சில சமயங்களில் நாம் எதிர்பாராமலே மனசுக்கு நிறைவாக ஏதாவது நிகழ்ந்து விடுவதுண்டு.
கடந்த புதன்கிழமை 03.06.2026 அன்று எனக்கு இரத்ததானத்துக்கான நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவசரம், அந்தரம் என்று எதுவும் இல்லாமல் ஆறுதலாகச் சென்று இரத்தம் கொடுப்பதற்கான எனக்கான நேரத்தை மாலை ஆறு மணிக்கு எடுத்திருந்தேன்.
வேலை முடிந்த பின் பேருந்தில்தான் குறித்த இடத்துக்குச் சென்றேன். அது எனது அம்மா இவ்வுலகை நீப்பதற்கு பத்துமாதங்களுக்கு முன்னர் வரை ஆறுவருடங்கள் வாழ்ந்த வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த கட்டிடம். அந்தப் பாடசாலையில்தான் எனது பிள்ளைகளும் தமது கல்வியைக் கற்றார்கள்.
நான் ஏற்கெனவே இரத்ததானம் செய்திருந்ததால் பதிவது, பத்திரங்களை நிரப்புவது எல்லாமே விரைவாக நடந்தேறின. உள்ளே சென்றதும் முதலாவதாக Hemoglobin பரிசோதனை. முடிந்ததும் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஐந்து மருத்துவர்கள் தனித்தனியாகத் திரை மறைவுகளில் இருந்தார்கள். சில நிமிடக் காத்திருப்பின் பின் நான் அழைக்கப்பட்டேன். ஒரு வயதான மருத்துவர். எனது பத்திரத்தைச் சரி பார்த்தார். எனக்குக் காய்ச்சல் இருக்கிறதா எனப் பரிசோதித்தார். நான் மூன்றாம் உலக நாட்டிலிருந்து வந்த ஒரு பிரயை என்பதால் முதல் இரத்ததானத்தின் போது மலேரியா வைரசுகள் எனது உடலில் இருக்கின்றனவா எனப் பரிசோதித்திருந்தார்கள். “இல்லை“ என்று அப்போதே உறுதியானதால் இனி அது தேவையில்லை என்பதை அவர் மீண்டுமொருமுறை குறிப்பிட்டுச் சொன்னார்.
எனக்கு O குரூப் இரத்தம். எனது அம்மாவுக்கும் O தான். 1967 இல் என்று ஞாபகம். அம்மாவுக்கு ஒரு குழந்தை இறந்த படி பிறந்தது. இரத்தப்போக்கு அதிகமாகி மிகவும் அபாயகரமான நிலைக்குப் போய் விட்டா. யாழ்மருத்துமனையில் அநுமதிக்கப்பட்டிருந்த அம்மாவுக்கு 0 குரூப் இரத்தம் தேவைப்பட்டது. கிடைக்கவில்லை. இரத்தம் கிடைக்காவிட்டால் 33 வயது மட்டுமே நிரம்பிய அம்மா இறந்து விடுவா என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
அப்போது நாங்கள் ஐந்து பிள்ளைகள். அப்பா தவியாய்த் தவித்தார். எவ்வளவு பணம் கொடுத்தாவது இரத்தம் பெறத் தயாராக இருந்தார்.
பெரும் பிரயத்தனத்தின் பின் பேரதிசயமாய் அம்மா உயிர் பிழைத்து வந்தா. யாரோ ஒருவரின் இரத்தம்தான் அன்று எங்கள் அம்மாவின் உயிரைக் காத்து, அம்மாவை எங்களுக்கு மீட்டுத் தந்தது. அதன் பின் தான் தம்பிமார் மொறிஸ், மயூரன், தங்கை பாமா மூவரும் பிறந்தார்கள்.
அந்த நினைவுகளோடு இரத்ததானம் முடிந்து வெளியில் வந்தேன். பேருந்துத் தரிப்பிடம் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தது. பேருந்து வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.
அந்த இடைவெளியில் ஒரு தரம் அம்மா வாழ்ந்த அந்த வீட்டடிக்குப் போய்வர மனசு உந்தியது. விரைந்து அருகிருந்த வளையும் சிறுபாதையினூடு நடந்து அவ்வளாகத்தினுள் நுழைந்தேன்.
45 பேர் வாழ்வதற்கான வசதியான குடிமனைகளைக் கொண்ட அவ்வீட்டின் முன்னே பரந்து விரிந்திருந்த அழகிய பூங்கா முழுவதுமே சோகம் படிந்திருந்தது. அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ரோஜாக்கள் பேச மனசின்றி மௌனித்திருந்தன. வெளியில் எறிக்கும் வெயிலுக்கு எதுவித சம்பந்ததுமுமில்லாது குளிர் சில்லென்றது.
ஒவ்வொரு வியாழக்கிழமை மாலைகளிலும், அங்கு வாழ்ந்திருந்த அனைவருடனும் ஒன்று கூடி அமர்ந்திருந்து, விளையாடி, சிற்றுண்டிகளுடன் தேநீர் அருந்தி அம்மா மகிழ்ந்திருந்த முன் அறையின் கண்ணாடிக் கதவுகளினூடு உள்ளே பார்த்தேன். அம்மா எப்போதும் அமரும் கதிரை உட்பட எல்லாக் கதிரைகளுமே வெறுமையாக இருந்தன.
சற்றுத் தள்ளி நடந்த போது அம்மா விரும்பி அமர்ந்திருந்து புத்தகங்கள் வாசிக்கும் நீண்ட கதிரை அநாதரவாகத் தனித்திருந்தது. எத்தனை தடவைகள் அக்கதிரையில் அம்மாவின் அருகமர்ந்து கதையளந்திருக்கிறேன். அதைக் கடக்கையில் குளிர் என்னை இன்னும் அதிகமாகச் சீண்டியது. உண்மையிலேயே குளிர்கிறதா அல்லது எனது மனப்பிரமையா?
வீட்டின் முன் வாசற்பக்கம் சென்றேன் அல்லும் பகலும் நான் திறப்பைப் போட்டுத் திறந்து ஓடிச் சென்ற கதவு அடித்துச் சாத்தி மூடப்பட்டிருந்தது. அம்மாவின் தபாற்பெட்டியில் வேறொருவரின் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது.
அண்ணாந்து பார்த்தேன். அம்மாவின் பல்கணியில் பூக்களெதுவுமே இல்லை. காய்ந்து போயிருந்தது. குடிமனைகளிலிருந்து தொலைபேசிகள் அழைக்கும் சத்தங்கள், கதைக்கும் சத்தங்கள்… என்று ஏதேதோ கேட்டாலும் அந்தப் பூங்கா மௌனித்தே இருந்தது. நான் அம்மாவிடம் வந்து விட்டுப் போகும் போது அம்மா அந்த பல்கணிக்கு வந்து எனக்குக் கைகாட்டுவா. மீண்டும் ஒரு முறை அண்ணாந்தேன். யாருமே இல்லை.
மனம் சோர்ந்த படி திரும்பினேன். இரண்டு எட்டுக்கள்தான் வைத்திருப்பேன். “ஹலோ“ என்ற படி என் முன்னே நின்றாள் Dutscha. அவள் அம்மாவின் நண்பி. அங்குதான் வாழ்கிறாள். அம்மா அவளைத் துஷி என்றுதான் அழைப்பா.
“எப்படி இருக்கிறாய்?“ என வினவியபடி என்னைக் கட்டித் தழுவினாள். “நல்லாயிருக்கிறேன்“ என்று சொல்லும் போதே என் கண்கள் துளிர்த்தன. “நீ எப்படி?“ என்று கேட்டேன். “கொஞ்சம் நெஞ்சு நோ வந்து விட்டது“ என்றாள் கவலையுடன். விடைபெறும் போது “ஒவ்வொரு வியாழனும் கோப்பி குடிக்கும் போது உனது அம்மா சிவாவையும் நாங்கள் நினைத்துக் கொள்வோம். உனக்கு நேரமிருந்தால் ஒரு வியாழக்கிழமை வந்து எங்ளோடு இருந்து கோப்பி குடிக்கலாம். நாங்கள் மகிழ்வோம்.“ என்றாள். “முயற்சிக்கிறேன்“ என்று சொல்லி விடைபெற்றேன்.
பேருந்தினுள் அமர்ந்ததும் எனது அலைபேசியைத் திறந்தேன். அன்று அம்மாவின் நான்காவது திவசம். எனக்கு இந்த நட்சத்திரங்கள் பார்ப்பதிலும் திவசம் செய்வதிலும் நம்பிக்கையில்லை. அம்மா இறந்த நாளான மே மாதத்தில் வரும் 18ந்திகதியையே அம்மாவின் நினைவுநாளாக நான் வரித்துக் கொள்வேன். ஆனாலும் எனது சகோதரர்களின் நம்பிக்கையை நான் குழப்புவதில்லை. அவர்களின் விருப்பப்படி அன்று ஊரில் அம்மாவுக்கான திவசம் செய்யப்பட்டது.
தங்கையின் மருமகள் திவசத்திற்கான அடுக்கு ஆயத்தங்களிலிருந்து படையல் வரை எல்லாவற்றையும் படமாக்கி அனுப்பியிருந்தாள்.
“கூடவே உங்கள் இரத்தம் இன்னொருவரின் உயிரைக் காக்கப்போகிறது. உங்கள் உதவிக்கு நன்றி“ என்ற மின்னஞ்சல் செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தும் வந்திருந்தது.
திவசம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லையானாலும் மிகுந்த மன நிறைவோடு நான் வீடு திரும்பினேன்.
சந்திரவதனா 12.06.2026- Facebook – 12.06.2026

Brilliant Vathanaa! I love reading your writing.
Thanks for sharing your experience.
A moving story of a mother’s tribulation, sacrifice and love from her birth to her last breath, It says that blood is thicker than water, You stand a witness,
Vathanaa, how fantastically you wrote this small event. You made me cry. Good feeling.
Keep on writing.
அருமை
நினைவுகள் அழிவதில்லை.
Nivetha Uthayan
நாம் வாழுவரை எம்முடன் வாழ்ந்த அன்புறவுகளின் நினைவுகளும் வாழும்.
இப்போது தான் நானும் வீடுதிரும்பினேன். உங்கள் எழுத்தை பின் தொடர்ந்து வந்ததால் எனக்கு ஏற்பட்டது இந்த உணர்வு.
மிக அருமை வதனா. மனதை என்னவோ செய்கிறது!
தானங்களில் சிறந்த தானம் இரத்த தானம் ! வாழ்த்துகள்
கடைசி வரிகள் நிறைக்கிறது மனதை
❤️❤️❤️
🙏
Very nice 👍. Since my blood group is O Rh negative l gave blood wherever I lived . Its a nice feeling.
Rep
அம்மாவை வர்ணித்து எழுதிய விதம் ரொம்பவும் பாராட்டுக்குரியது. என்னதான் இருந்தாலும் பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் என்றும் மறக்க முடியாது.🌺♥️
எமை விட்டுச் சென்ற, எமக்கான உறவுகளின் நினைவுகளே எம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குறிப்பாக அம்மா என்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் ஆதாரம். என்னைப் பொறுத்தவரை எமக்கு எத்தனை வயதானாலும், மனதளவில் உணர்வுரீதியாக அவர்களே எமக்கு பலமளிப்பதாக நம்புகிறேன்.
வரும் வியாழநன்று உங்கள் அன்னையின் தோழியாரின் அழைப்பை ஏற்று, அங்கு சென்று அவர்களுடன் தேனீர் அருந்துங்கள். பல கடந்தகால விடயங்களை பேச வாய்ப்பாக அமையும்.
உங்களது தாயாரைப்பற்றிய முன்னைய பதிவுகளில், 87 கால கடமைகளை கூறும் போது, எனது தாயாரின் செயற்பாடுகள் நினைவில் வரும். உணவு, தங்குமிடம் என்பதில் தொடங்கி பலர் துணியத் தயங்கும் தைரியமான பல விடயங்களை அனாயாசமாக செய்தவர். இன்று 86 வயதிலும், முதுமை, மறதி அலக்களித்தபோதும், அந்த நினைவுகளை பேசும் போது ஒவ்வொருவர் பெயரும், அவர்களைப் பற்றிய விபரிப்பும் அவரை ஒரு புது மனுஷியாக்கும். இப்படி எமது மண்ணில் பல அன்னையர் தங்களது குடும்பத்தை, பிள்ளைகளை தாண்டி அன்பிலும், அக்கறையிலும் தேவதைகளாய் உள்ளனர்.
மேலும், நானும் முன்னர் பல தடவைகள் இரத்தம் வழங்கி பின்னர் சூழ்நிலைகளால் முடியாமல் போனது, அது இன்றும் எனக்கு மனவருத்தமே. உங்களது இந்த பதிவு மறுபடியும் என்னை இதையிட்டு யோசிக்கச் செய்கிறது, உங்கள் நினைவுப் பகிர்வின் மூலம் இரு விடயங்களை நினைவு படுத்தி விட்டீர்கள், நன்றி.
தானங்களில் சிறந்தது இரத்ததானம்.
தம்பி மொறிஸ்! கோபால் கல்வி நிலையத்தில் படித்தவரா?
அம்மாவின் ஞாபகங்கள் என்னை தொட்டு செல்கிறது. நாலாவது திவசம். காலம்தான் எவ்வளவு வேகமாக நகர்கிறது 🙏🙏🙏
பழைய ஞாபகங்களை நினைக்கும்
போது மனத்துள் ஏதோ இன்பமும்
ஒரு சோகமும் இழையோடி வருகிறது. அழாகான குறிப்புகள்.
Nice feeling of beloved mother never fade
இரத்தம் கொடுத்து வரும் போதே எத்தனை இரத்த
சம்பந்த நினைவுகள்
சிறிய ஏக்க இளமை கதை
கண்டேன் சகோதரி
மதுரை பூபதி நன்றி வணக்கம்
அம்மாவின் நினைவுகள் என்றும் உங்களோடு
Super 👍💯🙏🙏🙏
மனதைத் தொட்ட பதிவு. இதனால் தான் நானும் இரத்த தானம் செய்கிறேன். இப்போது 50 வது தடவை.மனதைத் தொட்ட பதிவு. இதனால் தான் நானும் இரத்த தானம் செய்கிறேன். இப்போது 50 வது தடவை.
Keep on writing