சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தினை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள்.
அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம்.
மாப்பிள்ளை ஜேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூண்டு வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம், எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே!
போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள். அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப் படேல்லை.
இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியதுதான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.
என்ன..! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும், இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரிச்சு வைச்சிருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருத்தன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.
கதைகளிலை வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையிலை கண்ட சங்கவிக்கு, ஜேர்மனி மாப்பிள்ளைதான் இனி தன்ரை புருசன் எண்டதை மனசிலை பதிய வைக்கிறதுக்குக் கொஞ்சக் காலங்கள் தேவைப்பட்டுது.
அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒண்டும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், நிழற்படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன, அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை, மற்றது.
ஜேர்மனிய சட்டதிட்டங்களும், பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலு பேராம். சங்கவி ராஜகுமாரர்களை எல்லாம் களைஞ்சு போட்டு, ஜேர்மனிய மாப்பிள்ளையை மனசுக்குள்ளை குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்ட படியால், பிறகு ஜேர்மனி மாப்பிள்ளையையும் மனசிலை இருந்து களைஞ்செறிய அவளுக்குத் துணிவு வரேல்லை.
இனி என்ன செய்யிறது! ´கிரிமினல் குற்றவாளி´ என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போற மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐஞ்சு வருசம் காத்திருக்க வேண்டி வந்திது.
இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராத படியால் மாப்பிள்ளையாலை ஜேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது.
சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32 ஐத் தொட்டிட்டுது.
ஜெயிலிலை இருந்து வெளியிலை வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காண்டி சிங்கப்பூரை நோக்கின பயணத்துக்கு ஆயுத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.
அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டிட்டாள். அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போலை மிகவும் இளமையாய் கனவுகளோடை காத்திருந்திச்சுது.
மாப்பிள்ளை எல்லாச் செலவுகளையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கிடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது.
எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும், -அவளுக்கு இப்ப 26 ஆச்சு – அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையுந்தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிதிச்சுச் செத்திட்டார்.
சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருந்தது. ஆனால் கலியாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் எண்டு ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக்கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு, “இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ” எண்டு கேக்கேலுமே!
சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டுமே தெரியாது. வந்ததுக்கு ஒண்டையும் பார்க்கவும் இல்லை. எதையும் அறியோணும், பார்க்கோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்திச்சுது.
மீண்டும் மீண்டுமாய் அரசகதைக் கதாநாயகர்கள் நினைவிலை வந்து போச்சினம். கச்சை கட்டின ராஜகுமாரிகளைப் போலை தன்னைக் கற்பனை செய்து கொண்டாள். அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்திலை, தான் குளிச்சுக் கொண்டிருக்க குதிரையிலை வந்த மாப்பிள்ளை, தன்ரை அழகைக் கள்ளமாய் ரசிப்பது போலை… சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து… தனக்குள்ளை தானே நாணி..!
குளிச்சு, சேலை உடுத்தி, முகத்தை நேர்த்தியாக்கிப் போட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூண்டு மணித்தியாலங்கள். ´சே… இந்த நேரம் ஏன் இப்பிடி நத்தை மாதிரி நகருது?´ காத்திருக்கிறது சுகமானதுதான். ஆனால் எத்தினையோ வருசமாக் காத்திருக்கிற பொழுது தோன்றாத அவஸ்தை இறுதி நாளிலை தோன்றிறது விசித்திரந்தான். நேற்று இரவிலையிருந்து சங்கவிக்குள்ளை இன்னதெண்டு சொல்ல முடியாத போராட்டம். ´இன்னும் காத்திருக்க வேணுமோ´ எண்ட ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி ´இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே!´ எண்ட மலைப்பு.
மாப்பிள்ளையின்ரை சொந்தங்கள், அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ், ஜேர்மனி, பாரிஸ் எண்டு பரந்திருக்கினம். அவையளும் எல்லாரும் இண்டைக்கு சிங்கப்பூர் வந்து, சங்கவியைப் பார்க்கச் சேர்ந்து வருவதாத்தான் திட்டம்.
சங்கவி பொறுமை இழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டீட்டுது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளிச்சு, வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியா இருந்திச்சினம்.
´ஆ… வந்திட்டினம்.´ சங்கவியின்ரை கால்கள் இரண்டும் பின்னிப் பிணைஞ்சு தடுமாறி, முடியேல்லை அவளாலை. ஓடீட்டாள் அறைக்குள்ளை.
உள்ளையிருந்து திறப்புத் துவாரத்துக்குள்ளாலை வாறவயளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ´எங்கை, மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்? வரேல்லையோ?´ மனசு படபடத்திச்சு. இதயம் அடிச்சுக் கொண்டு இருந்திச்சு. வண்ண வண்ணச் சீலையளிலை பொம்பிளையள், சிட்டுக்களாய் குழந்தையள்… ´இவர் மட்டும் எங்கை?´
“சங்கவீ..! வெளீலை வா” அம்மா கூப்பிட்டாள். சங்கவி மெல்லிய ஏமாற்றத்தோடை வெளியிலை வந்தாள். எல்லாரின்ரை பார்வையளும் சங்கவிக்கு மேலை மேய்ஞ்சு, பிறகு பார்கவிக்கு மேலை பாய்ஞ்சன. சங்கவியின்ரை கண்களோ மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. ம்..கும் காணேல்லை. “எங்கை, அவர் வரேல்லையோ?” வெட்கத்தை விட்டிட்டுக் கேட்டிட்டாள்.
இப்ப எல்லாரின்ரை பார்வையளும் ஒருமிச்சு அவற்றை பக்கம்… அதுதான் ´கொல் கொல்´ எண்டு இருமிக் கொண்டிருந்த ஒருவரின்ரை பக்கம் திரும்பின. ´இவர்தானோ அவர்?!´ சங்கவியாலை நம்பவே முடியேல்லை. விரிஞ்சிருந்த கற்பனைச் சிறகுகள் சட்டென்று மடிஞ்சன. ஒரு கணந்தான். சுதாரிச்சிட்டாள்.
´38வயசு மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இதேன் ஏறேல்லை? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ! வருத்தம் பிடிச்சிருக்குந்தானே! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்… ஆர் நினைச்சது! இப்பிடிக் கேவலமாப் போயிருப்பார் எண்டு.´ மனசைச் சமாளிச்சாள்.
ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அண்டைய பொழுதும் இருண்டு கொண்டு போச்சுது. அதுக்கிடையிலை மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்திச்சினம். மாப்பிள்ளையின்ரை அக்கான்ரை புருசன், மாமாவை வெளியிலை வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.
திரும்பி வரக்கை மாமா பேயறைஞ்சது போலை வந்தார். அவையள் ஹொட்டேல் புக் பண்ணியிருக்கிறதாச் சொல்லிப் போட்டுப் போயிட்டினம். சங்கவி எதிர்பார்த்த போலை மாப்பிள்ளை அவளோடை தனியா ஒண்டுமே கதைக்கேல்லை. கடிதங்களிலை கதைச்ச மாப்பிள்ளை இப்ப சற்று அந்நியப் பட்டுப் போனார் போலை உணர்ந்தாள். மாமா நிறையப் பேசேல்லை. கவலையா இருந்தார்.
சங்கவிக்கு, மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போன போலை ஒருவித வெறுமையா இருந்திச்சு. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.
இரவு நெடு நேரத்துக்குப் பிறகு, மாமா அம்மாட்டை குசுகுசுக்கிறது சங்கவியின்ரை செவிகளிலை நாராசமாய் விழுந்திச்சு.
“35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான்காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்.”
சங்கவிக்கு, வானம் தரையிலை இடிஞ்சு விழுறது போலையொரு பிரமை.
´எனக்கு மட்டுந்தான் வயசு ஏறியிருக்கோ, அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ, 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப் பொம்பிளை தேவைப்படுதோ..?´ நாடி, நரம்பெல்லாம் புடைச்சு, கோபம் அனல் கக்கிச்சுது. ´நாளைக்கு வரட்டும் கேட்கிறன்.´ சங்கவி மனசுக்குள்ளை கறுவிக் கொண்டாள்.
“சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும்” எண்டு அம்மாவும் மாமாவுமாத் தீர்மானிச்சது அவளின்ரை காதுகளிலை விழேல்லை.
சந்திரவதனா
பங்குனி-2002