இரயில் பயணங்களில்…

ப்போது எனக்கு 21வயது நிரம்பி யிருந்தது. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவனிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. ஆனாலும் கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமை யான இயல்புகள் என்னையும் விட்டுவைக்கவில்லை. சத்தியிலும் குமட்டலிலும் அதனாலான அசெளகரி யங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச்சேலை உடுத்தியிருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற் சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.

என் கணவரின் சிபாரிசு இல்லாமலே எனக்கு உதவத் தயாராக இருந்தான் அந்த இளைஞன். ரெயின் வெளிக்கிட்டு, என்னை விட்டு என் கணவர் பிரிந்த கையோடு அந்த இளைஞன் அவசரமாக எழுந்து, என் இருக்கைக்கு வந்து விட்டான்.

“என்ன வேணும்?” அவன் கேட்ட விதமே எனக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

சடாரென்று எழுந்து இன்னொரு இருக்கைக்கு நகர்ந்தேன். வெறுமையாக இருந்த அந்த இருக்கையில் இருந்து அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். “வந்து இங்கே இரேன்” என்பது போலச் சைகை செய்தான். நான் அவசரமாகத் திரும்பி விட்டேன்.

இறாகம வரை பிரச்சனைகள் எதுவும் இல்லை. தனியாகத்தான் இருந்தேன். அவன் வந்து என் பக்கலில் அமர்ந்து விடுவானோ என்ற பயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. நான் எதிர்பாராத ஒரு கணத்தில் இறாகம புகையிரதநிலையத்தில், என் பக்கலில் இன்னொரு இளைஞன் வந்து அமர்ந்தான். நான் யன்னல் பக்கமாக நன்கு தள்ளி அமர்ந்தேன். அவன் என் பக்கம் திரும்பி மெதுவாகச் சிரித்தான். சாந்தமாக இருந்தான். முதலாமவன் மேல் இருந்த பயம் இவன் மேல் எனக்கு வரவில்லை. ஆனாலும் சங்கடமாக இருந்தது.

வேறெங்காவது இடமிருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன.

இரண்டாமவன் என்னோடு மெதுமெதுவாகப் பேச ஆரம்பித்தான். நான் கஸ்டப்பட்டுப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். தனக்குச் சாப்பாடு வாங்கப் போகும் போது எனக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டுமா எனக் கேட்டான். வயிற்றுக்குமட்டலுக்கு ஏதாவது சாப்பிட்டால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஒரு சான்ட்விச் வாங்கும் படி சொல்லிக் காசு கொடுத்தேன். காசை வேண்ட மறுத்தான். “காசு வேண்டாவிட்டால் எனக்கு சான்ட்விச் வேண்டாம்” என்றேன். காசை வாங்கிக் கொண்டு போய், சான்ட்விச் வாங்கிக் கொண்டு வந்தான். அவன் மேல் கொஞ்சம் நன்றியாயிருந்தது.

இப்போது அவன் என்னுடன் சரளமாகப் பேசத் தொடங்கியிருந்தான். பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்றான். சாதாரணமாகக் கதைத்துக் கொண்டு போனவன் திடீரென “ஐ லவ் யூ” என்றான். “நான் திருமணமானவள்” என்றேன். அவன் நம்பவில்லை. சுத்தமாக அவன் நம்பவில்லை. “நான் கர்ப்பமாகக் கூட இருக்கிறேன்” என்றேன். அவன் நம்பவே இல்லை. நான் முழுப்பொய் சொல்வதாகவே அவன் நம்பினான். என்னைத் தன்னுடன் வவுனியாவுக்கு வந்து விடும்படி கேட்டான். நான் சம்மதித்தால் என் வீட்டுக்கு வரவும் தயாராக இருந்தான். தனது முகவரியைத் தருகிறேன் என்றான். “வேண்டாம்” என்று சொல்லி விட்டேன்.

வவுனியா புகையிரத நிலையம் வந்ததும் ரெயினை விட்டு இறங்க மனமின்றி அப்படியே இருந்தான்.  என்னுடன்  யாழ்ப்பாணத்துக்கு  வரப்

போகிறேன் என்றான்.

அவனது செய்கை சற்றுக் குழந்தைப் பிள்ளைத் தனமாகவே இருந்தது. “போய் உங்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருங்கள்” என் றேன். அரைமனதோடு இறங்கிச் சென்றான்.

வவுனியாவில் ரெயினால் இறங்கும்வரை அவன் வரம்பு மீறவுமில்லை. நான் கர்ப்பமாயிருக் கிறேன் என்பதை நம்பவுமில்லை.

இப்போது அவன் ஒரு பட்டதாரியாக இருக்க லாம். அல்லது எமது நாட்டின் போர் அவனை அடித்துப் புரட்டி அகதியாக்கி இருக்கலாம். அல்லது இன்னும் ஏதாவது நடந்திருக்கலாம். எதுவாயினும்…

அவனை என் நினைவுகளிலிருந்து முற்று முழுதாகத் தூக்கியெறிந்து விட முடியவில்லை. எப்போதாவது வந்து முகம் காட்டிப் போகிறான்.

-27.5.2004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *