அம்மாவுக்குத் தெரிந்தது

எனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு ஒலிப்பேழையுடன் வந்து பாடல்களை எரித்து எடுத்துக் கொண்டு போவார்கள். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமே! அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் நானே இந்தப் பாடல்களை எவ்வளவு சத்தமாகப் போட்டுக் கேட்பேன். இப்போது எல்லாமே போய் விட்டன. ஏதோ ஒரு கண்டறியாத வைரஸ். எப்படி அது எமது கணினிக்குள் வந்து சேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி இவ்வளவு பாடல்களையும் திருப்பித் தரவிறக்கம் செய்வது என்பது இலேசான காரியமே!

என்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருக்கிறான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன், இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.

அன்ரிவைரஸ் புரோக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கேல்லை என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ஆனால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே!

அப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக் கணக்குகள்… என்று எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். அவைகளோடு மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. போன்ற பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.

இந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு மின்விளக்கைப் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் ´பளிச்´ என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.

எங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறிங்கள்? என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது!´ என்பது மாதிரியான அலட்சியப் பார்வை அது.

அப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன் என்றா.

உடனேயே அப்பா இது கொம்பியூட்டர் பிரச்சனை. உமக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது? நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீர் பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டீர். கெதியிலை தேத்தண்ணியைப் போடும். உமக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு.. தனது எரிச்சல்களை எல்லாம் கொட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில், அப்பா அவசரமாகக் கொட்டினார்.

எனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.

இப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில், அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.

அம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு களைப்போ? சாப்பாடு வேணுமோ? தேத்தண்ணி போடட்டோ? என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ? என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா, நாங்கள் சாப்பிட்டோமா என்று பார்க்க வேண்டி இருக்கும். ´இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி´ என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேநீர் போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.

அம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்.. என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது? எப்படியும் அது குப்பையாகுது.

இன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி, மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்கிறது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் ´´ வென்று திறந்த படி இருக்கிறது. இன்னொரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூடப் பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்… என்று குசினி அலங்கோலமாய்…

இவைகளை எல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே! ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள்

இதுகள் என்ன பெரிய வேலையே? ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே? என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாகத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா அடுக்கி வை. ஒழுங்கா வை என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.

அது மட்டுமே! படிச்சனியோ? என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது? என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.

ஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.

அப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ! ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை என்றார். வினாடிகள் கழித்து சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள் என்றார்.

அதற்கு அண்ணா அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்பிடி வைரஸ்களையும் எங்கடை கொம்பியூட்டர்களிலை பரவச் செய்யலாந்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.

இந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து என்ன, வைரஸ் பிரச்சனையே? என்றா.

இப்போது நான் ஓமம்மா, எல்லாம் போயிட்டுது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிஞ்சு போட்டுது என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

அம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு ´பளிச்´. மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. அதென்ன ஒரு சிரிப்பு உமக்கு? எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீர் என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறீர் என்றார்.

இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் ´பக்அப்´ செய்து வைச்சிருக்கலாந்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்… சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.

பெட்டிக்குள்… என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக, திகதி வாரியாகப் பிரித்து…

15.8.2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *