வேஷங்கள்

காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

எப்படி அவனால் முடிந்தது! எப்படித் துணிந்து சொன்னான்? காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருட தாம்பத்திய வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி, அவர்களின் செல்ல மகள். நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்! நடித்தானா..? காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

“உமா, உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்.” காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி “சொல்லுங்கோ” என்றாள் மிக அன்பாக.

“நீர், அழக் கூடாது.”

“சும்மா சொல்லுங்கோ.”

சில கணங்கள் நிதானித்து “உமா, நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்.”

“ஏன்..?” மிகவும் திடுக்கிட்டவளாய்.

“ஒவ்வொரு நாளும் பயணம் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு.”

“இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது?”

“பார்த்தீரே! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை.”

“…….” சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

“உமா, உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி எண்ட செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது?”

“ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே, பாவம்… அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?”

“அது வந்து… உமா, அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து…”

“வந்து…”

“தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள்.”

“அதுக்கு..!”

“அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்.”

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

“யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி… உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு… இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே… எல்லா வசதியளும் இருக்குத்தானே.”

“இதெல்லாம் நீங்களாகுமோ? நீங்கள் அவளை விரும்பிறிங்களோ?”

“இல்லை… இல்லை… அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை.”

“நானும் அம்மா, அப்பா, சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும், நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?” இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

“ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை, இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது!”

“நோ… என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது.”

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு “பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்.” என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, “இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ… நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை.”

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. என்னவெல்லாம் இவன் சொல்கிறான் என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா, என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலையோடு ´ரூர்´ என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

“நீங்கள், சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்..?” ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

“இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பந்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை.”

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. “ஓ…” வென்று குழறினாள்.

“ஏனப்பா, இப்பிடிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தரக் குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!”

“ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ?”

வார்த்தைகள் மிகச் சூடாக, அநாகரிகமாக நீண்டு… ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.

கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள், காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள். சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து “தூங்குகிறாயா?” என்று சைகை காட்டிச் சினக்க, சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி, சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதைக் கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். ´கடவுளே..! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்..!´ முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள், சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், அவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப, அவள் இரத்தமும், சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ் வாகனங்களும், அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும், வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும், மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு ஜேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். ´தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது´ என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு, பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து… சாக்கில் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைப்பிண்டம் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய், தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டைச் சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான்.

அழுவாரைப் போல இருந்து “அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் ஜேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம், ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்…” அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

சந்திரவதனா
07.03.2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *