புதனும் புதிரும் – 4

ஸ்வேபிஸ் ஹால் (Schwaebisch Hall) நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் (Ilshofen) கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது,  இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். 

ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market)  சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். 

பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன்,  சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு  ஆச்சரியமாக இருந்தது.  “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான்.  “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார்.

அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான்.

`யாராயிருக்கும்? நான் சொன்னது  இவனுக்கு விளங்கவில்லையோ?  வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார்.

அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. `வழமையாக இந்த நேரத்தில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே!` என்ற யோசனை தோன்றினாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். 

அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு.. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள்.

வீட்டின் வாசலில் நின்றபடியே, “நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில்  கேட்டார்.

முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது.  வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது.

வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது.

விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்த போது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக, ஒருவர்,(முதியவரின்மனைவி) ஓடி வருவதை அவதானித்தான். `யாரோ வருகிறார்கள்` என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே.

தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை  முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார்.

பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமீபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும்.

இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று  எல்லா இடங்களிலும்  பொலிஸார்  தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா?“ என விசாரித்துப் பார்த்தார்கள். 

ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ் (வீட்டிலிருந்து வேலை). மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று.

ஹேபாப்(Kebab) கடை வைத்திருந்தவர் சொன்னார் “இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று.

‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும் படியான,  வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது.

ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் (duct tape) ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver  நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய  அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.

தொடர்ச்சி

புதனும் புதிரும் – 1
புதனும் புதிரும் – 2
புதனும் புதிரும் – 3
புதனும் புதிரும் – 4
புதனும் புதிரும் – 5
புதனும் புதிரும் – 6
புதனும் புதிரும் – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *