காஸ்ரோ

Hauptkategorie: Blogs பதிவுகள்/Blogs/ Zugriffe: 2589
கஸ்ரோ, முத்தழகன், மேஜர் கிண்ணி, வீ.மணிவண்ணன், கேர்ணல் சார்ள்ஸ்எனக்கு முன்னால் சில அடிகள் இடைவெளியில், ஒரு கதிரையில் காஸ்ரோ (வீ.மணிவண்ணன்) அமர்ந்திருந்தார். கஸ்ரோவுக்கு இடுப்புக்குக் கீழே இயக்கமில்லை என்பதை நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன். ஒரு விடயத்தைக் கேள்விப்படுவதற்கும் நேரே பார்ப்பதற்கும் இடையில் உள்ள பரிமாணங்கள் வேறு வேறு.

இடுப்புக்குக் கீழே உணர்வுகள் இல்லாமல், சிறு சிறு விடயத்திற்கும் மற்றையவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் இந்த வாழ்வு எப்படி இருக்கும்? நான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனது எண்ணங்கள் சுற்றிச் சுற்றி கஸ்ரோவின் உடலைப் பற்றியே இருந்தன. அவரைப் பார்க்க மலைப்பாகக் கூட இருந்தது. அவர் இருந்த கதிரைக்குக் கீழே வயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது ஒரு வாழ்வா என்ற யோசனை கூட வந்தது. அவரோ தனக்கு இடுப்புக்குக் கீழே இயக்கமே இல்லை என்பதை மறந்தவர் போல சிரிப்பதும் பகிடி விடுவதும் என்று மிகவும் கலகலப்பாகக் கதைத்துக் கொண்டிருந்தார்.

முதல் நாளே அவரிடம் போவதாக இருந்தோம். கடற்படைத்தளபதி சூசை அவர்களிடம் போகும் போது வழியில் காஸ்ரோ அவர்களின் முகாமுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒரு தனிப்பட்ட தேவை வந்தது. கணவரும் பிள்ளைகளும் வெளியில் வாகனத்துள் இருக்க. துப்பாக்கி ஏந்திய படி நின்ற, மெய்க்காப்பாளர்களில் ஒருவனான முத்தழகன்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றான்.

புறப்படும் போது அன்றிரவு தன்னிடம் கண்டிப்பாக வந்து போக வேண்டும் என்று காஸ்ரோ எங்களுக்குப் பணித்தார். நாமும் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி விட்டே புறப்பட்டோம். கஸ்ரோவுக்கு எனது கணவரை ஊரிலேயே தெரியும். அவரது நகைச்சுவைகளையும் நன்கு பிடிக்கும். நாங்கள் பிள்ளைகளுடன் வன்னிக்கு வந்து கிளிநொச்சி, வெண்புறா செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கியிருக்கிறோம் என்பதை அறிந்ததும், வெண்புறா வரை வந்து வாகனத்தில் இருந்து இறங்காமலே, கண்ணாடியைக் கீழிறக்கி விட்டு மிகுந்த சந்தோசமாக எம்மோடு கதைத்து விட்டுச் சென்றார். எங்கள் மூத்தமகனைப் பார்த்து „Body builder போல இருக்கிறார். இவரைப் போல ஆட்கள்தான் எங்களுக்குத் தேவை“ என்றும் பகிடியாகச் சொல்லி விட்டுச் சென்றார்.

கடற்படைத் தளபதி சூசை அவர்களிடம் சென்று நேரத்துக்குத் திரும்ப முடியாததால் சொன்ன படி அன்று காஸ்ரோ அவர்களிடம் செல்ல முடியாது போய் விட்டது. அடுத்த நாள் வருவதாகத் தகவல் அனுப்பியிருந்தோம்.

„நேற்று வாற எண்டு சொல்லிப் போட்டு ஏமாத்திப் போட்டிங்கள். சாப்பாடெல்லாம் செய்து முடிஞ்சாப் போலைதான் சூசை யிட்டை இருந்து தகவல் வந்திச்சு… உங்களுக்குப் பிடிக்கும் எண்டு பெரிய வடையெல்லாம் சுட்டு வைச்சனாங்கள்“ என்றார் சற்றுக் கவலையுடன் „எல்லாம் வீணாப் போட்டோ?“ கணவர் கேட்டார்.

„எங்கை வீணாகிறது? நாங்களே சாப்பிட்டிட்டம்“ என்றார்.

„எங்கடை பெயரிலை உங்களுக்கு மகா விருந்து“ என்றார் கணவர்.

கஸ்ரோ சிரித்துக் கொண்டே „வடை இல்லை எண்டு கவலைப் படாதையுங்கோ. வந்து கொண்டிருக்குது“ என்றார்.

அங்கு முத்தழகன், புரட்சி... என்று அழகிய பெயர்களில் இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நின்றார்கள். இன்னும் சிலர் ஓடியாடி வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள்.

கதைகளின் போது "இங்கு பெண்களே இல்லை. எல்லா வேலைகளையும் ஆண்கள்தான் செய்கிறார்கள். வடையைக் கூட அவர்கள்தான் சுடுகிறார்கள்" என்றார் காஸ்ரோ.

மேஜர் கிண்ணி பற்றி தான் எழுதிய புத்தகத்தில் கையெழுத்திட்டு அன்போடு எனக்குப் பரிசாகத் தந்தார்.

Col. Charlesஅப்போது வெளியில் இருந்து ஒருவர் மிகச் சாதாரண உடையில் வந்து எங்களின் முன் இருந்த கதிரையில் மெல்லிய முறுவலுடன் அநாயசமாக அமர்ந்தார். என் தம்பி மொறிசின் வயது இருக்கலாம் போலிருந்தது.

"அக்கா, என்னை ஞாபகமிருக்கோ?" கேட்டார்.

எங்கோ அவரைப் பார்த்திருக்கிறேன் போலத்தான் இருந்தது. இருந்தாலும் யாரெனத் துளியும் ஞாபகப்படுத்த முடியாதிருந்தது. அது மிகுந்த சங்கடமாகவும் இருந்தது.

சமாளித்தபடி „இங்கை எல்லாரும் ஆயுதங்களோடை நிக்கினம். நீங்கள் இப்பிடி சிவிலில் வந்திருக்கிறிங்கள். நீங்கள்… ஆர்?“ கேட்டேன். „நான் உங்கடை வீட்டையெல்லாம் வாறனான் அக்கா. மொறிசோடை இருந்தனான். இப்ப உங்களைப் பார்க்கத்தான் வந்தனான்“ என்றார். எனக்கு பயங்கரச் சங்கடமாக இருந்தது. என்னால் நினைவு படுத்தவே முடியவில்லை.

„நீங்கள் உங்கடை அம்மாட்டைக் கேட்டுப் பாருங்கோ அக்கா. ரவி யெண்டால் அவவுக்குத் தெரியும். இளையக்கா(சந்திரா ரவீந்திரன்), சின்னக்கா(பிரபா), பாமா எல்லாரையும் கேட்டுப்பாருங்கோ. ரவி யெண்டு சொன்னால் அவையளுக்குத் தெரியும். நீங்கள் மூத்தக்கா தானே“ என்றார்.

மொறிசைப் பற்றி, எங்கள் வீட்டைப்பற்றி அம்மா, அப்பா, தங்கைமாரைப் பற்றியென்று இன்னும் நிறையக் கதைத்தோம். ஆனாலும் அந்த முகத்தை எங்கோ பார்த்தேன் என்ற நினைவைத் தவிர, கடைசிவரை அதற்குமேல் வேறெதையும் என்னால் நினைவு படுத்த முடியாதிருந்தது. அது அவருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது போலவே இருந்தது.

அவர்தான் கேர்ணல் சார்ள்ஸ் என்பதைப் பின்னர்தான் அறிந்து கொண்டேன்.

(வீ.மணிவண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட காஸ்ரோ முதலில் தமிழீழத்தின் வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவுப் பொறுப்பாளராகவும் பின்னர் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளராகவும் விளங்கியவர்)

சந்திரவதனா
06.06.2020

https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10157600400552869
Drucken

Related Articles

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

`மே´ மாதம்

என் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்)

நந்திக்கடல் தாண்டி... 1

முகவரி தேடும் மனவரிகள்

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!