எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங் இன் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது மரணத்தைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்தார்.
எடித் லாங்கைப் போலவே ஹைடமேரி(77)யும் தனியாக வாழ்ந்து வந்த விதவைதான். வோக்கர் (Walker) இல்லாமல் அவரால் நடமாட முடியாது. அவரின் நண்பராக இருந்தவர் ஹூர்ட் (89). அவரும் தனிமையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொள்வார்கள்.
ஹைடமேரி இருந்த குடியிருப்பின் வெளிவாசல் கதவின் பூட்டு இரண்டு வாரங்களாகப் பழுதாகி இருந்தது. அதைத் திருத்துவதற்கு, அடுத்தநாளான வியாழக்கிழமையே வேலையாள் வருவதற்கு குடியிருப்பின் மேற்பார்வையாளர் ஏற்பாடு செய்திருந்தார். வாசல் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாருக்கும் கதவின் பூட்டு உடைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை. அப்படி யாரேனும் உள்ளே வந்தால் கூட, அவரவர்கள் தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
ஹைடமேரியின் மூப்பு, மற்றும் தனிமை காரணமாக அவரது வைத்தியரிடம் இருந்து, ஒரு சாதனம் அவருக்கு கிடைத்திருந்தது. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதில் உள்ள பட்டனை அழுத்தினால், உடனடியாக அவசர மருத்துவர் தொடர்பு கொள்வார். அவரது மகள்மாரும் ஒவ்வொரு நாளும் வந்து அவரைப் பார்த்து அவருக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.
அன்று புதன் கிழமை. ஹைடமேரியை அன்றைய மாலையில் சந்திப்பதாக ஹூர்ட் சொல்லி இருந்தார். நண்பர் வருவார், அவருடன் மாலையில் கோப்பி அருந்தலாம், நிறையப் பேசலாம் என்று கணக்குப் போட்ட ஹைடமேரி, அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள Nah&Gut கடைக்கு, மதியம் சென்று, இரண்டு துண்டு கேக்குகளும் ஒரு பத்திரிகையும் கிறிஸ்மஸ் தாத்தா வடிவில் உள்ள சொக்கிலேற் ஒன்றும் வாங்கிக் கொண்டு வந்தார்.
ஆனால், ஹைடமேரி வாங்கிய அந்த இரண்டு கேக் துண்டுகளையும் அன்று யாருமே சாப்பிடவில்லை. சமையலறை மேசையில் கேக்குகள் மட்டுமல்ல, கோப்பி போடுவதற்குத் தயாராக கோப்பி பாட் (Coffee pad) போடப்பட்டிருந்த கோப்பி மெசினும் இருந்தது. அவரது நண்பரான ஹூர்ட் உடனான சந்திப்பு அன்று மட்டுமல்ல என்றும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.
ஹூர்ட் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது, ஹைடமேரியின் வீட்டில் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறார். ஆனால், ஹைடமேரியின் குளியலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும் கிறிஸ்மஸ் காலம் என்பதாலும் யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கலாம் என்று நினைத்து க் கொண்டு, அவர் தன் வீட்டுக்குப் போய்விட்டார்.
ஹூர்ட், தனது வயது மூப்புக் காரணமாக அதிகளவு வெளியே போவதில்லை. ஹைடமேரியுடன்தான் அவர் பழக்கங்களை வைத்திருந்தார். வியாழக்கிழமையும் ஹைடமேரியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நெருங்குவதால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பு இருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஹூர்ட்டும் அந்த நினைப்பில் பேசாமல் இருந்து விட்டார்.
வெள்ளிக்கிழமை காலையில் அன்றைய தினசரியைப் பார்த்த ஹூர்ட்டுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரை அப்படி அதிர்ச்சியாக்கிய செய்தி, புதன்கிழமை மாலை ஹைடமேரி கொலை செய்யப்பட்ட செய்திதான்.
‘Baseball துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’
தொடர்ச்சி
புதனும் புதிரும் – 1
புதனும் புதிரும் – 2
புதனும் புதிரும் – 3
புதனும் புதிரும் – 4
புதனும் புதிரும் – 5
புதனும் புதிரும் – 6
புதனும் புதிரும் – 7