பெண்களும் எழுத்தும்

பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது. பழமொழிகள் என்றால் என்ன? பாடல்கள் என்றால் என்ன? கட்டுரைகள் என்றால் என்ன? எதுவானாலும் பெரும்பாலும் ஆண்களாலேயே முன் மொழியப்பட்டு, அவை பெண்களை அடக்குவதாகவும் பெண்களுக்கு ‘அடங்கிப் போ!’ என்று புத்திமதி கூறுவதாகவும் பெண்களுக்கு எதுவுமே தெரியாது, அவர்கள் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடிக்கும் நாம்தான் படி அமைத்துக் கொடுக்கிறோம் என்பது போலாகவும் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன.

 காலங்காலமான அந்த எழுத்துக்களை உடைக்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிலரால் சஞ்சிகைள், பத்திரிகைகள் என்று உருவாக்கப்பட்டு, அவை முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவதாயும் பெண்களுக்குத் தைரியம் ஊட்டுவனவாயும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கான எதிர்ப்புக் குரல்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும் தவறாமல் வெளியில் கேட்டுக் கொண்டும் இருக்கின்றன.

இருப்பினும் ‘இதை’ எப்படி வெளியில் சொல்வது? என்று தயங்கிய எத்தனையோ பெண்களுக்கு இப்படியான சஞ்சிகைகள்தான் தைரியத்தைக் கொடுத்து அவர்களின் மெளனத்தைக் கலைத்திருக்கின்றன.

இதேநேரம், ´எதையும் நாம் எழுதுவோம், யார் கேட்பது?` என்பது போன்றதான வீம்பும் அழகானதல்ல.

பெண்விடுதலை என்பது ஆண்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு விடயமே அல்ல. இதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிலையிலும் தாங்கள் படும் துயரங்களையும் தொல்லைகளையும் பெண்களாக வந்து வெளியுலகில் சொல்லாவிட்டால் எழுதுவதிலும் பேசுவதிலும் அர்த்தமே இல்லை.

  • எங்கே தமது அவலங்கள் வெளியில் தெரிந்து விடுமோ!
  • எங்கே தாம் சார்ந்த சொந்தங்களின் பொட்டுக்கேடுகள் வெளியே அம்பலமாகி விடுமோ!

என்பதான பெண்களின் அச்சங்களே அவர்கள் மீது இலகுவாக அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பாலியல் துர்ப்பிரயோகங்களையும் பிரயோகித்துக்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளன.

இன்று மட்டுமல்ல, காலங்காலமாக வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏன் போராட்டச் சூழல்களிலும் கூட அதிகம் பாதிக்கப் படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.

பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் தயங்காது அதை வெளிப்படுத்த வேண்டும். அது மேலும் மேலுமான பாதிப்புகளைத் தவிர்க்க மிகவும் உதவும்.  

இதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட  பெண்கள் துணிந்து அவைகளை வெளியில் சொல்லவும் எழுதவும் ஏதுவான தைரியத்தை, அந்தப் பெண்களுக்கு சுற்றியுள்ள பெண்களும் சமூகமும் கொடுக்க வேண்டும்.

-சந்திரவதனா
12.03.2005

  • திசைகள் (28.03.2005)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *