வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம்.
இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. நல்லா வேலை குடுத்திட்டாங்களோ? பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.
மே மாதம் எண்ட படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த ஜேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.
எனக்கென்னவோ ஜேர்மனிக்கு வந்து மூண்டு வருசமாகியும் ஒண்டிலையும் மனசு ஒட்ட மாட்டனெண்டுது. நான் 10.5.1986 இலை ஜேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூண்டு வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூண்டு பிள்ளையளையும், என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.
எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையுந்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது. எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே, அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடி வர. இப்ப இருந்து புலம்பிறன். என்ன பிரயோசனம்..!
எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப் பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமா தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.
அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். “அவன் எங்கை, அவன் எங்கை..?” எண்டு கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை, ஊர்ச்சனங்களையும் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.
நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க, அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க, ஆமி வந்திட்டான் போலையும், தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.
எத்தினை நாளைக்கெண்டுதான் என்ரை தம்பிமார் சாப்பிடாமல், குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.
தலைக்கு மட்டும் தலேணி(தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை, எந்தக் கல்லிலையும், முள்ளிலையும் படுக்கிறாங்களோ!
நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.
“என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்?” ஆதரவாய்த்தான் கேட்டார்.
“நான் போப்போறன், ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு.”
“என்ன, இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும், கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம்.”
“……………….”
“இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம். இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணுமெல்லோ!”
“ஓம்” எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.
´என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா, அப்பா, தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று.´ எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்திச்சு. பிறகு எப்பிடியோ நித்திரையாகீட்டன்.
காலைமை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது. எனக்கு அதிலை எல்லாம் கவலை இல்லை. கவலை எல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோவிலை இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ. பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.
என்னை அறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.
என்ன..! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை..!
ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த ஜேர்மனிக்குத் தனியாக வந்து சேர்ந்தம். எல்லாம் ஏதோ பிரமையாய்… நம்ப முடியாததாய்…
எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி, தலையைக் கோதி விடுவா. அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது. எங்கையாலும் போட்டு வந்தால் “அக்கா, களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ.” எண்டு தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.
மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும், உடன் பிறப்புக்களையும் சுத்திச் சுத்திக் கொண்டே நிக்குது.
இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு, டக்கெண்டு சிரிச்சுக் கொண்டு “என்ன, வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்?” எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் தேத்தண்ணியைப் போட்டன்.
தேத்தண்ணியோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை. இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு! ஏன் இப்பிடி இருக்கிறார்! சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.
நான் இவற்றை ´மூட்´ ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர்கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.
இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.
“பரதன் போயிட்டான்” எண்டார். எனக்கொண்டுமே புரியேல்லை.
“பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான்” எண்டார் மீண்டும். இப்ப எனக்கு எதுவோ உறைச்சது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்திச்சு. அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.
“என்ரை தம்பி..! பரதா..! போயிட்டியோ..!” இப்ப அழத் தொடங்கீட்டன்.
இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும். ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.
“உண்மையான நியூஸ்தானோ அது?” இவரைக் கேட்டன்.
´இல்லை´ எண்டு சொல்ல மாட்டாரோ எண்ட எதிர்பார்ப்பும், ஏக்கமும் நிறைஞ்ச அவா எனக்குள்ளை.
“தகவல் நடுவச் செய்தியளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம்.” இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.
எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல்நடுவங்களுக்கு
அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயசு எல்லாம் சரியாச் சொல்லுறாங்கள். ´மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார்.´ எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.
கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும். நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து “மூ..மூ…த்தக்கா” எண்டு கொண்டு ஐஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் “வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது.” எண்டு கத்துவா.
எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன். அப்பா, அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போகவே மனம் வரேல்லை.
வோச்சர் வந்து “ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ.” எண்டிட்டான். அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.
எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்திச்சு. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.
இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ..! நெஞ்சு கரைஞ்சு, கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.
முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ.” எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும். “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன்.” என்பான்.
பிறகு, நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.
இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்குது. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். ´மூத்தக்கா´ எண்டு கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.
கடவுளே..! இனி இதெல்லாம் ஏலாதே!
உலகத்துச் சோகமெல்லாம் என்னை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.
இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையளை எல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னைச் சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.
தம்பி..! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களை எல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.
அவனையே நினைச்சு நினைச்சு, அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.
எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.
தம்பியின்ரை மறைவிலை அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம். “பரதா..! என்னட்டை ஒருக்கால் வாடா!” மனசுக்குள்ளை அவனைக் கூவி அழைச்சேன்.
படுக்கையறைக்குள்ளை ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ..! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். இரண்டு நாளைக்கு முன்னம் சின்னவன் கிண்டர்கார்டினிலை இருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாப் போட்டுது.
அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு, சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலையே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சுது.
“இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது?” இவர் என்னைப் பேசினார்.
அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகந்தான் வடிஞ்சிடுமோ!
சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு. சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. ஆராவது தெரியாதவையள் செத்தாலே கவலைப் படுறம். இளம் பிள்ளையள் செத்ததைக் கேட்டால் வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும், சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சும் இருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.
மில்லர் போலை ஒவ்வொரு பெடியளும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோவிலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இருக்கும்.
ஆனால் இந்த சோகங்களையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.
உங்களுக்குப் பிரியமானவை ஆராவது செத்தவையோ? பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான ஆராவது. அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை… இப்பிடி ஆராவது..?
அப்பிடியெண்டால் உங்களுக்கும் புரியும், என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.
மரணத்துக்கு முன்னாலை மற்றதெல்லாம் பூச்சியந்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையா உணர்ந்தன்.
இத்தினை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. ´தம்பி சாகேல்லை´ எண்டு தங்கைச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு.
அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்… எண்டு எந்தநேரமும் நினைவுகளுக்குள்ளையே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுதுதான், சரியா 21 ம் நாள் அந்தக் கடிதம் என்னை வந்தடைஞ்சிச்சு.
கூட வந்த தோழர்களிற்கு
ஓட வழி செய்து விட்டு
தனித்திரண்டு புலிகளுடன்
களத்தினிலே போராடி
பாரதத்துப் பேய்களது
பாவரத்தம் களம் சிதற
கோரமுடன் படை சரித்து
எம் தம்பி
வீரமுடன் மண் சாய்ந்து விட்டான்
எண்டு என்ரை தங்கைச்சிதான் அதை எழுதியிருந்தாள்.
அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.!
சந்திரவதனா
01.05.1999
- களத்தில்
- ஈழமுரசு பாரிஸ்
- ஐபிசி தமிழ்