கல்லட்டியல்

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும், வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன.

எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம், பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன.

இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்! அழகிய வெண்பனிக் குவியலுக்குள் எழுந்து நிற்கும் வீடுகளுக்குள் எல்லாம் பெண்கள் அவசரமாய்த்தான் திரிவார்களோ?!

காலையின் கருக்கலைக் கூடத் துடைத்தெறிந்த பனியின் வெண்மையில் ஒளிர்ந்திருந்த ஜேர்மனியின் நகரங்களில் ஒன்றான ஸ்வெபிஸ்ஹாலின் மலைச்சரிவொன்றில் அமைந்திருந்த அந்தச் சாம்பல் நிற வீட்டுக்குள் லலிதா பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.

எல்லாப் பெண்களுக்கும் உள்ள அதே அவசரம். அதே வேலைச் சுமைகள். ஊதிப் பற்ற வைத்த அடுப்பு மின்சாரத்தில் இயங்கினால் என்ன!ஆட்டுக்கல்லும் குளவியும் கிரைண்டர் ஆனால் என்ன! பெண்களுக்கு வேலைகளுக்குக் குறைவில்லை.

சுந்தரேசனை மட்டும் இந்தக் காலைப் பரபரப்பு எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. லலிதா போட்டுக் கொடுத்த தேநீரை உறிஞ்சி உறிஞ்சிச் சுவைத்த படி, அவன் அன்றைய பத்திரிகையை நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

ஒருவேளை சுந்தரேசனுக்கு மனைவியாக லலிதா வாய்த்தது போல், லலிதாவுக்கும் ஒரு மனைவி வாய்த்திருந்தால் லலிதாவின் காலைகளும் நிதானமாக விடிந்திருக்குமோ?!

லலிதா தேநீர், சாப்பாடு எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்தி மேசையில் வைக்கும் போதே பிள்ளைகளின் அறைகளில் அலாரங்கள் அலறின. அலாரங்கள் எப்படித்தான் அலறினாலும், அவள் போகாமல் அவர்கள் எழும்ப மாட்டார்கள்.

லலிதா பிள்ளைகளின் அறைகளுக்குள் விரைந்தாள். மூத்தவன் மணிக்கூட்டின் அலாரபட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். சின்னவனோ அலாரத்தின் அலறல் பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நடுவனோ “அம்மா, இன்னும் கொஞ்சம் படுக்கப் போறன்.” என்று கெஞ்சினான்.

மூன்று பேரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி, சுந்தரேசனையும் வேலைக்கு அனுப்புவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. நேரமும் 7.30 ஐத் தொட்டு விட்டதால் ´அப்பாடா´ என்று அமரக் கூட முடியாமல் அவசரமாகத் தலை சீவி, சப்பாத்தையும் போட்டு, ஜக்கெற்றையும் போட்டுக் கொண்டு, கைப்பையுடன் படிகளில் ஓடி இறங்கினாள்.

வாயிற் கதவைத் திறந்ததும், சில்லென்ற குளிர்ந்த காற்று முகத்திலறைய, காது மடல்கள் விறைக்க வேறுவழியின்றி பனிக்குவியலுக்குள் காலை வைத்த போது இடது பக்கமிருந்து வந்து கொண்டிருந்த ´றூடி´யுடன் மோதப் பார்த்தாள். ஆனாலும் மிகவும் பிரயத்தனப் பட்டு மோதுவதைத் தவிர்த்துக் கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தபடி ஜக்கெற்றைக் கூடப் பூட்டாமல் விரையும் அவளைச் சிரிப்புடன் பார்த்த றூடி, “உன்னோடு மோதியிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு இனிமையான நிகழ்வைத் தவிர்த்து விட்டாயே!” என்று சலிப்படைந்த பாவனையுடன் ஜேர்மனிய மொழியில் சொன்னார்.

63 வயது நிரம்பிய ஜேர்மனியரான றூடியின் குறும்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவரது அப்படியான குறும்பு அவளை என்றைக்குமே கோபப் படுத்தியதில்லை. காரணம் அவளின் அப்பாவின் வயதுதான் றூடிக்கும். ´அப்பாவைப் போலவே எப்போதும் குறும்பு.´ நினைத்துக் கொண்டவள் சிரித்தாள்.

சற்று நேரத்துக்கு முன்பு வரை அவளுள் இருந்த இறுக்கமான நிலைமாறி மனசுக்குள் ஒரு மகிழ்வு ஓடியது.

காரில் குவிந்திருந்த பனியை வழித்தெறிந்து, இறுகப் படிந்திருந்த பனியைத் தேய்க்கும் போது, குளிரில் கைவிரல்கள் கொதித்தன. விரல்களை ஊதிவிட்டு, ஊதிவிட்டு பனியைச் சுரண்டியெறிந்து விட்டு காரினுள் ஏறினாள். ஹியரிங்கைப் பிடித்த போது ஏற்கெனவே குளிரில் கொதித்த விரல்களும், கைகளும் நடுங்கின. கார் கண்ணாடிகளைப் புகார் மறைத்தது. எதுவுமே தெரியவில்லை. நெஞ்சுக்குள் குளிர்ந்தது.

´வேளைக்கே வெளிக்கிட்டு பஸ்சிலேயே போயிருக்கோணும். கராச் இல்லாமல் வின்ரரில் கார் சரி வராது.´ மனசு முணுமுணுத்தது. குளிரில் உடம்பே நைந்து போனது போல இருந்தது. கைவிரல்களின் நுனிகள் வெடித்து, இரத்தம் கசியத் தயாராக இருந்தது.

இந்த வதைகளைத் தாங்க மாட்டாத அவள் ´என்ன வேலை, அதுவும் இந்தக் குளிரிலை. பேசாமல் வீட்டிலை நிண்டு றேடியோ கேட்டு, புத்தகங்களை வாசிச்சு… சந்தோஷமாக வாழ முடியாமல் வேலை வேலையெண்டு… என்ன வாழ்க்கையோ..´ மனதாரச் சலித்தாள்.

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டாள். றூடி நிதானமாகத் தனது பென்ஸ் காரைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற கையைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்ற லலிதாவுக்குக் கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. குளிர் புகாராகக் கண்ணாடிகளை மறைத்தது. கார் வெப்பமூட்டியின் வெப்பத்தில் புகார் விலகி கார்க் கண்ணாடிகள் தெளிவாகும் வரை மிகுந்த சிரமப் பட்டாள்.

தெளிந்த கார் கண்ணாடிகளினூடே பனிப்பூக்கள் பூத்த மரங்கள் மிகவும் அழகாகத் தெரிந்தன. அவளின் மனமோ ஊரிலிருக்கும் அப்பாவிடம் தாவி மெல்லிய சோகத்துள் ஆழ்ந்து போனது. ஸ்மார்ட்டாக காரின் பனியைத் தேய்த்துக் கொண்டிருந்த றூடியையும் முந்தநாள் தபாலில் வந்த புகைப்படத்தில் இருந்த அப்பாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததின் விளைவே லலிதாவின் சோகம்.

லலிதாவின் அப்பாவும் ஒரு காலத்தில் ஸ்மார்ட்டாகவும், குறும்பாகவும் இருந்தவர்தான். பெண்களைப் பெற்றதால் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் வாழ்க்கையை அநுபவிப்பதில் ஆசை கொண்டவர். ஆனால் பெண்களின் பிறப்பே இன்னொருவனின் கையில் ஒப்படைக்கப் படுவதற்காகத்தான் என்று கருதும் சமுதாயத்தில், அவர் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது அவர் செய்த தப்பு. அதற்குத் தண்டனையாக நகைக்கும், வீடு, வாசல்களுக்குமாய் பெண்களைப் பெற்ற எல்லா அப்பாமார்களையும் போல அவரும் தன்னையும், தன் தனித்துவமான ஆசைகளையும் கரைத்துக் கொண்டது நியம்.

இந்த நியந்தான் லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சமுதாயக் கோட்பாடுகளில் நெரிபட்டவர்கள் பெண்கள் மட்டுந்தானா? பெண்களைப் பெற்றவர்களுந்தான். சமூகத்தின் மேல் அவளுக்குக் கோபந்தான் ஏற்பட்டது.

அவளுக்கு இப்போதும் நல்ல ஞாபகம். அப்பாவுக்கு சுற்றுலா என்றால் நிறையவே பிடிக்கும். இலங்கையின் எல்லாப் பாகங்களையும் மனைவி, குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட்ட அவருக்கு இந்தியாவின் மகாபலிபுரம் போன்ற அழகிய இடங்களையும் மனைவி குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட வேண்டுமென்ற அளவிலாத ஆசை.

அப்போ அவருக்கு சம்பளத்துடன் ´அரியஸ்´ ஆக ஒரு தொகைப் பணம் வந்திருந்தது. அப்பணத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதாகத்தான் அவர் எண்ணியிருந்தார். அரியஸ் பணத்துடன் வீட்டுக்கு வரும் போதே அவர் முகத்தில் உற்சாகம் பொங்கியிருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தான் லலிதா பூப்பெய்த வேண்டுமா? வீட்டிலே நடந்த ஒரு சந்தோசத்தில் இன்னொரு சந்தோசம் கரைந்து விட்டது.

பெரியவளாகி நிற்கும் லலிதாவையும், தொடர்ந்து வரிசையில் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளையும் காட்டி நகை, நட்டு, காணி, வீடு என்று அவர்களுக்குச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி லலிதாவின் அம்மா, அப்பாவின் சுற்றுலா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

அம்மாவின் விருப்பப்படி அப்பணத்தில் லலிதாவுக்குக் கல்லட்டியலும், மிகுதியில் தங்கைமாருக்குச் சில நகைகளும் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.

சில நாட்களில் அப்பாவின் அரியஸ் பணம் சிவப்பு வெள்ளைக் கற்களுடன் அழகிய அட்டியலாகவும், சங்கிலிகளாகவும், காப்புகளாகவும் மாறிவிட்டது.

லலிதா அட்டியலைப் போட்டுக் காட்டிய போது அப்பாவின் முகத்திலும் பூரிப்புத் தெரிந்தது. ஆனாலும் அப்பாவின் சுற்றுலா ஆசை அட்டியலுக்குள் தொலைந்து விட்டதே என்ற கவலை லலிதாவைப் பற்றிக் கொண்டது.

தொடர்ந்த காலங்களிலும் அப்பாவுக்கு வரும் பணமெல்லாம் காணி வாங்குவதில், வீடு கட்டுவதில், நகைகளில், ஒவ்வொரு பெண்ணினதும் கல்யாணச் செலவில் என்று கரைந்தது. வேலையும், ஊதியமும் கடமையாய், கட்டாயமாய் என்றாகி விட்டது.

லலிதா வேலை செய்யத் தொடங்கி வெகு நேரமாகியும் அப்பாவின் நினைவாகவே இருந்தாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையிலும் அவளின் நினைவுகளின் ஓரத்தில் சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது. ´நாங்களாவது பக்கத்தில் இருந்திருந்தால் அப்பா பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். பொல்லாத நாட்டுப் பிரச்சனை அதற்குக் கூட வழியில்லாது செய்து விட்டதே.´ பேதலித்த மனதுடன் காரை விட்டு இறங்கினாள்.

முன்னாலிருந்த சிறுவருக்கான விளையாட்டு மைதானத்தில் குளிரையும் பொருட்படுத்தாது சில ஜேர்மனியக் குழந்தைகள் பனிகளைச் சேர்த்து பெரிய ஐஸ் மனிதன் ஒன்றைச் செய்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் சில குழந்தைகள் ஐஸ் கட்டிகளை உருட்டி, உருட்டி ஒருவரையொருவர் கலைத்துக் கலைத்து எறிந்தார்கள்.

அவர்களின் விளையாட்டில் லலிதா தன்னை மறந்து லயித்திருந்த அந்தக் கணத்தில் ஒரு சிறிய ஐஸ்கட்டி சில்லென்று அவளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பினாள். றூடி ஒரு பெரிய ஐஸ் உருண்டையுடன் நின்று, லலிதாவுக்கு எறியப் போவது போலப் பாவனை காட்டினார்.

Nein… Nein… (நோ.. நோ..) லலிதா சிரித்தவாறு கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அவளுக்குள் இருந்த இறுக்கம் கலைந்து மீண்டும் அவள் மனசு இலேசாகியிருந்தது. அந்த உஷாருடன் வீட்டுக்குள் மீண்டும் பம்பரமாய் சுழலத் தொடங்கினாள்.

சந்திரவதனா

30.1.2000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *