முத்தம்மா

முத்தம்மா கை மாற்றிக் கை மாற்றி உலக்கையைத் தூக்கித் தூக்கிப் போட்டு அரிசியை இடித்துக் கொண்டிருந்தாள். உலக்கை ஒவ்வொரு தரமும், ஒரு சீரான வேகத்துடன் உரலுக்குள் உள்ள அரிசிக்குள் வீழ்ந்து புதையும் போது எழும் சத்தம் ஒரு தாளம் போல ஒலித்துக் கொண்டிருக்க, முத்தம்மாவின் மேற்சட்டைக்கும் இடுப்புச்சேலைக்கும் இடையில் சற்றுப் பிதுங்கி மடிந்திருந்த அவளது இடுப்புத் தசை மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.

உள்ளே சாய்மனைக் கதிரையில் சாய்ந்த படி அன்றைய புதினப்பத்திரிகையை மேய்ந்து கொண்டிருந்த கதிரேசரின் கண்கள் இப்போது பத்திரிகையை விடுத்து முத்தம்மாவை மேயத் தொடங்கின.

முத்தம்மா அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, கதிரேசரிடம் மட்டுமல்ல, பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றி அங்குள்ள பல ஆண்களிடமும் இப்படியான சபலங்கள் எட்டிப் பார்க்கத்தான் செய்தன. இளசுகள் சில அவளைத் தூரத்தில் கண்டாலே “ஏண்டி முத்தம்மா..! ஏது புன்னைகை, என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ, வெட்கத்தினால் அதை மறைத்தாயோ..?“ என்று அப்போதுதான் புதிதாக வெளிவந்த சினிமாப்பாடலை சத்தமெடுத்துப் பாடத் தொடங்கினார்கள்.

அவளுக்கு நாற்பது நாற்பந்தைந்து வயதிருக்கலாம். அவளது நிறம் சாதாரணமான ஊர்ப்பெண்களின் மாநிறத்தை விடச் சற்று வித்தியாசமாக, மஞ்சள் பேர்ந்த வெண்மை நிறம் கொண்டதாக இருந்தது. அவள் பேரழகி என்று இல்லாவிட்டாலும் அழகி. அந்த அழகி, திடீரென அந்த ஊருக்குள் தன்னந் தனியாக வந்திருக்கிறாள்.

யாரிவள், யாரிவள்? என்று அங்கலாய்ப்புடன் தேடியவர்களுக்கு, அரசல் புரசலாகக் கிடைத்த தகவல்கள், அவளுக்குத் திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் அவளது கணவன் அவளை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் போய் விட்டான். அவமானம் ஒரு புறமும் பணமின்மை மறுபுறமுமாய்த் தாக்க அந்த ஊரில் மேற்கொண்டு வாழ முடியாத நிலையில் இங்கு வந்து விட்டாள்.

முத்தம்மா நூற்சேலைதான் கட்டியிருப்பாள். கழுத்தில் ஒரு கறுத்தமாலை. அது கழுத்தோடு ஒட்டியபடி இருக்க, அதில் குண்டுமணியை விடச் சற்றுப்  பெரியதான ஒரு முத்து. பொட்டு வைக்க மாட்டாள். நெற்றி வெறுமையாகத்தான் இருக்கும். காதடியிலும் கழுத்துப் பகுதியிலும் சுருண்டும் நெளிந்தும் தூங்கும் அவளது சுருண்ட கேசம். கண்களுக்குள் மட்டும் கொட்டி விட முடியாத சோகம் நிறைந்திருக்கும்.

அந்தச் சோகம் யார் கண்களுக்குமே தெரிவதில்லை. அல்லது யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவளது அழகு, தனிமை, இளமை… இவைதான் பலரது கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தன.

எல்லோரும் தள்ளி நின்றுதான் அவளைச் சபலத்துடன் பார்த்தார்கள், ரசித்தார்கள், பாடல்களால் சீண்டினார்கள், சீட்டியடித்தார்கள்… கிட்ட நெருங்க மட்டும் தயங்கினார்கள். காரணம் அவள் பஞ்சமர் சமூகத்தில் இருந்து வந்தவளாம். வெளிப்படையாகத் தொட்டாலோ, பட்டாலோ ஏதாவது ஒட்டி விடும் என்ற பயம் அவர்களுக்கு.

பஞ்சமர், கோயிலுக்குள் வரக்கூடாது. கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாது. ஏன்… வீட்டுப்படிகளில் கூட இருந்து விடக் கூடாது… என்று மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடனும் கட்டுப்பாடுகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த ஊர் அது. அந்தக் கட்டுப்பாடுகளை பகலில் மீறத் துளியும் துணிவின்றிய ஊரவர்கள் அவர்கள்.

