்சல் செய்தேன்.

அடுத்தநாள் சனிக்கிழமை(20.11.2003), நானும் எனது கணவரும் எமது நகரிலிருந்து 120கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் போர்ட்ஸ்கைம் நகருக்கு, காரில் சித்தியின் பிள்ளைகளிடம் சென்று கொண்டிருந்தோம். வழியெல்லாம், கணவர் ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எனது கவனம் அவரது கதைகளில் இருக்கவில்லை. நான் ஏனோ கவலையாக இருந்தேன். என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. “என்ன கொம்மா கொப்பரை நினைச்சு அழுறியோ?” என்றார். “இல்லை” என்றேன். “தம்பிமாரை நினைச்சு…” அதற்கும் “இல்லை” என்றேன். “ஏன் நான் அழுகிறேன்?” என்று எனக்கே தெரியாமல் இருந்தது.

தொடர்ந்த நாட்களில் மனதில் என்னவென்று தெரியாத ஏதோ ஒரு அமைதியின்மை. அடுத்து வந்த சனிக்கிழமை(27.11.1993) யேர்மனியில் மாவீரரை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுஸ்டிக்கப் பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு அன்று பாடசாலை இருந்தது. அதனால் கணவர் மட்டும் அதிகாலையிலேயே போய் விட்டார். நான் ஏதேதோ நினைவுகளோடு சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.

கொழும்பில் இருந்து சித்தி அழைத்திருந்தா. இரண்டு கதை கதைத்து விட்டு “மனதைத் திடப் படுத்திக் கொள்ளு மேனை” என்றா. ‘ஏதோ ஒரு பாதகமான செய்தி‘ என்ற உறுத்தலில் நெஞ்சு திக்கென்றது.

“சபா பூநகரித் தாக்குதலிலை போயிட்டான். 11ந் திகதி(11.11.1993) நடந்தது” என்றா

“என்ன? எப்படி?” என்ற எனது கேள்விகளுக்கு “ஒரு விபரமும் சரியாத் தெரியேல்லை. நான் பிறகு எடுக்கிறன். எல்லாருக்கும் சொல்லு மேனை” தோலைபேசியை வைத்து விட்டா. நான் அழவில்லை. மலைத்துப் போய் நின்றேன். ‘எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை‘ என்பதில் மனசு மிகவும் ஏமாற்றத்தை உணர்ந்தது.

“எல்லாருக்கும் சொல்லு மேனை” என்ற சித்தியின் குரல் மீண்டும் ஒலிக்க, இலண்டனில் இருக்கும் தங்கையைத் தொலைபேசியில் அழைத்தேன். மூச்சு வாங்கிய படி “ஹலோ” என்றவள் “இப்பத்தான் கடையிலை சாமான்கள் வேண்டிக் கொண்டு வந்தனான். படியிலை வரவே ரெலிபோன் அடிச்ச சத்தம் கேட்டது. அதுதான் ஓடி வந்தனான்” என்றாள். கர்ப்பமாயிருக்கும் அவளின் மூச்சு பலமாகவே எனக்குக் கேட்டது. எனது அழைப்பு என்ற சந்தோசத்தில் “அக்கா..” என்றவளிடம் எப்படி அந்தச் செய்தியைச் சொல்வது? இதுவும் ஒரு கொடுமைதான்! ஆனாலும் சொல்ல வேண்டுந்தானே!

“சித்தி போன் பண்ணினவ”

“என்னவாம்..?”

“சும்மாதான்…” சொல்ல முடியாமல் இழுத்தேன்.

பின்னர் சொன்னேன் “சபா… பூநகரி அற்றாக்கிலை போயிட்டானாம்”

“சும்மா சொல்லாதைங்கோ” சிரிக்கிறாளா? அழுகிறாளா? என்று யோசிக்கையில் அவளின் கேவல். தொலைபேசியை வைத்து விட்டேன்.

அந்தச் செய்தியை அவளிடம் சொல்லியதற்காக சிலமணி நேரங்கள் அப்படியே இருந்து அழுதேன். அந்தக் ‘கேவல்‘ மாதங்கள், வருடங்களாக என்னை அழ வைத்தது.

பின் எனது பெரிய தம்பியை அழைத்து… பிள்ளைகள் பாடசாலையால் வர அவர்களுக்கு… இரவு கணவர் வர அவருக்கு…

அதன் பின் தம்பி இறந்ததற்காகவா அல்லது ஒவ்வொருவரிடமும் அந்தக் கொடிய செய்தியை நானே சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தத்திற்காகவா என்று தெரியாமலே நான் அழுது கொண்டிருந்தேன்.

சந்திரவதனா
11.11.2023

(தம்பிமார், அக்காமார்களுக்குக் கிடைத்த கொடைகள். அவர்களிடம் பட்ட அன்புக் கடனைத் தீர்த்து வைக்கும் பாக்கியம் எல்லா அக்காமாருக்கும் வாய்த்து விடுவதில்லை)

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *