நான் ஜி.சி.ஈ ஓலெவல் படிக்கும் போது தான் அம்மாவின்(சிவகாமசுந்தரி அம்மா) மூன்றாவது மகளான சந்திரபிரபா எனக்கு அறிமுகமாகி, எனக்குப் பிடித்த நண்பிகளில் ஒருத்தியுமானாள். அவளுடனான நட்புத்தான் நான் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
அம்மாவையும் அவவின் எட்டுப்பிள்ளைகளையும் நான் முதன் முதலாகக் கண்டதும் அவர்களது அந்த வீட்டில் தான். நானங்கு முதன்முதலாகப் போன போது அவர்கள் எல்லோரும் என்னோடு பழகிய விதமும் என் மீது காட்டிய அன்பும் அரவணைப்பும் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தன. அது ஒரு சந்தோசமான அனுபவமாக இருந்தது.
அம்மா என்னிடம் காட்டிய பரிவை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. என்னை ஏதோ பல வருடங்கள் தெரிந்தது போல் “வாரும்.. வந்து முதல்ல சாப்பிடும்..” இதுதான் அம்மாவின் முதல் வார்த்தையாக இருந்தது. அம்மாவினது அத்தகைய உபசாரமும் அணுகுமுறையும் எனக்குப் புதிதாகவும் என்னை அப்படியே தன்னோடு சேர்த்து அணைப்பது போலவும் இருந்தன.
நான் அவரோடு பழகிய காலம் முழுவதும் தான் பெற்ற பிள்ளைகளில் ஒருவர் போலவே என்னை எப்போதும் நடத்துவார். காலம் போகப் போக அம்மா எனக்கொரு உற்ற தோழியாகவே ஆகி விட்டார். எனக்குள் இருந்த கவலைகளையெல்லாம் அம்மாவிடம் மனம் விட்டுச் சொல்லி எத்தனையோ தடவைகள் அழுதிருக்கிறேன். அச்சமயங்களில் எல்லாம் அவர் என்னை ஆறுதல் படுத்துவார். தனது வாழ்க்கையில், தான் வாழும் வீட்டுச் சூழலில், தான் எப்படி வாழ்க்கையைக் கொண்டு நடத்துகிறேனென உதாரணக்கதைகள் கூறி, என்னைச் சமாதானப்படுத்தி, புத்திமதிகள் கூறுவார். அம்மாவின் ஒவ்வொரு புத்திமதிகளைக் கேட்டும் அவர் தனது வீட்டில் எல்லோருடனும் நடந்து கொள்ளும் விதங்களைப் பார்த்தும் காலப்போக்கில் நானும் பொறுமையை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெகுவாகக் கற்றுக்கொண்டு விட்டேன்.
நான் எத்தனையோ தடவைகள் பணக்கஷ்டத்தில் தவித்திருக்கிறேன். அச்சமயங்களில் அம்மா யாருக்கும் தெரியாமல் என் கஷ்டங்களைப் போக்கியிருக்கிறார். எனக்குப் பணம் தந்து உதவும் போது “செல்வியிடம் நான் கடன் வாங்கியிருக்கிறேன். அது தான்.. திரும்பக்கொடுக்கிறேன்..” என்பது போல் தன் கணவரிடமும் பிள்ளைகளிடமும் சொல்லிச் சமாளித்து, என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இந்தப் பெருந்தன்மையெல்லாம் யாருக்கு வந்து விடும்? இது தான் எங்கள் அம்மா! இவர் தான் மாவீரன் மொறிஸ் ஸின் அம்மா! இவர் தான் மாவீரன் மயூரனின் அம்மா!
அம்மாவுடன் நான் பழகிய காலங்களை நினைத்தால் இப்போதும் என் உடல் புல்லரிக்கிறது. மனம் கசிகிறது! அவருடன் பழகிய ஒவ்வொரு நாட்களிலும், ஒவ்வொரு நிமிடங்களிலும் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். நான் எந்தச் சூழ்நிலையிலும் அம்மாவிடம் மட்டும் எதையும் மறைத்ததில்லை. எனக்குள்ளிருக்கும் எல்லாவற்றையும் நான் பகிர்ந்து கொள்வதென்றால் அது அம்மாவிடம் மட்டும் தான்.
நான் விரும்பியவரை மணம்முடிப்பதற்கு (87-88) இடையூறாக எத்தனையோ பிரச்சனைகள் வந்தன. அச் சமயம் பெற்ற தாயைப்போல் அம்மாதான் முன்னின்று எனது குடும்பத்துடனும் அவரின் குடும்பத்துடனும் பேசி, எங்கள் திருமணம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.
திருமணம் முடிந்த பின்னர் எனது குடும்பத்திற்குள் எத்தனையோ பிரச்சனைகள் வந்து போயின. எவ்வாறான பிரச்சனையென்றாலும் எங்களுக்குத் தக்க புத்திமதிகள் கூறி, குடும்பம் பிரிந்து விடாமல் அம்மா பார்த்துக் கொண்டார்.
அவருடன் வாழ்ந்த காலங்கள் எமக்கெல்லாம் ஒரு அர்த்தமுள்ள பகவத்கீதை! அவர் எனக்கொரு தாயாக மட்டுமல்ல, எல்லாமாகவுமிருந்து என்னைப் புடம்போட்டவர்! வழிகாட்டியவர்! நான் எங்காவது வெளியூருக்குப் போகப் போகிறேன் என்றால் எனக்கு என்னென்ன உடுப்புகள் தேவையென்று அறிந்து அவற்றையெல்லாம் எனக்குத் தைத்துத் தருவார்.
இடம், பொருள் அறிந்து உதவி செய்பவர் அம்மா. நான் எனது முதற் குழந்தையைப் பெறுவதற்காக பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் அதிகாலை மூன்று மணிக்கே அனுமதிக்கப்பட்டு விட்டேன். ஆனால் பிறக்கப்போகும் குழந்தைக்கு அணிவதற்கான உடைகளெதுவும் என்னிடம் கைவசமிருக்கவில்லை. இதையறிந்த அம்மா அதிகாலையிலேயே அவசரமவசரமாக மூன்று மஞ்சள் நிறச்சட்டைகள் தன் கையினாலேயே தைத்து, காலை ஏழு மணிக்கே என் கணவரிடம் கொடுத்து அனுப்பியிருந்தா. இராணுவக்கெடுபிடிகள், போர், மரணம் என எங்கள் மண் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் அம்மா செய்த இத்தகைய உதவிகள் எனக்கு மிகப்பெரிய உதவிகளாக இருந்தன. இது ஒரு உதாரணம் மட்டுந்தான். இன்னும் எவ்வளவோ விடயங்கள் அம்மாவைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
என் வாழ்க்கையில் அம்மா எனக்காகச் செய்த உதவிகள் ஏராளம். எல்லாவற்றையும் செய்துவிட்டு, எதுவுமே செய்யாதது போல் தன் குடும்பத்தினருக்குக் காட்டிக்கொள்வார் அம்மா.
நான் முற்பிறவியில் செய்த ஏதோவொரு புண்ணியம் தான், இப்பிறவியில் சில காலங்களேனும் நான் அம்மாவுடன் சேர்ந்து பழகவும், கூடிச் சிலகாலம் வாழவும் பாக்கியமாய் அமைந்திருக்கிறது!
அம்மா ஒரு பூரணை நிலவு! ஓர் நிறைகுடம் எம்மை விட்டுப் பிரிந்து விட்டது! மனிதநேயத்தையும், மனிதாபமானத்தையும் கூட்டிக் கற்றுத் தந்தவர் அம்மா!
பிறருக்குச் செய்யும் எந்த உதவியையும், உள்ளங்கை குடிப்பதை பிறங்கைக்குத் தெரியவிடாமல் காப்பது போல் வாழ்ந்து காட்டியவர் தான் ‘அம்மா’ என நான் அழைக்கும் இந்த மனிததெய்வம்!
உலகில் சாதிகள் பல இருந்தும், சாதி மத பேதமின்றி, ஆண்சாதி, பெண்சாதி என்பது தான் உண்மையென வாழ்ந்து காட்டியவர் இந்தப் புனிதத் தாய்!
தன்னோடு பழகியவர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுத்து, அவர்களையும் அன்பானவர்களாகவும் பண்பானவர்களாகவும் மாற்றியவர் அம்மா! அவரோடு பழகியவர்கள் அனைவரும் அவருக்குப் பிள்ளைகளே!
அன்பையும் ஆறுதலையும் கொடுத்து
அறிவையும் பண்பையும் போதித்து
உண்மையாய் இந்த உலகில் அனைவரும்
தலை நிமிர்ந்து வாழ, உங்களாலான
அனைத்தும் செய்த மேன்மை மிகு அன்னையே!
உங்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!
– தமிழ்ச்செல்வி இளங்கோ
(இது அம்மாவைப் பற்றி இலண்டனில் வாழும் ‘தமிழ்ச்செல்வி இளங்கோ’ அவர்கள் எழுதி ‘நெடுஞ்சுடர்’ நூலில் இடம் பெற்ற பதிவு)
என்னைப் பெறாத என் அன்னை!
