ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)

பத்தொன்பது வயதின் கட்டுறுதிக்கேற்ப காற்றைப்போல இயங்கியது உடம்பு. நாற்பதுகிலோ மாமூட்டைகளை மிக இலாவகமுடன் து¡க்கி மெ‘¢னில் போட்டுக் குழைக்கும்போது நாட்டு விடுதலைக்கென கொல்லிமலையில் எடுத்த இராணுவப் பயிற்சி பத்திரோனின் வீட்டு விடிவுக்கு உபயோகப் படுவதை எண்ணிச் சிரித்துக் கொள்வான்.

சின்னமாமன்  தந்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் பலபேருக்கு ரெலிபோன் அடித்து இவனுக்காக வேலை விசாரித்தான். அவனது சிகரெட்பெட்டியிலிருந்து ஒன்றிரண்டு சிகரெட் காணாமல் போனதும் மூன்றாவது நபரின் இருப்பு தன் தொழில் தகிடுத்தங்களுக்கு இடைஞ்சலாகவும் இருந்ததுதான் மாமனது முன்முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கும். கடைசியில் அவனை பேக்கரி ஒன்றில் து¡க்கிக் கொழுவி விட்டான் ஒரு பழஞ்சட்டையைப் போல. வெல்·பெயரை நிப்பாட்டாமல் வேலையும் செய்வதற்கு வசதியாக பெரியமாமியின் தம்பியாரிடம் சோசல்நம்பரை வேண்டித் தந்தான் பெரியமாமன்.

ராஐ¡ முதன் முதலாக பேக்கரிக்குள் நுழைந்தபோதுஇ பேக்கரிப்பத்திரோன் மரியோ இவனது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு தனது அடுத்த கையால் இவனது புஐத்தை அழுத்தி தசைவலிமை பார்த்தான். ஆபிரிக்க அடிமை வியாபாரமோ இறச்சிக்கு வேண்ட கிடாயை எடைபோடுகிறானோ என்று எரிச்சல் வந்தது ராஐ¡வுக்கு. இரண்டு மூன்றுநாளின் பின்பே புரிந்தது அந்த வேலையில் தாக்குப் பிடிக்க மனவலிமை மட்டும் போதாது உடல் வலிமையும் தேவை என்று. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகும் மாக்குழைத்தல் மாலை ஆறுமணிக்குத்தான் முடியும். அதற்கிடையில் ஏறக்குறைய நு¡ற்றியிருபத்தேழு மூட்டை மா குழைத்துத் தள்ளவேண்டும். குழைத்த மாவை வெட்டி வேறொரு மெ‘¢னில் போட்டு, அது உருண்டுவர வேகமாகப் பொறுக்கி அலுமினியத் தட்டில் அடுக்கி அடுக்கிய தட்டுக்களை தள்ளுவண்டியில் ஏற்றி அவற்றை ஸ்ரீமுக்கு அனுப்பிவிட்டுபின்னர் மறுமூட்டை து¡க்கிப் போட்டுக் குழைத்து என கடிகார ஓட்டத்திற்கு இணையான வேலைத் தொடர்ச்சி.

பேக்கரியில் ஆரம்பத்திலிருந்தே வேலை செய்யும் தமிழ்ச் சகோதரர்கள் செய்த சீர்திருத்தத்தால் இந்தப் பதினொரு மணித்தியால வேலைநேரத்தில் பிறேக்கே இல்லை. நின்றநிலையில் சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் சாப்பாட்டுப் பெட்டியை மெ‘¢னில் வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க பைப்பை நோக்கி ஓடவேண்டும். ஆனால் அப்போதும் மெ‘¢ன் மாவைக் குழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சங்கடம் பற்றி சீனியர் காந்தனை இவன் கேட்டபோது-

"சீச்சீ... அந்த வழக்கமெல்லாம் இஞ்ச இல்லை. எங்கட திறமைய நாங்க காட்டோணும். இல்லாட்டி பத்திரோன் தமிழாக்களைப் பற்றி என்ன நினைப்பான். முந்தி வேலை செய்த போலந்துக்காரர் நு¡று மூட்டைதான் குழைச்சவங்கள். பிறகு நாங்க இதுக்கை (உ)ந்தபிறகுதான் நு¡த்தி இருபத்தேழு ஆக்கின்னாங்கள்."

"அப்ப போலந்துக்காறரும் பிறேக் எடுக்கிறேல்லையோ..?"

"அவங்கள் எடுக்கிறவங்கள். ஆனா அந்த நாலுபேரையும் நாங்க வந்த அடுத்த கிழமையே பத்திரோன் ·பயர் பண்ணிப்போட்டான்."

அது சாதனைதான். சாதனைஇ துணிகரங்களின் பின்னால் ஓடுவதுதான் வளர்ச்சிக்கும்இ வெற்றிக்கும் நெம்புகோல் போலும். அதுவும் இன்னொருவன் தலையில் மிதித்து உன்னி உயரம் பாய்ந்துஇ தனதிடத்தை தக்க வைத்துக் கொள்வது வெற்றியல்லாமல் வேறென்னவாம்..?

பேச்சுவாக்கில் அந்த சீனியர்மாரே ஒன்றைக் குறிப்பிட்டனர். தாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது பத்திரோன் வெறும் பீத்தல் அமெரிக்கன் காரை ஓடித்திரிந்தவன் இப்போது. டீ.ஆ.று.வில் திரிகிறான் என்று. இதைச் சொன்ன சீனியர் காந்தன் இவனுடன் வந்து மெட்ரோ எடுத்து வீட்டுக்குப் போகிறார்.

கொல்லிமலையில் அவனும் ஒரு சாதனை செய்திருக்கிறான். யு.மு-47ஜக் கழட்டிப் பூட்ட எடுத்த எட்டு நிமிச நேரஅளவை ஆறு நிமிசத்தில் கழட்டிப் பூட்டியிருக்கிறான். ஒன்பது செக்கனில் வெடிக்கும் கையெறிகுண்டைஇ நாலு செக்கன் தாமதித்து எறிந்து விழுந்தவுடன் அந்த இடத்திலேயே வெடிக்க வைத்திருக்கிறான். ஆனால் மாமூட்டைகளின் தொகையை எடுத்துக் கொண்டால் அவனது சாதனைகள் எல்லாம் நாலுபக்கமும் மலைக்குன்றுகள் சூழ்ந்த பயிற்சிக்களத்தில் மனித அழிவுகள் சம்பந்தமாகக் கிடைத்த வெற்றிகள். ஆகவே அதை எங்குமே பேசமுடியாது.

ஒரு வாரத்திற்கான சம்பளம் இருநாற்றி முப்பத்தியெட்டு டொலருக்கு செக் கொடுத்தார்கள். கனடாவில் முதல் சம்பளம் பெற்ற அன்று சந்தோசம் முக்குளித்தது. பெரியமாமனது கடன் கொடுக்கும் வரைதனது வீட்டுக்கு ஒன்றும் அனுப்பப் போவதில்லை என்றும் பெரியமாமனுக்கு நு¡று டொலசைக் கொடுத்து சின்னமாமனுக்கு சாப்பாட்டுக்காசாக ஜம்பதைக் கொடுத்து மீதியை தான் எடுத்துக் கொள்வது என்ற திட்டத்துடன் ஊத்தை உடுப்புடனேயே வேலையிலிருந்து நேரே பெரியமாமனது வீட்டுக்குச் சென்றான்.

பெரியமாமியின் தம்பி அன்று வீட்டில் இல்லாததால் மாமனிடம் செக்கைக் கொடுத்து மாற்றச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். அடுத்தநாள் காசைப் பெற்றுக் கொண்டால் ஞாயிறுலீவு மகத்தானதாக இருக்கும் என்ற கனவுடன் அன்று நித்திரை வந்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வேலையாக உடுப்புகளை அலம்பிப் போட்டுவிட்டு பெரியமாமனது வீட்டுக்குப் போனான். மாமியின் தம்பியின் அறைக்குப் போய் எட்டிப் பார்க்க குப்புற அடித்துக் கிடந்தான் ஆனந்தன். கிரு–ணனின் கால்மாட்டில் இருந்து தோற்றுப் போன துரியோதனனை நினைத்துக் கொண்டு தலைமாட்டில் இருக்காமல்இ ஆனந்தனைத் தட்டி எழுப்பினான். ஆனந்தன் ரெஸ்ரோரண்ட் வேலைகாரன். ஞாயிறுலீவு அவனுக்கில்லை. தலையைத் து¡க்கி எழுப்பியது யாரென்று பார்த்துவிட்டு-

"விடியத்தான் வந்து படுத்தனான். உங்கட செக் மாத்தி அத்தானிட்டக் காசு குடுத்திட்டன்."

என்று சொல்லிக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்து மிச்ச நித்திரையைப் பிடிக்கப் போய்விட்டான். அவனுக்கு சப்பென்று போய்விட்டது. திரும்பி ஹோலுக்கு வந்து செற்றியில் இருந்தபோது கண்ணாடி போடாத பெரியமாமனது முழியைப் பார்க்க வெறுப்பு வந்தது.

"தேத்தண்ணி குடிச்சிட்டியே..? சிவராசா ஒரு சீட்டுத் துடங்குதாம். பத்தாயிரம் டொலர்ஸ். ராத்திரி ரெலிபோன் அடிச்சது. நான் உன்னையும் சேத்துவிட்டிட்டன். கட்டுக்காசு அறுநு¡று. ஞாயித்துக்கிழமை வேலை ஒண்டு இருக்கிது. கையிலகாசாம். போய்ச் செய்யன். மாமி தனக்கு மெட்ரோப்பாஸ் எடுக்கேக்க உனக்கும் எடுத்துத் தருவா."

இப்படியாக.. மாமன் செக் காசைப்பற்றிய எந்தவிதக் கதையும் இல்லாமல் தனக்கு வரவேண்டிய தொகையை விரைவிலேயே கறந்துவிடும் தன் எண்ணங்களைச் சொல்லிக் கொண்டே போனான்.

ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கும் ரெஸ்ரோரண்டின் விலாசத்தை பெரியமாமனிடம் வேண்டிக் கொண்டு வெளியே வந்தபோது வீட்டுக்குப் போக மனம் ஒன்றவில்லை. வீட்டுக்குப் போயும் என்ன செய்வது..? சின்னமாமியிடமிருந்து ரீ.வி ரிமோட் கொன்றோலையும் கைப்பற்ற முடியாது. சவப்பெட்டியில்கூட அதை வைத்து மாமியை இறுதி வழியனுப்பினால்தான் அவளது ஆத்மா சாந்தியடையும் போலஇ சமையல் நேரத்தைத் தவிர ரெலிவி‘னே கதி என்று கிடக்கிறாள். அதுவும்இ ஞாயிற்றுக் கிழமைகளில் ரெலிவி‘னைக் குடைந்து குடைந்து மல்யுத்த நிகழ்ச்சி தேடிப் பார்ப்பாள். திரண்டு முறுகிய சதைகளின் பொருதலில் ஏதாவது மனக்கிளர்ச்சி அவளுக்குக் கிடைக்கக்கூடும். அதையேன் என் இருப்பு தடைசெய்ய வேண்டும் என்று நினைத்தபடிஇ நேரே நண்பன் ஒருவனின் வீட்டை நோக்கி நடந்தான்.

பத்துப் பதினைந்து தடவை பெல்லை அமுக்கியும் நண்பன் கதவு திறக்கவில்லை. வட்டிக்கார அந்தோனிதாசனின் தேடுதல் வேட்டையில் நண்பனும் சிக்கியிருப்பது ஞாபகம் வந்ததும் வாசலை விட்டு ரோட்டுக்கு வந்தான். நாக்குக் கசப்படித்து நிகோடினுக்காக மனம் ஏங்கியது. இருபத்தைந்துசதம் இருந்தால் கூட சிகரெட் லு¡சாக விற்கும் கடையில் ஒன்று வேண்டிப் பத்தலாம். பொக்கற்றுக்குள் காசு இல்லை என்று தெரிந்தும் கையை உள்ளே விட்டுத் தேடினான். வெறுப்பு - எல்லாவற்றின்மீதும் ஒரு கொலைகாரனுக்குரிய சினம் மூளையில் கிளம்பியது.

இந்த நாட்டைவிட இந்திய வாழ்க்கையில் ஏதோ ஒரு சுகம் இருந்ததுபோல பட்டது. அதுதான் அக்கரைப்பச்சையோ தெரியவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத பொழுதுகளிலும் நண்பர்களின் உறவு வலுத்து உண்மையானதாக இருந்தது. இங்கு எவ்வளவுதான் நேசமாக நட்பாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு ஒட்டின்மை நண்பர்களில் ஊடுருவியிருப்பது தெரிகிறது. நல்ல சினிமாவிலிருந்து அல்லதுஇ வடிவான பெட்டையிலிருந்து தொடங்கிய உரையாடல் கூட இவர்களிடம் ஓடிமுடியும்போது காசுப்பிரச்சனையில் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓடாத நதியைப் போல ஆகிவிட்டது இவர்களின் மனது. நல்லகாற்று வீசினாலும் அந்த நதியைக் கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது.

மனசில் விரிந்த கசப்பு எண்ணங்களுடன் எந்தக் குறிக்கோளுமற்று வீதியில் நடந்தபடி இருந்தான். இந்தியாவில் வேண்டிய லெதர் சப்பாத்து தோணி மாதிரி வளைந்து விட்டது. அதுவும் பம்பாயில் பயணம் வெளிக்கிடும்போது பெரியமாமன் கடைக்குக் கூட்டிச் சென்று இவனது ரப்பர் செருப்பை து¡ரவீசச் சொல்லிவிட்டு இதைப் புதிதாக வேண்டிக் கொடுத்தான். வேலைக்கும் வெளியிடத்திற்கும் அதையே பாவித்துக் கொள்வது சிறிது வெட்கமாக இருந்தாலும் மாற்று இல்லை.

சின்னமாமன் இந்த வயசிலும் அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சப்பாத்துப் பாவிக்கிறான். வீட்டில் சப்பாத்துகள் வைக்கும் றாக்கையில் மூன்று விதமான ஸ்போர்ட்ஸ் சப்பாத்துச் சோடிகளும் ஒரு சோடி விலையுயர்ந்த லெதர் சப்பாத்தும் அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு சோடி சப்பாத்துக் கேட்டால் தராமல் இருக்க மாட்டான் ஆனால் சின்னமாமியின் முகம் அஸ்டகோணலாகி விடும். ஆரம்பத்தில் அவள் காட்டிய அன்பான உபசரிப்பை எல்லாம் முதல்மாசம் வந்த வெல்·பெயர் செக் இடம் மாறியதும் வாபஸ் வேண்டி விட்டாள்.

கனடா வந்து சேர்ந்த இரண்டுகிழமையும்தான் பல்லுத்தீட்டாமல் முகம் கழுவாமலேயே அவனுக்கு தேத்தண்ணி போட்டுக் குடுத்தாள். இப்போது அவன் விடிய வேலைக்கு எழும்பிப்போகும் நேரத்தில் மட்டும் நல்ல உறக்கம் அவளுக்கு வந்து விடுகிறது. அவளும் பாவம்..! இரவிரவாக இருந்து தமிழ்ப்படம் பார்த்துவிட்டு நித்திரைக்குப் போகிறவள் எப்படி காலையில் எழும்ப முடியும்..?

சூரியன் சோம்பல் முறித்து எழும்பி விட்டது. கோடைகாலக் காலைகூட புழுக்கம் தந்தது. உலகம் சுறுசுறுப்படையத் தொடங்கிய அறிகுறியாக இசைமுழக்கங்களுடன் ஐன்னல்கண்ணாடி திறந்த வாகனங்கள் வீதியில் சீறிப் பாய்ந்து சென்றன. அவன் ¦‘¡ப்பிங்சென்டருக்குப் போகும் பாதைக்கு நடையை மாற்றினான். றொக்லாண்ட் சென்டருக்குள் நுழைந்தபோது கடைகளைத் திறந்து வைக்க அழைப்பிதழ் அனுப்பியது போல காலைநடைக் கிழவர்களும் கிழவிகளும் அங்ஆக வந்து சேர்ந்திருந்தனர். கோப்பிக்கடை ஏற்கனவே திறந்திருந்தது. மற்றக் கடைகள் திறக்கும் ஆயத்தங்களில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த சீமெந்துபெஞ்சில் போய் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

தனிமை கொன்றது. மூளையும் சிகரெட்டின் தேவையிலேயே சுற்றிச்சுற்றி அலைந்தது. தனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்ற பயம் அவனுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையும் பேக்கரியில் வேலை இருந்திருந்தால் இந்தத் தனிமைச் சித்திரவதை இருந்திருக்காது. பெரியமாமன் தந்த ரெஸ்ரோரண்ட் முகவரியை எடுத்துப் பார்த்தான். அது இருக்கும் ரோட் ரவுண்டவுணில் இருந்தது. மெட்ரோ பிடித்து அங்குபோய் வேலை விசாரிப்பதுதான் நல்லது என்ற முடிவுடன் ¦‘¡ப்பிங் சென்டரை விட்டு வெளியே வந்தான். வரவும் அவனைக் கடந்து ஒரு வெள்ளை இளைஞன் சிகரெட் பிடித்தபடி உள்ளே செல்ல இவனது மூளைக்குள் ஏதோ ஒன்று திடீரென புரண்டு எழுந்தது.

"எக்ஸ்கியூஸ்மி சேர்..!"

வெள்ளை இளைஞன் நின்று திரும்பி முகத்தால் என்ன என்று வினவினான்.

"வண் சிகரெட் பிளீஸ்..!!"

இளைஞன் வேண்டாவெறுப்பாக சிகரெட் ஒன்றை உருவி இவனிடம் நீட்டினான். தானம் பெறும் பவ்யத்துடன் ஓடிப்போய் வேண்டிஇ அவனிடமே பத்தவைத்துக்கொண்டு திரும்பி நடந்தான். தான் நன்றி சொல்ல மறந்துவிட்டதை நினைத்துத் திரும்பிப்பார்க்க வெள்ளை இளைஞன் கடந்து தொலைவில் சென்றுவிட்டது தெரிந்தது. கொஞ்சப் புகையையும் வீணாக்கக் கூடாதென்ற ஐத்தனத்தில் நெஞ்சுக்குள் நிறுத்தி நிறுத்தி ஊதியபடி மெட்ரோவை அடைந்தபோது மனதும் தவிப்பும் சாந்தமாகிவிட்டிருந்தது.

இரண்டு மெட்ரோ மாறிப்போய் ரெஸ்ரோரண்டிற்குள் நுழைந்து விசாரித்தபோது அங்கும் டி–வோசிங் பகுதியை தமிழர்களே கைப்பற்றியிருந்தது புரிந்தது. சீட்டுக்கார சிவராசாதான் தலைமை டி–வோசராக செங்கோல் கிரீடம் என்பன தாங்கியிருந்தார். அவரிடம் பெரியமாமனின் பெயரைச் சொன்னதும் அன்றே வேலை தொடங்கலாம் என்று ஏப்ரனும் தொப்பியும் எடுத்துத் தந்து வேலைவிபரம் எல்லாவற்றையும் ஒரு புரபசருக்குரிய நுணுக்கத்துடன் விபரித்தார். பஸ்போய் கொண்டுவந்து வைக்கும் சாப்பாட்டுப் பிளேற்றுக்களை பிளாஸ்ரிக்கூடையில் அடுக்கி தண்ணீர் ஸ்பிறே பண்ணி மேலோட்டமாக கழுவிவிட்டு மெ‘¢னுக்குள் தள்ளி மூடி சுவிட்சைப் போடுவதுதான் வேலை நுணுக்கம். உலகமொழிகள் சிலவற்றைக் கலந்து வழங்கும் சமையல் பாத்திரங்களின் பெயர்களை மாத்திரம் நினைவில் வைத்திருப்பது கஸ்ரமாக இருந்தது. அதுவும் அடுத்த அடுத்த ஞாயிறுகளில் பழகிவிடும்.

மத்தியானச் சாப்பாட்டு நேரம் பிளேற்றுகள் வேகமாகக் குவிந்தவண்ணம் இருந்தன. கழுவி அடுக்கிய பிளேற்றுகள் உடனுக்குடன் காணாமல் போய்  எச்சில் பிளேற்றுக்களாக திரும்பிவந்து கொண்டிருந்தன. கூட வேலை செய்து கொண்டிருந்த சிவராசா அண்ணர் கிச்சின் ஹெல்ப்பராக பதவி உயர்ந்து கிச்சினுக்குள் சென்று விட அவன் தனியாகக் கழுவித் தள்ளிக் கொண்டிருந்தான். காலையிலிருந்தே வெறுமையாக இருக்கும் வயிறு கிண்டத் தொடங்கியிருந்தது. அத்துடன் சோப்மணமும் ஸ்ரீம்வெக்கையும் சேர்ந்து சுவாசத்துடன் உள்ளேபோய் தலையிடி தொடங்கியிருந்தது.

வேலை முடியும்வரை தலையிடி நிற்கவில்லை. கிச்சினைக்கூட்டி மொப்பண்ணி டி–வோசிங் பகுதியையும் துப்பரவு செய்து மெ‘¢னை நிப்பாட்டி நிமிர்ந்தபோது நாரியும் சேர்ந்து வலித்தது.

சிவராசா அண்ணர் சமநண்பனைப்போல பழகியது சிகரெட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆரம்பத்தில் அவரே பெட்டியை நீட்டி எடுக்கச் சொன்னார். பின்னர் டி–வோசிங் மெ‘¢னுக்கு அருகேயிருந்த தட்டில் சிகரெட்பெட்டியை வைத்துவிட்டு எடுத்துப் பத்தச் சொல்லிவிட்டார். அதுவும் ஒருவகைக் கடன்போல மனதில் தயக்கம் இருந்தாலும் பழக்கதோசத்துக்கு அடிமைப்பட்ட மூளைக்கு சங்கோசம் பற்றிய எண்ணம் இருக்கவில்லை.

இரவு அவ்வளவாக பிஸி இருக்கவில்லை. இரண்டுபேரும் கதைத்துக் கதைத்து வேலை செய்தார்கள். கடைசி மெட்ரோ பிடித்து பார்க்ஸ்ரேசனில் இறங்கி வீட்டுக்கு நடக்க வேலைக்களைப்பில் அவனது உடம்பு அந்தரத்தில் மிதந்து போவதுபோல இருந்தது.

கதவைத்திறந்து தோணியைக் கழட்டிப் போட்டபோது நாள் முழுக்க ஈரமாகியிருந்த சொக்ஸ் புளித்து நாறியது. ஹோலில் சின்னமாமனும் மாமியும் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"எங்கயடா ராசா சுத்திப்போட்டு வாறாய்..? சாப்பாட்டையும் மறந்து திரியிறது நல்லதுக்கில்லை சொல்லுறன். இஞ்ச வந்த கடனை அடைச்சுட்டு வீட்டைப் பாப்பமெண்டில்லாம இப்பவே சுத்தத்துடங்கினா உவன் சிறியைப் போலத்தான் கடைசியா திரியோணும்."

"மாமா..! நான் ரெஸ்ரோரண்ட் வேலைக்குப் போட்டு வாறன்." அவனது பதிலில் கோபமும் அழுகையும் இணைந்து கிளம்பியது. சின்னமாமன் தன் தவறை உணர்ந்ததும்  பார்த்துக் கொண்டிருந்த படத்தை ஸ்·பவுசில் விட்டுவிட்டு ஆறுதல் வார்த்தை கூறமுயன்றான்.

"ஆ... சரி.. சரி... மாமி மத்தியானம் சாப்பாட்டைப் போட்டிட்டு காவல் இருந்தா. அதுதான் எனக்குக் கோவம் வந்திட்டுது. குளிச்சிட்டுப் போய்ச் சாப்பிடு..!"

"ஆர் வேலை எடுத்துத் தந்தது..? பெரியமாமாவோ..?"

"ஓம். சிவராசா அண்ணரோடை ரெஸ்ரோரண்டிலை வேலை செய்தனான்."

அவன் பதில் சொல்லியபடி துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். மாமனது இந்தக் கேள்வி முறைப்பாடுகள் அவனது உள்ளத்தில் உடனடியாகக் கோபம் உண்டாக்கினாலும் ஜந்து வருச அனாதை வாழ்க்கை மாறி தன்னைத் தேடிக் கட்டுப்படுத்துவதற்கு உறவுகள் இருப்பதை உணர ஆறுதல் வந்தது.

சாப்பிட்டுவிட்டு தலையிடிக்குளிசையும் போட்டுக் கொண்டு படுக்க ஆயத்தமாகும்போது சின்னமாமன் வந்து அறைவாசல் நிலையை தன் பெருத்த உடம்பால் நிறைத்துக்கொண்டு நின்றான். அவன் என்ன என்பதுபோல நிமிர்ந்து பார்க்க

"ராசா.. பெல்க்கனடா றெட்பில் அனுப்பியிருக்கிறான். நாளைக்குக் கட்டாட்டா லைனை வெட்டிப் போடுவாங்கள். கையில இப்ப காசுவேற இல்ல. ஒரு நு¡றுடொலஸ் தா. நான் பிறகு தாறன்."

"என்னட்டை எங்கால மாமா காசு..? சம்பளச்செக்கைத்தான் பெரியமாமாட்டைக் குடுத்திட்டனே"

"அவன் முழுக்காசையும் எடுத்திட்டானே..?"

"ஓம்"

"கைச்செலவுக்கு கொஞ்சமும் தரேல்லையே அறுவான்."

அவன் இல்லை என்று தலையாட்டினான். சின்னமாமனது முகம் கோபத்தாலோ ஏமாற்றத்தாலோ தெரியவில்லை இறுகி முறுகியது. சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு பதிலேதும் சொல்லாமல் நகர்ந்து போனான்.

அவன் அலாமை ஜந்தேகாலுக்கு ஒன் பண்ணிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். இடக்கையை து¡க்கி நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு கண்களை மூட தலையிடி சற்றுக் குறைந்ததுபோல பிரமை தட்டியது. நித்திரையும் மெல்லமெல்ல அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - அக்டோபர் 2001,  இதழ் 22

Post a Comment - ஏழாவது சொர்க்கம்

ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 10(நாவல்)


Drucken   E-Mail

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு