நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.

அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.

அவனது தலையைத் தடவி "எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?" என்று கேட்டேன். "ஒன்பதாவது" என்றான்.  "பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்" என்றான் .

காவியங்கள் மனதில் வந்தது. அவன் பரதன் தான்... "தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும்.  நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்" என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .

அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். "சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்" என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில்  வைத்து இருந்தோம். "அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ" என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து "அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்" என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.

சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் "காவலுக்கு தானும் செல்லவேண்டும்"(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.

கடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் "இனி உனக்கு கடை சரிவராது" என்று. "எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.  "வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது" என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன்.  "சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ" என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .

"இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்" என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. "நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை" என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். "சரி கடையை நடத்து" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

பின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.

மொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.

இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா

என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.

ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!

- சதாவின் நாட்குறிப்பு ..

Quelle - மனிவன்னன் எஹம்பரம்

Related Articles