நான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன்

Shalini Aaryaநான் விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகத்தை இடுக்கிக் கொண்டு எங்கள் வீட்டின் தகரக் கூரைக்கு ஒரு ஏணிப்படியில் ஏறினேன். அப்போது எனக்குப் பத்து வயது. அப்போதுதான் என் முழுக் குடும்பத்துக்கும் சமையல் செய்து முடித்திருந்தேன். அது என் தினசரிக் கடமை. எங்கள் வீட்டுக் கூரையிலிருந்து எங்கள் சேரி முழுதையும் பார்க்க முடியும். நாங்கள் வசித்த சேரி இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் இருந்தது. ஆனால் அது என்னைக் கூரைக்கு இழுத்துச் செல்லவில்லை. எங்கள் வீட்டில் விளக்கு இல்லாத்தால் புத்தகம் படிப்பதற்கு எனக்கு சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவதற்கு அந்தப் படிப்பு வழக்கம்தான் பயணச்சீட்டாக இருந்தது. ஆனால் அது எனக்கு அப்போது தெரியாது.

என்னுடைய தந்தை - ஒரு பாட்டாளி - என்னை முதலில் பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. என்னுடைய தம்பி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அவனைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும். எனவே, ஒரு நாள், எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, நான் அவனைப் பின்தொடர்ந்து சென்று ஆசிரியையின் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஆசிரியை என்னை கவனித்ததும் வீட்டிற்கு திரும்ப அனுப்பினார். ஆனால், அடுத்த நாள் என்னுடைய தந்தையைக் கூப்பிட்டு என்னையும் பள்ளியில் சேர்க்குமாறு கூறினார். என்னுடைய மகிழ்ச்சியைக் அதிகரிக்கும் விதமாக, என்னுடைய தந்தையும் சரி என்றார்.

படிக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கு இருந்தது. மற்றும் பசியின் வேதனை இருந்தாலும் பல நாட்கள் நான் பள்ளிக்கு சென்றேன் – நான் விரைவாக வகுப்பின் சிறந்த மாணவியாக முன்னேறினேன்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் போது, என்னுடைய தந்தை எங்களுடைய சுற்றுப்புறத்திலுள்ள செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் சிறந்த பள்ளி ஒன்றில் என்னைச் சேர்த்தார். அங்கும் நான் தான் வகுப்பின் சிறந்த மாணவியாக இருந்தேன். ஆனால் என்னை சேரியில் இருந்து வரும் குழந்தை என்பதால், என்னுடைய வகுப்பிலுள்ள மாணவர்கள் மிகவும் மோசமாக நடத்தினர். மேலும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினாலோ என்னவோ நான் மிகவும் குள்ளமாக இருந்ததால், நான் உயிரியல் ஆய்வுக்கூடத்தில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதற்கு நாற்காலி மேல் நிற்கும் தருணங்களில் மிகவும் சங்கடத்துக்குள்ளானேன்.

நான் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்றதும், நான் ஒரு பொறியாளராக விரும்பினேன். நான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் என்னுடைய தந்தை மிகவும் ஆவலுடன் இருந்தார். ஆனால் பொறியியல் ஆண்களுக்குரியது என்பதால் என்னைப் படிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக நான் உணவு அறிவியலைப் பயில வேண்டும் என்றும் அவர் கூறினார். என்னுடைய கடைசி விருப்பப் பாடமாக தான் உணவு அறிவியல் இருக்கிறது என்று ஆரம்பத்தில் எதிர்வினையாற்றினேன். குழந்தைப்பருவத்திலிருந்து என்னுடைய குடும்பத்தினருக்கு உணவு தயார் செய்து கொடுத்ததால், மற்றவற்றை விட உணவு சமைப்பதை நான் மிகவும் வெறுத்தேன்.

இருந்தாலும் உணவு அறிவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தேடுத்து படிக்க ஆரம்பித்தேன். உணவு அறிவியலும் அவ்வளவு மோசமில்லை என்பதை நான் விரைவில் கண்டுபிடித்தேன். அதுவும் உண்மையான அறிவியல் தான் - வேதியியலுக்கு ஒப்பான - அனுமானத்தை சோதனை செய்வதும் பரிசோதனை செய்வதும் உள்ளடங்கியிருந்தது. விரைவிலேயே நான் இணக்கமாகிவிட்டேன்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, நான் வளாகத்திற்கு பக்கத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்தேன். என்னுடைய படிப்பிற்கான செலவையும் பிற செலவுகளையும் என்னுடைய தந்தை எனக்காக வாங்கிய கல்விக்கடனின் மூலமாகவும், நான் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றியதால் வந்த வருமானத்தின் மூலமாகவும் செலுத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய அறையில் விளக்கு இருந்தது. அந்த விளக்கின் அடியில் என்னால் படிக்க முடியும் என்பதை நான் நன்றியுடன் எண்ணிக் கொண்டேன் - விளக்கு என்ற ஒன்றை என்னால் ஒரு போதும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

சில வருடங்கள் கழித்து, உணவு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அந்தத் துறையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன் - சேரிகளில் இருந்து தொடங்கி பல மைல்கற்களைத் தாண்டி வந்ததைப் போல உணர்ந்தேன். ஆனால் சிறிது காலத்திற்கு பின்னர், நான் ஒரு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றத் துவங்கியதால், என்னுடைய வேர்களுக்கே கொண்டு செல்லப்பட்டேன். இந்தியச் சேரிகளில் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைக் களைவதற்காக பணிபுரிந்தேன். அந்த நிறுவனத்திலிருந்த பிரதிநிதிகள் என்னை முதன்முதலில் அணுகிய போது, ” நீங்கள் சேரிகளுக்கு சென்று, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாட வேண்டும்” என்று நான் இதுவரை செய்யாத விசயம் போல என்னிடம் கூறினார்கள். “அது ஒன்றும் பிரச்னையில்லை. நான் சேரிகளில் வளர்ந்தவள் தான்” என விடையளித்தேன்.

அந்த நிறுவனத்தினுடனான எனது பணியின் ஒரு பகுதியாக, நான் வளரும் போது ஒவ்வொரு நாளும் செய்த இந்தியாவின் தட்டை ரொட்டியான சப்பாத்தியின் உட்பொருட்களை மாற்றியமைத்தேன். இது ஒவ்வொரு வீட்டிலும் உண்ணப்படும் பிரதான உணவு என்பதால், ஏழை மக்களின் உணவில் அதிகமான ஊட்டச்சத்தை அறிமுகப்படுத்த சப்பாத்தி தான் சிறந்ததொரு யுக்தியாக இருக்கும் என உணர்ந்தேன். நான் மூலப்பொருட்களைப் பரிசோதித்து, கோதுமை மாவிற்கு பதிலாக அதிக தாதுக்களையுடைய, அதிக புரதங்களையுடைய மற்றும் அதிக நார்ச்சத்துகளையுடைய உள்நாட்டில் வளர்க்கப்படும் தானியங்களை உபயோகித்து ஒரு செய்முறையை உருவாக்கினேன்.

நான் சப்பாத்தியை வைத்து வேலையைத் தொடங்கியதும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் என்னைக் கண்டு எள்ளி நகைத்தனர். அவர்களைப் பொருத்தவரை அதில் அதிக அறிவியலோ புதுமையான கண்டுபிடிப்புகளோ இல்லை என்று எண்ணினர். ஆனால் அவர்களுடைய எண்ணத்தை தவறென்று நான் நிரூபித்தேன். எனது ஆராய்ச்சிப் பணி ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றதால், பல நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், அரசாங்க நிறுவனங்களும் என்னுடைய நிபுணத்துவத்தை நாடின.

என்னுடைய வாழ்க்கையில் நான் வறுமையை, பசியை மற்றும் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் அவற்றை என்னைப் பின்னோக்கித் தள்ள அனுமதித்ததில்லை. நான் தடைகளைத் தகர்த்து அவற்றிடம் படிப்பினைகளைக் கற்றதால், என்னால் முன்னோக்கி நகர முடிந்தது. என்னுடைய வாழ்க்கைக் கதையின் மூலம் மற்றவர்கள் உத்வேகத்தைப் பெறலாம். அவர்கள் எந்த விதமான சவால்களைச் சந்தித்தாலும், நிச்சயம் விடாமுயற்சியால் வெற்றி காண முடியும் என்று நான் நம்புகிறேன்.

https://www.sciencemag.org/careers/2020/07/i-grew-slums-india-now-i-m-scientist

- ஷாலினி ஆர்யா
- தமிழாக்கம்: பிரியதர்ஷினி ராஜ்.ஆர்.எல்

Quelle: https://bookday.co.in/i-grew-up-in-the-slums-of-india-i-am-a-scientist-now-shalini-arya/

Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை