விழிப்பு

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து இந்து குமுறினாள். நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ?

இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா, சிரிச்ச முகத்தோடை வரவேற்கோணும் சினந்தான் சங்கர்.

அவன் ஸ்ரெபியுடன் சுற்றி விட்டுத்தான் இவ்வளவு தாமதமாக வருகிறான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்ததால் அந்த ஆட்டக்காரியோடைதானே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வாறிங்கள். எனக்குத் தெரியும். என்றாள் எரிச்சலும் கோபமுமாக.

சும்மா காகம் கத்திற போலை எப்பவும் கத்திக் கொண்டிராதை. குடும்பம் எண்டால் இப்பிடிக் கனக்க இருக்கும். பொம்பியைள்தான் இதையெல்லாம் அனுசரிச்சுப் போகோணும். ஏன் உனக்கு கொம்மா இதொண்டும் சொல்லித் தரேல்லையே? என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாவோ? ஒரு நல்ல பழக்கங்கள் கூடப் பழக்காமல்..! உன்னைப் போய் கலியாணம் கட்டினனே! சங்கர் வழக்கம் போலவே வக்கிரத் தனமாகக் கதைத்தான்.

இந்துவால் அவனது அலட்சியம் கலந்த வக்கிரப் பேச்சை அணுவளவேனும் ரசிக்க முடியவில்லை. செய்வதையும் செய்து விட்டு அதற்கு வேறு, நியாயம் தேடும் அவனது நியாயமற்ற பேச்சு அவளை கோபத்தில் கொதிக்க வைத்தது. ஏற்கெனவே மனதை வதைத்துக் கொண்டிருந்த வேதனைக்கும், ஏமாற்றத்துக்கும் கோபம் தூபம் போட நானும் இப்பிடி வேறொருத்தனோடை சுத்திப் போட்டு வந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்ளுவிங்களோ? அல்லது உங்களாலை சகிக்கத்தான் முடியுமோ? சீற்றத்துடன் கேட்டாள்.

சங்கருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. என்னடி கதைக்கிறாய்? ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். அது சகயம். அதுக்காண்டி பொம்பிளையளும் அப்பிடிச் செய்யிறதோ? கத்தினான்.

ஏன் செய்யக் கூடாது. கோபம் அழுகையாக வெடிக்க கேவலுடன் வார்த்தைகளை வீசினாள் இந்து.

பெண் எண்டால் தாய். தாய் தெய்வத்துக்குச் சமமானவள். அந்த தெய்வத்துக்குச் சமமான தாய் பிள்ளையளைப் பெத்து பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்க வேண்டியவள். அவள் அப்பிடிச் செய்யக் கூடாது. கோபம் கொப்பளிக்க சங்கர் இன்னும் சத்தமாகக் கத்தினான்.

இந்துவும் விடவில்லை. பெண்ணெண்டால் தெய்வம் எண்டது உங்களுக்குத் தெரியுது. நீங்கள் செய்யிறது ஒரு செய்யத் தகாத வேலை எண்டதும் உங்களுக்குத் தெரியுது. இருந்தும் அப்பிடியொரு வேலையைச் செய்து பெண்ணெண்ட தெய்வத்துக்குத் துரோகம் செய்யி.. இந்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை.

அதற்கிடையில் இடைமறித்த சங்கர் இப்ப கதையை நிப்பாட்டு. விட்டால் கதைச்சுக் கொண்டே போவாய். புருசன் வந்திருக்கிறன். சாப்பிட்டியோ, குடிச்சியோ எண்டு கூடக் கேட்காமல், உன்னை இங்கை கூப்பிட்டன் பார். அது என்ரை பிழை. ஊரிலை எண்டால் இப்பிடிக் கதைப்பியே? வாய் வெத்திலை போட்டிருக்கும். நீ திரும்பி ஊருக்கே போயிடு. என்றான். அவன் வார்த்தைகளில் நையாண்டியும், அதிகாரமும் தொக்கி நின்றன.

இந்து கொதித்துப் போனாள். இப்பிடியே போனால் நான் தற்கொலை செய்து செத்துப் போடுவன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு என்ரை அருமை தெரியும்.

இப்போது சங்கர் பெரிய நையாண்டிச் சிரிப்பொன்றைச் சிரித்தான். இந்துவுக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

சிரித்தது போதாதென்று நீ எங்கை சாகப் போறாய்? நீ செத்தாயெண்டால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதலாள் நானாத்தான் இருக்கும் என்றான்.

இந்துவை அவன் வார்த்தைகள் தீயாகச் சுட்டன.

சங்கர் தொடர்ந்து போன முறையும் இப்பிடித்தான் சாகப் போறன் எண்டு சொல்லி மருந்து குடிச்சியே, அப்ப நான் உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் கொஸ்பிட்டல்லை போட்டனே, அதுதான் நான் செய்த பெரிய தப்பு என்றான்.

மகன் கோகுலை கிண்டர்கார்டனில் விட்டு விட்டு பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்த இந்துவின் மனதில் முதல் நாள் சங்கருடன் நடந்த சண்டையும், சங்கரின் ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே சுழன்று கொண்டிருந்தன. கோபத்தில் உடம்பு கொதிப்பது போல் இருந்தது.

போனவருடம் இப்படித்தான். சண்டையில் வாக்குவாதம் உச்சக் கட்டத்துக்கு வர இந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னாள். உடனே சங்கர் நல்லாச் செய். அப்பாடா ஒரு சனியன் துலைஞ்சுது எண்டு நான் நிம்மதியா இருப்பன் என்றான்.

கோபம் தலைக்கேற இந்து ஓடிப்போய் மலசலகூடம் கழுவும் மருந்தை எடுத்துக் குடித்து விட்டாள். மருந்து உள்ளே போகும் போதுதான் தான் செய்தது எத்தகையதொரு மடைத்தனமான வேலை என்பதை உணர்ந்தாள். உணர்ந்து என்ன பயன்? உடலுக்குள் தீப்பற்றி எரிவது போன்ற வேதனையில் துடித்து விழுந்தாள்.

சங்கர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயந்து போய் விட்டான். வேதனையில் புரளும் இந்துவைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் காரில் ஏற்றினான். இந்து அப்படியே மயங்கி விட்டாள்.

அவள் மீண்டும் கண் விழித்த போது மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தாள். உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது. எழும்ப முயற்சித்தாள். அவளால் அசையக் கூட முடியவில்லை. நடந்த விடயங்களை மெல்ல அசை போட்டுப் பார்த்தாள். மனசை சோகம் நிறைக்கக் கண்கள் கலங்கின. அழக் கூட அவளால் முடியவில்லை. அசதியில் மீண்டும் தூங்கி விட்டாள்.

மீண்டும் அவள் கண் விழித்த போது சங்கர் கோகுலுடன் வந்திருந்தான். கோகுல் சோகமாய் இருந்தான். இந்துவின் கைகளைப் பிடித்த படி அழுதான். எப்ப அம்மா வீட்டை வருவீங்கள்? என்று ஏக்கத்துடன் கேட்டான். இந்துவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நா உலர்ந்திருந்தது. அவனை அணைத்துக் கொள்ள எண்ணி கைகளை நீட்ட எத்தனித்தாள். அவளால் கைகளை அசைக்கவே முடியவில்லை. சங்கரைப் பார்த்தாள். கொஞ்சம் கலைந்து போய் இருந்தான்.

தவறுதலா மருந்தைக் குடிச்சிட்டன் எண்டுதான் டொக்டரிட்டைச் சொல்லு. பிறகு ஏதாவது ஏடாகூடாமாச் சொல்லி என்னை மாட்டிப் போடாதை. என்றான்.

இந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு கோகுலைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

சங்கர் போன பின் தாதியைக் கேட்டு, வேறொரு நகரில் இருக்கும் அண்ணன் மாதவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவைகளைச் சொன்னாள். அவன் அடுத்த சில மணிகளிலேயே பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். நான் சங்கரை என்னெண்டு கேட்கிறன். நீ கவலைப் படாதை என்றான். பக்கத்தில் இருந்து ஆறுதலாகக் கதைத்தான். ஆனால் கடைசியில் போகும் போது இந்து, இனி இப்பிடியான வேலையளைச் செய்து போடாதை, என்னெண்டாலும் பொம்பிளையள்தான் அனுசரிச்சுப் போகோணும் என்று சொல்லி விட்டுப் போனான்.

பின்னர் இந்து நோர்வேயில் இருக்கும் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது அவனும் மாதவனைப் போலவே பதறினான். சங்கர் மேல் கோபம் கொண்டு திட்டினான். ஆனால் கடைசியில் இந்து, ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். பொம்பிளையள்தான் கெட்டித்தனமா அதுகளை உணர்ந்து நடக்கோணும். உனக்கு கெட்டித்தனம் போதாது என்று சலித்தான். தொலைபேசியை வைக்கும் போது இந்து, இனி இப்பிடி புத்தி கெட்ட முடிவுகளை மட்டும் எடுத்துப் போடாதை. சங்கரைத் திருத்தப்பார். என்றான்.

இந்துவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´எல்லாரும் என்னிலைதானே பழியைப் போடினம். சங்கரின்ரை தவறு ஒருத்தருக்கும் தவறாத் தெரியேல்லையே! சங்கராவது என்ரை நடவடிக்கையாலை திருந்தினானோ எண்டு பார்த்தால் அவன் கூடத் திருந்தினதாத் தெரியேல்லையை´ என்று மனசுக்குள் பெரிதும் குழம்பினாள்.

சங்கர் இந்துவைப் பார்க்க இடைக்கிடை மருத்துவமனைக்கு வந்து போனான். மாதவன் வந்து இந்துவைப் பார்த்துப் போன மறுநாளே கோகுலை மாதவன் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். பொறுப்பான அப்பாவாக வீட்டில் நின்று கோகுலைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் மருத்துவமனையின் தனிமையில் இருந்து யோசித்துப் பார்த்த இந்துவுக்கு கோகுலை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. ´சங்கருக்காக கோகுலைத் தண்டிச்சுப் போட்டனோ´ என்ற நினைவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

இப்படியே சில வாரங்கள் ஓடி, இந்துவும் ஓரளவு குணமாகினாள். மிஸிஸ் சங்கர், உங்கடை குடல் மிகவும் பலவீனமாப் போட்டுது. இந்த முறை ஏதோ அதிர்ஸ்டவசமாத் தப்பீட்டிங்கள். இன்னொருக்கால் இப்பிடி நீங்கள் மருந்தைக் குடிச்சால் எங்களாலை உங்களைக் காப்பாற்றேலாமல் போயிடும். இது உங்கடை உடம்பு. நீங்கள்தான் உங்கடை உடம்பிலை கவனமா இருக்கோணும்… என்ற அன்பான, கண்டிப்பான பல நிபந்தனைகளோடு டொக்டர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பின் சங்கரிடம் தென்பட்ட சில மாற்றங்களை வைத்து சங்கர் திருந்தி விட்டான் என்றே இந்து நினைத்தாள். அவளின் அந்த நம்பிக்கை எல்லாம் சில நாட்களுக்குத்தான். நாட்கள் போகப் போக அவன் திருந்தவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். தாங்க முடியாமல் அடிக்கடி குமுறினாள். அந்தக் குமுறலின் பிரதிபலிப்புத்தான் நேற்றைய காரசாரமான சண்டையும்.

மீண்டும் தனக்கும் சங்கருக்கும் இடையில் மனதளவில் இவ்வளவு தூரம் விரிசல் ஏற்பட்டு விட்டதில் அவளுக்குச் சரியான கவலையாக இருந்தது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் நீ செத்தால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதல் ஆள் நானாத்தான் இருக்கும். அவளுக்குள் திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இந்தச் சண்டை நடந்த போது கோகுல் நித்திரை என்றுதான் இந்து நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சண்டை முடிந்து சங்கர் போய்ப் படுத்த பின் அவள் வெகு நேரமாக அந்தக் கதிரையிலேயே இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது கோகுல் வந்து அம்மா அழாதைங்கோ, வந்து படுங்கோ என்றான். அவன் கண்கள் நீண்ட நேரம் அழுததற்குச் சான்றாக வீங்கிச் சிவந்திருந்தன.

அதை நினைக்க நினைக்க இந்துவுக்கு ஒரே கவலையாக இருந்தது. கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ´ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாகப் பிறந்தானோ? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற அழுமூஞ்சி அம்மா, யாரோ ஒருத்தியோடு நாளெல்லாம் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்தே வீட்டுக்கு வருகிற அப்பா. இவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அந்தப் பிஞ்சு மனசில் என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்குமோ´ என்ற நினைவுகளெல்லாம் வந்து அவளைக் குழப்பின.

இவ்வளவு நாளும் இவைகளைப் பற்றிச் சொட்டுக் கூடச் சிந்திக்காமல் இருந்தததை எண்ணி இந்து தனக்குள்ளே குறுகினாள். வெட்கப் பட்டாள். கலங்கினாள். கோகுலுக்காக மனங் கசிந்தாள். சங்கர்தான் இப்படி விட்டேற்றியாக, பொறுப்பற்றவனாக, கோகுலின் பிஞ்சு மனசு பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பாராதவனாய் தன் பாட்டில் திரிகிறான் என்றால் தனக்கு மட்டும் எங்கே அறிவு போய் விட்டது, என்று தன்னையே தான் கேட்டு மனசுக்குள் நொந்து கொண்டாள். தனது இந்தச் செய்கையால் கோகுலின் வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள்.

அவளுக்குத் தன் மீதே கோபம் கோபமாக வந்தது. ´எனக்கென்ன அறிவில்லையோ, அல்லது அழகில்லையோ, அல்லது கெட்டித்தனந்தான் இல்லையோ! சங்கர் ஏன் என்னை விட்டிட்டு இன்னொரு பெண்ணோடை சுத்தோணும்! இப்பிடிப் பட்ட ஒரு சுயநல விரும்பிக்காண்டி நான் ஏன் என்ரை வாழ்க்கையையும், கோகுலின்ரை வாழ்கையையும் வீணாக்கிக் கொண்டிருக்கோணும்!´ என்று தனக்குள்ளே பொருமினாள். வாய் விட்டுச் சத்தமாக அழவேண்டும் போல சோகம் அவளைப் பிசைந்தெடுத்தது.

இந்த உலகத்து ஜீவராசிகள் அத்தனையுமே சந்தோசமாக இருப்பது போலவும், தான் மட்டும் தனிக்காடொன்றில் விடப்பட்டுத் தண்டிக்கப் படுவது போலவும் உணர்ந்தாள். ஓடிப் போய் அம்மாவின் மடியில் அப்படியே முகத்தைப் புதைத்து வைத்து அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது.

இந்து தாயகத்தில் அம்மா அப்பாவின் அன்பிலும், நல்ல வழி நடத்தலிலும் மிகவும் ஒழுக்கமாகவும், வசதியாகவும் வாழ்ந்தவள். ஏழு வருடங்களுக்கு முன் அண்ணன்மார் பேசிய கல்யாணத்தில் சங்கர் குடி இல்லை, சிகரெட் இல்லை, அருமையானவன் என வர்ணிக்கப்பட்டு எல்லாப் பெண்களையும் போல மணாளனின் நிய முகமும், சுய குணமும் தெரியாமலே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையின் இனிமைகளைப் பற்றிய கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தவள்.

சங்கருடனான அவளது ஆரம்ப நாட்கள், வாரங்கள், மாதங்களாய் இனிப்பாகத்தான் இருந்தன. எப்போது மாறியது என்றே தெரியவில்லை. எல்லாமே மாறிப் போய் விட்டன.

அவளுக்கு சங்கரை விட்டுவிட்டு யார் கண்ணிலும் படாது எங்கேயாவது ஓடி விடவேண்டும் போலிருந்தது. எங்கே? அதுதான் தெரியவில்லை. என்ன வந்தாலும் போகும் போது கோகுலை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்

ஆனால் போய் என்ன செய்வது? எப்படி வாழ்வைத் தொடர்வது? என்ற கேள்விகள் அவளைக் குடைந்து கொண்டே இருந்தன. இங்கு ஜேர்மனியில் இப்படியான நிலையில் சமூகநல உதவிகள் கிடைக்குந்தான். அத்தோடு சங்கரும் கோகுலின் செலவுக்கு, குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் என சட்டப் படி தீர்மானிக்கப் படும். அவளுக்கோ இதற்கு மனம் ஒப்பவில்லை. சங்கரை விட்டுப் போக நினைத்த பின் அவனின் பணத்தை எடுக்க விருப்பம் வரவில்லை. யாரிடமும் தங்கி தான் வாழக் கூடாது, என்று எண்ணிக் கொண்டாள். முக்கியமாகச் சங்கரைச் சாரக் கூடாதென மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அன்று வேலையிடத்தில் வேலைகளின் மத்தியிலும், வேலை முடிந்து வீடு திரும்புகையிலும், கோகுலைக் கிண்டர்கார்டினால் கூட்டிக் கொண்டு வரும் போதும் இது பற்றி நிறையவே சிந்தித்தாள். இறுதியில் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள்.

´நல்ல வேலையொண்டு எடுக்கோணும். அதுக்கு ஏதாவதொரு தொழில் சம்பந்தமாப் படிக்கோணும். எல்லாத்துக்கும் முதல்லை டொச்சைப் (ஜேர்மன் மொழியைப்) படிக்கோணும்…´ நினைவுப் படிகளை அடுக்கத் தொடங்கினாள், தான் எடுத்துக் கொண்ட முடிவைச் செயற்படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் கொள்ள.

தற்போது அவளுக்குத் தெரிகின்ற ஜேர்மன் மொழி ஒரு தொழிற்கல்வி கற்பதற்குப் போதுமானதா, என்பது அவளுக்கே தெரியாது. அன்றே அவள் இது சம்பந்தமான அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த டொச்சில்(ஜேர்மன் மொழி) ஆலோசனைகள் கேட்டாள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த நாளே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு, அவர்களை நேரடியாகச் சந்தித்தாள்.

இந்து ஜேர்மனிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் டொச் படிப்பதற்கு அவர்களால் எந்த விதமான பண உதவியும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளுக்கு எந்த ஒரு நிலையான தொழிலும் இல்லாததால் அதுவும் அவள் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இருப்பதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் தொழிற்கல்வி கற்பதற்கான செலவை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அவளுக்கு ஓரளவு டொச் தெரிந்ததால் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருக்கும் கொம்பியூட்டர் கோர்ஸ் இல் அவள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.

இருள் நிறைந்த தன் வாழ்விலும் ஒளி வீச வாய்ப்புண்டு என்பதைக் கண்டு இந்து உற்சாகமானாள். கலக்கமான முகத்துடன், அவள் உள் நுழைந்த நேரத்திலிருந்து அவளையே கவனித்துக் கொண்டு அங்கு கடமையிலிருந்த இன்னொரு பெண் இவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டவளாய், இவள் நன்றி சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடை பெறும் போது மிஸிஸ் சங்கர், உங்களுக்கு விருப்பம் எண்டால் இந்த நாலு மாசமும் நீங்கள் உங்கடை செலவிலை ஒரு டொச் கோர்ஸ் செய்து உங்கடை டொச் அறிவைக் கூட்டிக் கொள்ளுங்கோ. என்று ஆலோசனை கூறினாள்.

´தனக்கு ஆலோசனை கூறவும், தனக்கு உதவி செய்யவும், தன்னுடன் இன் முகத்துடன் பேசிக் கொள்ளவும் கூட இந்த அந்நிய தேசத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள்` என்ற நியத்தை நினைத்து இந்து நியமாகவே மகிழ்ந்தாள்.

நேரங்களையோ, காலங்களையோ வீணடிக்காமல் உடனடியாகவே தனது பகுதி நேர வேலைக் காசில் டொச் படிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தாள்.
இம்முறை அவள் முடிவு அவளுடையதாகவே இருந்தது. கணவன் என்ற பெயரில் அவளைக் கலங்க வைக்கும் சங்கரிடமோ, பெண் என்றால் வாய் மூடி மௌனியாக வாழ வேண்டுமென்று நினைக்கும், இன்னும் பழமையிலேயே ஊறிப் போயிருக்கும் அண்ணன்மாரிடமோ அவள் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று பயப்படவும் இல்லை.
´இது என் வாழ்வு. என் மகன் கோகுலின் வாழ்வு. நாமிருவரும் வாழாது ஊருக்குப் பயந்து நரகத்துழல்வது வீண்.´ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

சங்கர் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக இருந்தால் அடுத்த கணமே அவனை விட்டுப் பிரிந்து போகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். படுக்கைக்குப் போகும் போது இந்துவின் மனசு மிகவும் லேசாக இருந்தது.

அன்றும் வழமை போல நேரங்கழித்தே இந்துவுடன் சண்டை போடத் தயாராக வீட்டுக்குள் நுழைந்த சங்கர் ´இப்போதாவது விழித்துக் கொண்டேனே!´ என்ற புத்துணர்வு தந்த திருப்தியிலும், எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை தந்த பலத்திலும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்துவைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் விழித்தான்.

1997

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *