புதனும் புதிரும் – 3

றக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்திருந்தது.

உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்(86) உடையது  என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது  பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது.

14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார்.  மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்” என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’   எடித் லாங்கின் மரணச் சான்றிதழில்  இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து, அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது.

எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டைத் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார். 

பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து, தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார்.

மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்து விட்டுப் போனார்கள். 

“கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் மேலதிகத் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்” என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது.

தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில்  இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதிக் கொண்டிருந்த  அந்த நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது.

பத்திரிகை நிருபர், லுமினோல் எண்ணெய்யை (Luminol oil) இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலைப் பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும் அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும்  அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக  லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன்படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார்.

“விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறது” என்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்தது.  கூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக,  அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது, கொலையாளி எடித் லாங்கை, வாசலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்து விட்டு,  இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இரத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர்த் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது.

உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளில் பிரசுரித்தன.

இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள்  சரியாக அமையவில்லை  என்பதால்,  மக்கள்  பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள்:

பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார்.

“எடித் லாங், மருந்துகளை உட்கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது” 

பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “எனது தாயார் தலையில் தாக்கப் பட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்’ போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டது“

மக்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணையை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே  நடந்த இரண்டு கொலைகளையும் செய்தது யார் என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.. 

கொலையாளியைக் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் (Ilshofen) கிராமத்துக்குப் போய் வருவோம்.

தொடர்ச்சி

புதனும் புதிரும் – 1
புதனும் புதிரும் – 2
புதனும் புதிரும் – 3
புதனும் புதிரும் – 4
புதனும் புதிரும் – 5
புதனும் புதிரும் – 6
புதனும் புதிரும் – 7













































































Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *