சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ… கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்… என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது.
ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்… என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது.
அந்த அழகில் மனம் ஒருகணம் லயித்தது. இதுவே இரண்டு கிழமைகளுக்கு முன்னதாக இருந்திருந்தால் அவள் சேகரையும் இழுத்துக் கொண்டு ஓடிப் போய் அந்தப் பனியில் துள்ளியிருப்பாள். அப்படியொரு அழகு அந்தப் பனிக்கு.
அவளின் வீட்டுப் பல்கணி வரை, கிளை பரப்பியிருக்கும் காசல் நட்ஸ் மரம், அவள் இங்கு ஆவணியில் சேகரிடம் வந்த போது காசல் நட்ஸ் காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் குளிர்ச்சியாக அழகாக இருந்தது.
பின்னர் இலைகள் மஞ்சளாகி… இலைகளே இல்லாமல் மொட்டையாகி… அது கூட அழகாகத்தான் இருந்தது. இன்று அது பனியால் மூடப்பட்டு, ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து, பரந்து அழகே அழகாய்…
மனசுக்குள் சுமையாக அழுத்தும் சோகத்தையும் மறந்து சங்கவி சில நிமிட நேரங்கள் அந்த அற்புத அழகில் லயித்துப் போயிருந்தாள். அந்த லயிப்பில் ஏற்பட்ட சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாமல் தனித்துப் போய் விட்ட உணர்வு மனதில் தோன்ற மீண்டும் அவள் சோகமானாள்.
அவளுக்கும், சேகருக்கும் இடையில் மௌனப் போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களாயிற்று. அவளுக்கு சேகரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சேகரின் அருகில் படுக்கவும் பிடிக்கவில்லை. படுக்கையறைப் பக்கமே போகாமல் விருந்தினருக்கான அறையிலே படுக்கத் தொடங்கியும் இரண்டு வாரங்களாகி விட்டது.
இந்த இரண்டு வாரங்களும் தூக்கம் அவளை விட்டுத் தூர விலகிப் போயிருந்தாலும், சேகர் காலை எழுந்து போகும் வரை அந்த அறையை விட்டு வெளியே வராமல் ´அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது, அவன் விழிகளில் விழிக்கக் கூடாது´ என்ற வைராக்கியத்துடன் அடைபட்டுக் கிடந்தாள்.
ஆனால் மீண்டும் திங்கட்கிழமை சேகர் வேலைக்குப் போனதும் வழமை போல் வெளியில் வந்து சமைத்து, தானும் அரைகுறையாகச் சாப்பிட்டு, சேகருக்கும் வைத்து விட்டு அழுதாள். வானொலி கேட்டாள். நகர மறுக்கும் நேரத்தைச் சபித்தாள். சேகர் வீடு திரும்பும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாக மீண்டும் அந்த அறைக்குள் புகுந்து, கதவைத் தாளிட்டு முடங்கிக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் நத்தையாய், சோகமாய் நகர்ந்தன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடுமளவுக்கு சங்கவி ஒன்றும் புதுமைப் பெண்ணல்ல. மிகமிகச் சாதாரண பெண். எல்லாப் பெண்களைப் போலவும் சின்னச் சின்னக் கனவுகளும், ஆசைகளும் இவளிடமும் இருந்தன. அந்தக் கனவுகளுடனேயே ஜேர்மனி வரை சேகரிடம் வந்து சேர்ந்தவள்.
தாலியைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அசட்டுத்தனம் அவளிடம் இல்லாவிட்டாலும், தாலி பெண்ணுக்கு அவசியம் என்பதில் அசையாத நம்பிக்கை இருந்தது.
நாற்குணம் என்றும், நற்பண்பு என்றும் வேலிகள் போட்டு பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாணும் படியாக போர்க்கொடி ஏந்தி நாட்டினைக் காக்கின்ற வீரப் பெண்கள் வாழ்கின்ற ஈழத்திலிருந்து வந்த சங்கவி தனக்குத்தானே சிறைபோட்டுக் கொண்ட பேதைத்தனம் வித்தியாசமாகத்தான் இருந்தது.