அந்த ஊர்ப்பெண்பிள்ளை ஒன்றுக்கு, அந்தச் சமூகத்தில் ஒருவனோடு காதல் வந்தததால், அது பெரும் பிரச்சனையாகி ஒரு நாள் அவள் அவளது வீட்டு மாரிக்கிணற்றுக்குள் இறந்து மிதந்த சம்பவம் அந்த ஊரில், அதே 1970களின் இறுதிப்பகுதியில் தான் நடந்தது. அத்தனை ஆச்சாரம் பார்க்கும் ஊர் அது.

அந்த ஊருக்குள் தான் முத்தம்மா வந்திருக்கிறாள். அதுவும் தன்னந்தனியாக வந்திருக்கிறாள். தற்போதைக்கு ஊரை அண்டிய ஒரு பகுதியில் இருக்கும் பஞ்சமர் குடும்பங்களில் ஒன்றோடு ஒண்டிக் கொண்டிருக்கிறாளாம்.

பிழைப்புக்கு ஏதாவது வழி வேணுமே! அதுதான் இந்த ஆச்சார சீலர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து, ஒவ்வொரு வீடு வீடாய்ச் சென்று, கேட்டு, அரிசி இடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

எல்லா வீடுகளிலும், அரிசி இடிக்கும் வேலைக்கு விண்ணப்பம் வைத்த போது அவள் கையாண்ட உத்தி, வழமையான சம்பளத்தை விட ‘கிலோவுக்கு ஐந்த சதம் குறைத்து இடித்துத் தருகிறேன்‘ என்பதுதான்.

‘நன்றாக, வேகமாக, அரிசி இடிக்கிறாள்‘ என்பதில் பல பெண்களுக்கு அவளைப் பிடித்தும் போயிற்று.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டில் என்று நாட்குறித்து இடிக்கத் தொடங்கினாள். ஒரு கிலோ அரிசி இடிப்பதற்கு இருபது சதம். அனேகமான ஒவ்வொரு வீட்டிலும் பத்துப் பதினைந்து கிலோ அரிசி இடிப்பிப்பார்கள். இரண்டு ரூபா காசும் மதியச்சாப்பாடும் அவ்வப்போது தேநீரும் கிடைக்கும். எல்லா வீடுகளிலும் காலை, மாலை இரண்டு நேரமும் அரிசிமாப் பிட்டு, அரிசிமா இடியப்பம்… என்று அரிசி மாவிலேயே சாப்பாடுகள் என்பதால், ஒரு சுற்று ஒரிரு கிழமைகளில் முடிய மீண்டும் புதுச் சுற்றுப் போல முதல் இடித்த வீட்டிலிருந்து அடுத்த சுற்றைத் தொடங்குவாள்.

அவள் பஞ்சமர் சமூகத்தில் இருந்து வந்தவளென்பதால் சில குடும்பங்கள் அவளைக் கொண்டு இடிப்பிப்பதில்லை. அதற்கென்று இருக்கும் சிலரது வீடுகளுக்கு அரிசியைக் கொண்டு போய்க் கொடுத்து இடிப்பிப்பார்கள். சிலர் மில்லிலும் கொடுப்பார்கள். மில்லில், மெசினில் அரைப்பது கைக்குத்து மாப்போல உருசியாக இருப்பதில்லை.

அதனால் செல்லம் ஒரு நாளும் மில்லில் கொடுப்பதில்லை. அரிசியைக் காவிக்கொண்டு போய் வள்ளிப்பிள்ளை வீட்டில் கொடுத்துத்தான் இதுவரை இடிப்பித்தாள். இப்போ முத்தம்மா வந்த பின், இது செல்லத்துக்கு இன்னும் வசதியாக இருந்தது. அரிசியைக் காவிக் கொண்டு போய்க் கொடுக்கும் வேலையும் இல்லை. வள்ளிப்பிள்ளையை விட கிலோவுக்கு ஐந்து சதமும் குறைவு. கண்ணுக்கு முன்னாலேயே இடிக்கிறாள். ஒரு பிடி மாவையோ, ஒரு பேணி மாவையோ எடுத்து வைக்கும் களவும் இல்லை. என்ன, அவளை அரிசியின் மேலோ, அரிசி மாவின் மேலோ கை பட விடாமல் பாதுகாத்தால் சரி.

இரண்டு கிழமைக்கொருக்கால் முத்தம்மா வருவாள். முதல் நாள் இரவே செல்லம் தீட்டல் பச்சையரிசியை சுளகில் போட்டு தவிடு பறக்கப் பிடைத்து தண்ணீருக்குள் ஊறப்போட்டு விடுவாள். தவிட்டை அள்ளி கழுநீரில் கலந்து ஆட்டுக்குத் தீனியாக்கி விடுவாள். பிறகு அதிகாலையில் எழுந்து அரிசியைக் கிளைந்து, தண்ணீரை வார வைத்து விட்டு, வேளைக்கே மத்தியானச் சமையலையும் முடித்து விட்டு முத்தம்மாவின் வருகைக்காகக் காத்திருப்பாள்.

இந்த இடைவெளிக்குள் கதிரேசரைக் கொண்டு உரலையும் உலக்கையையும் எடுப்பித்து வெளியில், முற்றத்தில் வைப்பித்து விடுவாள். அந்த நாட்களில் எல்லாம் கதிரேசர் மிகுந்த குதூகலமாக இருப்பார். நீண்ட நேரம் நேரே வெளி விறாந்தையில் இருக்கும் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்து புதினப்பத்திரிகை படிப்பார்.

கதிரேசர் வேலைக்குப் போகும் காலங்களிலும் சரி இப்போ ஓய்வெடுத்த பின்னும் சரி வீட்டு வேலைகளில் பெரிதான ஆர்வம் காட்டுவதில்லை. செல்லம்தான் பரபரப்பாய் ஓடியோடி எல்லாவற்றையும் செய்வாள். முத்தம்மா வந்ததும் குசலம் விசாரித்து விட்டு ஒரு தரத்துக்கு அளவான அரிசியைத் தானே கைகளால் அள்ளி உரலுக்குள் போடுவாள். முத்தம்மாவின் கை அரிசியில் பட்டு விடக் கூடாது என்பதில் வலு கவனமாய் இருப்பாள்.

கதிரேசர் மிகுந்த ஆச்சாரமானவர். கோயில், குளம் என்று திரிபவர். பஞ்சமரை மிக எட்டத்திலேயே வைத்திருப்பவர். அதனாலேயே செல்லம் எல்லாவற்றிலும் இன்னும் அதிகப்படியான கவனம் செலுத்துவாள்.

இடித்து முடிந்ததும், செல்லம் தானே உரலுக்குள் இருக்கும் மாவைக் கைகளால் எடுத்து சருவச்சட்டிக்குள் போட்டு விட்டு, புது அரிசியை உரலுக்குள் போடுவாள். முத்தம்மா இடிக்கும் போது சருவச்சட்டிக்குள் போட்ட மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பின்னறைக்குள் போட்டுப் போட்டு மாப்பெட்டிக்குள் அரித்து எடுப்பாள். வரும் கட்டையை அடுத்த தர அரிசியோடு சேர்த்து உரலுக்குள் போடுவாள். முத்தம்மா தாள லயம் தப்பாமல் இடித்துக் கொண்டே இருப்பாள். கதிரேசரின் கைகள் புதினப்பத்திரிகையைப் பிடித்தபடி இருக்க, கண்கள் முத்தம்மாவையே மேய்ந்து கொண்டிருக்கும்.

‘ஒண்டுக்கும் கூப்பிட்டுக் கீப்பிட்டு கரைச்சல் படுத்தாமல் இந்த மனுசன் பொறுமையாப் பேப்பர் வாசிச்சுக் கொண்டிருக்குது‘ என்று செல்லம் மனசுக்குள் திருப்திப் பட்டுக் கொள்ளுவாள்.

இடையில் ஓரிரு தடவைகள் எழுந்து போய் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து “இந்தாருங்கோப்பா… தேத்தண்ணி… குடியுங்கோ…“ என்று சொல்லி சுடு தேநீர் நிறைந்த எவர்சில்வர் ரம்ளரை கதிரேசரிடம் நீட்டுவாள்.

முத்தம்மா, தானே கொண்டு வந்த ஒரு குடிகோப்பையை நீட்டுவாள். அதற்குள், செல்லம் தேநீரை ஊற்றி விடுவாள். முத்தம்மா அந்த முற்றத்திலேயே செல்லம் கொடுத்த சாக்கில் குந்தியிருந்த படி ஊதி ஊதிக் குடிப்பாள்.

எல்லா அரிசியும் இடித்து முடிந்ததும் முத்தம்மா கிணற்றடிக்குப் போவாள். செல்லம் ஒரு வாளி தண்ணீர் கிணற்றில் மொண்டு அவளின் கைகளில் ஊற்ற அவள் கிணற்றடியோடு அண்டிய முற்றத்தில் நின்ற படியே குனிந்து அந்தத் தண்ணீரைக் கைகளில் ஏந்திக் கைகளையும் முகத்தையும் கழுவி தனது சேலைத்தலைப்பாலேயே துடைத்துக் கொள்வாள்.

பின்னர் செல்லம் பின் வளவுக்கு ஓடிப்போய் வாழை இலை ஒன்று வெட்டிக் கொண்டு வந்து அதைப் பழைய புதினப்பத்திரிகைக்கு மேல் வைத்து சோறுகறியெல்லாம் போட்டு முத்தம்மாவிடம் கொடுப்பாள்.

முத்தம்மா வெளிமுற்றத்தில் சாக்கின் மேல் குந்தியிருந்த படியே அதைச் சாப்பிடுவாள். ஒரு சோடாப்போத்தலில் தண்ணீர் வாங்கிக் குடிப்பாள். மீதச் சாப்பாடை அப்படியே சுற்றிக் கொண்டு போவாள். இரவுக்கு அதைச் சாப்பிடுவாளோ என்னவோ!

முத்தம்மா போனதும், முதல் வேலையாகச் செல்லம் உலக்கையை மஞ்சள் தண்ணீர் தெளித்து கழுவித் துடைத்து வைத்து விடுவாள். முத்தம்மா இருப்பதற்குக் கொடுத்த சாக்கையும் கொண்டு போய் ஆட்டுக் கொட்டிலோடு சேர்த்து இறக்கியிருக்கும் பத்தி மூலைக்குள் வைத்து விடுவாள்.

அதன் பின் தான், இடித்த மாவை தாச்சியில் போட்டு வறுத்து, அரித்து, மாவை மாப்பானைகளில் போட்டுப் பத்திரப்படுத்துவாள். பிரித்தெடுத்த மாக்கட்டைக்கு கொதி தண்ணீர் ஊற்றி வைத்து, மாப்பூத்ததும் அதை அன்றைய இரவுச் சாப்பாட்டுக்குப் பிட்டாக்குவாள்.

சில நாட்களில் இடித்த பச்சைமாவை எடுத்து வைத்துக் கரைத்து அடுத்த நாளைக்கு அப்பமும் சுடுவாள். அந்த நாட்களில் முத்தம்மாவை ‘அடுத்த நாள் வரும் படியும், இரண்டு அப்பம் தருகிறேன்‘ என்றும் சொல்லி விடுவாள்.

காலப்போக்கில் அப்பம் சுட்டால், தோசை சுட்டால் மட்டுமல்லாது வேறு வேறு வேலைகளுக்காகவும் முத்தம்மா அடிக்கடி அங்கு வரத் தொடங்கி விட்டாள். தென்னோலை பின்னுவது, ஆட்டுக் கொட்டில் கூட்டுவது, ஊமல் கொட்டையைப் பிளப்பது, பொச்சுமட்டையைப் பிரிப்பது… என்று பல வேலைகள் அங்கு அவளுக்குக் கிடைத்திருந்தன. எல்லாம் வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் இருந்தும் நின்றும் செய்யும் வேலைகள்தான். அது அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. வேலை செய்யும் நாட்களிலெல்லாம் உணவும் பணமும் அவளுக்குக் கிடைத்தன. அவ்வப்போது அவள் விரும்பியோ, விரும்பாமலோ அதற்கு மேலேயும் கிடைத்தன.

அவள் அப்படி அடிக்கடி வருவது ஆச்சாரசீலர் கதிரேசருக்கு நல்ல வசதியாக இருந்தது. அவளின் இடையையும் நடையையும் கண்களால் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் கைகளாலும் மேயத் தொடங்கியிருந்தார். செல்லம் அங்கே இங்கே என்று எங்காவது போகும் போது கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் ஒன்றையும் தவற விட்டுவிடாது தனக்குச் சாதகமாக்கி, அதற்கு மேலேயும் சென்றார். இரவுகளில் செல்லத்தையும் அதே கைகளால் தொட்டார்.

எதையும் அறியாத செல்லம் ஒவ்வொரு முறையும் முத்தம்மா அரிசி இடித்த பின், உலக்கையை மஞ்சள் தெளித்துக் கழுவி வைப்பதுவும் முத்தம்மா இருந்த சாக்கை ஆட்டுக் கொட்டிலோடு சேர்த்து இறக்கியிருக்கும் பத்தி மூலைக்குள் கொண்டு போய் வைப்பதுமாக இருந்தாள்.

Quelle: Thaiveedu
Pdf வடிவில்: https://thaiveedu.com/january-2024/
ஒலி வடிவில்: https://youtu.be/VPWKhRCLBYE?si=gGMEr2pFypy2FIYk

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

3 Comments on “முத்தம்மா”

  1. அழகான வரிகள். ஆழமான உள்ளார்த்தமாமான கருத்துக்களை நாகரீகமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். சாதியம் ஆச்சாரம் பார்க்கப் பட்ட காலத்தையும் அந்தரங்க வாழ்க்கையில குமரேசன் செய்த செயல்களை தெரியாமலேயே செல்லம்மா வாழ்ந்து வந்த கதையை முடித்து வைத்தது அழகாக இருந்தது. நல்ல உச்சரிப்புடன் வாசித்த சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *