குடும்பம் என்றால் என்ன?

மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா?

குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?  நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே!

பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும் ‘பெண்ணைவிட தான் உசத்தி’ என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு முற்றாக அகலவில்லை. அதேநேரம் பலபெண்களின் மனதில் இருந்தும் ‘தாங்கள் பெண்கள், அதனால் தாழ்ந்தவர்கள்’ என்ற எண்ணமும் முற்றாக விட்டுப் போகவில்லை.

நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆணாதிக்க அடக்குமுறையும் பெண்ணடிமைத் தனமும் இன்று சற்றே தளர்ந்து பெண்கள் ஓரளவுக்கேனும் விழிப்புணர்வுடன் வாழத் தொடங்கியிருந்தாலும் இன்னும் பெரும்பான்மையான பெண்கள் அடிமைத்தளைகளை அறுத்தெறியத் தெரியாமல் இறுகப்பற்றிய படியே இருக்கிறார்கள்.

சமையல், சாப்பாடு, வீட்டுவேலை, பணிவிடை… என்று மாய்ந்து கொண்டிருந்த பெண்களின் மனதில் ‘இதற்குத்தான் இவர்கள் லாயக்கு’ என்ற பிரமை காலங்காலமாக ஆண்களால் ஊட்டப் பட்டு, காலப்போக்கில் அதுவே சமூகத்தின் மத்தியில் உறுதி செய்யப்பட்டும் விட்டது. எத்தனையோ ஆண்கள், இன்னும்  கூட அடுப்படிக்கும் படுக்கைக்கும் மட்டுமே பெண்கள் இலாயக்கானவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரம் கணிசமான ஆண்கள் தாம் இது வரை காலமும் பெண்களை எவ்வளவு தூரம் அடிமைப்படுத்தி வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கியும் இருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்களை அடிமைப்படுத்தி வாழும் போது சுகித்த அந்த சுகபோக வாழ்க்கையை விட்டு வெளியில் வர அவர்களுக்கும் இன்னும் முழுமனதான இஸ்டமில்லை.

இருந்தாலும் இன்றைய நிலையில் இந்த நிலைப்பாட்டில் சில பெண்களிடம் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

‘இதற்கும் மேலால் எம்மால் முடியும்’ என்று பெண்கள் ஓரளவுக்கேனும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமது காலில் தாம் நிற்க வேண்டுமென்று எண்ணத் தொடங்கியுள்ளார்கள். பொருளாதார ரீதியாக தம்மைத் தாம் பலப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற உத்வேகம் கொண்டுள்ளார்கள். அதன் பயனாக வேலை செய்து பணம் சம்பாதித்து வீட்டுச்செலவில் தாமும் பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கோடு வீட்டைவிட்டு சற்றே வெளியுலகத்துக்கும் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

இருந்தும் என்ன..?

எப்படித்தான் வெளியில் வந்தாலும் எந்தளவு தான் சம்பாதித்தாலும் அவர்களால் தமக்கென்று காலங்காலமாக நியமித்து வைக்கப்பட்ட சமையல், சாப்பாடு, வீட்டுவேலை, பணிவிடை… போன்றவற்றிலிருந்து முழுமையான விடுதலையைப் பெற முடியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இதுவரை காலமான சில பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முழுமையான விடுதலை பெற்றுவிட்டதான ஒரு மாயைத்தோற்றம் வெளியுலகில் ஏற்பட்டிருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்து பார்க்கும் போது பெண்ணானவள் இன்னும் அதிகப் படியான சுமைகளுடன் மிகுந்ததொரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளாள்.

முன்னர் பெண்கள் வீட்டு வேலைகளுடன் மாய, ஆண்கள் வெளிவேலைகளையும் பணம்  தேடுவதற்கான வேலைகளையும் கவனித்தனர். இப்போது அது சற்று மாறி வீட்டுவேலைகளுடன் வெளிவேலை, பணம்தேடும் வேலை… என்று பெண்களுக்கு சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன. இதற்கு வேறு ´சுதந்திரம்` என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

சமைத்துப் போடும் கணவனின் மனைவியும், அதிகாலை வேலைக்குப் போகும்போது தானே தேநீரைத் தயாரித்துக் குடித்து விட்டுச் செல்லும் கணவனின் மனைவியும் விடுதலை பெற்றவர்கள் என்பதான அறியாமை நிறைந்த பேச்சு கூடுதலாகப் பெண்களின் இடையேதான் உலாவுகிறது.

சாதாரண மனித உணர்வுகளைக் கூட பெண் என்பதற்காக எங்கோ புதைத்து விடுகின்ற சில பெண்களும் அதையே பெண்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ற சில ஆண்களும் இன்னும் இருக்கிறார்கள். ‘தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்னச் சின்னச் செயலும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்துக்கு உட்படாததாகவே இருக்க வேண்டும். தான், தவறுகளுக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்று பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள்.

அதற்குக் காரணம் அப்படியான பெண்கள்தான் நல்ல பெண்கள், அடக்கமான பெண்கள்… என்று பல விதமான புகழாரங்களாலும்  சூடப் படுகிறார்கள். மற்றைய பெண்கள் சில பெண்களாலேயே ஏன்.. சமயத்தில் கணவனால் கூட விசனமாகப் பார்க்கப்பட்டு விமர்சிக்கப் படுகிறார்கள்.

குறிப்பாக ஆண்கள், இது பற்றிய சிந்தனைகளைத் தம்மைச் சுற்றியுள்ள பெண்களோடு கதைக்கும் அதே வேளையில் பெண்களும் தாம் நல்லவர்கள் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாது, நல்லவர்களாக இருந்து கொண்டு தமக்காக வாழப் பழக வேண்டும். தமது உணர்வுகளை முதலில் தாமே மதிக்கப் பழக வேண்டும்.

கணவனிடம் கூட தமது உணர்வுகளைக் காட்டுவது பாவம் என நினைக்கும் பெண்களும் உடலுறவு என்பதே தமக்குப் பிடிக்காத ஒன்று என்பது போலப் பாவனை பண்ணும் பெண்களும் கூட எம்மிடையே இன்னும் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

காலங்காலமான நடைமுறைகளில் ஆண்கள் ஆளுமைக்குரியவர்கள் என்பது போலவும் பெண்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள் என்பது போலவும் பிரமைப் படுத்தப்பட்டு அதனூடும் அதற்குச் சார்பாகவுமே எல்லா விடயங்களும் இசைவு பெற்று விட்டன.

அந்த இசைவாக்கத்தில் இருந்து ஆண்கள் விடுபடவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து பெண்களும் மனித ஜென்மங்கள்தான் என்பதை உணர்ந்து செயற்படவும் ஏற்றவகையில் அவர்களுக்குப் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் நாங்கள் இதற்குத்தான் இலாயக்கானவர்கள் எனத் தம்மைத் தாமே தாழ்த்தி நினைக்கும் பெண்கள் தம் வலிமையை உணர வேண்டும். தம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

இவைகள்தான் பெண்விடுதலையின் அத்திவாரங்களாக அடியெடுக்கின்றன. ஒரு குடும்பம், குடும்பமாகவும் மகிழ்வாகவும் பலமாகவும் இருக்க உதவுகின்றன.

-சந்திரவதனா
2005

  • ஐபிசி தமிழ் (அக்னி) – 2005

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *