இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?

வன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது.

சின்னவயதில் அம்மா எதையாவது கொடுத்து விட்டு வரச் சொன்னால் கொண்டு போய் இவனது அம்மாவிடம் கொடுத்துவிட்டு வருவேன். என் தோதுக்கு அங்கு யாரும் இல்லை. அவனது அக்கா என்னை விடப் பல வருடங்கள் மூத்தவள். மற்றதெல்லாம் பெடியன்கள். அதனால் அங்கு போவதில் எனக்கு ஆர்வமும் இருந்ததில்லை.

எனது அம்மாவும் அவனது அம்மாவும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டு விறாந்தை நுனியில் இருந்து ஏதோ குசுகுசுப்பார்கள். சில வேளைகளில் எங்கள் வீட்டு மல்லிகைப் பந்தலின் கீழ் இருந்தும் கதைப்பார்கள். இவனது அப்பாவும் இடையிடையே எனது அப்பாவுடன் கதைப்பார். எப்போதாவது அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு அம்மாவும் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குச் சோடியாகப் போய் வருவார்கள். நானும் அவர்களுடன் கூடப் போக வேண்டிய கட்டங்களும் வந்திருக்கின்றன. அந்தப் பொழுதுகளை எப்படிக் கழிப்பது என்று தெரியாமல் நான் அவர்களது வீட்டுப் பூந்தோட்டத்துக்குள் சுற்றுவேன். தென்னைமரத்தோடு சாய்ந்திருப்பேன். என்னை விட நான்கு வயது அதிகமானாலும் அப்போது இவனும் சின்னப் பெடியன்தான். ஆனாலும் கிரிக்கெட் மட்டையோடு வெளியே போய் விடுவான். இவனது அக்கா மட்டும் என்னைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சம் கதைப்பா. இந்தளவு உறவு எமது இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்தது.

இந்த நித்தியங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஏற்படாமலே, காலங்கள் ஓடின. நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலை நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் வடமராட்சி வீதிச் சந்தியில் வைத்து இவன் ஏதோ ஒரு நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருந்தான். நானும் தங்கையும் இவனைத் தாண்டும் போது எனக்கும் நீட்டினான். ஆண்கள் என்றாலே ஒதுங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அன்றைய பெண்களுக்கான எழுதப்படாத சட்டமாகவே இருந்தாலும் அதுவே எனது பழக்கமாகவும் இருந்தாலும் தந்தது இவன் என்பதால் தயங்காமல் வாங்கிச் சென்றேன். அது ஏதோ ஒரு பகிஸ்கரிப்பை ஒட்டிய நோட்டீஸ்தான்.

ஆனால் மதிய இடைவேளையில் வீடு திரும்பியபோது அண்ணன் கொஞ்சம் மூட்அவுட்டாக நின்றான். மதிய உணவில் கூடக் கை வைக்காமல் எனக்காகவே காத்திருப்பது போல நின்றான். கண்களில் அவமானம் கலந்த கவலை தெரிந்தது. என்னைக் கண்டதும் “ஏன் அவன்(xxxx) லெற்றர் தர வாங்கினனீ?” கேட்டான். எனக்கு அழுகையே வந்து விட்டது.

“ஆர் சொன்னது லெற்றர் எண்டு?”

“அவன் தான் சொன்னவன், ‘உன்ரை தங்கைச்சி நான் லெற்றர் குடுக்க வேண்டினவள்‘ எண்டு”

நல்லவேளையாக நான் அந்த நோட்டீஸை எனது பாடசாலைப் புத்தகங்களுடனேயே வைத்திருந்தேன். அதை அண்ணனிடம் காட்டி சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆனாலும் இவனின் அந்தச் செயல் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருந்தது. கவலையாகக் கூட இருந்தது.

அதன் பின் இவனைத் தெருவில் எங்காவது காண நேர்ந்தாலும், காணாத மாதிரியே பாவனை பண்ணினேன். “ஏன் அப்படி என் மேல் பழி சுமத்தினாய்?“ என்று கேட்பதற்கெல்லாம் அப்போது எனக்குத் துணிவு வரவில்லை. காலங்கள் வருடக் கணக்கில் ஓடிய போதும் நான் அதை மறக்கவு மில்லை.

எனக்குத் திருமணமாகிய பின் எனது கணவர் கூட ஒருநாள் “அவன் லெற்றர் தர வாங்கினாயாமே!” என்று சிறிய சந்தேகத்துடன் கேட்டார். அப்போது இவன் வெளிநாட்டுக்குச் சென்று விட்டான்.

இச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10-12 வருடங்களின் பின் இவனுக்குத் திருமணப் பேச்சுக் கள் நடந்து, இவனும் வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

அதன் பின்னர் எங்களூர் வழக்கப்படி ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் கால்மாறிச் செல்கையில் எமது வீட்டுக்கும் வந்தான். எமது வீட்டில் எல்லோருமாக இவனையும் மணப்பெண் ணையும் வரவேற்று வரவேற்பறையில் இருத்தி வைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அரை மணி நேரமாக நான் அந்தப் பக்கமே போகாமல் இருந்தேன். எனது தங்கைமார்தான் வந்து “அக்கா வாங்கோ. புதுமணத்தம்பதிகள் எப்பிடி வடிவாய் இருக்கினம் எண்டு வந்து பாருங்கோ” என்று வருந்தி அழைத்தார்கள். எனது அண்ணன் அப்போது ஊரில் இல்லை. இருந்திருந்தால் வந்து கதைக்கும் படி என்னை அழைத்திருக்க மாட்டான்.

மனமில்லாமல் வரவேற்பறைக்குச் சென்றேன். புதுமணக் களையோடு அவன் இருந்தான். எதுவுமே நடக்காதது போல என்னோடு கதைத்தான். என்னால் அதிகம் கதைக்க முடியாதிருந்தது. “என் மீது ஏன் களங்கம் சுமத்த முயன்றாய்?” என்று கேட்கவும் முடியாதிருந்தது. ஆனால், எப்போதோ ஒரு நாள், என் வீட்டுக்கு நான் இல்லாத வேளையில் வந்த போது எனது ஓட்டோகிராபை (autograph) எடுத்து

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

என்று அவன் எழுதி வைத்த பாடல் வரிகள்

சட்டென்று நினைவில் வந்து போயின. அதைக் கூட

ஏன் எழுதினான் என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

இத்தனைக்கும் இவன் ஒரு விளையாட்டுத்  தனமான பொறுப்பற்ற பெடியன் அல்ல. படிப்பு, வேலை, குடும்பம்… என்று வாழ்க்கையின் படிகளில் சரியாகவே ஏறிக் கொண்டிருந்தவன்.

இன்றைய பொழுதில் அந்த விடயம் ஒரு பிரச்சனையான விடயமேயல்ல. ஆனாலும் இற்றை க்கு 32 வருடங்களுக்கு முந்திய அன்றைய பொழுதில் ஒரு பெண்ணை மிகப்பெரிய குற்றவாளியாக நிறுத்தக் கூடிய, குடும்ப வாழ்க்கையையே குலைக்கக் கூடிய விதமான அந்தப் பழியை ஏன் என் மேல் சுமத்த முனைந்தான் என்ற கேள்வி இன்னும் எனக்குள் இருக்கிறது.

15.11.2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *