அம்மாவிடம் போகும் போது பெரும்பாலும் தொலைபேசியில் அழைத்து
“சிறிது நேரத்தில் வருகிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் செல்வேன்.
நான் அங்கு போகும் போது தொலைக்காட்சியில் (தமிழ்) குடும்பச்சண்டை, பழிவாங்கல், ஏமாற்றுதல், அழுகை… என்று ஏதாவது போய்க் கொண்டிருக்கும். மேசையில் ஏதாவதொரு புத்தகம் வாசித்த குறையில் விரித்தபடி இருக்கும். அம்மா, முன்னால் இருக்கும் சோபாவில் மெதுவாக அயர்ந்திருப்பா. சில சமயங்களில் ஆழ்ந்து தூங்கியும் இருப்பா.
மெல்லியதூக்கம் என்றால் கதவு திறந்து சாத்தும் சத்தத்துக்கு எழுந்து விடுவா. ஆழ்ந்த தூக்கம் என்றால் குழப்ப மாட்டேன். என்ன சாப்பிட்டிருக்கிறா? என்ன செய்திருக்கிறா? பூமரங்கள் எப்படியிருக்கின்றன? என்பவைகளை நோட்டம் விடுவேன். எப்படியும் சிறிது நேரத்தில் விழித்து விடுவா. ஆனால் அந்தச் சொற்ப நேரத் தூக்கத்தில் (நான் போன் பண்ணிச் சொல்லி விட்டுப் போகும் அந்த இடைவெளிக்குள்) பெரிய கனவுகள் கண்டு விடுவா போலும்.
அந்தக் கனவுகளில் எப்போதும் அவ ஊரிலுள்ள எங்கள் ஆத்தியடி வீட்டில்தான் நிற்பா. விழித்ததும் அம்மா என்னைக் கேட்கும் முதல் கேள்வி ‘பிள்ளைகள் எங்கே? என்பதாக இருக்கும்.
“எந்தப் பிள்ளைகள்?“ என்று கேட்டால் “பரதன், சபா, பாமா எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்தினமே! எங்கை அவையள்?” என்று பதகளிப்பா.
சில சமயங்களில் “பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னனானெல்லோ! என்ன செய்யிறாய், நீ பாக்கேல்லையோ?” என்பா.
அவவை மீண்டும் இந்த உலகத்துக்கு/யேர்மனிக்கு அழைத்து வர சிறிது நேரம் பிடிக்கும்.
நினைவுகளில் மட்டுமல்ல , கனவுகளிலும அம்மா எங்கள் ஆத்தியடி வீட்டில் எங்கள் தம்பிமார் மொறிஸ்(பரதன்), மயூரன்(சபா), அண்ணன் தீட்சண்யன் (பிறேமராஜன்), அப்பா எல்லோருடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறா.
சந்திரவதனா
12.11.2020
பிற்குறிப்பு:
- பரதன்: (கப்டன் மொறிஸ் – பரதராஜன் தியாகராஜா) மே 01, 1989 அன்று நடைபெற்ற இந்திய அமைதிப் படையுடனான நேரடி மோதலில் வீரமரணம்.
- சபா: (கப்டன் மயூரன் – பாலசபாபதி தியாகராஜா) நவம்பர் 11, 1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணம்.