நத்தார்ச் சந்தை

பாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. குளிர் மூக்குநுனியையும், காதுமடல்களையும் கொஞ்சம் அதிகமாகவே சீண்டி விளையாடியது. அங்கு நின்ற அனேகமான எல்லோரும் சுவெபிசுஹால் நகரின் பிரசித்தமான மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பையை கைகளில் கொண்டு திரிந்தார்கள்.

சுமதியின் நினைவுகள் கிளர்ந்தன. யேர்மனிக்கு, சுமதி வந்த காலங்களில் அதாவது ஏறக்குறைய இற்றைக்கு 30-40 வருடங்கள் முன்னரிலிருந்து குழந்தைகளுடன் அவள் கைகோர்த்த படி நடந்து திரிந்த நத்தார்ச் சந்தைகளின் நினைவுகள் ஒரு வித கிறக்கத்தைக் கொடுப்பவை. மொழி தெரியாது. குளிர் உறைக்கும். ஆனாலும் பிள்ளைகள் குதூகலிப்பார்கள்.

சீனியில் முறுகிய பாதாம்பருப்பு இல்லாத நத்தார்ச்சந்தை கிடையாது. இரத்தினண்ணன் கடையில் சீனி சுற்றிக் கொடுப்பது போல பேப்பரில் சுற்றிக் கொடுப்பார்கள். பிள்ளைகள் கொறித்து மகிழ்வார்கள். நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வீதியில் ஓடிக் கொண்டேயிருக்கும் கோச்சியில் ஏற்றி விட்டால் இன்னும் ஆனந்திப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்து, அவர்கள் அவரவர்களது நண்பர்களுடன் நத்தார்ச்சந்தைக்குப் போகத் தொடங்கிய பின் நத்தார்சந்தையின் மீதான ஆர்வம் சுமதிக்குக் குறைந்து விட்டது.

இன்றைக்கும் வந்திருக்க மாட்டாள். வேலை முடிந்து ஜக்கெற்றை அணியும்போதுதான் படபடவென யாரோ கண்ணாடிக்கதவைச் தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தாள். மிகைலா. ஓடிப்போய் கதவைத் திறந்த பொழுது ‘இம்முறையாவது நத்தார்சந்தைக்கு வா’ என்றாள் அவள்.

மிகைலா முன்னர் சுமதியோடு வேலை பார்த்த பெண்தான். கணவனோடு ஒத்து வரவில்லையென்று, திடீரென ஒருநாள் வேலையை விட்டுவிட்டுப் போனது போல கணவனையும் விவாகரத்துச் செய்து விட்டாள். தனியாகத்தான் வாழ்கிறாள். அவளது பழக்கவழக்கங்களும் சுமதியின் பழக்கவழக்கங்களும் பெரியளவாக ஒத்துப் போகாதவை. அதனால் சுமதி அவளிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பாள். மிகைலாதான் அவ்வப்போது அழைத்து, குசலம் விசாரிப்பாள். கடைகள், தெருக்களில் கண்டால் இழுத்து வைத்துக் கதைத்துக் கொண்டு நிற்பாள். „கோப்பி குடிக்க வா“ என்பாள். ஒவ்வொரு முறையும், சுமதி எதையாவது சொல்லித் தட்டிக் கழித்து விடுவாள்.

கடந்த வருடமும், மிகைலா வட்ஸ்அப்பில், “க்குளூவைன் குடிக்க நத்தார்ச்சந்தைக்கு வா“ என்று சுமதியைக் கேட்டிருந்தாள். ‘நேரமிருந்தால் பார்ப்போம்‘ என்று எழுதிய அளவில் சுமதி அதிலிருந்து தப்பித்து விட்டாள். இன்று மிகைலா விடாப்பிடியாக நின்றாள். „வா“ என்றாள். „க்குளூவைன் உனக்குப் பிடிக்காதென்றால் கிண்டர்புஞ் குடி“ என்றாள். கிண்டர் புஞ் அற்ககோல் குடிக்கும் வயதில்லாத குழந்தைகளுக்கான பானம். கறுவா, கராம்பு, தேசிக்காய்த்தோல், தேன் எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு, பத்துநிமிடங்கள் அவித்து, அதனுள் தேசிக்காய்ச்சாறு, தோடம்பழச்சாறு, திராட்சைப்பழச்சாறு என்பன விட்டு இன்னும் பத்துநிமிடங்கள் கொதிக்க விட்டு எடுக்கப்படும் பானம். க்குளூவைனுக்கு கொத்தமல்லித்துகள்களுடன் இன்னும் சில மூலிகைகளும் சேர்த்து வைனும் கலப்பார்கள். குளிரில் துவளும் உடலுக்கு கறுவா, கராம்பு எல்லாம் சேர்ந்த சூடான இந்தப்பானம் சூட்டைக் கொடுத்து இதமாக்குமாம்.

இந்தப் பாரம்பரிய பானத்தைக் குடிக்காத யேர்மனியர்களே இல்லை என்று சொல்லலாம். இதைக் குடிப்பதற்கென்றே ஒவ்வொரு வேலைத்தளங்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் குழுக்கள் குழுக்களாகப் பலர் நத்தார்ச்சந்தைக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.

சுமதியின் வேலைத்தளத்துக்கும் நத்தார் சந்தைக்கும் இடையே 100மீற்றர் தூரந்தான் இடைவெளி. ஆனால் ஐம்பதிற்கும் மேற்பட்ட படிகளில் ஏற வேண்டியிருக்கும். அது மலைப்பிரதேசம். மேலேதான் உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரத்துடனான பிரசித்தி பெற்ற அந்த மைக்கல் தேவாலயம் அமைந்துள்ளது. அதன் முன்னிலையில் உள்ள வெளியில்தான் நத்தார்ச்சந்தையின் முக்கியதளம் மையப்படுத்தப் பட்டுள்ளது. அது வருடா வருடம் இயேசுவின் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான, நவம்பர் 27இலிருந்து டிசம்பர் மூன்றாம் நாள் வரையிலான ஒரு நாளில், கூடத் தொடங்கும். டிசம்பர் 23ந்திகதி மீண்டும் எல்லாம் கலைக்கப்பட்டு விடும்.

ஏனோ, அன்று சுமதியால் மிகைலாவைத் தவிர்க்க முடியவில்லை. அல்லது சுமதிக்கும், ‘நத்தார்ச்சந்தைக்கு மீண்டும் ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டும்‘ என்ற ஒரு சின்ன ஆசை மனசினுள்ளே இருந்திருக்கலாம். போய் விட்டாள்.

ஒவ்வொரு க்குளூவைன் விற்கும் நிலைக்கடைகளிலும் மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பைகள் அடுக்கியடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்குள்தான் க்குளூவைனைக் குடிக்க வேண்டுமென்பதும் அவர்களின் பாரம்பரியத்தோடு சேர்ந்ததொன்று.

அங்கு க்குளூவைன் கடைகள் மட்டுமல்லாது, எங்களூர் வல்லிபுரக்கோவில், சந்நிதித் திருவிழாக்களில் போல சுற்றி வர இன்னும் பல கடைகள் இருந்தன. அவைகளிலிருந்து பல்வேறுபட்ட உணவுகளின் விதம் விதமான வாசனைகளும் மெழுகு, வாசனைத் திரவியங்கள்… போன்றவற்றின் நறுமணங்களும் வந்த வண்ணமே இருந்தன. தும்புமிட்டாசை, கண்ணுக்கு முன்னாலேயே செய்து தடியில் சுற்றி எடுத்து பிள்ளைகளிடம் நீட்டினார்கள். வெண்ணெய், பால், முட்டை… எல்லாம் கலந்து, சுடும் இனிப்புக் கோதுமைத் தோசையை ‘பான்கேக்‘ என்று சொல்லி ஜாம் அல்லது சொக்கிளேற் கிறீம் பூசி, சுடச் சுடக் கொடுத்தார்கள். மீனை நெருப்பில் வாட்டி எடுத்து பாணுக்குள் வைத்துக் கொடுத்தார்கள். இன்னும் இப்படி எத்தனையோ சாப்பாடுகள்.

சுற்றி வரப் பனி கொட்டியிருந்தது. அது ஒவ்வொருவரது கால்களுக்குள்ளும் மிதி பட்டு, மிதி பட்டுச் சிதைந்து தண்ணீராய் ஓடிக் கொண்டிருந்தது. குளிர் தாங்காமல், கைகள் அவரவர் பொக்கற்றுகளுக்குள் போவதும் வெளியில் வருவதுமாய் இருந்தன. வாய்களிலிருந்து ‘புக், புக்..‘ என்று புகை வெளிவந்து கொண்டிருந்தது. அனேகமான எல்லோரும் கம்பளிச் சால்வையால் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, காதுகளையும் சேர்த்து மூடக்கூடிய கம்பளித் தொப்பி அணிந்து, கம்பளிக் கையுறைகளோடு திரிந்தார்கள். அடிக்கடி மூக்கை உறிஞ்சினார்கள். பேப்பர் கைக்குட்டையால் மூக்கைத் துடைத்தார்கள். கூடவே அந்தக் குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் இந்த உணவுகளையும் வாங்கி வாங்கிச் சுவைத்தார்கள்.

ஒரு மூலையில் ஏதோவொரு இசைக்குழு பாடிக் கொண்டேயிருந்தது. சிலர் அந்தப் பாடல்களுக்கேற்ப ஆடிக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு மூலையில் குழந்தைகளுக்கான, இளம் வயதினர்களுக்கான என்று பல் வேறு விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. சிலர் அங்கு மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலர் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய, ஆனால் உயர்ந்த வட்ட மேசைகளில் கோப்பைகளை வைத்து விட்டு அந்த மேசைகளைச் சுற்றி நின்று கதைப்பதும் சிரிப்பதுமாக நின்றார்கள். அந்த நத்தார்ச்சந்தை மிகுந்த கோலாகலமாக இருந்தது.

சுமதி மட்டும் அந்தச் சந்தோசங்களுடனோ கோலாகலங்களுடனோ ஒட்ட முடியாமல் ஒரு வித அமைதியின்மையுடன் நின்றாள். அவளது மனசு தவித்துக் கொண்டேயிருந்தது. குளிர் ஒரு புறம். வீட்டில் ஒருவன் காத்திருப்பான் என்ற நினைவு மறுபுறம். வேலை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லவில்லையென்றால் அவன் முகம் கோணிப் போவான். போன் பண்ணலாமென்றால் சந்தையின் இரைச்சலில் பேசமுடியவில்லை. ‘மிகைலாவுடன் நிற்கிறேன். சற்றுத் தாமதமாக வருகிறேன்‘ என்றொரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நடந்தாள்.

நத்தார்ச்சந்தை முழுக்க, மிகைலாவைத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். பல ஆண்கள் அவளைக் கடந்து போகும் போது கட்டியணைத்தார்கள். முத்தம் கொடுத்தார்கள். உதட்டை உரசினார்கள். சுமதி, பட்டும் படாமல் தள்ளி நின்றாள். சிலர் சுமதியிடமும் கைகளை நீட்டிக் குலுக்கிக் கொண்டார்கள்.

இவைகளுக்கு மத்தியில், வரிசையில் நின்று ஒருவாறு ஒரு க்குளூவைனும் ஒரு கிண்டர்புஞ்சும் வாங்கி வந்து இருவருமாகக் குடிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் நின்ற மேசையைச் சுற்றி இன்னும் சிலர் நிற்பதுவும் அவர்கள் போக வேறு சிலர் வந்து சேர்வதுமாக, ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் சிரிப்பும் கதையும் கும்மாளமுமாக, கவலையே இல்லாத மனிதர்கள் போல மிகச் சந்தோசமாகவே இருந்தார்கள். சுமதியால் அந்தச் சந்தோசங்களுடன் கலக்க முடியாதிருந்தது. ‘கணவன் ஏதாவது எழுதியிருப்பானோ‘ என்று அடிக்கடி அலைபேசியை எடுத்துப் பார்ப்பதுவும் வைப்பதுமாக இருந்தாள். அவன் மட்டும் ‘ஒரு பிரச்சனையுமில்லை. சந்தோசமாக நத்தார்ச்சந்தையைப் பார்த்திட்டு வா‘ என்று ஒரு பதில் எழுதியிருந்திருந்தால் அவளும் அந்தச் சந்தோசங்களில் கலந்து இலேசான மனத்துடன் அதற்குள் உலா வந்திருக்கக் கூடும். அவன்தான் எதுவுமே எழுதவில்லையே!

திடீரென்று வந்த ஒருவன் மிகைலாவின் பழைய நண்பன் என்று சொல்லிக் கதைக்கத் தொடங்கினான். மிகைலா பெருஞ்சத்தத்துடன் கெக்கட்டம் விட்டுச் சிரித்துச் சிரித்துக் கதைத்தாள். அவனைத் தொட்டுத் தொட்டுப் பேசினாள். கட்டியணைத்தாள்.

மிகைலாவின் இந்தக் குணத்தினால்தான் சுமதியின் கணவனுக்கு சுமதி மிகைலாவுடன் சேர்வது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சுமதிக்குமே எல்லாம் அபத்தமாய் இருந்தன. பேசாமல் வீட்டுக்குப் போய் விடலாம் போலிருந்தது. “நான் வீட்டை போறன்“ என்றாள் மிகைலாவிடம். “என்ன.. வந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகேல்லை. அதுக்குள்ளை போப்போறன் எண்டிறாய்?“

“ஓம் வீட்டை அவன் காத்துக் கொண்டிருப்பான். போகோணும்.“

“அவனென்ன பால்குடிப் பிள்ளையே? கொஞ்சம் இருக்கட்டுமன்“ மிகைலா தடுத்துப் பார்த்தாள்.

சுமதி “இல்லை“ என்று புறப்பட்டு விட்டாள்.

“அடுத்த முறை வரக்கை, பால் கரைச்சு, போச்சிக்குள்ளை விட்டு வைச்சிட்டு வா“ பின்னால், மிகைலா நக்கலோடு கத்திச் சொன்னது சுமதியின் காதுகளில் விழவில்லை. அது நத்தார்ச்சந்தையின் பெருஞ்சத்தத்துக்குள் அமிழ்ந்து போனது. சுமதி அங்கு வீசிக் கொண்டிருந்த நறுமணம், கோதுமைத்தோசை வார்க்கும் ஓசை, பாதாம் பருப்பை வறுக்கும் கரகர ஒலி, இதமான இசை, ஒவ்வொருவரின் சின்னச்சின்னக் கதைகளும் ஒன்றாகி எழுந்து கொண்டிருந்த பேரிரைச்சல், சிரிப்பொலிகள், கெக்கட்டங்கள், கோலாகலங்கள், சந்தோசங்கள்… அத்தனையையும் விட்டு, படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

 ‘எது உண்மையான சந்தோசம்?‘ என்று அவளுக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. கணவன் மட்டும் ஒரு வரி எழுதியிருந்தால்… அத்தனை பேரும் அநுபவித்துக் கொண்டிருக்கும் அந்தச் சந்தோசங்களின் ஒரு துளியையாவது அவள் நுகர்ந்து, சுகித்திருப்பாள். பாதாம் பருப்பை வாங்கி வாய்க்குள் நொருக்கியிருப்பாள். சுட்ட மீன் வைத்த பாணை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்திருப்பாள். எல்லாவற்றிற்கும் மேலால் அந்த இசையில் கண்டிப்பாக லயித்திருந்திருப்பாள். ஒன்றுமே இல்லாமல் அவள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளால் எதிலுமே ஒன்ற முடியாதிருந்தது.  அந்த கிண்டர்புஞ்சைக் கூடக் ‘கடனே..‘ என்றுதான் குடித்து முடித்தாள். எந்தச் சுவையுமே அவளுக்குத் தெரியாதிருந்தது.

ஆனாலும் அந்தச் சந்தையிலிருந்து வெளியேறி, வீட்டை அண்மித்து விட்டதில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளியும் அவளும் கணவனும் சேர்ந்து ஒரு தமிழ்த்திரைப்படம் பார்த்து விட்டுத்தான் படுப்பார்கள். ‘எப்படியும் நல்ல படமாக ஒரு படம் தேர்ந்தெடுத்து வைத்திருப்பான். போனதும் குளித்து விட்டு, ஒரு தேநீரைச் சுவைத்தபடி, ஆறுதலாக இருந்து படம் பார்க்கலாம்‘ நினைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குள் நுழையும் போது ‘என்ன சொல்வானோ!‘ என்ற யோசனையும் இருக்கத்தான் செய்தது. நேரத்தைப் பார்த்தாள். சரியாக ஐம்பது நிமிடங்கள் தாமதமாகியிருந்தன. அவன், இவளை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் அனல் பறந்தது.

“எங்கை போட்டு வாறாய்..?“ அது சாதாரண கேள்விதான். ஆனால் அவன் கேட்ட விதமும் வேகமும் குரலின் தொனியும் அவளைத் திடுக்கிட வைத்தன. நெஞ்சு ‘பட, பட‘ வென்று அடித்துக் கொண்டது.

“உங்களுக்கு எழுதினனான் தானே! மிகைலாவோடை நத்தார்ச்சந்தைக்கு…“ அவள் முடிக்கவில்லை. அவளது குரல் மெதுவாகத் தளதளத்தது.

“அந்த ஆட்டக்காரியோடையோ..? ஆம்பிளையளைக் கண்டால் போதும் ‘ஈ‘ எண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிப்பாள்…“

இத்தனை கோபத்தை கணவனிடமிருந்து சுமதி எதிர்பார்க்கவில்லைத்தான். இவன் ‘எத்தனை நாள், எவ்வளவு தாமதமாக எல்லாம் வந்திருக்கிறான். வந்து “வழியில் அவனைச் சந்திச்சனான், அதுதான் நேரம் போட்டுது. வழியில் இவனைச் சந்திச்சனான். பிறகென்ன செய்யிறது. போய் அவனோடை இருந்து ஒரு கோப்பி குடிச்சிட்டு வாறன்“ என்றெல்லாம் சால்யாப்புச் சொல்லியிருக்கிறான். ஆனால், சுமதி மட்டும் தாமதமாக வந்திடக் கூடாது. அது அந்த வீட்டுக்குள் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டம்.

இருந்தாலும்.. இன்று, ‘தாமதமானது‘ பெரும் பிரச்சனையல்ல. மிகைலாவோடு போனதுதான் மாபெரும் பிரச்சனை. ‘அவளோடு இளிக்கும் ஆண்கள் சுமதியோடும் இளித்திருப்பார்களோ!‘ என்பதைத்தான் அவனால் சீரணிக்க முடியாதிருந்தது.

சுமதி ஒன்றும் பேசாமல் குளியலறைக்குள் போய் விட்டாள். சில வாரங்களுக்கு முன் இருவரும் ஒன்றாகக் கடைக்குப் போன போது ஆளாளுக்கு தேவையான பொருட்களை எடுத்தெடுத்து வண்டிலுக்குள் போட்டுக் கொண்டு போனார்கள். மரக்கறிப்பகுதிக்கு வந்ததும் சுமதி கொஞ்சம் குனிந்து, மினைக்கெட்டு நல்ல கத்தரிக்காய்களாகப் பார்த்து, எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். கணவனைக் காணவில்லை. ‘எங்கே போய் விட்டான்?‘ சுற்று முற்றும் நோட்டம் விட்டாள்.

சற்றுத் தள்ளி… ‘யாரது..?‘

‘ஓ.. மிகைலா!‘ கூடவே இவன். அதுவும் மிக நெருக்கமாக… அவளது கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்த படி, ‘ஈ…‘ என்று இளித்த படி…

சட்டென்று அந்தக் காட்சி சுமதியின் நினைவுகளில் வந்தது. கோபம் கொப்பளித்தது.

சும்மா குளித்துக் கொண்டிருந்தவள், சவரை உயர்த்தித் தலைக்குப் பிடித்தாள். அப்படியே நீண்ட நேரம் தலைக்குக் குளித்தாள். அந்தத் தலைக்குளியல் ஒருவேளை அவளது கோபத்தைத் தணித்திருக்கலாம். அல்லது ‘தணியும்‘ என்று அவள் நம்பியிருக்கலாம்.

வெளியில் வந்த போது கணவன் இவளுக்காகக் காத்திருக்கவில்லை. ஆங்கிலப்படம் ஒன்றைப் போட்டுப் பார்க்கத் தொடங்கியிருந்தான். முகத்தை இன்னும் படு கோபமாகவே வைத்திருந்தான்.

சுமதியின் மனசுக்குள் அதை விட அதிகமான கோபம் இருந்தது. ஆனாலும் கதையை வளர்க்கவோ, சண்டையை ஆரம்பிக்கவோ அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.

பேசாமல் போய் தனது படுக்கையில் சரிந்து போர்வைக்குள் நுழைந்து கொண்டாள். உடல் அந்த இதமான கதகதப்புக்குள் அமிழ்ந்து போக, மனமோ நத்தார்ச்சந்தைக்குள் உலாவத் தொடங்கியது.

சந்திரவதனா
12.01.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *