பிரியமானவர்களோ அன்றில் முக்கியமான வர்களாக நாம் கருதுபவர்களோ எம்மைக் கண்டு கொள்ளாதிருப்பதை விட, எம் மேல் பிரியமானவர் களையோ அன்றில் எம்மை நேசிப்பவர்களையோ நாம் கண்டு கொள்ளாமலோ கருத்தில் கொள்ளா மலோ விட்டு விடுவது கவலைக்குரியது. அவர்களை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு வாழ்வில் வந்து விடாமலே போய் விடலாம்.
அப்படித்தான் அவனும்! நினைவுகளில் மட்டும் அவ்வப்போது வந்து முகம் காட்டிப் போவான்.
அவனை நான் முதன் முறையாக மணியம் ரியூற்ரறியில்தான் பார்த்தேன். அது 1975ம் ஆண்டில் ஒரு நாள். அப்போது நான் க.பொ.த உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று இரசாயனவியல் வகுப்பு முடிந்து, பிரயோககணித மாஸ்டருக்காக ரியூற்ரறியின் பின்புற முற்றத்தில் நாங்கள் காத்திருந் தோம். மாணவிகளுக்கென அந்த இடந்தான் ஒதுக் கப் பட்டிருந்தது. ஆண்மாணவர்கள் வழமை போல `கேற்´ றோடு கூடிய முன் முற்றத்தில் நின்றார்கள்.
சிரிப்பும், கதையும் என அவ்விடம் கலகலப்பா
கவே இருந்தது. அப்போதுதான் பானுமதியை அவன் தூது விட்டிருந்தான். காதல் தூது.
பானு என்னருகில் வந்து “நிமிர்ந்து பார். அந்த யன்னலோடை நிற்கிறானே அவனைப் பார்” என்று குசுகுசுத்தாள். பார்த்தேன்.
யன்னல் கம்பிகளினூடு அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றான். வெள்ளையாக, மற்றவர்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தான்.
அந்தப் பார்வையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, ஏக்கம், இறைஞ்சல், காதல். சட்டெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.
“அவனுக்கென்ன இப்ப..?”
“அவனுக்கு உன்னிலை விருப்பமாம்”சொல்லச் சொன்னவன்’
“விருப்பமோ?”
ஏற்கெனவே ஒருத்தனை விரும்பியிருப்பதால் அப்போது நான் எனது வீட்டில் ஒரு குற்றவாளி யாகவே நடமாடிக் கொண்டிருந்தேன். “அவனை மறந்து விடு“ என்பதுதான் அனேகமான பொழுது களில் எனது வீட்டில் ஒலிக்கும் திருமந்திரம். என்னோடு பேசும் போதெல்லாம் அம்மாவின் கண்கள் கரைந்து தாரை தாரையாக ஓடும். மூன்று தங்கைமாருக்கு அக்காவாக இருந்துகொண்டு எப்படி என்னால் காதலிக்க முடிந்தது என்பது வீட்டில் யாருக்குமே புரியாத புதிர்.
நான் செய்து கொண்டிருக்கும் இம் மாபெரும் குற்றத்தால் எங்கள் வீடு ஒரு சோகவனமாக மாறிக் கொண்டிருந்தது. அம்மா அடிக்கடி சாப்பாட்டை மறந்து, கண்களை மேலே சொருகி யோசித்துக் கொண்டேயிருந்தா. அம்மம்மா, என்னைக் காணும் போதெல்லாம் அவனை மறந்து விடுவதாக தனது தலையலடித்துச் சத்தியம் செய்யச் சொல்லிக் கேட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டா. அப்பா, அவ்வப்போது தந்தியடித்து வரவழைக்கப் பட்டார். கடிதம் பரிமாறிய நாட்களில் செய்தி கிடைத்து அண்ணன் என் மண்டை பிளக்காத குறையாகக் குட்டினான். எங்கு போனாலும் துணைக்குத் தம்பி கூடவே வந்தான். வீட்டுக்கு வெளியிலே வந்தால் ஊரவர்கள் “பதின்னாலு, பதினைஞ்சு வயசிலை காதல் ஒரு கேடோ” என்பது போலப் பார்த்தார்கள். நண்பர்கள், பாடசாலைத் தோழிகள் கூட “மறந்து விடு” என்று புத்திமதி சொன்னார்கள்.
இந்த நிலையில் இன்னொரு காதல் தூதா?
மீண்டும் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றான். சிவந்த அழகான உதடுகள். ஊடுருவிப் பார்க்கும் கண்கள். அழகாகத் தான் இருந்தான். ஆனாலும் ஏனோ அவன் மேல் எனக்கு எந்த ஈடுபாடும் வரவேயில்லை.
அதன் பின்னும் சில தடவைகள் தூதுகள் வந்தன. என்னால் அவனை விரும்பவே முடிய வில்லை. அவன் என்ன படிக்கிறான் என்றோ அவனுக்கு என்ன பெயரென்றோ கூட நான் அறிய முனையவில்லை. அப்படியே காலங்கள் கரைந்தன. என் தோழிகள் இன்னும் படித்துக் கொண்டே இருக்க நான் காதலித்தவனையே திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியும் இருந்தேன். எனது உலகம் குழந்தைகள், கணவர் என்ற வட்டத்துக்குள் குறுகிப் போயிருந்தது.
அப்போதுதான் எனது மைத்துனர்கள் எல்லோரும் வெளிநாடு சென்று விட எனது புகுந்த வீட்டில் எனது மாமிக்குத் துணையாக மாமியோடு போய் வாழ வேண்டிய தேவை வந்தது.
போய், சில நாட்களிலேயே அந்த அவனின் தரிசனம் எனக்குக் கிடைத்தது. கையில் ஓரிரு கொப்பி, புத்தகங்களுடன் அவன் அவ்வப்போது சைக்கிளில் மாமி வீட்டைத் தாண்டிப் போவான். மாமி வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளித்தான் அவன் இருந்தான். மாமி குடும்பத்துக்கு கொஞ்சம் சொந்தமாகவும் இருந்தான். மாமி அவனைப் பார்த்துச் சிரிப்பா. ஓரிரு கதைகள் அவனோடு கதைப்பா. எப்போதோ ஒரு நாள் எனக்குக் காதல் தூது அனுப்பியவன் என்ற நினைவு உள்ளிருந்தாலும் நான் எந்த உணர்வையும் வெளி யில் காட்டிக் கொள்வதில்லை. மருந்துக்குக் கூட அவனைப் பார்த்துச் சிரிப்பதுவுமில்லை. பேசாமல் ஓரமாய் நின்றிருப்பேன். விழிகள் மட்டும் எப்போ தாவது எதேச்சையாக மோதிக் கொள்ளும்.
பிறத்தி ஆண்களைப் பார்த்துச் சிரிக்கக்
கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அப்போது எல்லாப் பெண்களிடமும் இருந்திருக்கும். அதுதான் நான் ஒரு தடவை கூட அவனைப் பார்த்து ஒரு புன்முறுவல் கூட பூக்காது விட்டதற்கான காரண மாக இருக்கலாம்.
காலம் எது பற்றியும் யோசிப்பதில்லை. அது தன்பாட்டில் ஓடிக் கொண்டேயிருந்தது. எனது மகள் கிண்டர்கார்டின் போகத் தொடங்கினாள். பெரும்பாலான நாட்களில் மகளைக் கிண்டர் கார்டனில் இருந்து கூட்டிவர நான் தான் சமைத்த குறையிலே சேலையைச் சுற்றிக் கொண்டு ஓடிப் போக வேண்டியிருக்கும். கிராமக்கோட்டு வைரவர் கோயிலடியில் இருந்து கிராமக்கோட்டுச் சந்தி தாண்டி, வடமாராட்சிப் பாடசாலை ஒழுங்கை வரை நடந்து போய் அவளைக் கூட்டி வருவதற்கிடையில் நிறையப் பேரையும் நிறைய விடயங்களையும் வழி வழியே காண்பேன்.
வைரவர் கோவிலில் மணி கிணுகிணுக்கும். வாசலிலோ அன்றில் கோயிலின் முன் முற்றத்தில் விறாந்தையை ஒட்டியோ கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும். யாராவது கும்பிட்டுக் கொண்டிருப் பார்கள். அல்லது சப்பாணியில் தியானத்தில் இருப்பார்கள். இரத்தினக்காவோ, கமலாக்காவோ, லலியக்காவோ தத்தமது வீட்டு வாசல்களில் நின்று என்னைக் குசலம் விசாரிப்பார்கள். பாலாம்பிகை யக்கா வீதியைக் கடந்து எங்காவது போய்க் கொண் டிருப்பா. பேரூந்து, சைக்கிள்கள் என்று எதிரும் புதிரு மாக வாகனங்கள் விரையும். கிராமக்கோட்டுச் சந்தியில் இருக்கும் பெரியகல்லில் பெரும்பாலும் சாராயக் கடை துரைசிங்கத்தின் மகன் பொடி அமர்ந்திருப்பான். பலர் சந்தியில் குறுக்கும் நெடுக்குமாக விரைந்து கொண்டேயிருப்பார்கள். இத்தனை களேபரங்களுக்கும் நடுவில் எப்போதும் அவனும் வருவான்.
எதிர்ப்புறத்திலிருந்து சைக்கிளில் வருவான். அவன் கையில் உள்ள புத்தகமோ, கொப்பியோ அவன் படிக்கிறான் என்றே என்னை எண்ண வைக்கும். ஒரு சில சமயங்களில் அவன் என்னைத் தாண்டும் பொழுது விழிகள் ஒரு கணம், ஒரேயொரு கணம் மோதிக் கொள்ளும்.
அவன் எதேச்சையாகத்தான் ஒவ்வொரு முறையும் வந்தானா அல்லது நான் மகளைக் கூட்டப் போகும் நேரம் பார்த்து வந்தானா என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அவன் கண்டிப்பாக வருவான், என்னைத் தாண்டிப் போவான் என்பது மட்டும் ஒரு கட்டத்துக்குப் பிறகு எனக்குத் தெரிந்திருந்தது.
தொடர்ந்த காலங்களில் போர், புலம்பெயர்வு என்று வாழ்க்கையே மாறிப் போனது. அப்போ தெல்லாம் அவன் என் நினைவில் வந்தானா இல்லையா என்பதே நினைவில் இல்லை.
வருடங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கு மேல் ஓடிய பின், ஒரு நாள் இலண்டனில் இருக்கும் எனது தங்கையுடன் தொலைபேசியில் பல விதமான கதைகளையும் கதைத்துக் கொண்டிருந்தேன். அப் போது தான் “எங்கட ஊர்தான், நான் முந்தியிருந்த இடத்திலை எனது பிளாற்றிலை, பக்கத்து றூமிலை தான் ஒருவன் இருந்தவன். மாமிக்குச் சொந்தமாம். திடீரென்று செத்திட்டானாம்” என்றாள் தங்கை.
யாரென நான் துருவித் துருவி விசாரித்த போது தான் அது அவன் என்று தெரிய வந்தது. மனம் ஒரு முறை துணுக்குற்றது. அவன் திருமணமே செய்து கொள்ளவில்லையாம்.
ஏன்..?
அதன் பின் சிலகாலம் அவனைப் பற்றிய நினைவுகள் என்னுள் ஓடிக் கொண்டேயிருந்தன. ஏன், ஒரு தரம் கூட நான் அவனுடனோ அல்லது அவன் என்னுடனோ பேசவேயில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. ஒரு சகோதரன் போல நினைத்தாவது பேசியிருக்கலாமே! அல்லது ஒரு நண்பன் என்ற ரீதியிலாவது அவனைப் பார்த்துப் புன்னகைத்திருக்கலாமே!
மனசு அங்கலாய்த்தது.
காலம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அவனை என் நினைவுகளிலிருந்து அத்தனை சுலபமாகத் தூக்கியெறிந்து விட முடியவில்லை. எப்போதும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது அவன் என் நினைவுகளில் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறான் -19.01.2015