உன்னைக் கண்டு நானாட…

ன்றிரவு சப்பல் அடி. பூவரசந்தடியா, கிளிசரியாத்தடியா அல்லது வாதநாரயணித்தடியா என்பது ஞாபகத்தில் இல்லை. மெல்லிய சுள்ளிப் பச்சைத்தடி. அம்மா முதலில் ஆத்திரம் தீரு மட்டும் விளாசித் தள்ளி விட்டா. பின்னர் என்னை அடித்ததற்காகவும் நான் காதலிப்பதற்காகவும் அழுது கொண்டிருந்தா. நான் அடியின் வலியை விட அம்மாவின் அழுகையைத் தாங்க முடியாது அழுது கொண்டிருந்தேன்.

அது அர்த்த ஜாமம். அண்ணா, தம்பிமார், தங்கைமார் எல்லோரும் தூங்கி விட்டார்கள். அப்பா களனியா புகையிரதநிலையத்தில் கடமையில். பெத்தம்மா(அம்மாவின் அம்மா) மட்டும் அம்மாவுக்குத் துணையாக அல்லது என் காதலை மறக்கப் பண்ணுவதற்காக அங்கிருந்தா.

பெத்தம்மா, பாட்டாவும் நித்திரையாகிய பின் அவருக்கு இந்த விடயத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் வந்திருந்தா. அவவின் வீடு எங்கள் வீட்டின் பின்னால்தான் இருக்கிறது. பெத்தம்மா வந்த பின் அம்மா அடிக்கவில்லை.

“கடிதங்கள் வைத்திருந்தால் கொணர்ந்து

இந்த அடுப்புக்குள் போட்டு விட்டு, அவனது நினைவுகளையும் அத்தோடு கருக்கி விடு” என்று மன்றாடிக் கொண்டே இருந்தா. குசினிக்குள்தான் அந்த நாடகம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெரிய வீட்டில், குசினியை ஏன் அம்மா தேர்ந்தெடுத்தா என்பது பற்றி நான் எதுவும் சிந்திக்க வில்லை.

அது அம்மாவுக்கு நான் பொய் சொல்லத் தொடங்கிய வயது. எனது இரசாயனக்கொப்பிக்குள் அந்தக் கடிதம் இருந்தது.

வானில் முழு மதியைக் கண்டேன்

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

வான முழுமதியைப் போலே

மங்கையவள் வதனம் கண்டேன்

என்ற பாடல் வரிகளும் அதில் இருந்தன.

ஆனால் என்னிடம் எந்தக் கடிதமும் இல்லை என்று பச்சைப் பொய் சொன்னேன். கொப்பிக்கு ராதா பத்திரிகையின் நடுப்பக்கத்தைக் கவராகப் போட்டிருந்தேன். அதற்குள்தான் கடிதம் இருந்தது. அதனால் அம்மா கண்டு பிடிக்க மாட்டா என்ற அசாதரணத் துணிச்சல்.

பெத்தம்மா மிகவும் அன்பாகவும் வாஞ்சை யுடனும் கதைத்தா. எனக்கு மூன்று தங்கைமார் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினா. எங்கள் குடும்ப மானம் கப்பலேறி விடப் போகிறது என்று அழாக் குறையாகச் சொன்னா. “மறந்து விடு“ என்று கெஞ்சினா. கொண்டு வந்த கற்பூரத்தட்டைப் பற்ற வைத்து ‘இனி அவனைப் பார்க்கவோ பேசவோ மாட்டேன்’ என்று சத்தியம் செய்யச் சொன்னா. கொஞ்ச நேரம் போக தன் தலையில் அடித்துச் சத்தியம் செய்யச் சொன்னா. சத்தியத்தை மீறினால் தான் செத்து விடுவேன் என்றா.

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீயாட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

என்று அவன் வாழ்த்திய வாழ்த்து மடல் வீட்டுக்கு அஞ்சலில் வந்ததில் இருந்து ஆரம்பித்த பூகம்பம்.

அதிலும்

என்னைக் கண்டு நீயாட… என்ற வரி,

‘அவனைக் கண்டு நீயும் ஆடுகிறாயா..?‘ என்ற கேள்வியாக வீட்டில் எல்லோரையும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் அவர்கள் கோபமாகவும் வேதனையாகவும் என்னைக் கடந்து கொண்டும் கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டும் திரிந்தார்கள்.

அன்றைய இரவு என் மனம் போராடிக் கொண்டே இருந்தது. ‘அவனை மறக்க முடியுமா‘ என்று தெரியாமல் இருந்தது.

காலையில் சாப்பிடும் போது இருந்து சாப்பிட்டால் வெள்ளைச்சட்டையின் பிளீற்ஸ் குளம்பிவிடுமென்பதால் நின்றபடியே சாப்பிட்டேன். அம்மா கனக்கச் சொல்லிக் கொண்டே இருந்தா. பேசினா. தங்கைமாரை நினைக்கச் சொன்னா.

கேற்றைத் திறந்து படியில் இறங்கக் கால் வைக்கும் போது மனதுக்குள் சங்கற்பம் பூண்டேன்.

‘இனி அவனைப் பார்ப்பதில்லை. அவன் எது கேட்டாலும், என்ன எழுதினாலும் பதில் கொடுப்ப தில்லை. அவனை மறந்து விட வேண்டும்‘

காலை வீதியில் வைத்தேனோ, இல்லையோ தெரியவில்லை. என் முன்னே சைக்கிள். மெதுவாக என்னைத் தாண்டியது. அவன்தான். அவனேதான். ஒரு கணந்தான். பார்வைகள் மோதிக் கொண்டன. எனக்குள்ளே என்னவோ பாய்ந்தது. வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. கலங்கியிருந்த கண்கள் கவலைகளை மறந்தன. மனம் துள்ளியது. இன்ன தென்று சொல்ல முடியாத வார்த்தைகளற்ற உணர்வு அது.

அவன் போய் விட்டான். எனது சங்கற்பம், மனோதிடம் எல்லாம் அவனோடு கூடப் போய் விட்டன. சுற்றிக் கொண்டு ஏதாவது ஒரு வழியால் திரும்ப வருகிறானா என்று வழி வழியே  திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது அவன் வரவில்லை.

ஆனால் பாடசாலைக்கு ஒரு பெண் மூலம் ஒரு கொப்பி வந்தது. கொப்பியின் உள்ளே இரு பக்கங்கள் ஒட்டப்பட்டு அதற்குள் கடிதம் இருந்தது.

கரைபோட முடியாத புது வெள்ளையாடை

கலைமானும் அறியாத விழி வண்ண யாடை..

என்ற பாடல் வரிகளுடன்.

எனது மனவுறுதி தவிடு பொடியானது. நான் அவனது அந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதத் தொடங்கினேன்.

18.10.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *