விமலன் அழகரத்தினம்

ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட, மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன்-மாஸ்டர் (தீட்சண்யன்-நாட்டுப்பற்றாளர்) அவர்களின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88வது வயதில் ஜேர்மனியில் இன்று(18.05.2022) காலமானார்.
கப்டன் மொறிஸ் – பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989இல் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரமரணத்தை அடைந்திருந்தார்.
கப்டன் மயூரன் – இவர் எமது தேசியத் தலைவரின் பிரத்தியேக மெய்ப்பாதுகாவலராக பல வருடங்கள் சேவையாற்றி 1993இல் விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீதான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின்பொழுது இம்பிரான்- பாண்டியன் படையணியில் பங்காற்றி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார். இவரின் பெயரால் `மயூரன் பதுங்கிக் குறி பார்த்துச் சுடும் படையணி´ உருவாக்கம் பெற்றிருந்தது.
பிறேமராஜன் மாஸ்டர் – இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் ´கவிஞர் தீட்சண்யன்` என்னும் புனை பெயரில் இலக்கிய வட்டத்தில் பெரிதும் பேசப் பட்டவர். இவருடைய படைப்புகளாக கவியரங்கம், சிறுகதைகள், கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்டபுலனாய்வு நூல்கள்.. என்று பலவிடயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரோடு தனது பெரும் காலத்தைக் கழித்திருந்தார். ஆதலால் பொது வெளியில் அவர் அதிகம் அறிமுகமாகியிருந்தவரில்லை
இவர்களின் அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல்இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் PLOTE தேசவிரோத அணியினரின் முகாமுக்கு முன் வீட்டில் இருந்து கொண்டு புலனாய்வுப் போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த போராளிகளைப் பாதுகாத்து அனுப்பியுமிருந்தார்.
அம்மாவும் சில காலத்துக்கு முன்னர் தனது வாழ்வியலின் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை அப்புத்தகம் வாயிலாக நிறுவியுமிருந்தார். ஜேர்மனி நாட்டில் எமது தமிழ் குழந்தைகளுக்கு பல காலமாக ஜேர்மன் தமிழாலயம் ஊடாக எமது தாய்மொழியை சிறப்பாக போதித்தும் வந்திருந்தார்.
மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள் எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், IBC யில் வானொலி நிகழ்ச்சிகள்) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர்புனர்வாழ்வுக்கழகம் – ஜேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியிருந்தனர்.
அம்மாவின் இழப்பு என்பது எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும். அம்மாவின் குடும்பத்தி னர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
- விமலன் அழகரத்தினம் (விமலன் பிரிகேடியர் மணிவண்ணனினதும் சுரங்கத் தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் தாகூரினதும் சகோதரன்)