கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளனாக தனது பொறுப்புக்களையெல்லாம் திறம்பட ஆற்றிய அந்த வீரமறவன் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட தினம் கடந்த வருடம் மே தினம் ஆகும். 1886 ஆம் வருடம் சிக்காகோ நகர தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் உலகம் பூராவும் இன்று செங்கொடியாகப் பறப்பது போல மொறிஸ் போன்ற 1355 விடுதலைப் புலிகளும் 26000 பொதுமக்களும் சிந்திய குருதியில் இரத்தச் சிவப்பேறிய கொடியாக தியாகத்தின் சின்னமாக இன்று தமிழீழம் எங்கும் எங்கள் தேசியக் கொடியாகப் புலிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது.

கப்டன் மொறிஸ் எப்படி ஒரு போராளியானான்? 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தென்னிலங்கையில் தீயோர் இட்ட தீயின் நாக்குகள் சுவாலையாக வடிவெடுத்து தமிழர் சொத்துக்களை சாம்பல் மேடுகளுக்குச் சொந்தமாக்கின. இது வட இலங்கை வாலிபர்கள் நெஞ்சில் வெப்பக்கனலாக மூண்டெரிந்தது. இதே கலவரத்தில் தென்னிலங்கைத் தமிழர்கள் சிந்திய குருதி வட இலங்கை இளைஞர்களின் நாடி நரம்புகளில் விடுதலைத்தியாகத்திற்குச் சூடேற்றியது. போராட்டத்திற்கான இராணுவக் கட்டமைப்பு உருவானது. இந்தக் கட்டமைப்பு மொறிசையும் உள் வாங்கிக் கொண்டது.

ஒரு நாள் 1984 ஆம் ஆண்டு பருத்தித்துறை மேற்கில் உள்ள முருகையன் கோவில் அருகில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்காக சென்றியில் நின்றிருந்த மொறிசை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. இராணுவச் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறுவதே மிகப் பொருத்தமான நடவடிக்கை என்பது மொறிசுக்கு விளங்கியது. இவ்வாறான ஒரு சுற்றிவளைப்பின் போது ஒரு கெரில்லாப் போராளி தனக்கு முற்றிலும் பிரதிகூலமான நிலைமையில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதிலும் பார்க்க தப்பிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதலே அனுகூலமான இராணுவநடவடிக்கையாக இருக்கும். மொறிசின் மூளை துரிதமாகச் செயற்பட்டது. ஒரு கடிகாரத்தின் பெரிய முள் ஒரு நிமிடத்தைக் கடக்கு முன் கையில் இருந்த கிரனைட்டைக் கழற்றி இராணுவத்தினர் மீது மொறிஸ் வீசினான். கிரனைட் வீச்சால் நிலைகுலைந்த இராணுவம் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மறுதாக்குதலுக்குத் தயாராகுமுன் அந்தச் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு மொறிஸ் வெளியேறினான். அப்போது மொறிசுக்கு மார்க்கண்டேயரிலும் பார்க்க ஒரு வயது குறைவு.

இவ்வாறாகப் படிப்படியாக பல தாக்குதல்களிலும் விடுதலைப் புலிகளோடு இணைந்து ஈடுபட்ட மொறிஸ் 1986 ஆம் ஆண்டு தொண்டைமானாற்று இராணுவத்துடன் ஒரு நாள் ஒரு பெரிய மோதலில் ஈடுபட்டான். 1984 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்; அத்துலத் முதலியை, தேசிய பந்தோபஸ்து அமைச்சராக நியமித்த போது அவர் “மூன்று மாதத்தில் வடபகுதியில் அமைதியைக் கொண்டுவருவேன்“ எனச் சபதமெடுத்து இரண்டு புதிய முகாம்களை குடாநாட்டிற்குள் அமைத்தார். ஒன்று நாவற்குழியில் அமைக்கப் பட்டது. மற்றது தொண்டைமானாற்றில் அமைக்கப் பட்டது. இந்தத் தொண்டைமானாறு முகாமில் இருந்த இராணுவம் அங்கிருந்து வெளியேற முயன்ற போது அந்த இராணுவத்துடன் வீராவேசத்துடன் மோதிய விடுதலைப்புலிகளில் மொறிசும் ஒருவனாவான். இம் மோதலில் மொறிஸ் காயமுற்று விழுப்புண்களைத் தனது உடலில் சின்னமாகப் பெற்றுக் கொண்டான்.

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி நல்லூரில் இடம்பெற்ற எழுச்சி விழாவில் பேசிய விடுதலைப் புலிகளின் பிரமுகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இலங்கை அரசாங்கம் வடமராட்சி மீது நடாத்திய ஒப்றேசன் லிபறேசன் தொடர்பான விபரம் முன்கூட்டியே இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்திய றோ அதிகாரிகளோ நயவஞ்சகமாக யாழ்ப்பாணத்தின் மீதுதான் இலங்கை அரசு ஒரு பாரிய தாக்குதலை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக எமக்கு பிழையான தகவலைத் தந்து எமது போராளிகளைப் பிரிக்கச் செய்து எமது பலத்தைக் குறைத்து எதிரிகளுக்குத் துணை போனார்கள். என்று குற்றம் சாட்டினார்.

இந்தப் பாரிய நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசுக்கு இந்தியா துணை போனதன் மூலம் இலங்கை விடயங்களில் தலையிட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டது. இந்தப் பாரிய நடவடிக்கைக்கு எதிராக பல விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பங்கேற்ற மொறிஸ் தனது பங்களிப்பைச் செய்தான். இந்தத் தாக்குதலின் போதுதான் மொறிஸ் தனது உயிர் நண்பனான லெப். வீமனை(நாகராசா) இழந்து வேதனைக்குள்ளானான். ஒப்றேசன் லிபறேசன் காலத்திற்குப் பின்னர் சிங்கள இராணுவவீரனைப் போல் வேடம் போட்டு சிங்களச் சிப்பாய்களைத் தேடி அலைந்த மொறிஸ் சிறந்த கண்ணிவெடித் தாக்குதல் வீரனாக (MINES OPERATER) விளங்கினான். இதனால் M. O. என்ற கௌரவப்பெயர் இவனுக்கு வழங்கப்பட்டது“

விடுதலைப்புலிகள் 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் குடாநாட்டிற்குள் இருந்த பல மினி முகாம்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தகையதொரு மினி முகாம் தாக்குதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி மாலை 5,30 மணியளவில் பூநகரி ஒல்லாந்தர் கோட்டையினுள் தங்கியிருந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டது. இது அந்த ஆண்டில் இடம்பெற்ற எட்டாவது மினி முகாம் தாக்குதலாகும். அத்தோடு இந்தத் தாக்குதல் பல வழிகளிலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றதொரு இராணுவ நடவடிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் மூலம் எமது போராட்டத்தின் உறுதித் தன்மை இரண்டு அரசுகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது.

இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கும்படி விடுதலைப் போராட்டத் தலைவர்களை இந்தியா டில்லியில் வைத்து நெருக்குதல் செய்த வேளையில் மறுபுறம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு போராளிகள் ஆயுதங்களையும் ஒப்படைத்து போராளிகளின் கடந்தகால நடவடிக்கைகளுக்காக தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தர்மிஸ்டர் ஜே. ஆர். கூறிக்கொண்டிருந்த வேளையில் மில்லர் பாணியில் நடந்த இத் தாக்குதல் ஒரு அதிர்ச்சி வைத்தியமேயாகும்.

இத்தாக்குதலிலும் மொறிஸ் பங்கு பற்றினான். ஒரு சினைப்பர் தாக்குதல் வீரனாகப் பங்குபற்றிய மொறிஸ் எரிகாயங்களுடன் உயிர் தப்பினான். இதனால் மொறிசின் அழகிய முகத்திலும் எரிகாயத்தின் வீரவடு அவனால் பொறிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மேஜர் அசோக் உட்பட ஏழு விடுதலைப்புலிகள் தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்து வீரமரணமடைந்தனர்.

1987ஆம் ஆண்டு உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் அடிமைச்சாசனம் என்று வர்ணித்தனர். அதனைத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் நெடுமாறன் இரண்டு அரசுகளின் கூட்டு மோசடி என்றார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமுன்னர் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஈழத்திற்கு வந்திறங்கிய இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய முயன்ற போது மக்கள் இராணுவமுகாம்களுக்கு  முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து தமது தலைவனை அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்து வீதிமறியல் போராட்டம் செய்தனர்.

அடுத்ததாக தியாகி திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணா நோன்பை மேற்கொண்ட போது மக்கள் அவனது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆங்காங்கே வீதிமறியல் போராட்டம் செய்தனர். இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களின் போது எல்லாம் பருத்தித்துறைப் பகுதியில் மொறிஸ் மக்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தான்.  “போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலட்சியம் மாறாது“ என்று தலைவர் பிரபாகரன் சுதுமலையில் கூறியதற்கு ஒப்ப காலத்தேவையையொட்டி மக்களை அணிதிரட்டி மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட வெகுஜன போராட்ட வடிவங்களை அவன் மக்களோடு மக்களாக முன்னின்று திறம்பட நடத்தியுள்ளான்.  அவ்வாறான ஒரு வீதிமறியல் போராட்டம் ஒன்றில் ஒருமுறை பருத்தித்துறை வீதி வழியாக ஏகப்பட்ட கவசவாகனங்களோடு வந்த இந்திய இராணுவ  கொமாண்டர் மேஜர் அணில்ராஜ் மறிப்புப் போராட்டத்தின் போது பொதுமக்களால் திருப்பி அனுப்பப் பட்டார்.

இந்தியா விடுதலைப்புலிகள் மீது போர்தொடுத்த பின் கூடவே உண்டு உறங்கிப் பழகிய பல நண்பர்களை மொறிஸ் இழக்க வேண்டி ஏற்பட்ட போது அவன் மிகுந்த வேதனையுற்றான். ஆனால் அவர்களது அகாலமரணங்கள் அவனது உள்ளத்தில் சோர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதியையே வளர்த்தன.

போராளிகளுக்கு குழந்தைகள் மீது பிரியம் இயற்கையாகவே ஏற்படுவதுண்டு. இன்றைய குழந்தைகளின் நாளைய நல்வாழ்வுக்காகவே தமது வாழ்வைத் தியாகம் செய்பவர்கள் போராளிகள். அதே போல விடுதலைப் புலிகள் மீது குழந்தைகள் அலாதி பிரியம் வைத்து புலிமாமா என்று அழைப்பது சகஜமான விடயமாகும். தளபதி விக்டர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்ற மழலைகள் பலர். இதே போல மேஜர் அல்பேர்ட்டை ஒரு மழலைப்பட்டாளமே சுற்றி வளைத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டாடுவது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகும். அல்பேர்ட்டும் குழந்தைகளைக் குட்டிச்சாத்தான்கள் என அழைத்து மகிழ்வான். இதே போல மொறிஸ் மாமாவை குழந்தைகள் சுற்றிவளைத்துக் கொள்வதுண்டு. அவனுக்கும் குழந்தைகள் மீது அலாதி பிரியம். ஒருமுறை பருத்தித்துறைப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கும் – மொறிஸ் தலைமையிலான போராளி குழுவினருக்கும் இடையில் பலத்த மோதல் நடைபெற்ற போது ஒரு நாலு வயதுக் குழந்தை பரதன் மாமாவைக் காப்பாற்றுமாறு கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்தது. இன்னுமொரு தடவை பருத்தித்துறை – தம்பசிட்டி வீதி வழியாக மொறிஸ் தலைமியாலான போராளிக்குழுக்கள் வந்து கொண்டிருந்தனர். அதே பகுதிக்குள் இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டைக்காக வந்திருந்தனர். இதனைக் கண்ணுற்ற ஐந்துவயதுப் பிள்ளையொன்று மொறிஸ் மாமா அருகில் வந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் “மாமா ஓடி ஒளியுங்கோ. அவங்கள் வாறாங்கள்“ என்று பாசத்தோடும் பற்றோடும் பதைபதைப்போடும் சத்தம் போட்டுக் கூறியதை மொறிஸ் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வான். இவை போன்ற பல நிகழ்வுகள் மொறிஸ் குழந்தைகள் மீது பிரியத்தை வளர்த்துக் கொண்டு தானும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக இணைந்து கொண்டு குதூகலிக்கக் காரணமாயிற்று.

ஒருமுறை வடமராட்சிப் பகுதி இராணுவமுகாம் ஒன்றிலிருந்து தப்பி வந்த சீக்கியச் சிப்பாய் ஒருவன் குடிமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களிடம் தன்னை மொறிஸிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டான். அவனது கோரிக்கை நிறைவேற்றப் பட்டு அவன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டான்.

1989 மே மாதம் முதலாம் திகதி பருத்தித்துறை இராணுவமுகாம், புலோலி இராணுவமுகாம், வியாபாரி மூலை இராணுவமுகாம் என மூன்று முகாம்களிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஆத்தியடி என்ற கிராமத்தை மூன்று புறங்களாலும் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்பாவி மக்களைப் பிடித்து மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் நின்று கொண்டு இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளோடு யுத்தம் நடாத்த முற்பட்டது. மனிதக் கேடயங்களாக நிற்கும் அப்பாவி மக்களைக் காப்பாற்ற விரும்பிய கப்டன் மொறிஸ், லெப். றம்போ, போராளி சிறீ ஆகியோர் தாக்குதலைத் தவிர்க்கவே விரும்பினார்கள். ஆனால் இராணுவத்தினரின் அடாவடித்தனத்தால் போர் தொடங்கியது. மொறிஸ் குறிபார்த்து துப்பாக்கி விசையை அழுத்திய போது ஒரு இராணுவக் கப்டன் அந்த இடத்திலேயே இறந்தான். இதனால் வெறி கொண்ட மதயானைகளைப் போல் இந்திய இராணுவச் சிப்பாய்கள் கண்டபடி சுட்டுத் தள்ளினார்கள். மரங்கள், வீடுகள் எல்லாம் குண்டுகள் துளைத்த வண்ணம் இருந்தன. ஆங்காங்கே கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. பெரும் யுத்தம் ஒன்றே அங்கே நிகழ்ந்தது. ஒரு புயலினால் சீரழிக்கப் பட்ட பிரதேசம் போல் அப்பகுதி காணப்பட்டது. யுத்தம் முடிந்து திரும்பி வந்த நண்பர்கள் மொறிஸ் அண்ணாவைத் தேடினார்கள்.

மக்களும் போராளிகளும் யுத்தம் நடந்த இடத்திற்கு விரைந்து மொறிசையும் இரண்டு நண்பர்களையும் தேடினார்கள். மொறிஸ் அணிந்திருந்த கைக்கடிகாரமும் அவனது பாதணி ஒன்றுமே மொறிசைத்  தேடிய மக்கள் கண்களில் பட்டன. மொறிஸ் இறந்த இடத்தில் அவன் சிந்திய குருதியில் தோய்ந்து போயிருந்த மணலை அள்ளி மக்கள் தமது நெற்றியில் பூசிக் கொண்டனர். அவனது உடலை புலோலி இராணுவமுகாமுக்கு சிப்பாய்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

அவனது உடலை மீட்டு எடுத்து இறுதிச் சடங்குகள் செய்ய முகாமுக்குச் சென்ற மொறிசின் தாயிடம் ஒரு இராணுவக்கப்டன் பின்வருமாறு சொன்னான்

உங்கள் மகன் ஒரு சுத்த வீரன்
கண்ணியமான மக்கள் விசுவாசி
இதையிட்டு நீங்கள் பெருமையடையுங்கள்…

அவனது தாய் அடிக்கடி “நீ இராணுவத்திடம் பிடிபட்டு விடாதே“ என்று அறிவுரை கூறுவதுண்டு. இதனால் மொறிசும் தனது தாயைப்பற்றி நண்பர்களிடம் கூறிப் பெருமைப் படுவதுண்டு. தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, மண்ணுக்காக மண்ணின் விடுதலைக்காக மரணத்தைத் தழுவிய மொறிசும் மற்றும் றம்போவும் சிறீயும் போராட்ட வரலாற்றுக் களஞ்சியத்தில் புதிய அத்தியாயங்களாகியுள்ளனர்.

கப்டன் மொறிசுடன் அன்றைய தினம் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகதீசன்) போராளி வெள்ளை சிறீ (வடிவேலு சிறீதரன்) ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்கள்.

சருகு விழும்
உக்கும்
மரத்திற்கே உரமாகும்
மீண்டும்
மரம் துளிர்விடும்
மண்ணை நேசிப்பவர்களின்
மரணம்
இன்னொரு
ஜனனம்
மறந்து விட்ட
மாவீரர்களே!
உங்கள் பாதச் சுவடுகள்
சுதந்திரத்தின் படிக்கற்கள்

 

நான் என் பிள்ளையின் வித்துடலை எடுப் பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக  இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

இராணுவ சென்றிப் பொயின்ற்றுகளிலிருந்து துப்பாக்கிமுனைகள் என் பக்கம் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அடுத்து வரும் நிமிடங்களில் எதுவும் நடக்கலாமென்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னைத் தைரியமாக இயங்க வைக்கும் ஏதோ ஒரு சக்தி அப்போது என்னை ஆட்கொண்டிருந்தது. எதற்கும் முகம் கொடுக்கத் தயாராகவே நான் முகாம் நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அரைவாசித்தூரம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவக் கொமாண்டர் கள் முகாம் வாசலுக்கு வந்து, என் வருகையைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.
வாசலை அண்மித்ததும் “நான் மொறிஸின் அம்மா” என்றேன்.

அவ்வளவுதான். இராணுவக் கொமாண்டர் ஒருவர் அவசரமாக என் முன்னால் வந்து, என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று என்னை ஒரு கதிரையில் அமர்த்தினார். உடனே சுடச் சுட தேநீர் தயாரித்து வந்து எனக்குப் பரிமாறினார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் போலத் தோன்றிய மூவர் என் முன்னால் வந்து நின்று குனிந்து என்னை வணங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து,

“அம்மா… உங்கள் மகன் ஒரு பெரிய வீரன். அவனின் திறமையைக் கண்டு அவன் ஒரு வயதான பெரிய மனிதன் என்றுதான் இத்தனை நாளும் நாம் நினைத்திருந்தோம். ஆனால் அவன் வயதில்குறைந்த ஒரு இளைஞன் என்று அறியும் போது எங்களால் நம்பவே முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன். அதனால்தான் அவனை எல்லா மக்களும் நேசிக்கி றார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. இத்தனை வீரமும் துணிச்சலும் மிக்க ஒருவனைப் பிள்ளையாகப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப் படுங்கள். உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். நீங்கள் ஒரு வீரத்தாய். உங்களை நாங்கள் வணங்குகிறோம்…” என்று ஆங்கிலத்தில் கூறிய படி இரு கைகளையும் குவித்து என்னை வணங்கினார்கள்.

என்னால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை!

என் உடல் என்னையறியாமல் மெல்ல மெல்ல நடுங்கத் தொடங்கியது. அவ்வளவு நேரமும் எனக்குள் இறுகிப் போயிருந்த அத்தனை உணர்வு களும் பொங்கியெழுந்து என் கண்களைக் கண்ணீ ரால் மறைக்கத் தொடங்கியது! அந்தக் கணம் வரை நான் கட்டிக்காத்த என் தைரியம் அத்தனையும் ஒரு மேகம் நொருங்குவது போல் கீலம் கீலமாய் சிதறிப் போகத் தொடங்கியது!

நான் எழுந்து நின்றேன். பாதையைக் கண்ணீர் மறைத்தது. நான் அந்தக் கண்ணீரைத் துடைக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து என் மண்ணின் மைந்தனது வித்துடலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *