புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகி விட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் பெண்களின் பல்வேறு வளர்ச்சிப்பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப்படிகளிலும் இந்த உளவியற்பிரச்சனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

இங்கு நான் இன்னும் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியற் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் பிறந்ததிலிருந்து ஒரே மாதிரி உண்டு, உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், அதாவது பெண்குழந்தைக்குப் பத்துவயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண்குழந்தையின் மனதிலும் விசனங்கள் ஏற்படத் தொடங்கி விடுகின்றன. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகிறது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய், நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளையின் நிலை அப்படியல்ல. ஏதாவதொரு காரணத்துக்காக பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்..? ஏதற்கு..? என்ற கேள்விகளால் அவள் குடைந்தெடுக்கப் படுவாள்.

‘பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம்’ என்ற பெயரில் எத்தனையோ அநாவசியத் தடைகள் போடப்படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதிந்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்தச் சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால், இந்தச் சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்க மில்லாதவள் என்றோ ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும் அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய்விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகிறார்கள். இது போன்ற இன்னும் சில காரணங்களும் அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. அவர்களின் இந்த முடிவினால் பெண் பிள்ளைகளின் முன் அவர்கள் கட்டியெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீம்பும் வீறாப்பும் ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதே நேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதைச் செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள்தான் எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியற் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் எல்லாவற்றையும் ஐரோப்பிய ஸ்ரைலில் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண்பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டும் என்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் போத்தலும் கிளாசுமாக இருந்து, அப்பா நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா, அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார். அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய் விடுவார் கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக் காட்சியில் என்ன பார்க்கிறார்களோ, அதையே பார்த்து, அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ, அதையே கேட்டு… இதுதான் பத்துவயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா அல்லது அந்த வயதில் அவளின் மனதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் போடும் தீனியா?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்களது வாழ்க்கை என்றில்லை. அது போக, பெண்பிள்ளைகள் மட்டும்தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டும் என்றும் இல்லை.

பெண்பிள்ளைகள் வெளி உலகத்தையும் பார்க்க வேண்டும். இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள் ´இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும்தான் இருக்கும்` என்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த ´தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே` என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்
பிள்ளைகளைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள்.

இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண்பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு. பெற்றோர்களினதும் சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண்பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும் வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப்படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய மருத்துவர்களும் அமெரிக்க மருத்துவர்களும் ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விடப் புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப்பெண்கள் தோள்மூட்டு வலியாலும் மைக்ரேன் எனப்படும் கபாலஇடியாலும் அதிகமாக அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்துள்ளார்கள். இவைகளுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் மன அழுத்தமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இப்படி மனஅழுத்தத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உடல் ரீதியான அவஸ்தைகள் மட்டுமல்ல, அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதுகளின் பின்புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் உளவியல் நோயாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமலிருப்பது சற்று கவலைக்குரிய விடயமே!

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். பெண் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக அடக்கி வளர்ப்பது ஒன்றுதான், அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை.

பெண்பிள்ளைகளுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விடவேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விடவேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து

“நீ பெண், அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்றோ
“நீ பெண், அதனால் இப்படித்தான் பேச வேண்டும்” என்றோ அல்லது
“நீ பெண், அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்” என்றோ

வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப் படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அதுபற்றிப் பேசக்கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை, தாமே உளவியல் நோயாளியாக்கும் அவலவேலையைச் செய்யாமல் அன்புடன், நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி  ‘நானிருக்கிறேன் உனக்கு’ என்ற நம்பிக்கையை அவளது மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான், அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து, உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப்படும் பிள்ளைகளை விட, உங்கள்பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்து உணரும் தன்மை அதிகம் கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும்.

அது பிள்ளைகளின் மனதில் ஒருவித சந்தோஷத்தையும் பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால், இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

-சந்திரவதனா
2000

  • ஐபிசி தமிழ் வானொலி – அக்கினி (2001)
  • ஈழமுரசு – பாரிஸ் (27.12.2001-02.01.2002)
  • வடலி – இலண்டன் (புரட்டாதி, 2004)
  • வெற்றிமணி (ஆடி, 2007)
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ… (June, 2019 – நூலகத்தில்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *