
Siva Thiyagarajah (Sivagamasunthary)
(23.04.1934-18.05.2022)
ஊருக்குள் பலரும் மொறிஸின் அம்மா, மயூரனின் அம்மா, சுந்தரியம்மா என்றெல்லாம் அவரை அன்பாக அழைப்பார்கள். மொறிஸூக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. மயூரனுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. தான்பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக இருந்த எங்கள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு உன்னதமான அம்மாவாக இருந்தார்.
காணும் போதெல்லாம் நெஞ்சு நிறைந்த அன்பை எங்களில் சொரிந்து கொண்டிருந்த அம்மா! நாம் துவளும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து எம்மை உயிர்ப்புடன் செயற்பட வைத்துக் கொண்டிருந்த அம்மா! பசியோடு நாம் அவரின் வீடுதேடிச் செல்லும் போதெல்லாம் பரிவோடு உணவளித்த அம்மா! கண்ணை இமை காப்பது போல் எம்மைக் காத்திட்ட அம்மா! தான் பெற்ற பிள்ளைகள் போல் கட்டியணைத்து எமக்கு ஆறுதல் தந்த அம்மா!
அம்மாவைப் பற்றி இன்னுமின்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.
விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் போராட்டம் ஒரு கொரில்லாப் போர் வடிவிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. அச்சமயம் அதற்கு ஆதரவு தருவதற்கு பலரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவ் வேளையிலும் தைரியமாக, நம்பிக்கையோடு எங்களை வாரியெடுத்தணைத்து மலர்ந்த முகத்தோடு உபசரித்து, தன் பாசத்தைக் கொட்டி உணவளித்து ஆதரித்த அம்மா!
மாவீரன் டேவிட் அண்ணை அம்மாவைத் தேடி எப்போது வந்தாலும் “எணை பசிக்குது… சாப்பாடு தாணை” என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்து விடுவார். கடற்புலி வெங்கடேசனும் அப்படித்தான். சிலவேளைகளில் சாப்பாடு அங்கே முடிந்திருக்கும். வேறு யாராவது போராளிகள் வந்து சற்றுமுன்னர்தான் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால் அது பற்றி அவர் எதுவுமே சொல்லாமல் அடுத்த சமையலுக்கு அவசரமாக அடுப்பை மூட்டுவார். மொறிஸின் இளையக்கா(சந்திரா), பிரபாக்கா, தங்கை பாமா (பாமாச்சி) எல்லோரும் தமது பசியினைக் காட்டிக் கொள்ளாமல் எங்களை உபசரித்து அன்பாக அளவளாவிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பல சமயங்களில் அங்கு சாப்பாடு இருக்காது. ஆனால் அம்மாவோ இருப்பவற்றையெல்லாம் கொட்டி அவசரமாகச் சமைத்து வந்து எமக்குப் பறிமாறத் தொடங்கி விடுவார்.
நான் எத்தனையோ தடவைகள் மிகுந்த களைப்புடன் மொறிஸின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பெடியளுக்காகவே வாங்கி வைத்திருக்கும் கொர்லிக்ஸ், போன்விற்றா எல்லாம் கலந்து, சுவையான தேநீர் தயாரித்து வந்து என்னிடம் தருவார் அம்மா. நாங்கள் பசிக்களையோடு இருக்கக் கூடாது என்பதில் அம்மா எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
இந்திய இராணுவக்காலத்தில் மொறிஸ் வீடு எப்போதும் இராணுவ அட்டகாசங்களில் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டேயிருக்கும். அங்கு போகவே உறவினர்களும் அயலவர்களும் அச்சப் படுவார்கள். ஆனால் அட்டகாசங்கள் முடிந்து அங்கிருந்து இராணுவம் வெளியேறிய மறுகணமே நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவோம். அம்மா அடுத்த கணமே மகிழ்ச்சியோடு எங்களுக்குச் சமைக்கத் தொடங்கி விடுவார். எவ்வளவு இராணுவக் கெடுபிடிகள்,ஊரடங்குகள் இருந்தாலும் அம்மாவின், முகம் நிறைந்த புன்னகை எப்போதும் போல எங்களை உற்சாகமாக வரவேற்கும்.
நாங்கள் சில நாட்கள் அங்கு செல்லவே முடியாமல் எங்காவது ஒளிந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ தடவைகள் வந்திருக்கின்றன. அச் சமயங்களில் எங்களைத் தேடி யாராவது வருவார்கள். “வந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள்” என்று அவர்களிடம் அம்மா தூது அனுப்பி விட்டிருப்பார்.
எண்பதுகளின் நடுவில் மொறிஸ், மயூரன் குடும்பத்தினர் இராணுவக் கெடுபிடிகள் தாளாமல் யாழ்ப்பாணத்திற்குப் போய் விட்டார்கள். அப்போது அவர்கள் மொறிஸின் அப்பாவின் உத்தியோக மனையில் குடியிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருந்தோம்.
நீண்ட மாதங்கள் அம்மாவையும் அவரின் குடும்பத்தினரையும் காணாமல் நாங்கள் உள்ளூரப் பெருந் துயருற்றிருந்தோம்.
கடைசியாக, மொறிஸ் 1989இல் வீர மரணமடைந்த கொடுந் துயரமான நிகழ்வுகள் யாவும் நடந்து முடிந்த பின்னர், நான் யாழ்ப்பாணத்தில் சில இரகசிய விடுதலைப் பணிகளிற்காக நியமிக்கப் பட்டிருந்தேன். இந்திய இராணுவத்துடன் இணைந்து மாற்றியக்கங்களும் எம்மைத் தேடியலைந்து கொண்டிருந்த நேரமது.
ஒரு நாள்,மொறிஸ் குடும்பத்தினர் குடியிருந்த யாழ்ப்பாண வீட்டை சைக்கிளில் கடந்து செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்கேற்பட்டது. அப்போது, ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்காமல் கடந்து செல்ல என் மனம் இடம் தரவில்லை. அம்மாவையும் இளையக்கா, பாமாச்சி எல்லோரையும் ஒரு தடவையேனும் கண்டு ஒரு வார்த்தையாவது பேசி விட்டுப் போகலாமே என்றெண்ணி, என் மனம் என்னை அந்த வீட்டின் பக்கம் இழுக்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டினைச் சுற்றி இராணுவ முகாம்களும் சென்றிப் பொயின்ற்றுகளும் நிறைந்து வழிந்திருந்தன. எவருமே போக அச்சப்படும் அந்த இடத்தில் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே மனசு அஞ்சியது.
நான் சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தேன். வாசலுக்கு வந்த அம்மா கண்கள் விரிய வியப்போடு என்னைப் பார்த்தார். அடுத்த கணமே மகிழ்ச்சி பொங்க, புன்னகையோடு, இரகசியக் குரலில் என்னை வரவேற்றார். உடனேயே ஓடிச் சென்று சுடச்சுடப் புட்டும், கத்தரிக்காய்க்குழம்பும் முட்டைப்பொரியலும் கொண்டு வந்து தந்து “களைச்சிருக்கிறாய் அப்பு. முதல்ல சாப்பிடு. பிறகு கதைக்கலாம்” என்றார்.
எனக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து பொங்கியது. நான் பொங்கிய கண்ணீரைத் துடைக்கவில்லை. எனக்கு ஏற்கெனவே பசி. தலை சுற்றுவது போல் உணரத் தொடங்கியிருந்த நான் கைகளைக் கழுவிவிட்டு மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அந்நேரம் அவ்வுணவு எனக்கு அமிர்தம் போலத் தோன்றியது. அம்மா என்னைப் பரிவோடு பார்த்தபடி இருந்தார்.
திடீரென்று வெளியில் ஏதோ சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நான் பரபரப்பானேன்.
“நீ… சாப்பிடப்பு. நான் போய் என்னெண்டு பார்த்துக் கொண்டு வாறன்” என்றார் அம்மா.
நான் “இப்பப் போக வேண்டாம்” என்று கையைக் காட்டித் தடுத்தேன்.
ஆரியகுளச் சந்திப்பக்கம் கேட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைத் தொடர்ந்து இராணுவ `றக்´ ஒன்று வேகமாக அவர்களின் வீட்டைக் கடந்து போனது. எனக்கு நெஞ்சு திக்கென்றது. நான் உயிரோடு இருக்கும் கடைசித் தருணம் அதுதான் என நினைத்தேன்.
வீட்டின் பின்புறம் யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய இராணுவமுகாம். பின்வழியாக நான் ஓடித் தப்பவே முடியாது.
சத்தங்கள் மெல்ல மெல்லக் குறைந்ததும் அம்மா வெளியில் இறங்கி, கேற்வாசல் வரை போய் வீதியை இருபுறமும் பார்த்து விட்டு வந்தார்.
“இப்பச் சந்தடி ஒண்டும் இல்லை. எல்லாரும் போயிட்டான்கள். றோட் வெறிச்சோடிப் போய்க் கிடக்கு” என்றார்.
நான் கைகளைக் கழுவிவிட்டு, தண்ணீரை மடமடவென விழுங்கியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு “போட்டுவாறன் அம்மா..” என்றேன். என் வாய்க்குள்ளிருந்து சத்தம் வர மறுத்தது. கண்கள் என்னையும் மீறி, பொங்கி வழியத் தயாராக இருந்தன.
அம்மா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார் “எல்லாம் நல்ல படி நடக்கும் அப்பு. தைரியமாய், கவனமாய் போயிட்டு வா” என்று. அதுதான் நான் அம்மாவைக் கண்ட கடைசி நாள்!
இப்போது எங்கள் அன்பு அம்மா மேலை நாடொன்றில் எங்கள் மண்ணை நினைந்த படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். நானோ அவரை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலையில் வேறொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் மேல் அம்மா வைத்திருந்த அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் இத்தனை அழிவுகளின் பின்னும் இத்தனை இழப்புகளின் பின்னும் இத்தனை துயரங்களின் பின்னும் என்னை இன்னும் உயிரோடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
விடுதலையே தன் உயிர்மூச்சென எண்ணி எங்கள் எல்லோருக்குமாகவே வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் அன்பு அம்மா இன்னும் நெடுங் காலம் நீடூழி வாழ வேண்டும்!
உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் பரிவுக்கும் நெஞ்சுறுதிக்கும் முன்னால் நான் என்றும் தலை வணங்கி நிற்கிறேன் அம்மா!
-றியோ நிலவன்
மார்கழி 2020
விடுதலைப்புலிப் போராளிகளில் ஒருவரான றியோ நிலவன் அவர்கள் எழுதிய இம் மாண்புரை அம்மாவின் “பெருநினைவின் சிறு துளிகள்” நூலில் இடம் பெற்றது.
- Facebook (23.04.2025)
- மனஓசை வலைப்பூ (23.04.2025)