‘அக்கா, அக்கா…’
மெல்லிய, இனிய அந்தக் குரல் மணிமேகலையினுடையதுதான்.
நான் அவசரமாய் எழுந்து எனது அறை மேசையில் ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த நீள் சதுரத் தட்டை (TRAY) எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
என்னவனும், குழந்தைகளும் இன்னும் கட்டில்களிலேயே. மணிமேகலை வர முன் ஆயத்தமாகி விட வேண்டுமென்பதால் நான் அரை மணி முன்பதாகவே எழுந்து எமது அறையிலிருந்து எட்டு அறைகள் தள்ளியிருக்கும் குளியலறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி வந்து விட்டேன். அதிகாலையில் வெறிச்சோடிக் கிடக்கும் ஐந்தாவது மாடியின் அந்த நீண்ட கொரிடோரில் தனியாக நடந்து போய் வரும் போது சற்றுப் பயமாகத்தான் இருக்கும். குளியலறை இன்னும் அதீத பயத்தைத் தரும்.
அதற்குள்ளே ஒரே நேரத்தில் ஆறுபேர் குளிக்கக் கூடியதாக ஆறு சவர்களும், 12 பேர் முகம் கழுவக் கூடியதாக 12 சிங்குகளும் உள்ளன. அந்தப் பெரிய குளியல் அறையில் அந்த அதிகாலையில் நான் மட்டும் நின்று முகம் கழுவும் போது ஏதோ ஒரு அசாதாரணத்தில் உடல் சில்லிடும். மூச்சைப் பிடித்துக் கொண்டு அவசரமாய் முகத்தைக் கழுவிக் கொண்டு ஓடி வந்து விடுவேன். அது மே மாதம். வசந்தகாலம். ஆனாலும் எனக்குக் குளிர்ந்தது. என்னவனும், என் குழந்தைகளும் என்னருகிலேயே இருந்தாலும் மனசு அமைதி கொள்ள மறுத்து அலைந்து கொண்டிருந்தது. என்னைப் பெற்றவர்கள், எனது உடன் பிறப்புகள் அத்தனை பேரையும் விட்டு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி விட்டிருந்தன. அகதி அந்தஸ்து இன்னும் தரப்படாவிட்டாலும் நான் இப்போது ஐரோப்பிய அகதி.
ஜேர்மனியின் ஸ்வல்பாஹ் நகரில் அழகாக வீற்றிருக்கும் அந்தப் பெரிய அகதி முகாம் முன்னர் ஒரு அரண்மனையாக இருந்திருக்க வேண்டும். பென்னாம் பெரிய வளாகத்தில், காவல் அரண்களும், பல அடுக்கு மாடிகளும், சுற்றி வளையும் பாதுகாப்புப் பாதைகளும், மேடைகளும் என்று பரந்து விரிந்திருந்த அந்தக் கோட்டை அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல அகதிகளால் நிறைந்திருந்தது. அவர்களுள் குழந்தைகளும், பெரியவர்களுமாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்தவர்களும் இருந்தார்கள். அகதிகளுக்கு உதவுவதற்கென்றே அங்கு பல சமூகநல உதவிகளில் அக்கறையுள்ளவர்கள் சிரித்த முகங்களோடும், கனிவான பார்வைகளோடும் திரிந்தார்கள். அலுவலக அறைகளில் அமர்ந்திருந்து உதவினார்கள். தெரியாத பாஷையில் தடுமாறும் ஒவ்வொருவரோடும் சைகைகளாலும், வார்த்தைகளாலும் பிரயத்தனங்கள் செய்து பரிவோடு பேசினார்கள்.
இத்தனை பேரில் யாரேனும் ஒருவரேனும் அந்த அதிகாலையில் பல் துலக்குவதற்காகவோ அன்றிக் குளிப்பதற்காகவோ அந்தக் குளியலறைப் பக்கம் வந்து நான் காண்பதில்லை. இலங்கையர்கள் எமக்கு காலை எழுந்ததும் பல் துலக்கி முகம் கழுவுவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஐரோப்பியருக்கோ அன்றி அங்கு அகதிகளாக வந்தேறியவர்களுக்கோ அதிகாலைப் பல்துலக்கல் என்பது அர்த்தமற்ற விடயம் போன்றது. காலை உணவுக்குப் பின்னரே அவர்கள் பல் துலக்குவார்கள். சிலர் அப்போது கூட இல்லை. சூயிங்கத்தை மென்று மென்றே பல் துலக்காமல் தவிர்ப்பார்கள்.
மணிமேகலை புகைப்படத்தில் மட்டுமே பார்த்த ஆடவன் ஒருவனை கணவனாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். ஒன்றரை வருடப் பிரிவுக்குப் பின் எனது கணவரைச் சந்திக்க இருந்த எனது எதிர்பார்ப்புகளுக்கும், என்றைக்குமே காணாத ஒருவனை மணாளனாக்கப் போகும் அவளது எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் கண்டிப்பாக நிறைய வித்தியாசங்கள் இருந்திருக்கும். ஆனாலும் அவளுக்கும் எனக்கும் இடையில் எப்படியோ ஒருவித இனிமையான நட்பு உருவாகியிருந்தது. அவள் அவளுக்குக் கணவனாகப் போபவனின் அக்கா சாம்பவியோடுதான் பயணித்திருந்தாள். சாம்பவி அதிகம் கதைக்க மாட்டாள். அவளது கணவனும் எனது கணவரைப் போல ஜேர்மனிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டிருந்தது.
நானும், மணிமேகலையும் ஆளுக்கொரு தட்டோடு ஐந்தாவது மாடியில் உள்ள அந்தக் கொரிடோரில் நடந்து மூன்று அறைகள் தள்ளியுள்ள ராசாத்தியின் அறைக்கதவைத் தட்டினோம். அவளும் ஏற்கெனவே ஆயத்தமாகி இருந்து தட்டோடு வெளியில் வந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவளது கணவருக்கும் எனது கணவரைப் போலவே அங்கு வர அனுமதியில்லை. ஆனாலும் வந்திருந்தார்.
இன்னும் சில அறைகளையும், கீழிறங்கும் மாடிப்படியையும் தாண்டி ஜெயந்தியின் அறையைத் தட்டினோம். ஜெயந்தி தட்டுடன் ஓடி வந்தாள். அவள் கணவனுடன் சேர்ந்தே ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். திருமணமாகி சில மாதங்கள்தான் ஓடியிருக்கின்றனவாம். கொஞ்சம் ஹனிமூன் மூட்டில்தான் அவள் எப்போதும் இருந்தாள். என்னை விட ஒரு மாதம் முதலே அவள் அந்த அகதி முகாமுக்கு வந்து விட்டாள். குறிப்பிட்ட ஒரு நகரைத் தமக்குத் தரும்படி அவளும், கணவனும் கேட்டிருந்ததால் இன்னும் அனுப்பப் படாமல் அங்கேயே இருந்தார்கள்.
பல படிகள் ஏறி இறங்கி கன்ரீனுக்குப் போய்ச் சேர்வதற்கிடையில் நானும், மணிமேகலையும், ராசாத்தியும் நிறையவே கதைத்து, வயிறு குலுங்கச் சிரித்து, சோகங்களைத் தற்காலிமாக மறந்திருந்தோம்.
கன்ரீனில் கரண்டிகளினதும், கத்திகளினதும், கோப்பைகளினதும் சத்தங்களையும் மீறிய பலமொழிகள் கலந்த கசமுசாச் சத்தம். அனேகமான வேற்று நாட்டவர்கள் சாப்பாடுகளை வாங்கி அங்கேயே இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். இலங்கையர் நாம் அப்படியல்ல. நீண்ட வரிசையில் காத்திருந்தோம்.
எங்களுக்கு முன்னால் சாந்தியின் கணவர் நின்றார். சாந்தியும் புகைப்பட நாயகனைத் தேடி வந்தவள்தான். வந்து ஒரு மாதத்துக்குள் கர்ப்பமாகி விட்டதால் மிகவும் சங்கடப் பட்டுக் கொண்டிருந்தாள். அவள் எங்களைப் போல கன்ரீனுக்கு வருவதில்லை. கணவர்தான் வந்து எடுத்துப் போவார்.
பிராங்போர்ட் விமானநிலையத்தில் வைத்தே எங்களுக்கு பாஸ் ஒன்று தந்திருந்தார்கள். ஒரு பாஸ்போர்ட்டின் அளவில் இரண்டாக மடித்த பழுப்பு நிறமான அந்தப் பேப்பர்தான் எமக்கு அப்போது எல்லாமுமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டை நீட்டும் போது அதையும் கொடுக்க வேண்டும். அதில்தான் எனக்கு எத்தனை பிள்ளைகள் என்ற விபரம் உள்ளது. அதற்கேற்பதான் சாப்பாடு, உடைகள்.. என்று எல்லா சலுகைகளும் வழங்கப் படும்.
எனது முறை வந்த போது தட்டோடு அந்தப் பாஸையும் கொடுக்க எனக்கும், மூன்று பிள்ளைகளுக்குமாக நான்கு பணிஸ்கள், நான்கு சிறிய பட்டர் துண்டுகள், நான்கு சிறிய ஜாம் பக்கற்றுகள், நான்கு சிறிய சீஸ் பக்கற்றுகள், நான்கு அப்பிள்கள், நான்கு தேநீருடானான கோப்பைகள் வைத்துத் தட்டைத் திருப்பித் தந்தார்கள். மணிமேகலை, தனதும் சாம்பவியினதும் பாஸைக் கொடுத்ததால் அவளுக்கு எல்லாவற்றிலும் இரண்டு. ராசாத்திக்கு குழந்தை சிறிது என்பதால் எல்லாவற்றிலும் ஒன்று கொடுத்து குழந்தைக்குப் பாலும் கொடுத்தார்கள். திரும்பும் போது தேநீர் தளம்பி ஊற்றுப் பட்டு விடாமல் மிகுந்த அவதானமாகத் தட்டுகளை ஏந்திக் கொண்டு திரும்பினோம்.
எனது அறைக்குள் நான் நுழைந்த போது பிள்ளைகளும், கணவரும் சாப்பிடுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். நான்கு பேருக்கான உணவுகளையும், பழங்களையும் 5 பேருமாகப் பகிர்ந்து உண்டோம்.
மதியத்துக்கும் மீண்டும் தட்டுடன் போக வேண்டும். மதிய உணவை எம்மால் சாப்பிட முடிவதில்லை. உறைப்பு, புளிப்பு.. என்று எதுவுமே இல்லாத அந்த உணவால் இந்த இரண்டு கிழமைகளிலும் பல தடவைகள் மனமும், கண்களும் கலங்கி விட்டன. ஆனாலும் கூடவே கிடைக்கும் பழங்களுக்காக அந்தச் சாப்பாடுகளை வாங்கி வந்து அரையும் குறையுமாகச் சாப்பிட்டு விட்டு எறிவோம். பிள்ளைகளும் நானும் சாப்பிட முடியாமல் படும் அவஸ்தையைப் பார்த்து விட்டு எனது கணவர் அங்குள்ள இன்னும் சில ஆண்களுடன் சில மைல்கள் நடந்து சென்று ஒரு மின்சார ஒற்றை அடுப்பும், தூளும் வாங்கி வந்தார். அது பச்சைத் தூள். ஊரில் போடுவது போல சரக்குகள் எதுவும் போடப்படாத, வறுக்கப் படாத மிளகாய்த்தூள். ராசாத்தியின் கணவரும் ஒரு ஒற்றை அடுப்பும், பிட்டு அவிப்பதற்கு ஏற்ற கண்ணுள்ள சட்டியொன்றும் வாங்கி வந்தார்.
அதன் பின் மதியம் கிடைக்கும் அவித்த அல்லது அரைப்பதமாகப் பொரித்த பெரிய இறைச்சித்துண்டுகளை தூள் போட்டு, தேங்காய்பால் இல்லாமல் மீண்டும் ஒரு முறையாகச் சமைத்தோம். சமையல் முடிந்த கையோடு மின்சார அடுப்பைக் கட்டிலுக்குக் கீழ் ஒழித்து வைத்தோம். சமைப்பது தெரிந்தால் அடுப்பையே தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
இரவில் ராசாத்தி எப்படியோ தேங்காய்ப்பூ போடாத பிட்டு அவித்து விட்டு எங்களுக்கும் கொண்டு வந்து தந்தாள். அடிக்கடி கரண்டி தேவைப்படும் போது மணிமேகலை தனது அறையிலிருந்து ஒரு எவர்சில்வர் தேக்கரண்டி கொண்டு வந்து தருவாள். பின்னர்தான் தெரிந்தது அது சாம்பவியின் கரண்டி என்பது. ஐந்தாவது கிழமை இன்னும் ஒரு வாரத்தில் எம்மை வேறொரு முகாமுக்கு அனுப்பப் போவதாக அறிவித்தார்கள். ‘போகும் போது கரண்டியை மறக்காமல் தந்திடுங்கோ’ என்று சாம்பவி இரண்டு மூன்று தடவையாக ஞாபகப் படுத்தினாள்.
ஆறாவது கிழமையில் நாங்கள் அத்தனை பேரும் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பப் பட்டோம். மணிமேகலை அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. அதே போல ராசாத்தி அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. சாந்தி இன்னுமொரு இடத்துக்கு. நானும் பிள்ளைகளும் கார்ள்ஸ்றூகே முகாமுக்கு. எனது கணவருக்கு எமக்கான பேரூந்தில் வர அனுமதி இல்லை. அதற்குப் பொறுப்பாக இருந்த பெண் பல தடவைகள் எண்ணிப் பார்த்து ஒரு ஆள் கூட இருக்கிறதே என்று குழம்பி பின் நிலைமையைப் புரிந்தவளாய் கண்டும் காணாதவள் போல் எம்மோடு பயணிக்க விட்டாள்.
ஆனாலும் கார்ள்ஸ்றூகே முகாமில் எனது கணவர் தங்குவதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. இரண்டு கிழமைகளை பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே கழித்து விட்டு எனது கணவர் ஏற்கெனவே வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரில் எமக்கெனத் தந்த வீட்டுக்கு நாம் போய்ச் சேர்ந்தோம்.
மெதுமெதுவாக அந்த வீட்டோடு பழகுவதற்குப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டு முகாம்களில் இருந்து கொண்டுவந்த பொருட்களை அடுக்கும் போதுதான் மீண்டும் அந்தக் கரண்டி என் கண்களில் தென்பட்டது. சாம்பவி அத்தனை சொல்லியும் நான் அந்தக் கரண்டியை என்னோடு கொண்டு வந்து விட்டேன். மிகுந்த சங்கடமான உணர்வு எனக்குள். அதை எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்தேன். எப்படியாவது சாம்பவியின் முகவரியைக் கண்டு பிடித்து அந்தக் கரண்டியை அனுப்பி விட வேண்டும் என்பதே என் எண்ணம். “ஜேர்மனியிலை உந்தக் கரண்டி ஒண்டும் பெரிய விசயமில்லை. உதுக்காக வீணாக் கவலைப் படாதை” என்று எனது கணவர் சில தடவைகள் சொல்லியும் என்னால் அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீளமுடியவில்லை. `அந்தக் கரண்டியை அவள் ஊரில் இருந்து கொண்டு வந்திருக்க வேண்டும். ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்க விரும்பியிருக்கிறாள்` என்பதே என் எண்ணமாக இருந்தது.
என்னோடு முகாமிலிருந்தவர்களின் முகவரிகளைக் கண்டுபிடிக்க சில முயற்சிகளும் செய்து பார்த்துத் தோற்று விட்டேன். மொழி பிரச்சனையாக இருந்ததால் நினைத்தவைகளைச் செயற்படுத்தவும் முடியாதிருந்தது. வருடங்கள் பல ஓடின. ஆனால் அவர்களில் யாரது தொடர்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு முறை வீடு மாறும் போது, பொருட்களை அடுக்கும் போது மீண்டும் அந்தக் கரண்டி என் கரங்களில் தவழ்ந்தது. அப்போதுதான் கவனித்தேன். அந்தக் கரண்டியில் Lufthansa என எழுதப் பட்டிருந்தது. அவள் Lufthansa விமானத்தில்தான் ஜேர்மனியை நோக்கிப் பயணித்ததாக மணிமேகலை சொன்னது ஞாபகத்தில் வந்தது.
இப்போது அந்தக் கரண்டி எனது சமையலறை லாச்சிக்குள் இருக்கிறது. எப்போது லாச்சியைத் திறந்தாலும் நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் அந்த முகாமுக்குப் பறந்து விடுகிறது.
சந்திரவதனா
30.09.2008
- யுகமாயினி (நவம்பர் 2008)
- அலையும் மனமும் வதியும் புலமும் (May, 2019 – நூலகத்தில்)