ரவி அவர்களின் ‘குமிழி‘ நாவலை முன் வைத்து…

அப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… என்றெல்லாம் அவர்கள் கனவுகள் கண்டார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்தக் கனவுகளை எல்லாம் அப்படியே சிதறடித்து, அம்மா, அப்பா, அக்கா… தங்கை என்று எல்லோரையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது.
பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு வீடு திரும்புவார்கள் என்று அன்போடும் அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும் புத்தகப் பையையும் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும் தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.
ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வாட்டி வதைத்திருக்கிறது.
2000 ஆண்டளவில் ஜெயரூபன் மைக்கேல் பிலிப் என்பவர் ‘ஜடாயு‘ என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். ‘ஜடாயு‘ மீன்பிடித் தொழிலைச் சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. கல்லூரி விடுமுறைநாட்களில், எடுபிடியாகக் கடலுக்குப் போய் உழைத்து, ஐந்தோ பத்தோ தாயிடம் கொடுக்கும் அவர்களது அன்பு மகன், அம்மாவையும் அப்பாவையும் அக்காவையும் விட்டு விட்டு போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும் புத்தகப்பையும்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தன. கைவிளக்குப் போல இருந்த ஒற்றை மகன் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்ட ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும், மனதாலும் உடலாலும் சாய்ந்து போன அவனது தந்தை அவனை மீண்டும் காணாமலே இறந்து போய் விடுகிறார்.
அப்படியொரு பெருந் துயரை தனது குடும்பத்துக்குக் கொடுத்து, அவர்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு ஓடி, அலைக்கழிந்து, மீண்டு திரும்பிய ஒருவரின் கதைதான் குமிழி.
‘குமிழி‘ என்ற பெயர் அழகு. அதற்குக் கதாசிரியர் ரவி அவர்கள் சொல்லும் விளக்கமும் அழகு. ஆனால் அது துயரம் தோய்ந்த ஒருவித ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கின்ற அழகு.
ரவி ஈழத்தின் வடபுலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1986இலிருந்து சுவிசில் வாழ்ந்து வருகிறார். 1989 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் மனிதம் என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டதன் மூலமும் வேறு பல இலக்கியச் செயற்பாடுகள், சமூகநலச் செயற்பாடுகள் மூலமும் நன்கு அறியப்பட்டவர். 1995இல் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ என்றதொரு அழகிய கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.
PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பில் இணைந்து, செயற்பட்டுக் கொண்டிருந்த இவர் ஆயுதப் பயிற்சிக்காக, தான் இணைந்த அந்த அமைப்பின் வழிகாட்டலில் இந்தியா வரை பெரும் கனவுடன் சென்றவர். அங்கு பின்தளத்தில் கண்ட, எதிர்கொண்ட கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் அச்சத்தையும் உயிர்தப்பினால் போதுமென்றான நிலையையும் இந்தக் ‘குமிழி‘ நாவலில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்துள்ளார் என்று சொல்வதை விட 2020ம் ஆண்டு வரை, 35 ஆண்டுகளாகத் தன்னோடு காவித் திரிந்த அந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், வேதனை… எல்லாவற்றையும் இந்நாவலின் மூலம் இறக்கி வைத்திருக்கிறார். முழுமையாக இறக்கி வைக்க முடியாது போயிருந்தாலும் இந்நாவலின் மூலம் அவர் கண்டிப்பாக ஒருவித விடுதலை உணர்வைப் பெற்றிருப்பார்.
நாவலில் ரவி தானாக நின்று தன்னிலையிலும் வேறொருவராகத் தள்ளி நின்று படர்க்கையிலும் கதையைச் சொல்கிறார். கதை ஒரு பயங்கரக் கனவுடன் ஆரம்பிக்கிறது. சுவிசின் அழகிய மலைகளுக்கூடாகத் தொடரும் கதையை ரவி தனக்கேயுரிய கவித்துவமான வரிகளால் அழகாக நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்துக்குத்தான் அந்த அழகும் பசுமையும். அதன் பின் கதை நெடுகிலும் ஒரு வித கோபமும் சோகமும் தவிப்பும் நெருடல்களும் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் உள்ளது.
ஆரம்பத்தில் ரவி கண்ட கனவும் அதில் வரும் சவுக்கம் கொட்டனும் அந்த மரணபயமும் ஆழ்மனதில் உறங்கியிருக்கும் ஏதோ ஒரு பயங்கரம் நாவலினுள்ளே புதைந்துள்ளது என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது.
ரவியின் அப்பா ஒரு ஆசிரியர். மனிதநேயம் மிக்க ஆசிரியர். பாடசாலையில் பிள்ளைகள் யாராவது காற்சட்டையை அழுக்காக்கி விட்டால் கிணற்றடிக்கு கூட்டிச் சென்று அவர்களைக் கழுவி விடுமளவுக்கு அன்பும் அக்கறையும் நிறைந்தவர். பிள்ளைகள் பசியோடு இருப்பதைக் கண்டால் உணவு வாங்கிக் கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை. பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மூலிகைச்செடிவளர்ப்பு, ஆயுர்வேத மருத்துவம், வீட்டு முற்றத்தில் பெருவிருட்சமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள்… போன்றவற்றிலிருந்தும் மூலிகைச் செடிகளிலிருந்தும் மருந்துகள், குளிகைகள் தயாரிப்பது, மருந்துக்கடையை நடாத்துவது, சாஸ்திரம் பார்ப்பது… என்று எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தவர்.
அவரது இயக்கம் 1970 இல் நின்று போயிற்று. சாதாரணமாக யாழ் வாழ் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருக்கக் கூடிய பிரச்சனைகளும் தேவைகளும் ரவியின் குடும்பத்திலும் இருந்தன. தந்தையில்லாத அந்தக் குடும்பம் சிறீமா காலத்துப் பஞ்சத்தோடு போராடியபடியே வாழத் தொடங்கியது. ஆறு சகோதரர்கள். அவர்களில் திருமணமாகாத அக்காமாரும் அடக்கம். சீதனம் கொடுத்தால்தான் பெண்பிள்ளைகளைக் கரைசேர்க்க முடியும் என்ற எங்கள் யாழ்ப்பாண வாழ்க்கை முறைமைக்கு மத்தியில் அம்மாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ரவிதான். ரவி படித்துப் பட்டம் பெற்றுக் குடும்பத்தைத் தாங்குவான் என்பது அம்மாவின் பெருங்கனவு.
ரவியும் அந்தக் கனவுடன்தான் மொறட்டுவப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். இரண்டு வருடங்கள்தான். ஒரு கட்டடக்கலைஞனாக வெளியே வரவேண்டியவரின் கனவு, வேட்கை எல்லாவற்றையும் 1986 ஜூலைக் கலவரம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது. சொந்த நாட்டிலேயே அகதியாகி, கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார்.
அதன் பின்னான காலத்தில் இயக்கம்-போராட்டம்-விடுதலை என்றொரு புதியபாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.
தான் ஒரு கட்டடக்கலைஞனாகி தனது உழைப்பில் குடும்பத்தைத் தாங்குவது, சகோதரிகளுக்கு சீதனம் கொடுத்து திருமணத்தை நடாத்தி வைப்பது… போன்றவற்றிற்கான சாத்தியங்களை விட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் தன் போன்ற எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என்பதை ரவி முழுமையாக நம்பினார். கட்டிடக்கலைஞனாகும் கனவை உடைத்துப் போட்ட ஜூலைக்கலவரத்தினால் மனதில் ஏற்பட்டிருந்த விசனமும் இன்னும் பலவும் அந்த நம்பிக்கையுடன் சேர்ந்து அவரை அந்தத் துணிச்சலான முடிவை எடுக்க வைத்தன.
அதை ரவி இப்படிக் குறிப்பிடுகிறார்.
படிப்பு, குடும்பச்சுமை எனக் காய்ந்து போன வரப்பில் சிறு ஓடையாக ஓடிக் கொண்டிருந்த என் பால்ய கால வாழ்வை மடைமாற்றி புதிய பாதையில் திறந்து விட்டேன். துணிச்சலா, அப்பாவித்தனமா, விடுதலை வேட்கையா எதுவோ தெரியாது. புலனாகாத அந்தப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பரவினேன் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. (அத்தியாயம்:1, பக்கம்:12)
அத்தான் வேலை செய்யும் கடையில், ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொல்லிவிட்டு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்.
வல்லைவெளி தாண்டிச் சென்று கடலில், வள்ளத்தில் பின்தளம் என்னும் இந்தியாவை நோக்கிச் செல்லும் அந்தக் கடற்பயணம் சவால் நிறைந்த பெரும் ஆபத்தான பயணம். பழுதடைந்த மோட்டார்கள், ஆழ்கடல், அலை, நேவி, ரோந்து… என்று பலவற்றைக் கடந்து ரவியும் இன்னும் பதினெட்டுப் பேரும் ‘மண்ணுக்காய் உழைக்கச் செல்கிறோம்‘ என்ற அர்ப்பணிப்பு மனநிலையுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் இந்தியக்கரையில் கால் வைக்கிறார்கள். அவர்களில் ரவியின் நண்பர்களான யோகன், பாலன் இருவரும் அடக்கம். முதல்நாளே சாப்பாடு கிடைக்கவில்லை. வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு பயண அலுப்புத் தீரத் தூங்கி விடுகிறார்கள்.
அதன் பின்னான இயக்க(கழக) நடைமுறைகளில், ஒரு மொட்டைமாடிக் கட்டிடத்தில் ரவி, யோகன், பாலன் மூவரும் ரகு, ஆனந்தன், கரன் ஆகிறார்கள்.
அங்கிருந்து ஒரு நடுநிசியில் எல்ப் ரக ட்றக் வண்டியில் ‘பி‘ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். முகாம் பற்றிய பெரியதும் சிறியதுமான பல கற்பனைகளை வளர்த்த படி ரகு ஆகி விட்ட ரவி முகாமை வந்தடைந்தான். தலையில் தொப்பி, கட்டைக் காற்சட்டை, பெனியனுடன் எஸ்.எம்.ஜீ போன்ற ஆயுதம் தாங்கிய இருவர் சம்பிரதாய முறைப்படி எல்லோரையும் நோட்டம் பார்த்து, பரியரைத் திறந்து உள்ளே போக விடுகிறார்கள்.
சுமார் பத்துக் கொட்டில்கள் வரை ஒரு சவுக்கம் காட்டுக்குள் ஒளிந்திருந்தன. நடுவிலே ஒரு பெரிய வெளி. அந்தக் கொட்டில்களுக்குள் ஏற்கெனவே பயிற்சிக்கென வந்தவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஊரிலிருந்த பொழுது கழகத்தின் அரசியற் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ரவியே, பின் தளப்பயிற்சிக்கென் அனுப்பி வைத்த இந்திரன், சந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.
அடுத்தநாளே முகாம் ஒழுங்கு விதிகள் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. முதல் நாளைய இரவின் இருட்டில் ‘எஸ்.எம்.ஜீ‘ என்று ரவி நினைத்த ஆயுதம் வெறும் சவுக்கம் கொட்டனாக இருந்தது. அந்தச் சவுக்கம் கொட்டனை வைத்துக் கொண்டுதான் சென்றிக் காவலாளிகள் கூட அங்கு காவலுக்கு நின்றார்கள். ஆயுதங்களைப் படங்களாக மட்டும் கொப்பிகளில் பிஸ்ரல், ஏகே-47, எஸ்எல்ஆர், எல்எம்ஜீ, ஆர்பிஜி… என்று கீறிவைத்துப் பாடமெடுத்தார்கள். பின்தளப் பயிற்சிகளும் சவுக்கம் கொட்டன்களுடன்தான் அங்கு நடந்தன.
எல்லாமாக 320 பேர் வரை அங்கிருந்தார்கள். பயிற்சிகள் புழுதியிலும் வெயிலிலும் தொடர்ந்தன. சாப்பாடு ஒரு சிறைச்சாலையில் கிடைக்கும் சாப்பாடு போல எல்லோருக்கும் கிடைத்தது. முகாம் முழுக்க ஏதோவொரு அவிழ்க்க முடியாத புதிர் மெளனித்திருந்தது. மனம் விட்டுப் பேசவோ ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கவோ முடியாத ஒருவித அந்தரமான சூழ்நிலையை ரவியால் உணர முடிந்தது.
தொடர்ந்த நாட்களில் புதிதாக முகாமுக்கு வந்தவர்களும் சென்றிக்கு நிற்கும் வேலையைச் செய்யப் பணிக்கப் பட்டார்கள். முகாமின் முன்வாசலிலும் பின் வாசலிலும் இருக்கும் உயரமான பரண்களில் மேலேயும் கீழேயுமாக இருவர் நின்று காவல் புரிவார்கள். முகாமின் மற்றைய மூலைப்பகுதிகளிலும் நான்கு பக்க வியூகம் இருக்கும். சக தோழர் ஒருவர் இவர்களைக் கண்காணித்த படியே திரிவார். அவர்கள் எல்லோருக்குமான ஆயுதங்கள் சவுக்கம் கொட்டன்கள்தான்.
அன்று அதிகாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை ரவியின் முறை. முன் வாசல் பரணின் மேலே ரவி. கீழே, இலங்கையில் தீயணைப்புப்படையில் வேலை செய்த பரம். சவுக்கம் தோப்பை மூடியிருந்த இருள், அதற்குள் நிலவிய பேரமைதி எல்லாமே முதல்நாள் காவல் என்பதால் ரவியை அச்சுறுத்த முனைந்து கொண்டிருந்தன.
திடீரென, காற்றும் உறைந்து போகிற அந்தப் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல் அது. நரம்புகளைக் கைப்பிடியாய்ப் பிடித்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்த அந்த ஒலி இப்போ ரவிக்குக் கேட்டது. மனிதர்களின் ஒலி இப்படிக் குரூரமாகவும் ஒலிக்க முடியுமென்பதை அன்றுதான் ரவி உணர்ந்தான். அங்கிருந்து ஒரே உரப்பல் ஒலிகளும் உங்களுக்கு அண்ணா இல்லையா… தம்பி இல்லையா என்ற நடுங்கி எழும் ஈனக்குரலும் அதைச் சிதைக்கும் அதட்டல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. சவுக்கம் தோப்பின் அமைதி உடைந்து சின்னா பின்னமாகியது. ரவிக்குப் பதட்டமும் என்ன நடக்கிறது என்று தெரியாத திகைப்பும். பரம் மயங்கி வீழ்ந்து விட்டான்.
இந்தச் சம்பவம் ரவியைப் பெரிதும் பாதித்தது. ரவி மனதளவில் நொருங்கிப் போனான். அடுத்தநாள் பயிற்சிக்கு வெளியில் போகும் போது சத்தம் வந்த இடத்தை உற்று நோக்கினான். ஒரு சிறு கொட்டில் அங்கு ஒளிந்திருந்தது.
அதன் பின் ஒருநாள் உமா மகேஷ்வரன் அங்கு, அந்த முகாமுக்கு வந்தார். அந்த நாள் அந்தக் கொட்டில் காணாமல் போயிருந்தது. வேய்ந்திருந்த கிடுகுகள் மட்டும் முகாமின் முன்வாசல் வழியில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உமா மகேஸ்வரன் போன பின், அடுத்தநாள் மீண்டும் அக்கொட்டில் அந்த இடத்தில் முளைத்திருந்தது.
ரவியின் மனதில் அமைதியின்மையும் சந்தேகமும் தலை விரித்தாடின. எந்த உண்மையையும் அங்கிருக்கும் யாரிடமும் கேட்டு அறியவோ, தெளியவோ, வெளிப்படையாகப் பேசவோ முடியாதபடி ‘இராணுவ இரகசியம்‘ என்றதொரு பெருஞ்சுவர் ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தியது. எல்லோரும் அச்சம் கலந்த மெளனத்துடன் அங்கு உலவினார்கள்.
தொடர்ந்த நாட்களலும் அந்த விசாரணைக் கொட்டிலுக்குள் யாராவது ‘புலிகளின் உளவாளி‘, ‘காட்டிக் கொடுத்து விட்டான்‘, ‘துரோகி‘ என்பதான அடைமொழிகளுடன் உளன்றியில் தலைகீழாகத் தொங்கினார்கள். விசாரணை என்ற பெயரில் உடலில் சதையைக் கீறி உள்ளே மிளகாய்த்தூள் வைக்கப்பட்டார்கள். செத்தல் மிளகாய்ச்சாக்கால் முகத்தை மூடிக் கட்டப்பட்டார்கள். உயிர் போகும் வரை சவுக்கம் கொட்டனால் அடித்து நொருக்கப் பட்டார்கள். எதிர்த்துக் கதைப்பவர்களும் ஏன், எதற்கு, எப்படி? என்று கேள்வி கேட்பவர்களும் அதே உளன்றியில் தொங்கிச் சிதைந்தார்கள். அந்த முகாமிலிருந்து தப்பியோட முனைந்தவர்களில் ஒருவர் கூடத் தப்பாது இழுத்து வரப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் வைத்து உடல் கிழிந்து, உயிர் பிரியும் வரை அடித்து, உதைத்துக் குதறப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் அந்தச் சவுக்கம் காட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டார்கள். பின்னர் பொறுப்பாளர்கள், உளவுப்படை என்ற பெயர்களில் அராஜகம் செய்து கொண்டிருந்தவர்களால் “அவனைக் காணவில்லை. தப்பியோடி விட்டான்“ என்று இலகுவாகச் சொல்லப் பட்டார்கள்.
ஈழவிடுதலை, மண்ணின் விடுதலை, சோசலிசதமிழீழம்… என்ற கனவுகளோடு வந்தவர்கள் அந்த முகாமுக்குள் அடிமைகள் போலவும் குற்றம் புரிந்தவர்கள் போலவும் கைதிகள் போலவும் சற்றேனும் சுதந்திரம் அற்றவர்களாய் நடாத்தப்பட்டார்கள். அவர்களுக்கான வெளியுறவுத் தொடர்பு என்பது அறவே இல்லாமற் செய்யப்பட்டிருந்தது.
“எதற்காக இங்கு வந்திருக்கிறேன்?“ என்று தன்னையே தான் கேள்வி கேட்டுச் சோர்ந்து போகும் ரவியை கழகம் பற்றிய உற்சாகமான செய்திகளை வழங்கும் ‘தமிழீழத்தின் குரல் வானொலி‘ தான் மீண்டும் மீண்டுமாய் உற்சாகப்படுத்தி, போராளியாக மாற்றிக் கொண்டிருந்தது.
முகாம் வாழ்க்கை பல மாதங்களைக் கடந்து விட்டிருந்தது. ரவிக்கு நெஞ்சுச்சளி, இருமல் போன்ற உபாதைகள் வரத் தொடங்கியிருந்தன.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கழகத்தின் தொலைத்தொடர்புப் பயிற்சிக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் படலம் ஆரம்பமானது. அந்தப் பயிற்சிக்காக ரவி இருந்த இந்தப் ‘பி‘ முகாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நால்வரில் ஆனந்தன், டாக்குத்தன், சிங்கப்பூர் உட்பட ரவியும் ஒரு ஆள்.
உண்மையில் ரவி படித்திருந்தது தான், நெஞ்சை உறைய வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த முகாமிலிருந்து வெளியேறும் பெரும் வாய்ப்பை ரவிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறைந்த பட்சம் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர்களைத்தான் அந்த வேலைக்கு அவர்கள் தேர்வு செய்தார்கள். அதன் பின்னான போராட்ட வாழ்க்கை ரவிக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்தது.
தஞ்சாவூரிலிருந்த ஒரந்தராயன்குடிக்காடு என்ற இடத்தில் கழகத்தின் தொலைத்தொடர்பு முகாம் இருந்தது. தென்னந்தோப்புகள், வீடுகள், ஆறு… என்பவற்றிற்கிடையே இருந்த அந்த முகாம், சவுக்கம் காட்டுடன் ஒப்பிடும் போது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போன்றதான பிரமையை ரவிக்குக் கொடுத்தது. 40பேர் அங்கு வேலையில் இருந்தார்கள். சுவையான சாப்பாடு, தென்னைமர நிழலில் ஓய்வு, ஆற்றுக் குளிப்பு, கிராமியவாசனை, கலகலப்பு… என அந்த வசதியான வாழ்க்கையும் வகுப்புகளும் அந்நியோன்யமான, மனந்திறந்த உரையாடல்களும் ரவிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன. ரவி அங்கு ‘ஜோன்‘ ஆக மாறியிருந்தான்.
ஏறக்குறைய நாங்கள் மறந்து போய்க்கொண்டிருக்கிற Morse Code பயிற்சியும் அங்கு ரவிக்குக் கிடைத்தது. வேற்று மனிதர்களுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்தன. Morse Code செய்திப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென்பதால் பெண் தோழர்களுக்கு ஆங்கில வகுப்பெடுக்கும் வாய்ப்பும் பெண்தோழர்களின் முகாமுக்குப் போவதற்கான அனுமதியும் கூட ரவிக்குக் கிடைத்தன. அங்கிருந்த பத்துப் பெண்களுக்கும் ஒவ்வொரு கதை இருந்தாலும் அவர்களில் ஒருத்தியான மாலிக்கும் ரவிக்கும் இடையில் காதலும் முகிழ்த்தது. கண்களால் மட்டும் பேசிக் கொண்ட காதல் அது.
தொடர்ந்த நாட்களில் புதுக்கோட்டையிலிருந்த சுடுதல் பயிற்சிக்கான முகாமில் துப்பாக்கியால் சுடும் பயிற்சிகளும் கிடைத்தன. ஆயுதங்களைப் பார்க்கவும் தொட்டுணரவும் முடிந்த அந்தப் பொழுதில் தான் முழுமை பெற்றுவிட்டதான உணர்வு ரவிக்கு வந்தது. இருவாரகால இராணுவப்பயிற்சியை முடித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் புறப்படும் போது ரவி மட்டுமல்ல பயிற்சி எடுத்த எல்லோருமே தாம் போராளிகளாக முழுமைபெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அந்த உற்சாகத்துடன்தான் தொலைத்தொடர்பு முகாமுக்குத் திரும்பினார்கள்.
ஒரு சிலநாட்கள்தான் கடந்திருக்கும். எல்லா உற்சாகத்தையும் தகர்த்தெறியும் செய்தியொன்று முகாமுக்குள் பரவியது. “விடுதலைப்புலிகளின் பிரச்சார எழுத்துப்பிரதிகளை மதில்களில் ஒட்டிக்கொண்டிருந்த ஆறு இளைஞர்கள் சுழிபுரத்தில் வைத்து கழகத்தின்(PLOTE) உளவுப்படையால் கைதுசெய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.“ ரவி அதிர்ந்து போனான். அவனால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது எதிர்காலம் என்னவாக இருக்கும்? எமது இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது? ஏன் எதையுமே அவர்களுடன் வெளிப்படையாகப் பேசமுடியாதிருக்கிறது? என்று பல கேள்விகள் ரவியின் மனதில் எழுந்து, அவனை அலைக்கழித்தன.
அதன் பின்னான சந்ததியார் பிரச்சனை, தொடர்ந்த உட்பூசல்கள்… எல்லாமே கழகம் தமிழீழத்தை வென்று தரும் என்ற நம்பிக்கையை உடைத்தெறிந்தன. இறுதியில், உயிர்தப்பினால் போதும் என்ற நிலையில் சொல்லாத காதல், போராளிக் கனவு… எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்கு ஓடி விட ரவி தீர்மானித்தான். பொறுப்பாளர்கள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தைத் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு அராஜகம் புரிந்தவர்கள் மத்தியில் நேசம் மிகுந்தவர்களும் இருந்தார்கள். ரவி ஊர் வந்து சேர்ந்தான்.
ஊரிலும் ரவியின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கவில்லை. ‘தப்பியோடியவன்‘ என்ற பெயரில், இணைந்து கொண்ட PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பினாலேயே தேடப்பட்டுக் கொண்டிருந்தான்.
இந்த நிலையிலும் ரவி தப்பிப் பிழைத்து, சுவிசுக்கு வந்து சேர்ந்து விட்டது பெரும் அதிசயம். ரவியின், எதையும் ஆழ்ந்து, அறிவார்ந்து நோக்கும் தன்மை, தன்னம்பிக்கை, உறுதி… போன்றவை அந்த அதிசயத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இந் நாவல் ஓகஸ்ட் 2020 இல் விடியல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 220 பக்கங்களையும் 0 இலிருந்து 30 வரையான அத்தியாயங்களையும் கொண்ட இந்நாவலுக்கு விடியல் பதிப்பகத்தினால் பதிப்புரையும் ரவி அவர்களால் என்னுரையும் எழுதப் பட்டுள்ளன. அட்டைப்படம் ரவியின் மகள் ஆரதியினால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான படத்தை அவரது இன்னொரு மகளான நிறமி எடுத்துள்ளார். ISBN:978-81-89867-24-5
இதில் 71 பக்கங்களுக்கு அந்த ‘பி‘ முகாம் வாழ்க்கை பற்றி, விபரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினொரு அத்தியாயங்கள். ரவியின் தேர்ந்த எழுத்திக்களினூடு, ‘பி‘ முகாமும் அதைச் சுற்றியுள்ள சவுக்கம் தோப்பும் அங்கு நடைபெறும் அராஜகங்களும் வாசகரின் மனங்களில் காட்சிப்படிமங்களாகப் பதிந்து விடுகின்றன. உளன்றியில் தலைகீழாகத் தொங்கிச் சிதறிச் சின்னா பின்னமாகுவோர் ஒருவித அதிர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறர்கள்.
‘எனது கதையையே எழுதுகிறேன்‘ என்றும் இந்த நம்பிக்கைகளையெல்லாம் பின்தளம் கிளிசலாக்கியது. உயிர் தப்பி ஊர் வந்து சேர்தலே வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாகிப் போனது. (அத்தியாயம்:1, பக்கம்:12)
என்றும் ஆரம்பத்திலேயே ரவி குறிப்பிட்டு விட்டதால், இந்த ‘பி‘ முகாம் வாழ்க்கையிலிருந்து ரவி தப்பி விட்டார் என்பது வாசகர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை. ‘எப்படித் தப்பினார்?‘‘ என்ற கேள்வி கதை நெடுகிலும் கூடவே வந்து கொண்டிருக்கிறது.
நாவலில் ஊருப்பட்ட கதை மாந்தர்கள். அது ஒரு நாவலுக்குப் பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் இந்நாவல் ஒரு உண்மையின் சாட்சி. வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளனின் எழுத்தாக இல்லாமல் உள்ளிருந்து பார்த்தும் அநுபவித்தும் நொந்து, வெந்து போன ஒருவனின் வாக்குமூலம். அப்படிப் பார்க்கும் போது அத்தனை மாந்தர்களும் கதைக்குத் தேவையானவர்கள் தான்.
பின்தளம் என்னும் இந்தியாவில், ரவி போகுமிடமெல்லாம் வேம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வேம்புகள் ஒவ்வொன்றும் ரவியை அணைக்கின்றனவா, உறுத்துகின்றனவா அல்லது ஏங்க வைக்கின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் அவை ஒரு தாயைப் போல ரவியை வாஞ்சையுடன் நோக்குகின்றன. ஒரு குறியீடு போல நம்பிக்கையின் ஒளிர் போல ரவியை உற்சாகப்படுத்துகின்றன. சைபர் அத்தியாயத்தில் கூட ரவியின் சுவிஸ் வீட்டினுள்ளே அறையின் மூலையில் ஒரு வேப்பங்கன்று அசையாமல் நிற்கிறது.
இந் நாவலின் மூன்றாவது அத்தியாயம் ஒரு வேம்பு கதைப்பது போலப் படர்க்கையில் அமைந்துள்ளது. ரவியின் வீட்டு முன்றலில் வானத்துக்கும் தரைக்குமாய் தோகை விரித்திருந்த அந்த வேம்பு ரவியின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. ஆத்மார்த்தமாக ஒன்றியிருப்பது. அது சொல்லும் அந்தக் கதை உணர்வு பூர்வமானது. மனசைத் தொடுவது. குறிப்பாக ரவியின் அம்மாவின் உணர்வலைகளையும் மகன் போராடப் போய் விடுவானோ என்ற அச்சத்தையும் தவிப்பையும் வேம்பினூடாக ரவி விபரிக்கும் விதம் அற்புதமானது. ஆனாலும் இந்த அத்தியாயம் நாவலின் அமைப்பைக் குழப்புவது போலவே தோன்றுகிறது. இதை வேம்பு கதை சொல்வது போல இல்லாமல் வேம்புக்கும் தனக்குமான பிணைப்பை ரவியே சொல்வது போல அமைத்திருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்திருக்கலாம்.
போராட என்று எமது நாட்டு இளைஞர்கள் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் போன போதும் அதன் பின்னான காலங்களிலும் எல்லோரையும் விட துயரில் தோய்ந்து மனம் நைந்து போனவர்கள் அம்மாமார்கள் தான். அவர்களது சோகத்தை எழுத்தில் வடிக்க யாரிடமும் வார்த்தைகளில்லை. கதை நெடுகிலும் அம்மாவைப் பற்றிய அந்தச் சோகம் இழைந்தோடிக் கொண்டேயிருக்கிறது.
ரவியின் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ கவிதைத் தொகுப்பில் தோய்ந்து போயிருந்த சோகத்துக்கு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிப்பதுதான் காரணம் என்று எண்ணத் தோன்றியது. இந் நாவல் அந்தச் சோகத்துக்கு அது மட்டும் காரணமல்ல என்பதை உணர்த்தி நிற்கிறது.
ரவியின் சுவிஸ் வாழ்க்கையைக் கூறும் முதலாவது அத்தியாயம் வாசகர்களைக் கண்டிப்பாகக் கவர்ந்திருக்கும். துயரும் அழகும் நம்பிக்கையும்… என்று உணர்வோடொன்றியதொரு அத்தியாயம் அது.
அதிலே, மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரும் படியாக ரவி கூறுகிறார்,
மலையுச்சியொன்றில் சுற்றுலா விடுதியில் முதல் வேலை கிடைத்தது. வேலையும் அறையும் எனது உலகமாகியது. தனிமையில் இருந்தேன். அப்படியென்றும் இல்லை. அறையில் ஒரு பாடல் என்னுடன் சகவாசம் செய்தது. அப்போதெல்லாம் சி.டி இல்லாத காலம். கசற் இல் இரண்டு பக்கமும் இந்த ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். அதன் ஒலியை உதறி விடுகிற போது ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..‘ என்று அது பாடலாகிக் கொண்டிருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே நான் உறங்கிப் போன நாட்கள் பல. இன்றும் கூட அந்தப் பாடலைக் கேட்டால் நான் பழசாகி விடுகிறேன்.
மேலும் அழகாகத் தொடர்கிறார்,
மும்முனை என்று நேரடி மொழிபெயர்ப்பில் அழைக்கப்படுகிற அந்த முடிவில் ஒரு பெரிய பாறைக்கல் இருக்கிறது. உலகம் முடிகிற இடமாக அது தோன்றவில்லை. உலகம் உனக்காக விரிந்தே இருக்கின்றது என்பதாக அது பசுமை மேவிய இளங்காற்றை உயிர்ச்சுவாசத்திடம் தூதுவிட்டு வருடிக் கொண்டிருக்கும். அதில் நான் குந்தியிருக்கிற போது காலடியின் கீழ் பெரும் பள்ளமாகப் பதிந்திருக்கிற சரிவு ஓர் பச்சை ஏணை போலக் குழிவாகி மறுமுனை மலையுச்சியில் முடிந்திருக்கும். அந்த ஏணைக்குள் நீல ஏரி உறங்கிக் கொண்டிருக்கும். சுற்றிவர மலைகளதும் அது விரித்துப் போட்டிருக்கிற மலையடிவார மடிப்புகளினதும் பிடிக்குள் மரக்கூட்டங்களிடையே அழித்தழித்து நிறங்களால் வரையும் முகில்களைக் கண்டு இரசிக்கிற குழந்தையாய்ப் போவேன். (அத்தியாயம்:1 பக்கம்:13)
இதைப் போல நாவலில் பல உள்ளன. ரவியின் இயற்கையை ரசிக்கும் தன்மையும் அதைக் கவித்துமாக வெளிப்படுத்தும் மொழிநடையும் எளிமையான வார்த்தைப் பிரயோகங்களும் சமயத்தில் எள்ளல் கலந்த எழுத்துக்களும்… என்று அவை சுவாரஸ்யமாகவும் பிரமிப்பூட்டுபவையாகவும் வியக்க வைக்கின்றன. இருந்தாலும் இந்த முதலாவது அத்தியாயம் நாவலோடு பொருந்தியும் பொருந்தாமலும் நிற்பது போன்றதான ஒரு பிரமையையும் தோற்றுவிக்கின்றது. சற்று மெருகேற்றினால் இதுவே ஒரு அழகிய தனிச் சிறுகதையாகப் பரிணமித்திருக்கலாம்.
மற்றும் 35 ஆண்டுகாலமாகத் தன்னோடு கொண்டு திரிந்ததை கொரோனா காலத்தில் தொகுத்து நூலுருவாக்கி முடித்த அவசரம் ஆங்காங்கு நூலில் தெரிகிறது. ரவிக்கு உள்ள எழுத்தாற்றலுக்கும் எத்தனையோ நூல்களைத் தொகுத்த அனுபவத்துக்கும், ரவி இன்னும் கொஞ்சம் நேரமெடுத்துச் செயற்பட்டிருந்தால் நாவலின் அமைப்பு இன்னும் அழகாகவும் நேர்த்தியாகவும் அற்புதமாக அமைந்திருக்கும்.
இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலை இயக்கங்கள் பல தோன்றின. அவை கையெழுத்துப் பிரதிகளாகவும் அச்சுப்பிரதிகளாகவும் பலவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டன. வீடுவீடாகக் கொண்டு சென்று அவைகளை ஒரு ரூபா, இரண்டு ரூபா என்று விற்றன. அப்போதெல்லாம் அவர்கள் எந்த இயக்கத்திலிருந்து வருகிறார்கள் என்று நாங்கள் பார்க்கவேயில்லை. எங்கள் பிள்ளைகள், எங்கள் அண்ணமார், எங்கள் தம்பிமார், எங்களுக்குச் சுதந்திரத் தமிழீழம் எடுத்துத் தரப் புறப்பட்டிருக்கிறார்கள்… என்றுதான் அன்போடும் புனிதத்தோடும் அவர்களை நோக்கினோம். மிகுந்த மனநிறைவோடு அவைகளை வாங்கிப் படித்தோம்.
இப்போது எஞ்சியிருப்பது ஏமாற்றமும் வேதனையும் தான்!
சந்திரவதனா
18.01.2025