அதனால்தானோ என்னவோ ´விட்டுப் பிடிப்போம்´ பாணியில் ´வழிக்கு வருவாள்´ என்ற நம்பிக்கையுடன் அமைதியான காத்திருத்தலுடன் சேகர் நாட்களைக் கழிக்கிறான். அத்தோடு இவளின் இந்தச் சிறைவாசம் எந்த விதத்திலும், எந்த விதமான அவமானத்தையும் அவனுக்கு ஏற்படுத்தாது என்பதிலும் நிம்மதியாக இருந்தான்.
ஆனாலும் பல தடவைகள் அறைக் கதவைத் தட்டி, “சங்கவி வெளியாலை வாரும், நான் எல்லாம் விளங்கப் படுத்துறன்” என்று கேட்டுப் பார்த்து விட்டான். பதிலாக சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் அவனுக்குக் கேட்பதில்லை.
பூட்டிய அறைச் சுவரில் அழகாக, நேர்த்தியாக மாட்டப் பட்டிருக்கும் மகாபாரதக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சங்கவிக்கு அலுத்துப் போயிருந்தது. தேர்ச்சில்லுகளைப் பார்த்து, எண்ணி.. போதும் என்றாகி விட்டது. கதவுக்கு நேரே மேலே சுவரில் கண்ணனின் மடியில் ஒய்யாரமாய் சாய்ந்திருக்கும் ராதையையும், கண்ணனையும் பார்த்து, அதை அத்தனை அழகிய வர்ணத்தில் தீட்டியிருந்த ஓவியனையும் நினைத்து நினைத்து வியந்தாயிற்று. அம்மாவிற்கும், அக்காவிற்கும் கடிதம் எழுதத் தொடங்கி கிழித்துக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டாயிற்று.
இன்னும் என்ன செய்வது இந்த அறையினுள். மீண்டும் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தாள். வெண்பனியில் கால்கள் புதைய சிலர் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள்.
கதவு அடித்துச் சாத்தப்படும் சத்தம் கேட்டது. சேகர் வேலைக்குப் போகிறான் என்பது தெரிந்தது. சேகர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் வரை யன்னலில் காத்திருந்தாள். சேகரின் கார் இன்னும் தெரியவில்லை. ´காரில் படிந்து விட்ட பனியைச் சுரண்டுகிறானோ..´
சில நிமிடக் காத்திருத்தலில் சில்லு பனியுள் புதைந்து, மோட்டார் உறுமி, சில்லுகள் சுழன்று புகார் படிந்த கண்ணாடிகளுடன், பனிகள் சிதறிப் பறக்க சங்கவியின் கண்களிலிருந்து கார் மறைந்தது.
கூண்டுக்குள் இருந்து வெளியே பறக்கும் பறவையின் துடிப்புடன் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சங்கவி. சிறு குழந்தையைப் போல் வீட்டுக்குள் ஓடித் திரிந்தாள். வானொலியை முடுக்கினாள். குளியலறைக்குள் சென்று பல் துலக்க முற்பட்டவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது சிவந்திருந்த கண்களைச் சுற்றி இலேசான கருவளையம் தெரிந்தது. கன்னங்கள் சற்று உள்ளே போயிருந்தன. அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.
´வந்திருக்கக் கூடாது, இங்கை வந்திருக்கக் கூடாது. யாரையும் நம்பி வந்திருக்கக் கூடாது´ மனம் நொந்து முனகினாள்.
´எப்பிடி ஏமாந்தன்?´
அன்றைய நாள், அவளை இந்தச் சிறைவரை இழுத்து வந்த நாள் மீண்டும் அவள் மனத்திரையில் ஓடியது.
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் முன்றலில் பூத்திருந்த கொன்றைப் பூக்களை விட அழகாகச் சிரித்தது சந்தோச வெள்ளத்தில் மிதந்த சங்கவியின் மனம்.
சில நிமிடங்களுக்கு முன்புதான் நெல்லண்டையில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஜேர்மனியில் இருக்கும் சேகருடன் முதன் முதலாக தொலைபேசியில் கதைத்து விட்டு வந்திருந்தாள். அவளது மனதிற்குள் வர்ணம், வர்ணமாய்க் கவிதைகள் பூத்தன.
நிறந்தெரியா
உன் முகம் காண
மனம் ஏங்குதே!
உன் குரல் தந்த ஸ்பரிசத்தில்
சிலிர்த்தேங்குதே!
சேகரின் குறும்பான பேச்சும், சிரிப்பும் அவளை எங்கோ அழைத்துச் சென்றிருந்தன. போன மாதமே அவளின் அக்கா கொழும்பிலிருந்து அம்மாவுக்கு கடிதம் போட்டிருந்தாள். ´அம்மா, ஜேர்மனியிலை சங்கவிக்கு ஏற்றதா ஒரு மாப்பிளை இருக்கிறார். நல்ல பெடியனாம். குடிகிடி, சிகரெட் ஒண்டும் இல்லையாம். பெயர் சேகர். விபரமா எல்லாம் அறிஞ்சிட்டுத்தான் எழுதுறன். என்னோடை சில தடவைகள் கதைச்சவர். சங்கவியின்ரை போட்டோவை அவருக்கு அனுப்பினனான். அவருக்கு நல்லாப் பிடிச்சிட்டுதாம். அவற்றை போட்டோவை அனுப்பியிருக்கிறார். அழகாத்தான் இருக்கிறார். நீங்கள் சங்கவியைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாங்கோ. ஏஜென்சி சரிவந்த உடனை அவள் ஜேர்மனிக்குப் போயிடலாம். செலவையெல்லாம் அவரே பார்க்கிறாராம்…´
கடிதம் கண்ட உடனேயே அம்மா பரபரப்பாகி விட்டாள். போட்டது போட்டபடி விட்டிட்டு உடனேயே கொழும்புக்குப் பயணம் செய்ய முடியா விட்டாலும் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டாள். ஆனால் அக்காவின் கடிதமோ, அம்மாவின் பரபரப்போ சங்கவியிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த நேரம் அவளிடம் கல்யாணக் கனவுகள் இருக்கவில்லை. நாட்டின் நிலைமைகளினால் மனம் அழுத்தப் பட்டிருந்தது. அதைவிட கொழும்புக்குப் போவது பற்றி இலேசான பயம் கூட இருந்தது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் போவதற்கிடையில் எத்தனை சோதனைச் சாவடிகள்.
ஒரு நம்பிக்கையற்ற, எதிர்பார்ப்பற்ற நிலையில் அவள் இருந்த போதுதான் அன்று காலை நெல்லண்டைத் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஒருவர் வந்து சேகரிடம் இருந்து அழைப்பு வந்தது பற்றியும், இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் மீண்டும் அழைப்பு வரும் என்றும் சொல்லி, அவளது பெயர் எழுதப் பட்ட துண்டைக் கொடுத்து விட்டுச் சென்றார்.
சலனமற்ற சங்கவியின் மனம் கூட படபடத்தது. மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் வரை நடந்தே போனவள், பிள்ளையாரை வணங்கி விட்டு மீண்டும் வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி ஏறினாள். திரும்பி, பிள்ளையாரைப் பார்த்து நெற்றியில் தொட்டுக் கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஏறி உழக்கத் தொடங்கினாள்.
சேகரின் அழைப்புக்காக அரை மணித்தியாலம் காத்திருந்த போது சேகரைப் பற்றிய கனவுகள் எதுவும் இல்லா விட்டாலும் என்ன கதைப்பது என்ற பயம் அவளுக்குள் இருந்தது. எதிர்பார்த்த அழைப்பு வந்த போது ஒரே படபடப்பாக இருந்தாள். ஆனால் சேகரோ மிகவும் இயல்பாக, குறும்பாக, பொறுப்பாகக் கதைத்த போது அவளும் இயல்பாகி விட்டாள்.
சேகருடன் கதைத்த பின், சங்கவியின் மனம் சேகரைக் கணவனாக்கிக் கொள்ள முழுமையாக சம்மதம் கொண்டிருந்தது. அந்த சந்தோசம் மனத்தை நிறைக்க தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து நேரே நெல்லண்டைப் பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று நன்றியுடன் வழிபட்டாள். நெஞ்சு நிறைந்த சந்தோசத்துடன் வீடு திரும்பியவள் அம்மா, தங்கையை தனியே விட்டுப் போவதை நினைத்துக் கவலைப்பட்டாள். தடுமாறினாள்.
ஆனால் தொடர்ந்த நாட்களில் அடிக்கடி சேகர் தொலைபேசியில் அழைத்துக் கதைத்தான். பருவமும், சேகரின் குறும்பான, இதமான கதைகளும் சேர இனிய கனவுகளில் மிதக்க ஆரம்பித்தாள்.
சேகர் பணம் அனுப்ப, சங்கவி விமானத்தில் கொழும்பு போவது தீர்மானமான போது அம்மா மிகவும் சந்தோசப் பட்டாள். எல்லோரும் விமானத்தில் செல்ல நிதி நிலைமை சரிவராது என்பதால் சங்கவி மட்டும் தனியாக அம்மா தங்கையிடம் விடைபெற்றுக் கொண்டு கொழும்புக்குப் பயணமானாள்.
கொழும்பில் அக்காவிடம் வந்து சேர்ந்த போது, அம்மா தங்கையின் பிரிவில் மனம் கலங்கினாலும் சேகரின் புகைப்படத்தைப் பார்த்ததிலும், அவன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
மூன்று மாதங்களில் எல்லாம் சரி வந்தது. அக்காவிடம் விடைபெற்றுக் கொண்டு விமானத்தில் பறந்த போது சங்கவியின் மனத்தில் சேகரின் நினைவு ஒருவித சந்தோச எதிர்பார்ப்பைத் தந்தாலும், அம்மா சகோதரர்களின் நினைவு பொங்கிப் பொங்கி வந்தது.
பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி தன் முகத்தை ஒத்த வேறொருவரின் பாஸ்போர்ட் காட்டி ஏற்கெனவே பிரெஞ் பாஷையில் பாடமாக்கிக் கொண்டு வந்தபடி, அவர்கள் கேள்விகளுக்கு ஒரு சொல் விடைகளாக அளித்து வெளியில் வந்தாள். இருவர், தாம் சேகரின் நண்பர்கள் என்று சொல்லி முதலில் தீர்மானித்தபடி ஒரு வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றார்கள்.
கணங்கள் யுகங்களாக, ஒரு பகலும், இரவும் கழிய சேகர் வந்து சேர்ந்தான். சேகரைப் பார்த்ததும் சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்திலும், நேரிலும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன. முன்பக்கம் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. ஆனாலும் அழகாகச் சிரித்தான். குறும்பாகக் கதைத்தான். இதமாக அணைத்தான்.
அன்றே காரில் பயணமாகி சேகரின் வீட்டுக்குள் நுழைந்த போது நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த சேகரின் வீடு சங்கவியை வரவேற்றது. அதுவே சங்கவிக்கு சேகரின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. சேகர் சீடி ஸ்ராண்டில் இருந்து ஒரு சீடியை எடுத்து வானொலியில் போட்ட போது இனிய பாடலொன்று ஒலித்தது. இனிமையான பாடலும், சேகருடனான நெருக்கமும் என அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது.
இப்படியே தொடர்ந்த சந்தோசங்களுக்கு மத்தியில் சேகர் அங்கோடி இங்கோடி எல்லா விடயங்களையும் பார்த்து சங்கவிக்கு ஜேர்மனியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அலுவல்களையும் செய்து கொண்டிருந்தான். ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, மண்டபம் எடுத்து, நண்பர்களை எல்லாம் அழைத்து, சங்கவியின் கழுத்தில் தாலியும் கட்டினான். நண்பர்களில் அனேகமானோர் குடித்துக் கும்மாளமிட்ட போதும் சேகர் மட்டும் மதுவிலிருந்து ஒதுங்கி நின்றபோது சங்கவி பெருமையின் உச்சத்தில் நின்றாள். சேகரின் புகழ் பாடி அம்மாவுக்கும், அக்காவுக்கும் கடிதங்களாக எழுதித் தள்ளினாள்.
இனித்த அவள் வாழ்க்கையில் கிணற்றில் விழுந்த கல்லாய் ஒரு செய்தி காதில் வீழ்ந்து சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று சேகரின் நண்பன் ஒருவனின் கல்யாண விழாவில் எல்லோரும் கலகலப்பாக இருந்த போது, இரு பெண்கள் “சேகரின்ரை பிள்ளையளைப் பற்றி சங்கவிக்கு ஏதாவது தெரியுமோ? என்னெண்டாலும் அவன் பயங்கரக் கெட்டிக்காரன்தான். இரண்டு குழந்தையளையும் வைச்சுக் கொண்டு ஒரு இளம் பிள்ளையையும் கூப்பிட்டுக் கட்டிப் போட்டான்” என்று குசுகுசுத்தது, சங்கவியின் காதுகளில் நாராசமாய் விழுந்தது.
சந்தோசத்தைக் கலியாண வீட்டில் தொலைத்தவள் ´அவர்கள் கதைத்தது என் சேகரைப் பற்றியல்ல´ என்று தனக்குத்தானே சமாதானம் கூற முனைந்தாள். ஆனாலும் எதுவோ அவளைக் குழப்பியது.
அவளுக்கு மேற்கொண்டு கலியாண வீட்டில் நிற்கவே பிடிக்கவில்லை. சேகரிடம் சென்று “எனக்கு ஒரேயடியா தலை இடிக்குது. வீட்டை போவமோ?” என்றாள். புரிந்துணர்வு உள்ளவனாய் சேகர் நண்பர்களிடம் விடை பெற்றான்.
´இவன் ஏதும் தப்புகள் செய்வானா?´ எடைபோட முடியாமல் தடுமாறினாள். தனக்குள்ளேயே மேலும் போராட முடியாமல் காருக்குள்ளேயே வெடித்தாள். அதிர்ந்த சேகர் ஆரம்பத்தில் மறுத்தாலும், வீட்டுக்கு வந்ததும் மெதுமெதுவாக உண்மைகளைச் சொல்லத் தொடங்கினான்.
“சங்கவி, நான் உமக்குச் சொல்லுறதுக்கு எத்தினையோ தரம் எத்தனிச்சனான். நீர் எந்தளவுக்குத் தாங்குவீர் எண்டு தெரியாததாலைதான் எனக்குத் தயக்கமா இருந்தது. எனக்கும் ஒரு ஜேர்மனியப் பொம்பிளைக்கும் ஏற்பட்ட உறவிலை எனக்கு இரண்டு பிள்ளையள், ஆறு வயசிலையும், நாலு வயசிலையும். இப்ப எனக்கு அவளோடை ஒரு தொடர்பும் இல்லை. என்ன இருந்தாலும் எங்கட சிறீலங்காப் பொம்பிளையள் போல இவையள் இருப்பினையோ… அதுதான். மாதத்தில ஒரு நாளைக்குப் போய் பிள்ளையளைப் பார்த்திட்டு வருவன். இரண்டு பிள்ளையளுக்குமாய் 900மார்க் மாசம் மாசம் கட்டுறன். அவ்வளவுதான்.”
அப்படியெதுவும் இல்லையென்றுதான் சேகர் சொல்லுவான் என எதிர்பார்த்த சங்கவி, சேகரின் வார்த்தைகளால் கொதிப்படைந்து சீறினாள். “நீங்கள், முதலே சொல்லி இருக்கலாந்தானே. நான் அங்கை அம்மாவோடை நிம்மதியா இருந்திருப்பன். நீங்கள், என்னை ஏமாத்தீட்டீங்கள். உங்களோடை என்னாலை வாழேலாது…” தாங்க முடியாத ஆத்திரமும், வேதனையும் சங்கவியிடம் இருந்து வெளியேறி நெருப்பு வார்த்தைகளாகச் சேகரைச் சுட்டன.
´சாது மிரண்டால் காடு கொள்ளாது´ என்பதை அன்றுதான் சேகர் கண்டான். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத சங்கவி உருத்திர தாண்டவம் ஆடினாள். அவளின் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாத சேகர், வேறு வழியின்றி அவளைப் பளாரென அறைந்தான்.
“என்னை மிருகமாக்காதை. உனக்கு ஜேர்மனியிலை இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைக்கிறதுக்கு, நீ குடுத்து வைச்சிருக்கோணும். ஊர் உலகத்தில இல்லாததையே நான் செய்திட்டன்!”
சேகரின் வார்த்தைகளில் சங்கவி விக்கித்துப் போனாள். அவன் செய்த தப்பை விட, அவன் அதை நியாயப் படுத்தியது அவளை இன்னும் வெகுண்டெழச் செய்தது. கோபமாக, அந்த இடத்தை விட்டு ஓடிப் போய் விருந்தினர் தங்குவதற்கான அறையில் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடுமோ என்று பயந்த சேகர், “சங்கவி வெளியிலை வாரும். கதவைத் திறவும்… ” என்று எத்தனையோ தரம் முயன்றான். சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் வெளியில் கேட்கவில்லை.
பின்னர் சேகர் என்ன நினைத்தானோ.., ´இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்´ என்று நினைத்தானோ. வெளியே வரும்படி அதிகமாக வற்புறுத்தாமல் திரிகிறான்.
கழுத்தில் தொங்கும் தாலிக்கொடியைக் கைகளால் பிசைந்தபடி நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சங்கவி நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய் சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவள் வீட்டு வானொலியின் ஊடாகவும் இசை பரப்பிக் கொண்டிருந்த ஐரோப்பிய வானொலி ஒன்றின் செய்திச் சுருக்கம் ஆரம்பமாகி இருந்தது. அந்தச் செய்திகளிலும் மனம் நாட்டம் கொள்ளாமல் இருக்க, அவள் தேநீர் தயாரித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
செய்திச் சுருக்கம் முடிந்து விளம்பரங்கள் ஒலித்து அடுத்து ´புதுமைப் பெண்´ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகப் போவதாக அறிவித்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் சங்கவி தேநீரை உறிஞ்சினாள்.
இனிய பெண் குரல் ஒன்று பெண்களுக்குத் துணிவு தரும் வகையில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. தேநீரையும் மறந்து சங்கவி அந்தக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
தொடர்ந்த நாட்களில் அவள் சிந்தனைகள் மாறியிருந்தன. ஒருவித தன்னம்பிக்கையான எண்ணங்கள் அவளுள் ஓடின. ´எனக்கு நானே இந்த அறையைச் சிறையாக்கிக் கொண்டிருக்கிறேனே! என்ன ஒரு பேதைத்தனம் எனக்கு! நான் என்ன தப்புச் செய்தேன்? சிறை வைக்கப்பட வேண்டியவன் என் கணவன் சேகர் அல்லவா! இல்லையில்லை சேகர் என் கணவன் இல்லை. தாலி கட்டினால் உடனே கணவனா? அப்படியானால் அவள்..? அந்த ஜேர்மனியப் பெண்..? அவளுக்கு இவன் யார்? தாலி கட்டாத கணவனா?´
பலமாகச் சிரிக்க வேண்டும் போல இருந்தது சங்கவிக்கு. கழுத்தில் தொங்கிய தாலி ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்த எழுதிய சாஷனத்தில் கையெழுத்திடப் பட்ட முத்திரை போல அவளுக்குத் தெரிந்தது. ஏதோ யோசித்துக் கொண்டவள் தாலியை நிதானமாகக் கழற்றி மேசையில் வைத்தாள். கூடவே சேகர் என்ற உறவையும்…
பங்குனி-1999