ஏன்தான் பெண்ணாய்..?

எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்லை. எல்லாரிலையும் கோபம் கோபமா வருது. எதுக்கெடுத்தாலும் பொம்பிளைப் பிள்ளை நீ எண்டு கொண்டு..! ஏன்தான் இப்பிடிப் பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனோ!

ஞாயிற்றுக்கிழமை எண்டால் எல்லாரும் எவ்வளவு சந்தோசப் படுவினம். எனக்கு மட்டும் ஞாயிறுகள் எல்லாம் ஏன்தான் வருதோ எண்டிருக்கு.

பின்னை என்ன, ஞாயிறு எண்டு சொல்லி என்னைப் படுக்கக் கூட விட மாட்டினமாம். பொம்பிளைப் பிள்ளை இப்பிடி வெய்யில் படு மட்டும் நித்திரை கொள்ளுறதோ எண்டு அப்பா சத்தம் போட்டு எழுப்பிப் போட்டார். இந்த அப்பா எப்பவும் இப்பிடித்தான். அம்மாவும் அப்பா சொல்லுறதுக்கு மறுத்து ஒண்டும் சொல்ல மாட்டா.

அம்மா சொல்லலாம் தானே அவளை ஏனப்பா எழுப்பிறிங்கள். ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் படுக்கட்டுமன் விடுங்கோ எண்டு. அதில்லை, அப்பா ஊதுற சங்கை தான் இன்னும் கொஞ்சம் பெலத்தா ஊதுறதுதான் தனக்கு அழகு எண்டு நினைக்கிறா அம்மா. நான் என்ன செய்யிறது?

என்ரை வகுப்புப் பிள்ளையளெல்லாம் சொல்லுங்கள், தாங்கள் ஞாயிற்றுக் கிழமையிலை பன்னிரண்டு மணி மட்டும் நித்திரை கொண்ட கதையளையும், இரண்டு மணி மட்டும் நித்திரை கொண்ட கதையளையும். அதையெல்லாம் கேக்க எனக்குப் பொறாமையா இருக்கும். எனக்கு அதுகளைப் போல நீண்ட நித்திரைக்கெல்லாம் வழியே இல்லை.

எனக்குப் பார்த்தால் சில வேளை அம்மாக்கே ஞாயிறிலை கன நேரம் நித்திரை கொள்ள ஆசை இருக்கிற போலை தெரியும். ஆனால் அப்பா விடியக் காத்தாலை கண்ணை முழிச்சிடுவார். அவருக்கு தேத்தண்ணி குடிக்கிறதுக்கு அம்மா வேணும். ஒரு தேத்தண்ணி போடுறது பெரிய வேலையே. எழும்பிப் போய் போட்டுக் குடிக்கிறதுதானே. ஒரு தேத்தண்ணிக்காண்டி அம்மான்ரை நித்திரையைக் குழப்பி எழுப்போணுமே. ஆனாலும் எழுப்பிப் போடுவார். அம்மா பெட்(bed) தேத்தண்ணி குடுத்தாப் போலைதான் அவர் படுக்கையை விட்டு எழும்புவார்.

இந்த பெட்-கோப்பி, பெட்-ரீ எல்லாம் வெளிநாட்டு ஸ்ரைலிலை நடக்கும். அந்த ஸ்ரைலும் அப்பாக்கு மட்டுந்தான். எழும்பி பல்லைத் தீட்டி முகத்தைக் கழுவிப் போட்டு தேத்தண்ணியைக் குடிக்கலாந்தானே! கேட்கத்தான் மனம் வரும். ம்..கும் பிறகு நான் கேட்கப் போக அப்பா கத்த, பிறகு அம்மா கத்த… ஏன் அந்தக் களேபரமெல்லாம்! அந்தக் களேபரத்தோடை என்ரை பிரச்சனை தீர்ந்திடுமெண்டாலும் பரவாயில்லை. அப்பா பிடிச்ச முயலுக்கு எப்பவும் மூண்டு கால்தான். அதை ஓமெண்டு சொல்லிச் சொல்லியே அம்மாக்கும் பழகீட்டுது. அதுக்காண்டி நானும் ஓமெண்டேலுமே!

நித்திரை மட்டுந்தான் பிரச்சனை எண்டால் பரவாயில்லை. ஞாயிற்றுக் கிழமை எண்டாலே நாள் முழுக்க நான் இந்த வீட்டுக்குள்ளைதான் அடைஞ்சு போய்க் கிடக்கோணும். அண்ணா, தம்பி இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணுமெண்டாலும் மூசி மூசி நித்திரை கொண்டிட்டு எழும்புவாங்கள். பிறகு சாப்பிட்டிட்டு ஊர் சுத்தப் போடுவாங்கள்.

நான் மட்டும் இங்கை தனிய இருந்து எப்பவும் இந்த ரீவீ யைப் பார்த்துக் கொண்டு… எனக்கு அப்பாவிலை சரியான கோபம் கோபமாய் வருது. அம்மாவாவது சில நேரம் சிலதுக்கு அநுமதிப்பா. ஆனால் அவவும் சமயம் வாற போது அப்பான்ரை பக்கம் சாய்ஞ்சிடுவா.

இண்டைக்கு மிகைலாவின்ரை பிறந்தநாள். ஆறு மணியிலை இருந்து பத்து மணி வரை பார்ட்டி. என்ரை வகுப்புப் பிள்ளையள் எல்லாரும் போவினம்.

அதென்ன இரவிலை பார்ட்டி! நாங்கள் ஜேர்மனியிலை வாழ்ந்தாலும் சிறீலங்கன்ஸ்தான். அதை மறந்திடாதை எண்டு அப்பா கோவமாச் சொல்லித் தடுத்துப் போட்டு குசினிக்குள்ளை போய் அம்மாட்டை இஞ்சை பாரும், இப்பிடி பார்ட்டி அது இதெண்டு போய்த்தான் பிள்ளையள் கெட்டுப் போறதுகள். அவளுக்குச் சொல்லி வையும், இனி இப்பிடியான விசயங்களுக்குப் போப்போறன் எண்டு என்னைக் கேட்கக் கூடாதெண்டு எண்டு கத்துறார். எனக்கு அழோணும் போலை இருந்திச்சு.

நான் அழுதாலும் இவையளுக்கொண்டும் பிரச்சனையில்லை. அம்மாவைப் பார்த்தால் சிலவேளை எனக்காண்டிக் கவலைப் படுறா போலை இருக்கும். ஆனால் ஒண்டும் சொல்ல மாட்டா.

ஏதோ, வெளிநாட்டுக் காரர் பிள்ளையளை வளர்க்கிறது சரியில்லை எண்ட மாதிரி என்ரை அப்பா, அம்மா, அவையளின்ரை சினேகிதர்கள் எல்லாரும் சேர்ந்து கதைப்பினம். ஆனால் உண்மையிலை வெளிநாட்டுக் காரர்தான் பிள்ளையளின்ரை மன உணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து வளர்க்கினம் எண்டது இவையளுக்குத் தெரியேல்லை. இதுகளை நான் சொல்லப் போனால் இவையள் கேட்பினமே!

ஒரு பதினாலு வயசுப் பிள்ளைக்கு எத்தினை ஆசையள் இருக்கும். என்ரை வயசுப் பிள்ளையளெல்லாம் எவ்வளவு சந்தோஷமா எங்கையெல்லாம் சுத்திக் கொண்டு திரியுதுகள். நான் மட்டும் இப்பிடி வீட்டுக்குள்ளை அடைஞ்சு போய்க் கிடக்கோணும் எண்டு இவையள் நினைக்கிறது சரியோ! என்னெண்டு நான் இதையெல்லாம் இவையளுக்கு விளங்கப் படுத்துறதோ தெரியேல்லை.

வெளியிலை போனால் இப்ப என்ன வந்திட்டுது! அண்ணா, தம்பியவையள் மட்டும் நல்ல ´ஹாயா´ எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வருவினம். அதுக்கு அம்மாவும் அப்பாவும் ஒண்டுமே சொல்ல மாட்டினம். ஏனெண்டால் அவையள் ஆம்பிளைப் பிள்ளையளாம்.

அவையள் சுத்திப் போட்டு வந்து ஒரு தேத்தண்ணி போடு எண்டுவினை. ஏன்… நீ போட்டுக் குடியன் எண்டு சொல்லத்தான் எனக்கு மனம் வரும். அதுக்கிடையிலை அம்மாவே சொல்லிப் போடுவா பிள்ளை, அவனுக்கு அந்த வடையையும் எடுத்துக் குடு எண்டு. ஏன் ஆம்பிளைப் பிள்ளையளுக்கு கை, கால் ஒண்டும் இல்லையோ! ஏன் நான் எடுத்துக் குடுக்கோணும்! இதையெல்லாம் கேட்கேணும் போலை இருக்கும். என்னெண்டு கேட்கிறது!

அவங்களும் லேசில்லை. சும்மா புதுமை கதைப்பாங்கள். சேர்ட்டை மாத்துற மாதிரி அடிக்கடி கேர்ள் பிரண்டையும் மாத்துவாங்கள். தாங்கள் வெளிநாட்டுப் பெட்டையளோடை உதட்டோடை உதடு உரசி அன்பைப் பரிமாறுறது ஒண்டும் தப்பில்லையாம். ஆனால் தங்கடை சகோதரி மட்டும் பெடியங்களைக் கண்டால் சிரிப்பைக் கூட அளந்துதான் உதிர்க்கோணுமாம்.

அது மட்டுமே, தங்களுக்கு மனைவியா வரப் போறவள் பயங்கர சுத்தமா இருக்கோணுமாம். அவள் கண்டிப்பா தாயகத்திலை இருந்து அடக்கமான, பண்பான தமிழச்சியா வரோணுமாம், எப்பிடியிருக்கு இவையளின்ரை நியாயங்கள்.

இதுகளைப் பற்றி நான் மூச்சே விடக் கூடாதாம். ஏனெண்டால் அம்மா, அப்பாவும் அண்ணாவையளின்ரை கொள்கையளுக்கு நல்ல சப்போர்ட். அம்மாவோடை சாடை மாடையா இதைப் பற்றி ஒரு நாள் கதைச்சுப் பார்த்தன். அவை ஆம்பிளைப் பிள்ளையளாம். அம்மா சொல்லி அந்த சப்டரையே என்னைத் தொடர விடாமல் குளோஸ் பண்ணீட்டா.

அம்மாவாலை என்னெண்டுதான் இப்பிடி எல்லாம் வாழ முடியுதோ, எனக்கெண்டால் தெரியேல்லை. வாற கோபத்துக்கு எல்லாருக்கும் ஏதாவது சொல்லோணும் போலை கிடக்கு. என்னெண்டு சொல்லுறது! உடனை அப்பா கத்துவார், உப்பிடி வாய் காட்டிப் பழகாதை. பொம்பிளைப் பிள்ளை மாதிரியே வளர்ந்திருக்கிறாய்! எண்டு. அது மட்டுமே! பிறகு அம்மாவோடையும் கத்துவார், நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறீர் எண்டு.

எனக்கு ஒண்டு விளங்கேல்லை. ஏன் பொம்பிளையள் ஏதும் கதைச்சால் அதை வாய் காட்டுறது எண்டு சொல்லோணும். என்ரை கருத்தை நான் சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லையே!

எனக்கு எல்லாரையும் விட அப்பாவிலைதான் பயங்கரக் கோவம். அப்பாவைக் கூப்பிட்டு இதையெல்லாம் கேக்கோணும் எண்டு இருக்கும்.

ஏதோ சனநாயகம், சர்வாதிகாரம்… எண்டெல்லாம் பெரிய அரசியல் கதைப்பார் அப்பா. இது கூட ஒரு வித சர்வாதிகாரம்தானே.

என்னை ஜேர்மன் ஸ்ரைலிலை பிறந்தநாள் விழாவுக்குப் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டு, தான் மட்டும் வெளிநாட்டு ஸ்ரைலிலை மேசையிலை போத்தலுகளும், கிளாசுகளுமா வைச்சுக் கொண்டிருந்து தன்ரை சினேகிதரோடை குடிச்சுக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரே எரிச்சலும், கோபமும்தான் வருது. எவ்வளவு நேரத்துக்கெண்டு இந்த ´ரீவீ´ (தொலைக்காட்சி) யைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அப்பாக்கும், அவற்றை சினேகிதருக்கும் பிடிச்ச நிகழ்ச்சியளை மட்டும்.

அம்மா ரேஸ்ருக்கு(taste) ´ரோல்ஸ்´ செய்து அப்பாவைக்குக் குடுத்திட்டு, இடியப்பமும் அவிச்சு கறி, பொரியல், சொதியெல்லாம் செய்திட்டா. அப்பாவையள் ´ரோல்ஸ்´ ஐச் சாப்பிட்டு முடிச்சிட்டினம். அதாலை ரேஸ்ருக்கு(taste) க்கு இன்னும் ஏதாவது வேணுமாம். அப்பா வந்து அம்மான்ரை காதுக்குள்ளை குசுகுசுத்துப் போட்டுப் போறார். அம்மா களைச்சுப் போட்டா எண்டிறது எனக்குத் தெரியுது. ஆனாலும் அம்மா முடுக்கி விட்ட பொம்மை மாதிரி வாயை மூடிக் கொண்டு ´கட்லட்´ செய்ய ஆயுத்தப் படுத்துறா. என்னைக் கூப்பிட்டு வெங்காயம் வெட்டித் தரச் சொல்லுறா.

எனக்கு அம்மாவோடை கதைக்கக் கூடப் பிடிக்கேல்லை. நாளைக்கு பள்ளிக்கூடத்திலை என்ரை பிரண்ட்ஸ்(friends) எல்லாரும் கேட்பினம் ஏன் நீ Birthday partyக்கு வரேல்லை எண்டு. ஏதாவது பொய் சொல்லோணும். அதுகளுக்கு இப்ப என்ரை நிலைமை ஓரளவு விளங்கீட்டுது. துருக்கி அப்பாமார் மாதிரி உன்ரை அப்பாவும் பொல்லாதவரே? உன்னை ஒரு இடமும் விடமாட்டாரே? எண்டு அண்டைக்கு ஸ்ரெபி கேட்டவள். எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்ததெண்டு இந்த அம்மாக்கோ, அப்பாக்கோ விளங்குமே?

இதுக்குள்ளை பிறகு அம்மா சொல்லுறா பிள்ளை, இந்தக் கோப்பையளைக் கழுவு எண்டு. ´மாட்டன்´ எண்டு சொல்லோணும் போலை பயங்கரக் கோவம் எனக்கு வருது. ஆனால் என்னெண்டு சொல்லுறது. பேசாமல் கோப்பையளோடை சேர்த்து என்ரை ஆசையளையும் கழுவிக் கொண்டிருக்கிறன்.

ஒரு மனசு.

2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *