பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

விமலன்

ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.

பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000
ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை

பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.

வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி விட முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக பிறேமராஜன் மாஸ்டரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன

1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார். நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப் படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை, யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.

1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.

1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.

அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல் என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.

அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்சண்யன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.

அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்
இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.

மற்றையவர் கப்டன் மயூரன்
இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு “மயூரன் பதுங்கிச் சுடும் படையணி” என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.

– விமலன்

(விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் சுரங்கத்தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் தாகூரினதும் சகோதரன்])

6 Comments on “பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…”

  1. நண்பா பிரேமா!
    காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கின்றேன்.
    இன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகின்றது…

    கொழும்பில் ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சியும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விசேட பயிற்சியும் பெற்றுக்கொள்வதற்காக அங்கு நீ தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தபடியால் நாம் நண்பர்களானோம்.

    நீ இலகுவில் மறக்க முடியாத ஒரு பிறவி. ஆனால் நான் மறந்துவிட்டேன் அல்லவா. நான் உன்னை நண்பன் என்று அழைக்கவே சங்கடப் படுகின்றேன். எளிதில் மறக்க முடியாத உன்னை மறந்து விட்டேன். அதற்காகத்தான்…

    இந்தப் பதிவைப் பார்த்தும் எனக்கு அன்றிருந்த பயம் வந்தது. இங்கு ‘ரை’ கட்டிய படத்தில் பார்ப்பது போலவே என்னை நீ அடிக்கடி பார்ப்பாய். சில வினாடிகளில் சிரித்து விடுவாய். இந்தக் ‘கடும்’ பார்வையோடு உதட்டில் சின்னதான ஒரு புன்னகை தோன்றும்.

    நகைச் சுவை உனக்கு நன்றாவே வரும். அதே போன்று அதை விளங்கிக் கொள்வதிலும் ‘வித்தகன்’ நீ. அந்த நாட்களில் நீ ஒரு அழகன், அறிவாளி, ஆங்கிலத்தை இலக்கணத்தின் அழகோடு இணைத்துத்தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்று நீ எப்போதும் அக்கறையோடு செயற்படுவாய். அந்த அக்கறையும் விருப்பமும் தான் பிற்காலத்தில் உன்ளை ஒரு ஆங்கில ஆசிரியனாக்கியிருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்.

    உன் குடும்பம், அது ஒரு அழகிய ‘கோலத்தை’ ஒத்தது. இன்று இந்தப் பதிவைத் தந்த உன் சகோதரி (சந்திரா இரவீந்திரன்) பினனாளில் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளர். அவரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். அவர் தானே இன்று உன்னை எனக்கு ஞாபகப் படுத்தியவர். அதற்காவும்… நீ வேண்டிக கொண்டதாகச் சொல்லி எனது திருநெல்வேலி இல்லத்திற்கு சிரித்த முகத்துடனும் உற்சாக மிகுந்த மனதுடனும் வந்திருந்தார். அதற்காகவும் தான்… இப்போது இலண்டன் மாநகரில் வாழ்ந்தாலும், உலகெங்கும் வாழும் எழுத்தாளர்களும் அங்குள்ள எழுத்தாளர்களும் புடைசூழ இருந்து இலக்கியம் பேசுகின்றார். அதனைப் படைக்கவும் செய்கின்றார். உனது தந்தை இலங்கை புகையிர திணைக்களத்தில் ஒரு அதிகாரி . அப்போது களனிய புகையிரத நிலையத்தின் பிரதம பொறுப்பதிகாரி. சிங்கள ஊழியர்களை தனது நிர்வாகத்தின் கீழ்வைத்துக் கொண்டு அவர்களைக் கைகட்டிய வண்ணம் பணிவுடன் வேலை செய்ய வைத்த ‘விண்ணன்’ தியாகராஜா. அம்மா ஒரு தங்கக் கோவில். முகம் ஓரளவு ஞாபகத்திற்கு வருகின்றது. அவரின் கையால் உன் வீட்டில் நான் ‘விருந்து’ உண்டேன். அதனை எப்படி மறக்க முடியும்.

    1990 ல் நான் இந்த குளிர் தேசத்திற்கு வருவதற்கு முன்னல் உன்னை ஓரிரு தடவைகள் சந்தித்துள்ளேன் தானே. அப்போது நீ ஆங்கில ஆசிரியர் ஆகி விட்டாய். ஆனால் எப்போது தியாக உணர்வுடன் “போராளி’ ஆனாய் என்பது ஞாபகம் இல்லை.

    1987ல் இந்திய இராணுவம் எம் மண்ணைச் சூழ்ந்து கொள்ள நான் மின்சார அதிகாரியாக பணியாற்றிய பிரதேசத்தில் உன் தோழர்கள் பலரைச் ச்நதித்து உரையாடினேன். அவ்வேளையிலும் அவர்கள் ‘மொறி’ஸ்’ என்னும் உன் அன்புத் தம்பியின தீரச் செயல்கள் பற்றியெல்லாம் புகழ்ந்துரைப்பார்கள். அப்போது அவனது வீரம், தீரம், தியாகம் ஆகியவைப் பற்றி பகிர்ந்து கொள்வர்கள். ஒரு நேரத்தில் வடமராட்சியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உன் தம்பி மொறிஸ் ஒரு நாள் கொலலப்பட்டதாக அறிந்;து வேதனையுடன் ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தேன்.

    மனதில் ஒரு புள்ளியில் ஆரம்பமான எனது இந்தப் பதிவு மிகவும் வேகமாகவே செல்கிறது. மனதில் வருவதை எல்லாம் உடனேயே இங்கு பதிவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் எனது நண்பன் உனக்காக, சமாளித்த வண்ணம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    இவ்வளவு அற்புதமான மனிதனான உன்னை இழந்தது எமக்கு மட்டுமல்ல, உந்தன் உறவுகள், அன்பு மனைவி, ஆசைப்பிள்ளைகள் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் எங்கள் மண்ணுக்கும் எவ்வளவு இழப்பு என்று தான். நான் இப்போது யோசிக்கின்றேன்.

    உன் செல்லத் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு போராளியாகவே வாழ்ந்து தன் வாழ்வைத் தியாகம் செய்தானா? உன் பிள்ளைகள் கூட அப்படித்தானே வாழ்ந்து தியாகங்களைச் செய்தார்கள்.

    எனக்கு கைகள் கூசுகின்றன நண்பா. இதை எழுதும் போது… உன்னை நினைக்கும் போது… நாங்கள் என்ன செய்தோம் இந்த மண்ணுக்கு.. எம்மையே கேட்க வேண்டும் போல உள்ளது. நிறையவே தகவல்களைத் தரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால் நீயோ… எம்மைவிட எவ்வளவோ உயரத்தில் வாசம் செய்கின்றாய்.

    இன்று ‘விமலன்’ என்னும் ஒரு அன்புள்ளத்தின் பதிவை உனது சகோதரி சந்திரா, தனது முகநூலில் காட்சிப்படுத்தியதால் நீ என் முன்னால் வந்து நின்றாய். இன்னும் ஒரு தடவை ‘ரை’ கட்டியுள்ள உன் படத்தைப் பார்க்கின்றேன். என்னை நாற்பது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுவது போன்று உணர்கின்றேன். அருகில் உள்ள உன் படத்திற்கு நான் மரியாதை செய்கின்றேன். அது வன்னி மண்ணின் வனப்பகுதி ஒன்றில் நீ ஓரு கம்பீரமான போராளியாக அமர்ந்திருக்கின்றாய். அதையும் மனதிற்குள் எடுத்துக் கொள்கின்றேன்.

    இனிவரும் நாட்கள் எனக்கு உன் போன்ற சில நண்பர்களுடன், பழைய நினைவுகளோடு பயணம் செய்யும் நாட்களாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்.

    அன்புடன்
    லோகன் அண்ணா
    13.05.2020

  2. வீரவணக்கங்கள் தேசியத்தின் சிற்பிகளே!
    மொறிஸ்: பருதித்துறை, புட்டளை, ஓராம்கட்டை, வி எம் றோட், ஓடைக்கரை, அல்வாய், இன்பருட்டி, வியாபாரிமூலை, நாவலடி, மாலிசந்தை… இப்படி உன் கால்கள் பதிந்த வீரச்சுவடுகள் ஏராளம். பார்த்து நின்ற காலங்களை போற்றி நிற்கின்றோம். நீ மடியவில்லை!

  3. பிறேமராஜன்: (ராஜன்)
    இளவயது நாட்கள் நினைவுக்கு வரும்போது
    அகற்ற முடியாத பாத்திரம்
    இனிய அந்த நாட்களின் அழியாத கோலம்
    பல சிறு கதைகள் அவனின் நாட்கள்
    பிரிவு என்றும் வேதனையே!

  4. தங்கை, உங்கள் அண்ணாவின் பெருமைகளை முன்பே அறிந்திருந்த போதிலும், இங்கே பதிவிட்டிருந்த இருவரின் கருத்துக்கள் மூலம் நிறைய அறிந்துகொண்டேன். சகோதரன் லோகேந்திரலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல், மூன்று மாவீரர்களை ஈன்றெடுத்து இப்பாருக்கு அளித்திருந்த தங்கள் அன்னை தங்கக் கோபுரமே! இங்கே பலதடவைகள் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளேன். இன்முகம் காட்டி, விருந்தோம்புவதிலும் அமுதசுரபியே! இது எனது அனுபவமும்கூட.

    இன்னுமொரு புதிய விடயத்தையும் அறிந்து கொண்டேன். அண்ணாவின் பிள்ளை மாவீரனான கதை. நீங்களும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி, அவர்களினால் கிடைக்கும் சுகங்களைத் துய்த்து, நலம் பெறாது எமது விடுதலைக்காக ஈகை செய்த தங்கள் குடும்பத்தவர் எங்கே? நாம் எங்கே? எண்ணிப் பார்க்கையில் உள்ளம் மிகவும் கலங்குகிறது. இப்படி எத்தனை எத்தனை ஏழ்மையில் வாழ்ந்து, கஞ்சி மட்டுமே குடித்து வளர்ந்த பிள்ளைகள்… இன்று அவர்களின் தியாகத்தின் பேறுதான் என்ன? இந் நாட்களில் இவற்றையெல்லாம் எண்ணி உறக்கம் கலைகிறது. மிகுந்த துயரத்தை உணர்கிறேன்.

  5. Premarajan. One of my friend. We grew together.I know him since childhood.

    We organize festival events, our club events,cricket and soccer matches. Though he is two years younger to me, our relationship was very good. The last time I met was in Colombo. He was studying at the German tech College.

    I heard the bad news about his death was the day before his sister from England called me and asked me if I knew. Good man.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *