யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.
அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும், கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன.
எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.
வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள். “இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்பிடியாவது விவாகரத்துச் செய்யப் போறன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்…”
அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ´ஸ்வைனுக்கான´ தமிழ்ச் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.
வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.
பன்றிப்பொரியல் பிடிக்கவில்லை என்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபம் ஏற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். “உன்னை விடக் குரங்கு வடிவு” என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக்கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.
“நாளையிலை இருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் எண்டு..” மீண்டும் தொடங்கினாள்.
“இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்? நூறாவது தடவையா? இருநூறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா?” இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித் தொனியில் கேட்டாள்.
“நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்.”
“எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ, உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன், ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்குத் தலை வெடிச்சிடும்.”
“ஏ…ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்.”
இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.
என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.
“இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறியே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை.”
“நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது.”
“விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய்! அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்?”
“சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்.”
அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ, என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.
நேற்றைய சண்டை காரணமாக “காரைத் தொடக் கூடாது” என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் ஜக்கற்றைப் போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லிய படி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.
அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும், மற்றவர்களும் நிதானமாக எமது ஜக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். “இப்பத்தான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ” என்றாள்.
ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. ´வளவளா´ என்று கதை அளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.
ம்… யாரது? யன்னலுக்கு நேரே கீழே… பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க, றோசியும், அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து… இறுக அணைத்து..
நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவர்களேதான். ´என்னை மன்னிச்சுக்கொள்´ என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர், கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி, உதடுகளைக் கவ்வி… உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல…
திரும்பினேன். இவர்கள், அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா, பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
சந்திரவதனா
12.09.2004