அவன் ஆம்பிளை! நான் பொம்பிளை!

“உனக்குத் தெரியுமோ குதிரைச்சவாரி சரியான இதமானது. இன்பமானது. அந்தப் பொழுதுகளில் நான் இனியில்லை எண்ட அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பன்“

மிருகங்களைத் தூர இருந்து இரசிப்பதில் மட்டுமே விருப்பமுடைய எனக்கு அன்ரோனெலாவின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது.

அவள் கண்களை மூடிச் சுகித்த படி தொடர்ந்தாள் “குதிரைக்குக் குளிக்க வார்க்கிற பொழுது ஒரு வாசம் வருமே! அது மிக மிகச் சுகமானது“

மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது வருகிற வாசம் பிடிக்குதாம்.

“நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“

“உண்மையாகத்தான் சொல்லுறியோ?“ நம்ப முடியாது கேட்டேன்.

“ஓம் உண்மை“

“ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ?

“ஓம் மண்டியிடும். அது ஒரு ஆனந்தமான பொழுது“

எனக்கு அது ஆச்சரியமான பொழுது. மனசுக்குள் அவளை விசித்திரமாக உணர்ந்தேன்.

அன்ரோனெலா இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி ஒருவரின் காரியதரிசி. யேர்மனிய மொழியை மிகச் சரளமாகப் பேசக் கூடியவள். அவளது முகத்தைப் பார்க்காமல் தொலைபேசியில் பேசும் எவரும் அவளை இத்தாலி நாட்டவள் என்று கண்டு பிடிக்க மாட்டார்கள். அத்தனை நேர்த்தியாக யேர்மனிய மொழியை உச்சரிப்பாள். நேரே பார்த்தால் மட்டும் ஏதோ ஒன்று அவள் யேர்மனியைச் சேர்ந்தவள் அல்ல என்று காட்டிக் கொடுத்து விடும். அழகானவள். ஆனால் குள்ளமானவள்.

கிழமையில் இரண்டு நாட்கள் குதிரைச் சவாரிக்குச் செல்வாள். அந்த நாட்களில் அவளில் ஒரு தனிக்களை தெரியும். மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவாள்.

இவ்வளவு குள்ளமானவள் எப்படிக் குதிரையில் ஏறுவாள். பிறகு எப்படிக் கீழே குதிப்பாள் என்று ஒரு கணம் மனசுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.

அன்ரோனெலாவுக்கு எப்போதுமே சிரித்த முகம். யார் என்ன கேட்டாலும் முகம் சுளிக்க மாட்டாள். மிக மென்மையாகச் சிரித்த படியே பதில் சொல்வாள். மறுப்புக்களைக் கூட மலர்ந்த முகத்துடனேயே கோபமோ, எரிச்சலோ ஏற்படாத விதமாக ஒரு வித லாவண்யத்துடன் சொல்லக் கூடியவள். அவள் இந்த வேலையில் சேரும் பொழுதே அதற்கான பயிற்சியையும் கொடுத்திருப்பார்களோ என அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.

வேலை நேரங்கள், சம்பளங்கள், விடுமுறை விண்ணப்பங்கள், இன்னும் பல முக்கியமான விடயங்கள் என்று வங்கி ஊழியர்கள் அத்தனை பேரது பிரச்சனைகளையும், தேவைகளையும் கவனத்தில் எடுத்துச் செயற்படும் பிரத்தியேக பகுதியில் அவள் இருப்பதால் எங்கள் எல்லோருக்கும் அவள் மிக முக்கியமானவளாகவே தெரிந்தாள். எங்களின் பிரச்சனைகள் என்னவாக இருந்தாலும் அவளினூடாகத்தான் நாங்கள் மேலதிகாரியுடன் தொடர்பு கொள்ள முடியும். மின்னஞ்சல்கள் கூட அவளின் பார்வைக்குப் பின்னரே மேலதிகாரியைச் சென்றடையும். மேலதிகாரியின் அறைக்கென ஒரு தனிக்கதவு இருந்தாலும், அவளின் அறையினூடாகச் சென்றுதான் நாம் மேலதிகாரியைத் தரிசிக்க முடியும்.

சின்ன வயதிலேயே யேர்மனிக்கு வந்து விட்டாளாம். படித்து, பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் ஒரு யேர்மனியனையும் திருமணம் செய்து கொண்டு விட்டாள். ஐம்பது வயதைத் தொடுவதற்குத் தயாராக இருந்தாலும் பார்ப்பதற்கு நாற்பது போலவே இளமையாகத் தெரிந்தாள்.

அவள் நினைத்தால் எங்கள் எல்லோருடனும் அதிகாரத் தோரணையுடன் பேசலாம். நடந்து கொள்ளலாம். அப்படியொரு பதவியும், முக்கியத்துவமும் அவளுக்கு. இருந்தாலும் எந்தச் செருக்கும் இல்லாமல் வீதியில் கண்டால் கூட நின்று ஓரிரு கதையாவது கதைத்து விட்டுத்தான் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் எதேச்சையாக வங்கியின் கொரிடோர் ஒன்றில் சந்தித்த போது குதிரைக்கதை வந்து விட்டது. அன்று அவளுக்குக் குதிரைச்சவாரி இருந்தது. அதனால்தான் நான்கு மணிக்கே வேலையை முடித்துக் கொண்டு வெளிக்கிட் டிருந்தாள்.

"என்ரை மனுசனுக்குச் சரியான பொறாமை. நான் குதிரைச் சவாரிக்குப் போறது அவனுக்குப் பிடிக்காது" அன்ரோனெலா தொடர்ந்தாள்.

"ஏன்?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"நான் என்ரை குதிரையோடை அத்தனை நெருக்கமாக இருக்கிறது அவனுக்குப் பிடிக்கிறேல்லை. தன்னை விட குதிரையை நான் அதிகம் நேசிக்கிறனோ எண்ட பயம் கலந்த எரிச்சல் அவனுக்கு" சொல்லிய படியே விடைபெற்று விட்டாள்.

குதிரை உண்மையிலேயே அப்படி நடந்து கொள்ளுமா? குளிக்க வார்த்த பின் பின்னங்கால்களை மடித்து மண்டியிட்டு நன்றி சொல்லுமா? என்ற கேள்விகள் எனக்குள் ஆச்சரியங்களாகின. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு தரம் நேரே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தபடியே நானும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்று அவளை மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை வந்தது. எனது கோடை விடுமுறைக்கான விண்ணப்பத்தை அவளிடம் கையளித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. என்னோடு ரெகினாவும் வந்தாள். இன்றைய நாள் குதிரைச்சவாரி இல்லாத நாள் என்பதால் ஆறுதலாகத்தான் வேலையை முடித்து வெளிக்கிடுவாள் என்ற நம்பிக்கையுடன் அவளது அறைக்கதவை தட்டி விட்டு உள் நுழைந்தோம்.

சிரித்த படி அவள் எம்மை வரவேற்றாலும் அவளிடம் ஒரு பதட்டம் காணப்பட்டது. அவசரமாகத் தனது உடைமைகளை கைப்பையுள் திணித்துக் கொண்டிருந்தாள். வேலையை முடிப்பதற்கான ஆயத்தங்கள் அவை என்பது தெரிந்தது.

“என்ன இன்றும் குதிரைச்சவாரியோ?“ ஆச்சரியத்துடன் கேட்டேன்.

இல்லையில்லை. இண்டைக்கு என்ரை மனுசன் வீட்டிலை நிற்கிறான்.

“அதுக்கு..?“ ரெகினா கேட்டாள்.

“கெதியிலை போகோணும். அவன் வீட்டிலை நிற்கிற நேரத்திலை நேரத்துக்குப் போயிட்டன் எண்டால் பிரச்சனை இல்லை. கொஞ்சம் தாமதமாப் போனாலும் அவனுக்குப் பிடிக்காது. தேவையில்லாமல் சண்டை வந்திடும். அதுதான்… அவள் இழுத்தாள்.

“வழக்கத்திலை நீ வேளைக்குப் போடுவாய். அவன் அதுக்குப் பிறகு தாமதமாத்தானே வாறவன். அப்ப உனக்கும் அது பிடிக்காமல் போகலாம்தானே. நீயும் சண்டை பிடிக்கலாம்தானே“ ரெகினா கேட்டாள்.

“என்ன இருந்தாலும் அவன் ஆம்பிளை. அவன் வேலையாலை வரத் தாமதம் எண்டால் அதுக்கு அர்த்தம் அவனுக்குச் சரியான வேலை. அவன் களைச்சுப் போய் வந்திருக்கிறான் என்றிருக்கும். நான் பொம்பிளைதானே! நான் வேலையாலை வீட்டை போய்ச்சேரத் தாமதம் எண்டால் அதுக்கு அர்த்தம் நான் யாரோடையோ போட்டு வாறன் அல்லது என்ரை மேலதிகாரி என்னை வைச்சிருக்கிறார்… எண்டு இன்னும் கனக்க விசயங்களிருக்கும்.

சொல்லிய படியே கணினியை நிற்பாட்டினாள். எழுந்து தனது சால்வையை கழுத்தில் சுற்றினாள். நானும், ரெகினாவும் அவளிடம் இருந்தும், அவளுக்கு என அவளது அறையிலேயே இருந்த இரு உதவியாளர்களிடம் இருந்தும் விடைபெற்றோம்.

படிகளில் இறங்கும் போது ரெகினா “எனக்குத்தான் உந்தப் பிரச்சனை இருக்குது எண்டு நினைச்சன். அன்ரோனெலாவுக்குக் கூட இந்தப் பிரச்சனை இருக்கு“ என்று எனது காதுக்குள் குசுகுசுத்தாள்.

“என்ன இருந்தாலும் அவன் ஆம்பிளை! நான் பொம்பிளை!“ என்ற அன்ரோனெலாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டுமாய் எனக்குள் ஒலித்தன. இருபதாம் நூற்றாண்டில் நான் எழுதிய குறிப்பு ஒன்று ஞாபகத்தில் வந்தது. வீட்டுக்கு வந்ததும் தேடி எடுத்துப் படித்துப் பார்த்தேன்.

வேலைக்குப் போவதிலும், ஆண்கள் எந்த நேரம் வேலைக்குப் போய் எந்த நேரம் வீடு திரும்பினாலும், அவர்கள் களைத்து வந்திருக்கிறார்கள் என்ற அனுசரணையோடு பெண்களால் கவனிக்கப் படுவார்கள். இதுவே பெண் வேலைக்குப் போகும் போது அவள் எந்த நேரத்தில் வேலைக்குப் போய் எந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும் என்பது ஆண்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது. தப்பித்தவறி ஒரு பெண் வீடு திரும்பும் நேரம் சற்றுத் தாமதமானாலும் போதும்... ஏன் தாமதம் என்பதற்கான காரணம் ஆணால் அது கணவனாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, சகோதரனாக இருந்தாலும் சரி சந்தேகக் கண்களுடனேயே பார்க்கப் படுகிறது. 'யாரோடை போட்டு வாறாய்? எங்கை இவ்வளவு நேரமும் போனனி? என்பது மாதிரியான மனசை விளாசும் கேள்விகளாலேயே அவள் வீட்டுக்குள் வரவேற்கப் படுகிறாள். அவள் கூடிய வேலையால் களைத்துப் போயிருப்பாளே என்ற அனுசரணை காட்டப் படா விட்டாலும் பரவாயில்லை. வேலை செய்து விட்டுத்தான் வருகிறாள் என்ற நம்பிக்கை கூட அனேகமான பொழுதுகளில் அவர்களிடம் இருப்பதில்லை…


20ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையில் பெண்கள் வாழ்வியலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனாலும் எழுதப் படாத இப்படியான சட்டங்கள் இன்னும் அமுலில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலை முற்றாக மாற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவையோ?

- சந்திரவதனா
19.02.2016


பிரசுரம் - வெற்றிமணி (பங்குனி 2016)


Drucken   E-Mail

Related Articles

பெருநினைவின் சிறு துளிகள்

Yaar Manathil Yaar... Chandravathanaa

`மே´ மாதம்

Manaosai - Shortstory - Chandravathanaa

நானும் காத்திருக்கிறேன்

அம்மாவின் தேவைகள்