பெண்விடுதலை என்றால்…

பெண்விடுதலை பற்றிய புரிந்துணர்வு இன்றைய காலகட்டத்தில் சற்றுப் பிழையானதாகவே இருக்கிறது. பெண்கள் பல வழிகளிலே முன்னேறி இருக்கிறார்கள் தான். அதை இல்லையென்று நான் சொல்லவில்லை. எங்கள் அம்மம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையில் வித்தியாசமும் முன்னேற்றமும் தென்பட்டன. எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் வாழ்க்கை முறையில் இன்னும் வித்தியாசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எங்கள் வாழ்க்கை முறையை விட எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முறையில் இன்னும் அதிக முன்னேற்றங்கள் பரிணமிக்கின்றன.

இன்றைய ஆண்பிள்ளைகள், குறிப்பாக ஐரோப்பியாவில் வளர்ந்தவர்கள் தமது குடும்பம் என்று வரும் போது குழந்தைகளைப் பார்ப்பதிலிருந்து வீட்டிலுள்ள பல்வேறு வேலைகள் வரை மனைவியோடு பங்கெடுத்துச் செய்கிறார்கள். ஆனாலும் இன்ஸ்ரிங்ற் (Instinct)  என்ற ஒன்று இருக்கிறதே. அது அவர்களை அறியாமலே சில விடயங்களை அவர்களின் மூளையில் பதித்து வைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளியில் வர இன்னும் சில காலங்கள் தேவை.

இதே போலப் பெண்களின் மூளையிலும்  சில விடயங்கள் பதியப் பட்டிருக்கின்றன. அவைகளிலிருந்து பெண்களும் மீளவேண்டும். தான் அடிமைப்பட்டு இருக்கிறேன் என்பதை ஒரு பெண் உணராத வரை அவளால் விடுதலையையோ சுதந்திரத்தையோ பெற்றுவிட முடியாது.

இன்றைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களை மீண்டும் மீண்டுமாய் தைரியமிழக்கச் செய்கின்றன. தாம் பலவீனமானவர்கள் என்று எண்ண வைக்கின்றன. இவைகளையே பார்த்துப் பார்த்து அழுது வடிப்பதை விடுத்து இன்றைய பெண்கள் வேறு வேறு ஆரோக்கியமான வழிகளில் தம்மை ஈடுபடுத்த வேண்டும். காலத்துக்கேற்ப அறிவு சார்ந்த விடயங்களில் தமது கவனங்களைச் செலுத்தவேண்டும். மின்னஞ்சல் அனுப்புவதாயினும் கணவர் வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லாது தாமே செய்ய வேண்டும்.

பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவள் அல்ல. இதை ஒவ்வொரு பெண்ணும் திடமாக நம்ப வேண்டும்.

ஒரு பெண் ஒரு ஆணைச் சார்ந்து வாழ்வதும் ஒரு ஆண் ஒரு பெண்ணைச் சார்ந்து வாழ்வதும் இயல்பானதும் இயற்கையானதும். ஆனால் பெண்தான் ஒரு ஆணைச் சார்ந்து வாழ்கிறாள் என்பது போன்றதான பிரமையை உலக சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதைப் பெண்ணும் நம்புகிறாள். ஒரு பெண்ணின் வாழ்வுக்கு ஒரு ஆண் எத்தனை தூரம் அவசியமானவனாக இருக்கிறானோ அதேயளவு அல்லது அதையும் விட அதிகமாக ஒரு ஆணின் வாழ்வுக்கு பெண் அவசியமாகிறாள். இதை பெண்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதனூடு தமது பலத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்காக இந்த உணர்தல்களைத் தவறான முறையில் பயன்படுத்துவதையும் தவிர்த்து விட வேண் டும். ஆண்கள் செய்யும் தவறான வேலைகளைப் பெண்களும் செய்வதுதான் சமத்துவம் என்று நினைத்து விடக் கூடாது. அது இன்றைய குழந்தைகளின் வாழ்வில் பிழையான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி, எதிர்காலச் சமுதாயத்தைத் தப்பான வழிக்குக் கொண்டு சென்று விடும்.

சில பெண்கள் நினைக்கிறார்கள் பெண்விடுதலை என்றால் டிஸ்கோவுக்குப் போதல், மது அருந்துதல், வெளியில் சுற்றுதல், விட்டேற்றியாகத் திரிதல், எதற்கும் எதிர்த்து நின்று சண்டை போடுதல்… என்று. இந்த நினைப்புகளினூடனான செயற்பாடுகள் பெண்விடுதலை என்பது ஒரு பயங்கரமான சமூகச்சீர்கேட்டுக்கு ஏதுவான விடயம் எனப் பலரையும் எண்ண வைத்து விடுகிறது. 

பெண்விடுதலை என்பது பயங்கரமானதோ அன்றில் சீர்கேடானதான விடயமோ அல்ல. அது ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்குமான பலம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். எல்லோருக்கும் உணர்த்தப் படவும் வேண்டும்.

பெண்விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை.

அந்த விடுதலையை நோக்கிய பாதையில், ஒரு பெண் தனது சுயத்தை இழக்காது முன்னேறவேண்டியது மிக அவசியமாகிறது. கூடவே தனக்கு ஏதுவான தன்னால் முடிந்த கல்வி, சுயதொழில், சுயமான சம்பாதிப்பு, எண்ணங்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் தன்மை, சுயசிந்தனை, அதனூடாக நன்மை, தீமைகளை ஆராய்ந்து செயற்படும் துணிவு, சுற்றியுள்ளவர்களை அன்பால் வளைத்துப் போடும் ஆளுமை… என்பனவும் இவைகளினூடு தன்னை வளர்த்து, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் சுதந்திரமாக வலம் வரும் திறமையும் ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.

விடுதலையும் சுதந்திரமும் இறைஞ்சிப் பெறும் விடயங்கள் அல்ல. அவை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். இதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

-சந்திரவதனா
26.05.2003

  • ஈழமுரசு – பாரிஸ் (2003)

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *