home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 21 guests online
நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 02 January 2019 22:19
Ahilan Karunaharanநியூசிலாந்து நாட்டின் இந்த வருடத்திற்கான சிறந்த நாடக எழுத்தாளருக்கான The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு கிடைத்திருக்கிறது.

யார் இந்த அகிலன் கருணாகரன்? The Bruce Mason விருது என்பது என்ன? என்ற கேள்விகள் உங்களில் யாருக்காவது இருக்கலாம். அதனால் முதலில் The Bruce Mason விருதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். பிறகு அகிலன் கருணாகரனது விடயத்துக்கு வருகிறேன்.

1983 ஆம் ஆண்டு முதல் The Bruce Mason விருதானது ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் திறமைக்கான அங்கீகாரமாக நியூசிலாந்து நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் எழுத்தாளருக்கு 10,000 நியூசிலாந்து டொலர்கள் விருதுடன் சேர்த்து அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு எழுத்தாளரை ஊக்குவிப்பதற்கும் அவரது முயற்சிகளின் மேலதிக தேவைகளுக்காகவும் இந்தப் பணம் அவருக்கு உதவலாம் என்ற அடிப்படையிலேயே இந்தப் பணப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் இந்த விருதானது நியூசிலாந்து நாட்டின் பிரபலமான எழுத்தாளர்களான Hone Kouka, Briar Grace-Smith, Jo Randerson, Victor Rodger, Arthur Meek, Sam Brooks and Mīria George ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வரிசையில் 2018இல் இப்பொழுது அகிலன் கருணாகரனும் இணைந்திருக்கிறார்.

பொதுவாகவே ஈழத்துக் கலைஞர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. அதே நேரம் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அந்தந்த மொழிகளில் தங்கள் கலைகளை வெளிப்படுத்துகின்ற பொழுது அவர்கள் எங்களிடம் இருந்து அந்நியப்பட்டும் போய் விடுகிறார்கள். அகிலனது நிலையும் இதில் அடக்கம்.

வெலிங்டன் விக்ரோறியா பல்கலைக்கழகப் பட்டதாரியான அகிலன் கலையின் மேலிருந்த ஆர்வத்தால் நியூசிலாந்து நாடகப் பள்ளியில் இணைந்து நாடகத்துறையை பயின்றதோடு நின்று விடாமல் பிரித்தானியாவுக்குப் பயணித்து இலண்டனில் உள்ள சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நாடக நிறுவனமான Tara Arts உடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார். இதனூடக ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நோர்வே, கனடா மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவமும் அகிலனுக்கு இருக்கிறது.

அகிலன், அகரம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதனூடாக தெற்காசிய எழுத்தாளர்களை இணைத்து Aotearoaவில் விழா ஒன்றை நடாத்தியிருக்கிறார். இதனூடக Aotearoaவில் தெற்காசியாவின் எழுத்தாளர்கள் பங்குபற்றிய முதல் நிகழ்ச்சியை நடத்திய பெருமை அகிலனின் அகரம் நிறுவனத்திற்குச் சேர்கிறது. அகிலன் உருவாக்கிய அகரம் நிறுவனம் தெற்காசிய எழுத்தாளர்களின் அபிவிருத்தித் தியேட்டர் நிறுவனங்களில் ஒன்றாக இன்றும் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறது. அகிலன் சொந்தமாக அகரம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தாலும் Tawata என்ற நிறுவனத்தின் ஒரு துணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Aotearoaவின் முதல் முழு நீள (சிறிலங்காவை மையப்படுத்திய) நாடகமான The Mourning After உட்பட Anchorite, Light vs Dark - The Adventures of Rama (Auckland Theatre Company) Swabhoomi - Borrowed Earth என்பன அகிலனின் பங்களிப்பில் வெளியானவை. அகிலனது சமீபத்திய படைப்பான Tea என்ற குடும்ப நாடகம் Auckland நகரில் நடந்த கலைவிழாவில் அதிக பாராட்டைப் பெற்றிருக்கிறது.

வருகின்ற ஆண்டு 2019இல் அகிலன், Belvoir St Theatre தயாரிக்கும் நாடகத்தில் நடித்துக்கொண்டு Sydney Arts Festivalஇல் Auckland Theatre Companyக்காகவும் நாடகமொன்றை நெறியாள்கை செய்யவும் இருக்கிறார்.

இன்னும் பல செய்திகள் அகிலன் கருணாகரனைப் பற்றி இருக்கிறது. அவைகளை எழுதுவதாயின் இந்தக் கட்டுரை நீண்டு விடும். நான் நவம்பரில் அவுஸ்திரேலியா சென்ற போது மெல்பேர்ன் நகரில் ஒரு விழாவில் அகிலனை சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அந்த சந்திப்பில்தான் தனக்கு விருது கிடைக்கும் செய்தியை அவர் எனக்குச் சொன்னார். நான் அவரை சந்தித்த மறுநாள் 25.11.2018 இல் அவருக்கான விருது வழங்கும் நிகழ்வு நியூசிலாந்தில் வெலிங்டன் நகரில் நடைபெற இருந்தது. மெல்பேர்னில் நடக்கும் விழாவை முடித்து விட்டு நியூசிலாந்துக்கு பறக்க வேண்டிய அவசரத்திலும் என்னைத் தேடி வந்து அவர் சில நிமிடங்கள் என்னிடம் உரையாடியதில் சில தகவல்களை அவரிடம் இருந்து பெற முடிந்தது.

நாடகங்கள் மட்டும்தானா சினிமாவில் நாட்டமில்லையா என்று நான் அவரிடம் கேட்ட போது, “இருக்கிறது. சினிமாவிற்கான ஒரு கதையை ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதி வைத்திருக்கிறேன். அதற்கான காலங்கள், அதை உருவாக்குவதற்கான தயாரிப்பாளர் யாரேனும் வரும் போது அது சாத்தியமாகும். ஆனால் எனது அந்தத் திரைப்படம் வர்த்தக சினிமாவை விட்டு மாறுபட்டிருக்கும்” என்றார்.

அகிலனுக்கு வாழ்த்துக்கள்.

ஆழ்வாப்பிள்ளை
06.12.2018
Last Updated on Thursday, 03 January 2019 20:47