எனது அன்புத் தங்கை உமையாம்பிகையின் நினைவாக...

Umaiyampikai & Sivagamasunthary, 1941எமது பெற்றோருக்கு நாம் நான்கு பிள்ளைகள். நாம் பருத்தித்துறையில் உள்ள ஆத்தியடி என்னும் ஒரு அழகிய ஊரில் பிறந்து வளர்ந்தோம். எங்கள் அம்மாவின் தந்தை பெயர்பெற்ற வைத்தியர், வேலுப்பிள்ளைப் பரியாரியார். அம்மாவின் தாயார் வேதநாயகி. நாங்கள் அம்மாவின் தந்தையை 'அப்பா' என்றும், அம்மாவின் தாயை 'பெத்தம்மா' என்றும் அழைப்போம்.

ஆத்தியடி முழுக்க எங்கள் அப்பாவினதும், பெத்தம்மாவினதும் சொந்தங்கள்தான். எங்களது அம்மா அவர்களுக்குக் கடைசிப் பிள்ளை. அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் அன்னபூரணி(பெரியம்மா), புரொக்றர் பரம்சோதி(மூத்தமாமா), சேவையர் திருநாவுக்கரசு(இளையமாமா). எங்கள் பெரியம்மா அன்னபூரணிக்கு ஒரேயொரு மகன்தான். அவர் பாலசுப்ரமணியம். மூத்தமாமா பரம்சோதிக்கு பிள்ளைகள் இல்லை. இளையமாமா திருநாவுக்கரசுவுக்கு ஒரு மகளும், மூன்று மகன்மாரும். இளையமாமாவின் மகள் பிறேமாவதி திருமணமாகி ஒரு குழந்தையுடன் அகாலமரணம் அடைந்து விட்டாள்.

எமது வீட்டுக்கும், இளையமாமா வீட்டுக்கும் இடையே ஒரு செம்பருத்தி வேலிதான் இருந்தது. அருகருகே இருந்ததால் அவர்களுடன் மிகமிக அந்நியோன்னியமாகப் பழகினோம்.

இதுதான் எமது பூர்வீகம்.

எங்கள் ஐயா, அம்மாவிற்கு நாங்கள் ஐந்து பிள்ளைகள். நான்தான் மூத்த பிள்ளை. அடுத்தது தம்பி குமாரசாமி. குமாரசாமிக்கு அடுத்தது தங்கை உமையாம்பிகை. அதற்கும் அடுத்தது தம்பி வேல்முருகு. கடைசிப் பிள்ளை ஞானாம்பிகை நாய் கடித்ததால் சின்ன வயதிலேயே இறந்து விட்டாள். நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் பிளங்கி வந்தோம்.

ஒரு கட்டத்தில் எனது தம்பிமார் இருவரும் வேலையாகி கொழும்புக்குப் போய் விட்டார்கள். எனது தங்கை உமையாம்பிகையும், நானும் வீட்டில் அம்மா ஐயாவுடன் இருந்தோம். நாங்கள் இருவரும் இணைபிரியாது ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு வளர்ந்து வந்தோம்.

எனக்கு எனது 22வது வயதில் 1956ம் ஆண்டு மார்கழி மாதம் 13ந் திகதி விவாகம் நடைபெற்றது. அதன் பின் னும் என் தங்கை உமையாம்பிகை என்னில் மிகுந்த அன்போடு எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஓடியோடிச் செய்து தருவாள். என்ன தேவையென்றாலும் பார்த்துப் பார்த்து பூரிப்போடு ஆவன செய்வாள். எனது கணவருடனும் மிகுந்த அன்போடு பழகுவாள்.

எனது கணவர் கொழும்பில், புகையிரதநிலைய அதிகாரியாக க் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அங்கு அவர் ஒரு வீடு பார்த்து எடுத்து விட்டு, என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்கென 1957ம் ஆண்டு மாசி மாதம் 15ந் திகதி(15.02.1957) வீடு வந்தார். எனது தங்கை ஓடி ஓடி எனக்குத் தேவையானவைகளை அம்மாவோடு சேர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். போகும் நேரம் வந்தது. நான் வெளிக்கிட்டு கார் நிற்கும் இடத்திற்குக் கிட்ட வர, அவள் ஓடி வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். கணவரோடு போகும் சந்தோசம் ஒரு புறம், தங்கையைப் பிரிவதின் துயர் இன்னொரு புறம். நான் அல்லாடினேன். எனது துயரை விட எனது தங்கையின் துயரைத்தான் என்னால் தாங்க முடியாதிருந்தது. அப்பா 'அடுத்த மாசம் நான் அக்காவைக் கூட்டிக் கொண்டு வாறன் ' என்று சொல்லி, எனது தங்கையை ஒருவாறு சமாதானப் படுத்தி, என்னைப் பிரித்துக் கூட்டிச் சென்றார்.

நாம் இருவரும் 22 வருடங்களாக ஒரு நாளும் பிரியாது இணைந்து அன்போடு வாழ்ந்தோம். அந்தப் பிரிவையும், அன்று அவள் அழுத அழுகையையும் என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

நான் கொழும்பில் இருக்கும் போதும் எனக்குத் தேவையான பொருட்கள், சாப்பாடுகள் என்று எல்லாவற்றையும் அம்மாவோடு சேர்ந்து, செய்து அனுப்பி வைப்பாள். அடிக்கடி கடிதம் எழுதுவாள். அவள் பிரிவு என்னையும் பெரிதும் வாட்டியது.

அதற்கிடையில் நான் கர்ப்பமானேன். அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் அம்மாவிடம் விட்டார். அப்போது எனது தங்கை என்னை எவ்வளவு அன்புடன் பராபரித்தாள். இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

எனக்கு மூத்தமகன் ராஜன் 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதி (30.01.1958)பிறந்தான். அவனை பால் கொடுக்க மட்டுமே அவள் என்னிடம் விடுவாள். குளிக்க வார்ப்பது, அவனைச் சோடனை செய்வது என்று எல்லாமே அவள்தான் செய்வாள். அவன் என்னை 'அக்கா' என்றுதான் கூப்பிடுவான். அப்ப பாருங்களேன், அவன் எப்படி அவளோடு ஒன்றி விட்டிருந்தான் என்று.

பின்பு இரண்டாவதாக எனக்கு மகள் வதனா உருவானாள். அப்போது எனது கணவர் மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. அங்குதான் நான் கணவருடன் இருந்தேன். ஒரு நாள் நான் தவறுதலாக வீழ்ந் து விட்டேன். மேல் மாடியிலிருந்து கீழ்மாடிக்குரிய படிகளில் உருளத் தொடங்கியதில் என் நினைவையும் இழந்து விட்டேன். உடனே எனது கணவர் என்னை முதலில் அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பின்னர் எனது அம்மாவிடம் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அம்மாவோடு சேர்ந்து எனது அருமைத் தங்கை ஆவன செய்து மந்திகை மருத்துவமனையில் எனக்குப் பிரசவம் நடந்தது. வதனா எட்டு மாதத்திலேயே பிறந்து விட்டதால், சரியாக ஒரு மாசம் மூச்சைத் தவிர வேறெந்தச் சத்தமும் இருக்கவில்லை. அந்த நேரம் எனது தங்கை பட்ட பாட்டையும், வேதனையையும் என்னால் மறக்கவே முடியாது. வதனா கண் முழித்து கைகால் ஆட்டிச் செயற்பட த் தொடங்கியதும் எனது தங்கை வதனாவை அள்ளி எடுத்து, அரவணைத்து எவ்வளவு பேருவகை கொண்டாள். வதனாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் தானே செய்து, வதனாவையும் என்னையும் அவளே பராபரித்தாள். என்னால் அவள் செய்தவைகளை மறக்கவே முடியாது.

வதனாவும் என்னை 'அக்கா' என்றே கூப்பிடுவாள். `என்னை அம்மா என்று கூப்பிடுகிறார்கள் இல்லையே´ என்று எனக்கு ஒரு பாட்டில் அழுகையாக இருந்தாலும், தங்கையின் அன்பில் நான் திளைத்திருப்பேன்.

எனக்கு மூன்றாவதாக மகன் பார்த்திபன் பிறந்த போது தங்கைக்கென்று அம்மா ஒரு வீடு கட்டி அங்கு போய் விட்டார்கள். அந்த வீடும் அருகிலேயே என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திப்போம்.

அதன் பின், எனது தங்கைக்கு பல பிரச்சனைகளின் மத்தியில் விவாகம் நடந்தது. விவாகம் முடிந்த உடனேயே அவள் கணவரோடு மாங்குளம் போய் விட்டாள். அவர்கள் அவளை எம்மிடம் விடுவதில்லை. கனகாலம் அவளைக் காணாமல் கலங்கி அழுதோம். காலங்கள் மாறி அவள் மீண்டும் எம்மிடம் வந்த போது அவளுக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுடன் அவள் தனது ஆத்தியடி வீட்டில் வாழத் தொடங்கினாள். ஆனால் அவள் வரும் போது மிகுந்த சுகவீனமுற்றிருந்தாள். அவளின் சுகவீனத்திற்கு அம்மா வைத்தியங்கள் செய்து ஓரளவு மாற்றினா. பின்னர் படிப்படியாக அவளுக்கு இன்னும் குழந்தைகள் பிறந்தன.

அவளது குழந்தைகளும் எனது குழந்தைகளும் ஒன்றாக விளையாடுவார்கள். சண்டை பிடிப்பார்கள். ஒன்றாக பாலர்பாடசாலைக்குச் செல்வார்கள். அந்தச் சந்தோசங்களும் ஒரு பொழுதில் நின்று போனது. அவள் மீண்டும் பிள்ளைகளுடனும் கணவருடனும் மாங்குளத்துக்குப் போய் அங்கேயே வாழத் தொடங்கினாள்.

அதன் பின் அடிக்கடி நாங்களும் அவர்களும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போயின. அவ்வப்போது அவள் ஆத்தியடிக்கு வருவாள். நாங்களும் அவளிடம் மாங்குளம் போய் 'ஓரிரு நாட்கள் தங்கி நின்று சந்தோசித்து வருவோம். எனது கணவர் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது அவளது பிள்ளைகள் வந்து 'பெரியப்பா' என்று அளவளாவி அவரைத் தங்கள் வீட்டுக்கும் கூட்டிக் கொண்டு போவார்கள்.

அதன் பின், கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவளது மகன் சேகர் ஜெர்மனிக்குச் சென்றான். அங்கு தான் ஒரு நிலைக்கு வந்ததும், தனது சகோதரங்களை ஒவ்வொருவராக அங்கு கூப்பிட்டான். தங்கையின் கணவரும் ஒரு பொழுதில் இறந்து போக அவளும் 1998 இல் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தாள். நானும் அப்போது பல துன்பங்களின் மத்தியில் ஜேர்மனிக்கு எனது பிள்ளைகளிடம் வந்து விட்டேன்.

நான் Mannheim இலும், எனது தங்கை Pforzheimஇலும் இருந்தோம். இரு நகரங்களும் கிட்டக் கிட்ட இருந்ததால் எனது மகன் பார்த்திபன் என்னை அடிக்கடி அவளிடம் கூட்டிப் போவான். அவளது பிள்ளைகளும் இயலுமான பொழுதுகளில் அவளை என்னிடம் கூட்டி வருவார்கள். அந்தச் சந்திப்புகள் எல்லாமே மிகவும் சந்தோசமான சந்திப்புகளாகவே இருக்கும்.

எல்லாச் சந்தோசங்களும் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லைத்தானே. எனக்கு இயலாமை கூடிக் கொண்டு வர 2016இல் எனது மகள் வதனா என்னைத் தனது நகரான Schwaebisch Hallக்கு எடுத்து விட்டாள். அது எனக்கு பெரும் ஆறுதலான, நல்ல விடயமாக அமைந்திருந்தாலும் அதன் பின் எனது அன்புத் தங்கையை அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து போயின. எப்போதாவதுதான் நான் அவளிடம் போவேன். அதே போல் அவளும் என்னிடம் வருவாள். அது மிக மிக அபூர்வமான சந்திப்புகளாகத்தான் இருக்கும். ஆனாலும் நாங்கள் தொலைபேசியில் நிறையக் கதைப்போம். சில சமயங்களில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கதைப்போம்.

இப்போ சில மாதங்களின் முன்புதான் சிறீலங்காவில் உள்ள மகளிடம் போய் தமிழ் வைத்தியம் செய்து கொண்டிருந்தாள். இப்படித் திடீரென்று எங்களையெல்லாம் விட்டுப் போவாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இனி எங்கு நான் என் அவளைக் காண்பேன்!

தன் சொந்த மண்ணிலேயே, என் இனிய தங்கை நிம்மதியாக நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் (06.09.2020). இனசனம் கூடி அவளுக்கு ஆக வேண்டிய கடமைகளைச் சேய்து நல்ல சுகமே போய்ச் சேர்ந்து விட்டாள். இத்தனை துன்பத்திலும் அது எனக்கு ஒரு வித மன நிம்மதியைத் தருகிறது. அவளது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

- அக்கா சிவா தியாகராஜா
(சிவகாமசுந்தரி தியாகராஜா)
12.09.2020

Drucken   E-Mail

Related Articles

அம்மாவும் வாசிப்பும்

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

பெருநினைவின் சிறு துளிகள்

நானும் காத்திருக்கிறேன்

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி