வசந்தம் காணா வாலிபங்கள்

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி அழைப்பில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நான்கு மணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்து எறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான்.

இந்த அகால வேளையில் இப்படி தொலைபேசி அலறினால் அது ஊரிலிருந்து வரும் அழைப்பாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். ´வேறு யார் அப்பாவாகத்தான் இருக்கும்.´ மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

முன்னர் என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும், அப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகம் பிறக்கும். இப்போது போட்டி போட்டுக் கொண்டு பல ரெலிபோன் கார்ட்டுகள் வந்து தொலைபேசிச் செலவைக் குறைத்திருந்தாலும் அவனது உற்சாகம் முன்னரைப் போலில்லாது குறைந்து விட்டது.

ஊரில் உள்ளவர்கள் பாடு கஷ்டந்தான். அவன் இல்லையென்று சொல்லவில்லை. மாடு போல் உழைத்து… அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான்.

பதினைந்து வருடங்களின் முன் 84 இல் அவன் ஜேர்மனிக்கு வந்த போது, அவன் இருபது வயது கூட நிரம்பாத அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுள்ளும் நிறைய இருந்தன.

ஆமியிடம் பிடிபட்டு பூசாவில் அடைபடவோ அல்லது அநியாயமாகச் சுடுபடவோ விரும்பாமல் அம்மா, அப்பாவின் ஆலோசனையுடன் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்தவன்.

வெளிநாடு, அதுவும் ஐரோப்பா… கோட், சூட்டுடன், ´ரை´யும் கட்டிக் கொண்டு… அழகிய நினைவுகளும், இனிய கனவுகளும் ஜேர்மனியில் முகாம்களுக்குள் எட்டுப் பேரை அல்லது ஒன்பது பேரை ஒரு அறைக்குள் விட்ட போது முழுவதுமாகக் கலையாது போனாலும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின.

ஊருக்குக் கடிதம் எழுதவும், சில்லறைச் செலவுகளுக்கும் போதுமாயிருந்த அவர்கள் கொடுத்த பொக்கற்மணி 70மார்க்கும், வேலையும் இல்லாது வேறு இடம் போக அனுமதியும் இல்லாது இருந்ததில் வெறெதுவும் செய்ய வழி தெரியாது பியர்கேஸ் இற்கும், சிகரெட்டுக்கும் அடிமையாகிப் போன கூட இருந்தவர்களுடன் கூட வைத்துக் காணாமற் போயின.

களவாய் ஸ்ரோபெரி பழம் பிடுங்கும் வேலை செய்ததில் சிறிது பணம் சேர்ந்தாலும் அழகாய் இருந்த கைகளும், சுகமாக இருந்த முதுகும் கறுக்கவும், வலிக்கவும் தொடங்கின.

ஆரம்பத்தில் கறுத்துப் போன கன்னங்களையும், வெடித்துப் போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும் ஊருக்கு அனுப்பப் பணம் கிடைத்ததில் தொடர்ந்து வெலை செய்ய மனம் மறுக்கவில்லை.

முகாமில் கிடைக்கும் ஜேர்மனியச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல், ஆளுக்கு 1மார்க் என்று முகாமிலிருந்த எல்லாத் தமிழர்களுமாய் போட்டு வாங்கிய மின்சார அடுப்பை அறைக்கு அறை மாற்றி, கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்து ´ஹவுஸ்மைஸ்ரர்´ இற்குத் தெரியாமல் சமைப்பதே ஒரு சாதனையாகி, ஒரு கோழியை ஒன்பது பேர் பகிர்ந்துண்பது அதை விடப் பெரிய சாதனையாகி, கொட்டும் பனியில், குளிரின் கொடுமையில் வாழ்க்கையே வேதனையாகியதில், படிக்கும் நினைவும், ஐரோப்பிய வாழ்க்கை பற்றிய கனவும் கலைந்த போதுதான் ஆளுக்கொரு நகரமாய் அனுப்பப் பட்டார்கள்.

கோபுவுடன் இன்னொரு தமிழனையும் அனுப்பினார்கள். அவனுக்கு அந்த நகர் பிடிக்கவில்லை என்று, யாரையோ பிடித்து, எப்படியோ கதைத்து கனடா போய்ச் சேர்ந்து விட்டான்.

முகாமை விட்டு வெளியில் வந்த சந்தோசத்தை வாய் விட்டுச் சொல்லக் கூட ஒரு தமிழ்க்குருவி இல்லாது கோபு தனித்துப் போய் விட்டான். தனிமையில் பேசி, தனிமையில் சிரித்து வேலை செய்ய அனுமதியோ, வேறு நகரம் செல்ல ஒரு விதியோ இல்லாத நிலையில் பைத்தியக்காரன் போலத் திரிந்தான்.

வாழ்க்கைச் செலவுக்கென அவர்கள் கொடுக்கத் தொடங்கி விட்ட 350மார்க்கில் சோறையும், கோழியையும் சாப்பிட்டு விட்டு மீதியை ஊருக்கு அனுப்பினான். பணம் கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும், தங்கை தம்பிமாரும் எப்படியெல்லாம் மகிழ்வார்கள் என நினைத்துத் தனக்குள் மகிழ்ந்தான்.

என்ரை ராசா… என்ற படி பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த கடிதங்கள் நியமாகவே பாசத்தைச் சுமந்து வந்தாலும் போகப் போக சாமான் விலையேற்றம், கூட அனுப்பு. என்றன.

பாஷை தெரியா விட்டாலும் படிகள் ஏறி வேலை இருக்கா? என்று கேட்டதில் பேக்கரி, பிற்சேரியா, ரெஸ்ரோறன்ற்… என்று வேலைகள் கிடைத்தன. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இல்லாது களவாய் வேலை என்பதால் வேலை கொடுத்தவர்களும் போதிய ஊதியம் கொடுக்க மறுத்தார்கள். வேலையை மட்டும் நன்றாக வாங்கினார்கள். ஊரிலுள்ள உறவுகளின் தேவைகள் அவனால்தான் தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ´வேண்டாம்´ என்று வேலையை விட்டுப் போகவும் வழி தெரியாது கூட்டல், கழுவல், துடைத்தல், சலாட் கழுவுதல்… என்று எல்லா வகையான வேலைகளையும் செய்தான்.

இப்படியே வாழ்க்கை மாறி, அழகிய இருபது வயது வாலிபனான கோபு குளிரிலும், பனியிலும், வேலையிலும் ஆறு வருடங்களைக் கழித்த பின்னே வேலை செய்யவும், வேறு நகரம் செல்லவும் அனுமதி கிடைத்தது.

இனியாவது வாழ்க்கை சிறப்பாகி விடுமென்ற நம்பிக்கையில் ஓடி ஓடி வேலை தேடினான். வேறு நகரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தான்.

பாஷை தெரியாத நாட்டில் படித்த படிப்புக்கோ, பகட்டான வேலைக்கோ இடமில்லை என்பதை வேலை தேடிய போதும், நண்பர்களுடன் பேசிய போதும் தெரிந்து கொண்டான்.

படிக்க என்று ஆசை வந்தது. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சனையில் ஆசை ஆசையாகவே இருக்க களவாய் செய்த வேலைகளையே அனுமதியுடன் தொடர்ந்தான்.

ஊரில் தங்கைமார் வளர வளர, ஒரு வேலையில் கிடைத்த பணம் போதாமல் இரண்டு வேலை, மூன்று வேலை என்று தேடி வாழ்க்கை பணத்துக்கு ஓடுவதாய் மாறி விட்டது.

பக்கத்து வீடு மாடியாய் எழுந்து விட்டது. நாங்கள் மட்டும் இப்பிடி இருக்கிறது உனக்குத்தான் அழகில்லைத் தம்பி!

தங்கைச்சிக்கு ஒரு வரன் சரி வந்திருக்கு. கனடாப் பெடியன். ஆறு இலட்சம் சீதனம் கேட்கினம். இந்தியாவிலை கலியாணத்தை வைக்கோணுமாம்… உன்ரை கையிலைதான் அவளின்ரை வாழ்க்கை தங்கியிருக்கு…

இப்படியாகத் தொடர்ந்த ஊர்க் கடிதங்கள் அவனைப் பணத்துக்காகத் துரத்தின. பஸ்சிலும், ரெயினிலும் ஓடிக் களைத்தவன் சொந்தமாகக் கார் வாங்கி ஓடி இன்னும் களைத்தான். பாசம் ´பேசாதே´ என்று கட்டிப் போட அலுத்தான்.

உழைத்து உழைத்து அனுப்பியவன், முப்பதைத் தாண்டிய பின்னும் ´உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்க எமக்காசை´ என அம்மாவோ, அப்பாவோ ஒரு வரி எழுதாததில் மனதுக்குள் சலித்தான்.

வாழ்க்கையின் ஆசைகளும், வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. நரையோடத் தொடங்கி விட்ட தலையில் மெல்லிய வழுக்கையும் விழத் தொடங்கியது.

அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப் படும் பலநூறு ஐரோப்பியத் தமிழ் இளைஞர்களின் வரிசையில், 35 வயதைத் தொட்டு நிற்கும் பிரமச்சாரியாக அவனும் நின்ற போதுதான் அவன் மதுவைக் கண்டு கொண்டான்.

மதுவின் சினேகம் அவனைத் தென்றலாய் தழுவியது. அவள் அன்பில் தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். தனக்கும் ஒரு வாழ்வு வரப் போகிறதென்ற மகிழ்வில் அது பற்றி ஊருக்கு எழுதினான்.

இன்னுமொரு தங்கை இருபந்தைந்து வயதில், கல்யாணமாகாமல் இருக்க… உனக்கென்ன அவசரம்? என்றது ஊர்க்கடிதம். வாழ்க்கை ஆசை அவனை வாட்ட, யார் சம்மதமுமின்றி பதிவுத் திருமணம் செய்து மதுவை மனைவியாக்கிக் கொண்டான்.

அதுதான் இப்போது பிரச்சனை. தங்கை இருக்க, நீ கல்யாணம் செய்தது மாபெருந்தப்பு என்று அம்மாவும், அப்பாவும் மட்டுமல்ல, மாமா, மாமி, சித்தப்பா சித்தி… என்று எல்லோருமே மனங் கொண்ட மட்டும் திட்டி எழுதி விட்டார்கள்.

மனம் சலித்து விட்டது. யாரும் அவனுக்கு இப்போது கடிதம் எழுதுவதில்லை. ஆனாலும் மாசம் தவறாது வவுனியா வரை வந்து, தொலைபேசியில் அழைத்து, பணத்தை உண்டியல் மூலம் எடுத்துப் போக அப்பா மறப்பதில்லை.

ஓடிப்போனவன், ரெலிபோனை எடுத்தான். அப்பாவின் அழைப்புத்தான் அது. ஒரு நிமிட அழைப்பில் திருப்பி எடு என்று சொல்லி விட்டு அப்பா வைத்து விட்டார். திருப்பி எடுத்தான். ஊர் நிலைமை பற்றி, கஷ்டங்கள் பற்றி அப்பா நிறையச் சொன்னார். அம்மா, சகோதரங்கள் பற்றி நாத்தழுதழுக்க விசாரித்தான்.

தம்பி, இந்த முறை கொஞ்சங் கூடவா அனுப்பு தம்பி! நீ அனுப்பிறது ஒரு மூலைக்கும் போதுதில்லை. எல்லாம் விலை. கொக்கான்ரை பிள்ளைக்கும் பிறந்தநாள் வருது. அதுவும் பெரிசாச் செய்யாட்டி உனக்குத்தான் மரியாதையில்லை. ஒரு ஆயிரமாவது கூட அனுப்பு… நாளைக்குக் காசு கொண்டு வந்து தந்திடுவினைதானே? அப்பா மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

ஏற்கெனவே ஏஜென்சிக்குக் காசு கட்டிவிட்டு மொஸ்கோவில் இரண்டு வருடங்களாக நிற்கும் தம்பியை வெளியில் எடுக்க இன்னும் சில ஆயிரங்கள் ஏஜென்சிக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பணப் பிரச்சனையே கோபுவின் தலைக்குள் சுமையாக இருக்க, அப்பா இன்னுமொரு ஆயிரம் கூடக் கேட்கிறார்.

ஏற்கெனவே குற்றவாளிக் கூண்டில் உறவுகளால் நிறுத்தப் பட்ட அவனால் அப்பாவின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.

ஓமப்பா, நான் அனுப்புறன். நாளைக்கே காசைக் கொண்டு வந்து தருவினம். என்றான்.

உன்ரை மனைவி மது எப்பிடி இருக்கிறாள்? என்று அப்பா ஒரு வார்த்தை கேட்கவில்லை. தொலைபேசி வைக்கப் பட்டு விட்டது.

கோபுவின் மனம் வேதனைப் பட்டது. ´இந்த ஆயிரங்களை எப்படிச் சமாளிக்கலாம்´ என்ற யோசனையில் மூளை குழம்பியது. ஆறுதல் படுத்த இருக்கும் மனைவியுடனும் ஆறி இருந்து பேச நேரமில்லை. அடுத்த வேலைக்குப் போவதற்கிடையில் இன்னும் ஒரு மணித்தியாலந்தான் படுக்கலாம். ஓடிப் போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் அவனை விட்டுத் தூர விலகியிருந்தது.

3.10.2000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *