பெண் அடங்க வேண்டுமா?

அடங்குதல் என்பது அன்பு, பாசம், நட்பு, மரியாதை இவைகளுக்குள் அடங்கும் ஒரு விடயம். அதை ஆண் – பெண் என்ற இரு பால்களுக்கிடையில் அடக்க நினைப்பது அபத்தம்.

அன்பின் முன்னோ பாசத்தின் முன்னோ ‘அடங்கு’ என்றோ அல்லது ‘வளைந்து கொடு’ என்றோ யாருமே யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அன்பின் நெகிழ்ச்சியில் பாசத்தின் இறுக்கத்தில் அது தானே வரும். அதே போலத்தான் நட்பு என்ற தூய்மையான உறவின் போதும் மனங்கள் நட்புக்காய் அடங்கும். அல்லது வளைந்து கொடுக்கும்.

அதை விடுத்து ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்குதல் என்ற தேவை ஒரு பெண்ணுக்கு நிட்சயமாக இல்லை. ஏன் ஒரு பெண் அடங்க வேண்டும்? என்ன காரணத்துக்காக அடங்க வேண்டும்?

ஆணின் அடக்குதலும் பெண்ணின் அடங்குதலும் அல்ல வாழ்க்கை. ஆணோ  பெண்ணோ மனசு ஒருமித்து அன்பிலே ஒருவருக்கொருவர் அடங்கி, வளைந்து இன்புற்று வாழ்தலே வாழ்க்கை. இங்கே பெண் மட்டும் அடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏன்? அதுவும் ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்க வேண்டும் என்று ஏன் எல்லோரும் எதிர்பார்க்க வேண்டும்.

பெண்கள் அடங்கினால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்பதுதான் இன்று பலரது கருத்தாக இருக்கிறது. உண்மையில் இப்படி நினைப்பதே தப்பானது. ஒரு ஆண் தன் மனைவியை அடக்கும் போது அவள் அடங்கி ஒடுங்கி இருந்து விட்டால் அதற்கு அர்த்தம் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதா? நிட்சயமாக இல்லை. அவள் தன் இயலாமையில் தனக்குள்ளே அழுது புலம்பி, எண்ணுவதை எடுத்தியம்ப முடியாமல் மனசுக்குள் குமுறி, ஒரு அழுத்தமான அமைதியற்ற மனதுடன்தான் வாழ்கிறாள். அதை ஆண்கள் அவள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்றோ அவர்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்றோ சொல்ல முடியாது.

ஆண் சொன்னால் பெண் கேட்க வேண்டும். ஆணின் அதிகாரத்தில் பெண் அடங்கித்தான் போக வேண்டும். அதுதான் பெண்ணுக்கு அழகு. அதில்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்று எப்படி ஒரு ஆணே தீர்மானிக்க முடியும். அவளுக்கு எது சந்தோஷம், எது துன்பம் என்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து ஆண்கள் தமது சந்தோசம் ஒன்றையே கருத்தில் கொண்டு அவளுக்கு இதுதான் சந்தோசம் என்று தாங்களே தீர்மானிப்பது கொடுமையானது.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையெல்லாம் காலங்காலமாய் பெண்களுக்கே உரியதென்று வகுக்கப்பட்டிருக்கும் போது இன்றைய புலம்பெயர் பெண்கள் அந்த வரையறைகளிலிருந்து வழுவிக் கொண்டிருக்கிறார் கள் என்பது சில ஆண்களது ஆதங்கம்.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூதுவிட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.

இன்னும் எத்தனையோ விடயங்கள் காலத்துக் கேற்ப மாறும்போது இப்படியான பெண்களை அடக்கும் விடயங்களை மட்டும் ஆண்கள் இழுத்துப் பிடித்து வைத் திருப்பதன் முழுநோக்கமும்தான் என்ன?

ஒன்று சுயநலம். தமது சொகுசான வாழ்க்கை இதனால் பறிக்கப்பட்டு விடுமே என்ற சுயநல எண்ணம். அடுத்தது பயம். பெண்களின் வலிமையில் பயம். பெண்களின் புத்திசாலித்தனத்தில் பயம். எங்கே பெண்கள் தங்களை விஞ்சி விடுவார்களோ என்ற பயம்.

பெண்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள், வலிமையில்லாதவர்கள், புத்தியில்லாதவர்கள் என்றும் அவர்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்றும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்களால் சொல்லிக் கொண்டிருக்க முடியும்! அதைக் கேட் டுக் கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களால் மனதுக்குள் குமுறிக் கொண்டு வெளியில் பதுமைகள் போல நடிக்க முடியும்?

ஓரு பெண் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, எது அவளால் முடியும், எது அவளால் முடியாது என்பதான அவள் சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களுமே முதலில் சமூகத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. அடுத்து அவளது தந்தையால், சகோதரனால், கணவனால், மகனால்… என்று இப்படித்தான் இதுவரை காலமும் தீர்மானிக்கப் பட்டு வந்தன. இன்னும் அந்த நிலை தொடர வேண்டுமென்று நினைப்பவர்களே, அடக்கம் ஒடுக்கம் பற்றி பெண்களுடன் சம்பந்தப்படுத்தி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து வயதானதும் படலை தாண்ட விடாமல் பெண்களை அடைத்த காலமும் உண்டு. அது சற்று மாறி பாடசாலை வீடு என்று ஆன காலமும் உண்டு. அங்கும் எத்தனை கட்டுப்பாடுகள். பெண்பிள்ளைகளுக்கென்றே சில விளையாட்டுக்கள். அவை வீட்டுக்குள் இருந்து கயிறடித்தல், கொக்கான் வெட்டுதல், கல்லுச் சுண்டுதல்… இப்படித்தான் இருந்தன. இல்லாவிட்டால் பாடசாலையில் கூடைப்பந்து, ஓட்டம் போன்ற மென்மையான விளையாட்டுக்கள். கால்பந்தோ தற்காப்புக்கு ஏற்ற கராத்தே யூடோ போன்ற விளையாட்டுக்களோ பெண்களுக்குத் தேவையில்லையென்று விட்டு விட்டார்கள். ஏனெனில் பெண்கள் மென்மையானவர்களாம்.

இவர்களது இந்தச் செயற்பாட்டைப் பார்க்கும் போது பெண்களை வலிமையற்றவர்களாக ஆக்க வேண்டுமென்று திட்டமிட்டே அவர்கள் இதைச் செய்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காலங்காலமாக வந்த இந்தச் சதிச் செயலின் கள்ளத்தனம் புரியாமலே எமது முந்தைய பெண்கள் தமது வாழ்வை, தம்மோடு சேர்த்துப் பிணைக்கப் பட்ட பெண்அடிமைச் சங்கிலிகளுக்குள் நெரிபட்ட படியே கழித்துக் களைத்து வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலே மடிந்தும் விட்டார்கள்

இன்றும் இன்னும் எத்தனையோ பெண்கள் சமூகத்துக்காக வாழ்கிறார்கள். அல்லது ஆண்கள் சமூகம் கலாச்சாரம், பண்பாடு என்ற போலி ஆயதங்களை வைத்து பெண்களை மிரட்டி ஒடுக்கி அடக்கி வைத்திருக் கிறார்கள்.

இன்னுமொரு கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாய் அமைவது. இது கூட ஒரு இயலாமையின் வெளிப்பாடு தான். சிறையில் இருந்து வெளிவர முடியாத ஒருவருக்கு வெளியில் திரிபவரைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற சின்னத்தனமான பொறாமைதான் அது.

எல்லோரும் நினைப்பது போல் பெண்கள் வலிமையிலோ, புத்தியிலோ, வீரத்திலோ குறைந்தவர்களல்லர்.  இன்னும் சொல்லப் போனால் ஆண்களை விட பெண்களுக்குத்தான் மனவலிமை அதிகம். பெண்களை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமையற்றவர்கள் என்று கூறி அடக்க நினைப்பது ஆண்களினது சுயநல சிந்தையுடனான சாதுர்யம்.

அடங்குதல் என்பது பெண்களுக்கு மட்டுமானது என முத்திரை குத்தக்கூடிய பால் சம்பந்தப்பட்ட ஒரு விடயமே அல்ல. அது அன்பு, பாசம், நட்பு என்பவற்றுள் அடங்கும் ஒரு விடயம்.

-சந்திரவதனா
15.07.1999

  • ஐபிசி தமிழ் வானொலி – அக்னி (19.08.1999)
  • ஊடறு (வைகாசி, 2002)

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *