எமது வாழ்வில் நல்லவிதமாகவோ அன்றில் கெட்டவிதமாகவோ மனதில் தடம்பதித்துப் போனவர் கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடியோ அன்றில் எப்போதாவதோ எமது நினைவுக்குள் வந்து முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் இவனும் ஒருவன்.
இவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், இவன் வகுப்பு நடைபெறும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா அல்லது எப்போதும் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.
இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு “ஹலோ”வோ அல்லது ஒரு “வணக்கமோ” அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்), அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். அதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.
நிட்சயம், அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்
அவனது பெயரை, ஆங்கில வகுப்பில் ஆங்கில
ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறிடமோ தெரியவில்லை. ஆனால் எங்கேயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்ரறியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.
Tuitoryயில் ஒரு பாடம் முடிந்ததும் வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.
இது ஒரு புறம் இருக்க, எங்களுக்கு பத்தாம் வகுப்புப்பரீட்சை (O/L) நெருங்கிக் கொண்டிருந்தது.
பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள். “ஆழ்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது” என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்… என்று தொடர்ந்து “என்னை மறந்து விடாதே…” என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள். நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி நீட்டி வாழ்த்துக்களையும் கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சகமாணவிகளிடந்தான். மருந்துக்குக்கூட சக மாணவன்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இருக்கவில்லை.
அன்று Chemistry வகுப்பு முடிய ஐந்து நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து… மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.
எல்லா மாணவிகளையும் மட்டுமல்லாது Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்…` அது எங்கேயென்றோ, யார் கைக்குப் போயிருக்குமென்றோ யாருக்குமே தெரியவில்லை. “பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை” சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர்.
பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக் களும் வாழ்த்துகளும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான்.
என்ன செய்வது..?
ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொரு வரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும் யார் யார் என்னென்னவெல்லாம் கிறுக்கியிருப்பார்களோ என்ற குழப்பமும்.
ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதி யிருந்தார். அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டிய படியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.
அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது இவனாக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத் தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.
ஆனால் எனது பத்தாம் வகுப்புப் பரீட்சை
முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம்வகுப்பில் அதே Tuitoryயில் போய் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை.
“நீயா எழுதினாய்?” என்றோ, அல்லது “ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?” என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய் விட்டான்.
அந்த Autographம், இந்திய இராணுவம் எனது தம்பியைத் தேடி வந்து அட்டகாசம் புரிந்த ஒரு பொழுதில் எமது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப் பட்டு விட்டது.
ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும் அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.
-7.11.2005