
M. S. Thiyagarajah
(Chief Station Master)
(15.09.1933 – 01.12.1997)
அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.
Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் நிர்ப்பந்திக்கப் பட்டோம்.
Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனையும் கூடவே இருந்தது. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கைபிடிப்பகுதி வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ப்பாட ஆசிரியை “KG பேனை நல்லது” என்று பரிந்துரைத்தா.
KG பேனாவின் விலை 6 ரூபா. Ciel பேனா என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ் ஆசிரியையின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.
பின்னொருநாள் ஆசிரியை KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்கு மிகவும் பிடித்தது. அதை வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.
எனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேருந்தில் அல்லது துவிச்சக்கரவண்டியில் வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்கள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.
அப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பேனா பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொல்லி, வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.
அப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கி துவிச்சக்கரவண்டியை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்தச் சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக இருந்ததோ, அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் துளியும் இருக்கவில்லை
அப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கைபிடிப் பகுதியோடு சேர்ந்த மைக்குழாயை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கைபிடிப் பகுதியைக் கழற்றி விட்டு இன்னொரு குழாயால் மையை உறிஞ்சி கீழ்ப் பகுதிக்குள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.
எனக்கு அன்று ஒரே பெருமையும் சந்தோசமுமாக இருந்தது. அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ஆசிரியை எனது பேனாவையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டி, என்னைப் பாராட்டியது இன்னும் அதிகப்படியான பெருமையை எனக்குத் தந்தது.
பேனா கிடைத்து மூன்று நாட்களுக்குள் நான் நிறையவே எழுதித் தள்ளினேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.
மூன்றாம் நாள் விளையாட்டுப் பாடம் இருந்தது. அதற்கு விளையாட்டு மைதானத்திற்குப் போகவேண்டும். புத்தகங்கள், கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு மைதானம் வரை சென்று, 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனாவைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள்.
விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு “தண்ணீர் விடாய்க்குது“ என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.
என் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் ´அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் துவிச்சக்கரவண்டியை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார்´ என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனசு ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.
************
பேனா தொலைந்த விடயத்தை கடைசிவரை நான் அப்பாவுக்குச் சொல்லவேயில்லை. என் கவலையோடு சேர்த்து அதையும் மறைத்து விட்டேன். ஆனால் என் நினைவுகளில் அப்பாவோடு சேர்ந்து அந்தப் பச்சைப் பேனாவும் இன்னும் வாழ்கிறது.
சந்திரவதனா
15.09.2026
