மூன்று சுற்று

நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா “குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா” என்று.

அப்போது எனக்கு பத்து வயது இருக்கலாம். அல்லது அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் என்னைக் கடைக்கு அனுப்புவதை மெதுமெதுவாகக் குறைக்கும் வயதாகிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நல்ல ஞாபகம்.

அப்போதெல்லாம் அம்மா ஒரு வேலை சொன்னால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பழக்கம் எங்களிடம் இருந்ததே இல்லை. கூப்பிட்டால் “ஓம், என்னம்மா?” என்று கேட்பதும் ஒரு வேலை சொன்னால் உடனே அதைச் செய்ய முனைவதும் இயல்பாகவே இருந்தன.

அதிலும் வெளியில் போய் செய்யும் ஒரு வேலையென்றால், அதை நான் மிகச் சந்தோசமாகவே செய்வேன். அப்பாச்சி வீட்டுக்கு ஏதாவது கொண்டு போய்க் கொடுப்பது, வட்டப்பாதிக்கு பிண்ணாக்கு வாங்கப் போவது, புதியாக்கணக்கனுக்கு நல்லெண்ணெய் வாங்கப் போவது… என்று எதற்கு அனுப்பினாலும் எனக்குச் சந்தோசம். வழிவழியே கிளுவங்காய், மாங்காய், புளியங்காய், இலந்தைக்காய்… ஒன்றும் ஆப்பிடாவிட்டால் அண்ணாமுண்ணாப் பூ என்று எதையாவது பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அண்ணாமுண்ணாப் பூ எந்த வடிவில் இருக்கிறது! கிளிசரியாப்பூக்களெல்லாம் எப்படி இவ்வளவு அழகாக இருக்கின்றன! யார் யார் வீட்டுக்குள் எல்லாம் அழகழகான பூச்செடிகள் இருக்கின்றன… என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு போவது பெரும் ஆனந்தம்.

அம்மா சொல்லித்தான் அனுப்புவா “உந்த வேலி, விராயளோடை நிண்டு, கரட்டி, ஓணானோடையெல்லாம் கதைச்சுக் கொண்டிராமல், கொண்டு போய்க் குடுத்திட்டு ஓடிவா” என்று.

அம்மா சொல்லும் போது என் மனதிலும் ‘போறதும் வாறதும்‘ தான் இருக்கும். வீதியில் இறங்கிய உடனேயே மனசு பறக்கும். மூளை எல்லாவற்றையும் மறந்திடும். அதுவும் அப்பாச்சி வீட்டுக்குப் போகும் வழியில் வேலி முழுக்கக் கிளுவங்காய். அதில் இரண்டையாவது பிடுங்கி வாயில் போடாமல் அங்காலே போக மனசு வராது. அப்பாச்சி வீட்டுக்குள் போனால் அங்கு அப்பாவின் தம்பி பரமகுருக்குஞ்சையா நிறையப்புத்தகங்கள் வைத்திருப்பார். அதில் ஒன்றையாவது எடுத்து, ஒரு கதையையாவது வாசிக்காமல் திரும்பவும் மனசு விடாது. மேசையிலேயே ஏறியிருந்து வாசிப்பேன்.

அப்பாச்சிக்கு என்னைப் பற்றித் தெரியும். “ஓடு பிள்ளை, அங்கை கொம்மா பேசப் போறா” என்பா.

அதுக்குப் பிறகுதான் சட்டென்று விழித்தது போல எழுந்து, மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடி, வீடு வந்து சேர்வேன்.

இன்று அம்மா அப்படியொன்றும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன். ‘பொறுப்பாய் இருப்பேன்‘ என்று நினைத்தாவோ என்னவோ. “சங்கக்கடை பூட்டீடும். கெதியாப்போய் வாங்கிக்கொண்டு வா” என்று மட்டும் சொன்னா.

“சைக்கிள்ளை போயிட்டு வாறனம்மா” என்றேன்

“நாலெட்டு நடக்கிற கடைக்கு என்னத்துக்குச் சைக்கிள்?” என்று சொன்ன அம்மாவுக்கு, ‘சைக்கிள் ஓடுவதென்றால் எனக்கு நல்ல விருப்பம்‘ என்பது தெரியும். “சரி எண்ணையோடை சேர்ந்து கவிண்டு விழாமல், கவனமாப் போட்டு வா” என்றா.

உண்மையிலேயே எங்கள் சங்கக்கடை எங்கள் வீட்டிலிருந்து நாலெட்டு நடை தூரத்தில்தான் இருக்கிறது. எங்கள் வீட்டைத் தாண்டினால் இருபக்கமும் ஒவ்வொரு ஒழுங்கைகள் பிரிகின்றன. அதையடுத்து இடது பக்கம் உபதபாற்கந்தோரும் வலது பக்கம் பாம்புப் புற்றுகள் நிறைந்த ஒரு பெரிய புளியங்காணியும் இருக்கின்றன. அந்த ஒரேயொரு புளியங்காணியைத் தாண்டினால் ஆத்தியடிச்சந்தி வந்து விடும். வலது பக்கம் திரும்பினால் உடனே சங்கக்கடை. இதற்குச் சைக்கிள் தேவையே இல்லை.

ஆனாலும் சைக்கிளில்தான் போனேன்.

ஆத்தியடிச் சந்தி வரை மண்ணெய் வாங்குவது மட்டுந்தான் என் மூளைக்குள் இருந்தது. சந்தியடிக்கு வந்த போதுதான் எல்லாம் மாறியது. நேரே ஆத்தியடி வெட்டையில் வாசுகியும் சிவாவும் சைக்கிள்களுடன் நின்றார்கள். அது ஆத்தியடிக்கோயில் வீதி. ஏன் அதை வெட்டை என்று சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் அப்போதெல்லாம் சிந்தித்ததும் இல்லை.

வாசுகியும் சிவாவும் என்னை நோக்கி வர நான் அவர்களை நோக்கி சைக்கிளை உழக்கினேன்.

இருவரும் எங்கள் ஊர். எங்கள் சொந்தம். அதற்கு மேலால் வாசுகி என் பாடசாலை நண்பி. பெரும்பாலான பொழுதுகளில் இருவரும் ஒன்றாகவே பாடசாலைக்குப் போய் ஒன்றாகவே திரும்புவோம். சிவாவின் வீடு எங்கள் வீதியிலேயே நாலைந்து வீடுகள் தள்ளி உள்ளது.

விடலைப்பெண்கள் மூவர். எங்களையே மறந்து கொஞ்ச நேரம் கதைத்தோம். பிறகு கோயிலைச்சுற்றி ஆத்தியடி வீதியில் மூன்று சுற்று சைக்கிள்களில் சுற்றி வருவதாகத் தீர்மானித்தோம்.

சைக்கிளில்தானே! உடனே முடிந்து விடும். மனசு சொல்லியது. தொடங்கினோம். மனசு ஆனந்தத்தில் பறந்தது. மூன்று சுற்று பத்து, பதினைந்து இருபதாகப் போய்க் கொண்டிருந்தது. முதலில் கோயிலோடு சேர்ந்து சின்னச்சுற்றாகச் சுற்றிக் கொண்டிருந்த நாங்கள் இப்போது கோயில் வீதியின் வடக்கு எல்லைவரைக்கும் – தெற்குஎல்லைவரைக்குமாய் எங்கள் சுற்றுக்களைப் படுபயங்கரமாகப் பெருப்பித்திருந்தோம். பொழுது மம்மலாகியதோ இருட்டிக் கொண்டு வந்ததோ எங்களுக்குத் தெரியவேயில்லை.

அப்படியே ஒருதரம் தெற்கு வீதிக்கு வந்த போது சந்தியடியில் தம்பி பார்த்திபன் நிற்கிறான். ‘ஏன் இவன் வந்திருக்கிறான்!?‘ சட்டென்று உறைத்தது. சைக்கிளை நிற்பாட்டி அவனிடம் போன போது “அம்மா மண்ணெண்ணெய்க்கு காத்துக் கொண்டிருக்கிறா. உடனை கூட்டிக் கொண்டு வரச்சொன்னவ” என்றான்.

எல்லாம் போச்சு! சங்கக்கடையை எட்டிப் பார்த்தேன். பூட்டி விட்டது. பயத்துடன் தம்பியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனேன்.

குக்கரைப் பற்ற வைக்க முடியாத அம்மா ஈரவிறகைப் பற்ற வைப்பதற்காக புகைந்து கொண்டிருக்கும் அடுப்பை ஊதிக் கொண்டிருந்தா. ‘மண்ணெய் வேண்டுப்படவில்லை‘ என்றதும் திரும்பி ஒரு பார்வை என்னைப் பார்த்தா. ‘அந்தப் பார்வை ஒன்றே போதும்‘ பேசவோ, அடிக்கவோ தேவையில்லை.

நான் குற்ற உணர்வில் குறுகிப் போனேன்.

அதற்குப் பிறகெல்லாம் நான் வெளியில் போகும் போது, வேலி, விராய், கரட்டி, ஓணான் இவைகளோடு வாசுகி, சிவா அவர்களையும் சேர்த்து என்னை எச்சரித்து அனுப்புவதற்கு அம்மா மறந்ததில்லை.

சந்திரவதனா
10.11.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *