மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும், எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாது எத்தனையோ பேருடன் வாய் குளறி… தடுமாறி இருக்கிறேன்.

அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில், நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடம் இருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம், ´ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச் சடங்குகள் அவசியமானதுதானா..?´

என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச் சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் ´அது அவசியமே இல்லை´ என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும், தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை… என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார். இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது என்றார்.

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..? இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

இல்லையில்லை…, மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்… அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

21.8.2003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *