என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது, என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ எண்டு.

என்னெண்டு முடியிறது? காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப்படுத்தி, அவசரமாய் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.

மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால் பெட்டிக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு. நான் பம்பரமாய் சுழண்டனே! ஒரு உதவி செய்வம் எண்டில்லை. சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!

இருந்து கொண்டு இஞ்சரும், அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும். இஞ்சரும், இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்… எண்டு தொல்லை வேறை.

அது மட்டுமே எங்கையப்பா, அண்டைக்கொரு என்வெலப் தந்தனே! அதையொருக்கால் தாரும்.

ம்… தானே வைக்கலாந்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது. பிறகு எங்கையப்பா அது? எண்டுறது. இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.

சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ் பண்ணுறன், அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.

அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன். அதுகளும் எங்கை..? அப்பா கதிரைக்குள்ளையும், சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள். அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகளோ!

மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, ´நல்லாயிருக்கப்பா´ எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் நாளைக்கு அந்த வேலையைச் செய். அங்கை அப்பொயிண்ட்மெண்ட் எடுத்து வை… எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.

எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை தேத்தண்ணியைப் போட்டுக் குடுத்தன்.

தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது. என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையோ எண்டு.

எனக்குக் கோவந்தான் வந்துது. என்னெண்டு வெளிக்கிடுறது? கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல்… சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்… போய் தொலைக்காட்சிக்கு முன்னாலை இருந்து கொண்டு…

எனக்கு வந்த கோவத்துக்கு ஏனப்பா, இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்… நான் ´டக்´ கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே! எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.

ம்… இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம், பிறகு மனுசன் நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விட மாட்டாய் எண்டு தொடங்கீடும்.

பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி… ஏன் பிரச்சனையை எண்டிட்டு வாயை மூடிக் கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.

மனுசன் ஆற அமர இருந்து தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டு, தொலைக்காட்சியை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.

ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ எண்டு

நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்… குடுத்தென்ன! மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.

சரி, ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு. மனுசன் இப்ப எழும்பிப் போய், வெளிக் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீட்டையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிடுறதுக்கு இவ்வளவு நேரமோ… எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக் கொண்டு நிக்குது.

நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி, வாயை இறுக்கி மூடிப் போட்டன்.

வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான். வழக்கம் போலை லைற் எரியுது. தொலைக்காட்சி போட்ட படியே இருக்குது. நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..? மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு. குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை இருக்குது. எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்சமில்லை.

எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன். ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த, எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்… எண்டு.

அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை சொருகிக் கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, தொலைக்காட்சியை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு… மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும் கோவம் ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது!

2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *