அம்மா

Siva Thiyagarajahஅது ஒரு வியாழக்கிழமை. எட்டாந்திகதி. ஜூலை மாதம்.

முக்கியமான ஒன்றுகூடல். தொடங்கும் நேரத்தில் அவசரமாக அலைபேசியைப் பார்த்தேன். அம்மா மூன்று தடவை என்னை அழைத்திருந்தா. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்தேன். அதுதான் கேட்கவில்லை. ஏன் அந்த நேரத்தில் அம்மா அழைத்தா? சற்றுக் குழப்பமாக இருந்தது.

அவசரமாக வெளிக்கிடும் போதும் அம்மாவுக்குப் போன் பண்ணிவிட்டுத் தான் வெளிக்கிட்டேன். „வெண்டிக்காய்க்கறி அடுப்பில் வைச்சிருக்கிறன்“ என்றா. „மற்றும் படி எல்லாம் சரியாக இருக்கிறதா?“ எனக் கேட்ட போது „ஓம்“ என்றுதான் சொன்னா.

முதல்நாள் „இடியப்பமும் நல்ல பாற்சொதியும் ஆசையா இருக்குது“ என்று சொன்னா. அதோடு மீன் பொரியல், கத்தரிக்காய் வதக்கல்... என்று செய்து கொண்டு போய்க் கொடுத்து விட்டுத்தான் வந்தேன். அதெல்லாம் இருக்க ஏன் வெண்டிக்காய்க்கறி வைக்கிறா என்று யோசனை வந்திருந்தாலும் நான் அது பற்றி அம்மாவைக் கேட்கவில்லை. அவ ஒரு கறி வைக்குமளவுக்கு உசாராக இருக்கிறா என்ற திருப்தியே எனக்குள் நிறைந்திருந்தது. அந்தத் திருப்தியுடன்தான் ஒன்று கூடலுக்கு ஆயத்தமாக அமர்ந்திருந்தேன்.

போனை வைக்கும் போது „வதனா, இப்ப வருவியோ?' என்றும் கேட்டா. „ஏனம்மா?“ என்ற போது Washingmachine க்குள்ளை உடுப்பு இருக்குது. விரிக்கோணும்“ என்றா. அம்மாவின் வீட்டைத் துப்பரவு செய்ய வரும் பெண் அதையெல்லாம் செய்து விட்டுப் போவதுதான் வழக்கம். ஏன் அது செய்யப்படவில்லை என்ற யோசனையுடன் „அதை அப்படியே விடுங்கோ. வேலை முடிஞ்சு போற போது வந்து விரிச்சிட்டுப் போறன்“ என்று சொல்லி விட்டுத்தான் போனை வைத்தேன்.

ஏன் இப்போது, அதுவும் மூன்று தரம் அழைத்திருப்பா?

அம்மாவின் அழைப்பை உதாசீனப்படுத்தி விட்டு என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து வெளியில் போய் அம்மாவை அழைத்தேன். „(படுக்கையறை) அலுமாரிக்குள் எதையோ எடுத்திட்டுத் திரும்புற பொழுது விழுந்திட்டன்“ என்றா.

ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாத குழப்பம். உடனே அம்மாவிடம் ஓடிப் போக முடியாத நிலை.

இப்படியான இக்கட்டான நிலை வந்தால் உதவி கோருவதற்கென அம்மாவின் வீட்டில் ஒரு அவசரகால அழைப்புக்கான பெட்டி உள்ளது. அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும். உடனேயே செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக அம்புலன்ஸ் வந்து அவவுக்கான உரிய உதவிகள் கிடைக்கும். அந்தப் பெட்டிக்குக் கிட்டப் போக முடியாத நிலை வந்தாலும் என்று இன்னொரு பொத்தான் அம்மாவின் கழுத்திலேயே மாலையாகத் தொங்குகிறது. அம்மாவுக்கு அதை அழுத்த வேண்டுமென்ற எண்ணமே வரவில்லை. அதனால் சில மணித்தியாலங்கள் நிலத்திலேயே இருந்திருக்கிறா. போன் மட்டும் அருகில் இருந்ததால் என்னை அழைத்திருக்கிறா.

நல்ல வேளையாக அவர்களின் போன் நம்பரை நான் என்னோடு வைத்திருந்தேன். உடனடியாக அவர்களை அழைக்க அவர்கள் போய் அம்மாவைத் தூக்கி, ஷோபாவில் இருக்க வைத்து விட்டார்கள்.

நான் அவசர உதவியாளர்களுடன் கதைத்த போது அவர்கள் „ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. அம்மா நலமே இருக்கிறா“ என்றார்கள். அம்மாவுடன் கதைத்த போது அம்மா ஒருவித ஆசுவாசத்துடன் „ஷோபாவில் இருக்கிறன். நீயொன்றும் யோசிக்காமல் ஆறுதலாக வா“ என்றா.

ஒன்றுகூடல் தொடங்கும் தறுவாயில் நான் வெளியில் வந்து அலைபேசியும் கையுமாக நின்றது அந்த நேரத்தில் பெரும் சங்கடமான நிலையைத் தோற்றுவித்திருந்தது. என் வரவுக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நான் அவசரமாக உள் நுழைந்து எனக்கான கதிரையில் அமர்ந்து கொண்டேன். அங்கு நடக்கும் எதுவுமே என் புலன்களில் ஏறவில்லை. அவர்கள் நிறையக் கதைத்தார்கள். சிரித்தார்கள். விவாதித்தார்கள். மேசையில் இருந்த சாப்பாடுகளைச் சுவைத்தார்கள். பானங்களை அருந்தினார்கள். நான் மட்டும் முள்ளின் மேல் இருப்பது போல் அமர்ந்திருந்தேன். இடையிலே மெதுவாக மகன் திலீபனுக்குப் போன் பண்ணிப் பார்த்தேன். அவனாவது அம்மாவிடம் போனால் நல்லது என்ற எண்ணம் எனக்கு. அவன் போனை எடுக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். வேலையை வேளைக்கு முடித்துக் கொண்டு போவான் என்ற நம்பிக்கை எனக்கு.

எனது நம்பிக்கை வீண் போகவில்லை. திலீபன் என் செய்தியைப் பார்த்ததும் வேலையின் இடையிலேயே அம்மாவிடம் போயிருக்கிறான். அவன் போன போது அம்மா மீண்டும் வரவேற்பறையில் வீழ்ந்திருந்திருக்கிறா. அவன் பதறிப் போய் அம்மாவைத் தூக்கி மீண்டும் ஷோபாவில் இருத்தி விட்டு அம்மாவின் குடும்ப வைத்தியரை அழைத்திருக்கிறான்.

நான் போன போது அம்மா நன்கு களைத்துப் போயிருந்தா. வரவேற்பறை அலுமாரியில் தலைப்பக்கம் இடிபட்டதால் ஒரு பக்கக் கண் பயங்கரமாக வீங்கியிருந்ததது. „திலீபன் ஐஸ் ஒத்தடம் பிடிச்சு விட்டது ஓரளவு சுகமாக இருந்தது“ என்றா. எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாத நிலையில் இருந்தா. இருந்தாலும் வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்து, படுக்க வைத்து விட்டு வெளிக்கிட்டேன். தானே எழுந்து நடந்துதான் படுக்கையறைக்குச் சென்றா.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அம்மாவுக்குப் பிடித்த கத்தரிக்காய் வதக்கல், வெங்காயப்பொரியல், உருளைக்கிழங்குப் பிரட்டல், கரட்வறை, பருப்பு… என்று எல்லாம் செய்து சுடச் சுடச் சோறுடன் போனேன். அம்மா பேயறைந்தது போல இருந்தா.

எதையும் கதைக்கத் திராணியற்ற தன்மையுடனும் வெறித்த பார்வையுடனும் இருந்த அம்மாவைப் பார்க்க எனக்கு அசாதாரணமாக இருந்தது. கொண்டு போன சாப்பாட்டை வாயில் வைக்கக் கூட அவ விரும்பவில்லை. வற்புறுத்திக் கொடுத்த போது அது தொண்டைக்குள் போகவே மறுத்தது.

உடனேயே குடும்ப வைத்தியரை அழைத்து நிலைமையைச் சொல்லி உடனே வரும் படி கேட்டேன். ஒரு மணித்தியாலம் தேவை என்றா.

வைத்தியருக்கும் அம்மாவின் நிலை நன்றாயில்லை என்பது தெரிய உடனேயே மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு, அம்புலன்சை அழைத்து அம்மாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தா.

கொரோனாக் கெடுபிடி. யாரும் சும்மா மருத்துவமனைக்குள் செல்ல முடியாது. பார்வையாளர்களுக்கான நேரம் மதியம் இரண்டிலிருந்து ஆறு வரை. அம்மா இருப்பதோ Emergency ward இனுள்.

என்னால் ஆறுதலாக இருக்க முடியவில்லை. Emergency ward டொக்டருடன் தொடர்பு கொண்டு கதைத்தேன். அதுவும் ஒரு பெண் டொக்டர் தான். அம்மாவின் நிலை கருதியும் எனது தவிப்பைக் கண்டும் எனக்குப் பிரத்தியேக அநுமதி தந்தா.

உள்ளே போன போது அம்மாவுக்கு அவசரச் சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் அம்மா எந்தப் பதிலுமே சொல்லவில்லை. ஒரு வித உறைநிலையில் இருந்தா. நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வெறித்த பார்வையுடனும் யோசனையுடனும் „தெரியாது“ என்ற ஒரு பதில்தான் அம்மாவிடமிருந்து வந்தது.

உடனேயே எக்ஸ்றே எடுத்துப் பார்த்ததில் விலா எலும்புகள் இரண்டு உடைந்திருப்பதைக் கண்டு பிடித்திருந்தார்கள்.

அம்மா மிகுந்த பலவீனமாக இருக்கிறா என்று சொல்லி உடனே மருந்துகள் ஏற்றினார்கள்: இரத்தப் பரிசோதனை முடிவு லேற்றாகத்தான் வரும் என்றார்கள்.

இரவு பத்தரையளவில் இனி அங்கு நிற்பதில் பயனில்லை என்ற கட்டத்தில் நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மிகவும் களைப்பாக இருந்தேன். உடலை விட மனம் அதீதமாகக் களைத்திருந்தது. அம்மாவுக்கு என்ன நடந்தது? ஏன் இரண்டாம் தரமும் வீழ்ந்தா? தலையில் ஏதும் ஏடாகூடமாக அடிபட்டு விட்டதோ? என்ற பல குழப்பமான கேள்விகள் எனக்குள்.

மகன் திலீபனுக்கு மட்டும் நடந்தவைகளை அறிவித்து விட்டு படுக்கக் கூட மனமின்றி ஷோபாவிலேயே இருந்தேன்.

அர்த்த ஜாமத்தில் மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அம்மாவுக்கு பயங்கரக் காய்ச்சல் காய்வதாகவும், நிலைமை சீரியஸ், இன்றிரவு எதுவும் நடக்கலாம் என்றும் சொன்னார்கள். அம்மாவுக்கு இரத்தத்தில் வெண்குருதிச்சிறுதுணிக்கைகள் துப்பரவாக இல்லை. அதனால் நொயெதிர்ப்பு சக்தி துளியும் இல்லை. தற்காலிக முயற்சியாக antibiotic கொடுக்கிறோம். „அது எந்தளவுக்கு வேலை செய்யும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எதற்கும் உன்னைத் தயார்படுத்திக் கொள்“ என்றும் சொன்னார்கள்.

அதன் பின்னான பொழுதுகள் மிக மிகக் கடினமானவை. எனது மற்றைய பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் அம்மாவின் நிலைமை பற்றித் தெரியப் படுத்தி விட்டு, போய்ப் படுத்தேன். அது ஒரு போராட்டமான இரவு.

விடிந்ததும் விடியாததுமாய் மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு. என்னை உடனே வரும்படி கேட்டார்கள்.

அவர்களால் அம்மாவின் வருத்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. „அவ விழுந்ததால் வருத்தம் இல்லை. வருத்தத்தால் தான் வீழந்தா“ என்றார்கள். இரத்தப்புற்று நோயாக இருக்கலாமோ என்று சந்தேகித்தார்கள். அதுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான பரிசோதனைகளைத் தாங்கும் வயதோ உடல் பலமோ அம்மாவிடம் இல்லை. அதனால் அம்மாவைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தம்மிடம் இல்லையென்றார்கள்.

அம்மாவின் உடல் இயக்கம் குறைந்து கொண்டே போனது. எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்தா. எதையும் சாப்பிட மறுத்தா. எல்லா நினைவுகளையும் இழந்திருந்தா. கோமா நிலைக்குப் போகிறாவோ என்று எனக்குப் பயமாக இருந்தது. ஏதாவது கதைத்தால் 'என்னைச் சாக விடுங்கள்' என்று மட்டும் அவ்வப்போது முணுமுணுத்தா.

அவர்களும் விடாமல் ஒவ்வொரு பரிசோதனைகளாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாட்கள் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. நான் வேலைக்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் மருத்துவமனையே கதி என்று இருந்தேன். அம்மா கதைக்கா விட்டாலும் மணிக்கணக்கில் அருகில் இருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். தம்பி பார்த்திபன் தினமும் மன்கைமிலிருந்து வந்து சில மணி நேரங்கள் அம்மாவுடன் நின்று, கதைத்து அம்மாவைத் தூக்கி இருக்க வைத்து, கொஞ்சமேனும் சாப்பிட வைத்து தன்னாலான பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அம்மா அவைகளைக் கூட மறந்து கொண்டிருந்தா. நான் நாள் முழுக்க அம்மாவுடன் நின்று விட்டு வருவேன். பார்த்திபன் வந்து 'அக்கா வந்தவவோ?“ என்று கேட்டால் அவவுக்கு அது ஞாபகம் இருப்பதில்லை. அதே போல அவன் போய் முடிய நான் போகும் போது அவன் வந்து போனது அவவுக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இப்படியே இரண்டு கிழமைகள் போயின. அம்மாவில் பெரியளவு மாற்றங்கள் இல்லை. இடையிடையே ஏதாவது கொஞ்சம் கதைத்தாலும் அடுத்த பொழுதில் மீண்டும் பழைய நிலைக்குப் போய்க் கொண்டிருந்தா. „நான் எங்கை இருக்கிறன் இப்ப? என்று அடிக்கடி கேட்டா. 'ஏன் என்னை இங்கை கொணர்ந்து விட்டனி?“ என்று இன்னொரு தடவை கேட்டா. திடீரென்று „நான் இப்ப வீட்டை போகோணும். அங்கை போய் சுதந்திரமாக இருக்கோணும்“ என்றா. இப்படியே அவவின் நிலை மாறிக் கொண்டேயிருந்தது. தன்னால் எழுந்து நடமாட முடியவில்லையே என்று மிகவும் மனக்கஷ்டப் பட்டா.

மருத்துவர்களோ இனித் தாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லையென்று சொல்லிக் கையை விரித்தார்கள். அவர்கள் 'அம்மாவுக்கு வயதாகி விட்டது. அவவின் வாழ்வு காலம் இவ்வளவுதான். இன்றோ நாளையோ அவவின் உயிர் போய் விடலாம்' என்றே கருதினார்கள். அதையே எனக்கும் சொன்னார்கள். இனி அம்மா எழுந்து நடப்பதற்கான சாத்தியமே இல்லையென்றார்கள். ஒரு சின்ன Infection போதும் எல்லாம் முடிந்து விடும் என்றார்கள்.

அம்மாவுக்கோ மருத்துமனை கொடுமைப்படுத்தும் இடமாகவே தெரிந்தது. பரிசோதனை என்ற பெயரில் தன்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றே அவ நினைத்தா.

மருத்துவர்களுடன் ஆலோசித்ததில் கிடைத்த ஒரே வழி அம்மாவைக் குறுகியகாலப் பராமரிப்பு நிலையத்தில் வைத்துப் பராமரிப்பதுதான்.

அதற்கான நிலையங்கள் உடனடியாகக் கிடைப்பது அத்தனை சுலபமான விடயமல்ல. பகீரதப்பிரயத்தனத்தின் பின் எனது வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள Nursing home ஒன்றில் அம்மாவுக்கு இடம் கிடைத்தது.

எல்லோரதும் எல்லா நம்பிக்கைகளும் இழந்த நிலையில் தான் 23ந் திகதி ஜூலை மாதம் அம்மா அங்கு கொண்டு வரப்பட்டா.

ஆனாலும் „அம்மா மீண்டும் எழுந்து நடமாடுவா“ என்றொரு குருட்டு நம்பிக்கை எனக்குள். அந்த நம்பிக்கையுடன் வேலைக்கு லீவு போட்டு விட்டு அல்லும் பகலும் அம்மாவுடனேயே நின்று கதைத்துக் கதைத்து அவவின் நினைவுகளை மீட்டிக் கொண்டே இருந்தேன். குடும்ப வைத்தியருடன் கதைத்து 20 - 25 நிமிடங்கள் கிடைக்கும் physiotherapieஐ 40 -45 நிமிடங்களுக்குச் செய்ய வைத்தேன்.

எனது நம்பிக்கை வீண் போகவில்லை. இப்போது அம்மா தானே கட்டிலால் இறங்கி மெதுமெதுவாக என்றாலும் நடக்கிறா.

அம்மாவுக்கு அந்த Nursing home நன்கு பிடித்திருக்கிறது. கூப்பிட்டதும் ஓடி வந்து அம்மாவுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். நேரத்துக்கு நேரம் மருந்துகளைக் கொடுத்து நன்கு கவனிக்கின்றார்கள். மாலையில் அடிக்கடி ஒன்றாகக் கூடிக் கதைத்து விளையாடி பாடி... என்று செய்கிறார்கள். அம்மாவும் மெதுமெதுவாக அவர்களுடன் இணையத் தொடங்கியுள்ளா. சந்தோசமாகவும் இருக்கிறா.

அவர்களது மதியச் சாப்பாடு மட்டும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அதைத் தினமும் கொண்டு போய்க் கொடுக்கிறேன்.

வாழ்தல் மீதான பற்றுதல் மீண்டும் அம்மாவுக்கு வந்திருக்கிறது.

- சந்திரவதனா

Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை