தேவை ஒரு கண்ணாடி

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள்.

‘வடிவு, நீங்கள் நல்ல வடிவு’

‘உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ’

‘உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு’

‘உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்’

‘மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ’

‘அக்கா, ஐ லவ் யூ”

இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன்.

சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான். அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது.

வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். ‘உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை” என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார். நான் நினைப்பூட்டினால் ‘காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்’ என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார். அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் ‘நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?’ என்பார்.

நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது.

யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும் ஓடி வந்து யாரென்று பார்த்தேன்.

நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும் வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று…

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்?

இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட. அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து „வணக்கம்“ என்றேன்.

அங்கிருந்தும் „வணக்கம்“ வந்தது

„நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“

„ஓமோம், அவரேதான்“

„உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை“

அவர் பதிலுக்குச் சிரித்தார்.

„எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி, போன் பண்ணினனீங்கள்?“

„நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்“

„ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“

„ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்“

எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது… குழம்பினேன்.

எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இப்போது தெளிவாகச் சொன்னார் „உங்களோடு தங்க வேண்டும்“

எனக்கு எதுவோ புரிந்தது.

„ஓ… அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை“

„ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார்.

„எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்“

„அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே“

„இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது“

„ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்“

நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன். இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது.

„உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன்

நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச் சொன்னார்.

„என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“

„அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்“

„அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?

„அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்“ இழுத்தார்.

„போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை“

இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார்.

„நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன்“ என்றேன்.

அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது.

„நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன்.

„கட்டீட்டன்“

„குழந்தையள்..?“

„இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்“

„அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“

„நீங்கள் வடிவு…“ இழுத்தார்

„உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“

„ஓம்“ ஐடி சொன்னார்.

பார்த்தேன். Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள்.

‘ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…“

„ஹி.. ஹி.. ஹி..“

அதன் பிறகு ‘நான் வடிவோ இல்லையோ?’ என்ற கேள்வியோ, ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை. `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது.

சந்திரவதனா
29.04.2020

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

4 Comments on “தேவை ஒரு கண்ணாடி”

  1. பல்வேறுகாரணங்களுக்காய் சலனம் அடையாத மனிதர்கள் குறைவு, உங்களுக்கு அறிந்த இந்த வில்லனாக மாறிய கதாநாயகன் தான் சற்று அதிக தூரம் போகிறேன் என்பதைக்கூட அவரது சலனம் உணர்ந்துகொள்ள விடவில்லை, சூர்ப்பனகை யின் சலனம் இராமயணமாகியது, சலனத்தால் தன் தொழில் இழந்தவர் பலர், கோவலன், சுந்தரர் இன்னும் பல, இந்த கருவுக்கு ஏதோவொரு சிறு உண்மை சம்பவ பின்னனி உங்களுக்கோ/ உங்களுக்கு அறிந்தவர்களுக்கோ இருக்குமென நம்பகிறேன்

  2. உங்கள் எழுத்து என்னைக் கவர்ந்தது, அழகாக இருக்கிறது. இப்படி எல்லாம், சொல்லலாம் என்று பார்த்தால், இனி அதுக்கும் ஆப்பு வைத்த டாக்டர். சுதர்சனை என்ன செய்வது.

Leave a Reply to Malini Sivagnanasundaram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *