`விடியும் முன்´ (திரைப்படம்)

அட்டகாசமான பாடல் ஒலிக்க அதிரடியான பின்னணி இசையுடன் கலர் கலராக உடை அணிந்து ஒரு நூறு பேர் குழு நடனம் ஆட கதாநாயகன் திரையில் தோன்றும் ஆரம்பக் காட்சி. ஓடும் காரின் கதவை பிய்த்து எடுத்து எதிரிகளை அடித்து நொறுக்கும் நாயகனின் ஆற்றல். ஆகாயத்தில் பல்டி அடித்து ஒரு கும்பலையே துவம்சம் செய்யும் நாயகனின் வீர சாகசம். கிராமத்துப் பின்னணியிலான கதையாக இருந்தாலும், பனி நிறைந்த சுவிஸ் மலைத் தொடர்களில் நாயகன் மட்டும் குளிருக்குப் பாதுகாப்பு உடை அணிந்து நாயகியை குறைந்த ஆடையில் ஆட விட்டு, ஓட விட்டு பாடும் கனவுப் பாடல்கள், தந்தை, பெரியவர்களை „வாடா போடா..’ என்று இழிவு படுத்தும் நகைச்சுவைக் கண்றாவிகள்,  இப்படி பல இத்தியாதிகள் எதுவும் இன்றி ஒரு தமிழ்ப் படத்தை வருட இறுதியில் பார்த்தேன். புதுமுக இயக்குனர்களின் ஆற்றல்கள் சமீபகாலமாகத் திரையில் பிரகாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

பாலாஜி கே. குமாரின் இயக்கத்தில் 2013 இறுதியில் வெளிவந்த „விடியும் முன்’ திரைப்படம் பார்த்த பொழுது எனக்கு மேற் கூறிய எண்ணங்களே வந்து போனது. வர்த்தக ரீதியாக இத் திரைப்படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது தெரியாது. ஆனால் „விடியும் முன்’ திரைப்படம், இப்படியான திரைப் படங்கள் இனி வரும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் பொழுது ஓடிக் கொண்டிருக்கும் நாயகியும், சிறுமியும் இறுதிவரை ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். மழை பெய்யும் பின்னணி, இருட்டு என்று இரவில் ஆரம்பிக்கும் கதை, விடியும் போது அழகாகக் காட்சிப் படுத்தப் படுகிறது. விலைமாதுவின் கதையை பின்னணியாகக் கொண்டிருந்தாலும் எங்குமே ஆபாசத்தைத் திணிக்காமல், விரசத்தைத் தராமல் அழகாகக் கதையை நகர்த்தும் முறை அழகு.

இரண்டு பெண்களைத் துரத்தும் மூன்று கும்பல்கள். ஒரு தாதா, விபச்சாரத் தரகர், அவருடன் இணைந்து ஒரு புகைப்படப் பிடிப்பாளர், தந்தையின் கொலைக்காக அவர்களைத் தேடும் மகனும் அவனது அடியாட்களும் என்று இவர்களை வைத்து கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. அதுவும் கதை ஒருநாளிலேயே முடிந்து விடுகிறது. விறுவிறுப்பாக காட்சிகளை வைத்திருந்தாலும் அமைதியாகத்தான் கதை நகர்கிறது. அந்த அமைதி கூட கதை நகர்வுக்குத் தேவையாக இருக்கிறது.

வசனங்களைக் குறைத்து காட்சிகளை முன்னிலைப் படுத்தியிருக்கறார் பாலாஜி கே. குமார். வசனங்கள் குறைவாக இருந்தாலும் படத்தில்  அழுத்தமாக அவை பதிந்திருக்கிறது. பூஜாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு விலைமாதுவாக, கவர்ச்சிகளைக் காட்டாமல் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார். சிறுமி மாளவிகாவின் நடிப்பில் குறை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் அவருடைய பாத்திரத்திற்கு அதிகப்பிரசங்கித் தனமான வார்த்ததைகள் தேவை இல்லாமல் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது.

தரகராக அமரேந்திரன், புகைப் படப்பிடிப்பாளராக ஜான் விஜய், பணக்காரப் புள்ளியாக வினோத் கிசன், பூஜாவின் நண்பியாக வரும் லட்சுமி ராமகிருஸ்ணன் என்று சில நடிகர்களே படத்தில் இருந்தாலும் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். உதிரியாக வரும் பாத்திரங்களும் நன்றாகவே வந்திருக்கின்றனர். அதிலும் கஞ்சா விற்கும் மூதாட்டியின் கண்கள் பேசும் அந்தக் காட்சி அற்புதம்.

இசை அமைப்பாளர் கிரிஸ் கோபாலகிருஸ்ணனின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. பாடல்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று அப்படியே விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

படம் நகர்கையில் இப்படித்தான் முடிவு இருக்கும் என்ற ஊகம் எழுகிறது. ஆனாலும் பல முடிச்சுகளைப் போட்டு அவற்றை சுலபமாக  அவிழ்த்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றச் செய்து கதையை நகர்த்திச் செல்லும் அறிமுக இயக்குனர் பாலாஜி கே குமாரின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது.

சமுதாய விழிப்புணர்வுடனான ஒரு திரில்லர் திரைப்படத்தை அதுவும் தமிழில் தந்த பாலாஜி கே குமார் பாராட்டப்பட வேண்டியவர்.

ஆழ்வாப்பிள்ளை
06.01.2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *